Total Pageviews

Tuesday, October 27, 2015

மூடநம்பிக்கையைப்பற்றி மோடியா பேசுவது?பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூடநம்பிக்கையைப்பற்றி எல்லாம் பேசுகிறார்.
தேர்தல் அரசியல் ஒருவரை என்ன பாடுபடுத்தும் - மூளைக்குள் படுகுடைச்சலை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஓர் உதாரணமே!
பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் - சாமியார் களோடு இருக்கிறாராம் - இதுபோன்ற மூடநம்பிக் கையாளர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு என்னாகும் என்று ரொம்பவேதான் கவலைப்படுகிறார்.
பேய்கள்மீது நம்பிக்கை வைத்துக் கொண்டு, மந்திரவாதிகளைச் சந்திக்கின்ற ஒருவர் எப்படி ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்க முடியும்? என்று பகுத்தறிவுச் சிந்தனையின் உச்சாணிக் கொம்பில் தொங்கிக் கொண்டு இருப்பதுபோல விளாசுகிறார்.
20 நாள்களுக்குமுன் (7.10.2015) பிகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் அவர்களைப் பற்றிக் கூறும்போது, அவர் உடலில் சாத்தான் குடிகொண்டுள்ளது என்று சாடினார்.
இது எத்தனைக் கேரட் பகுத்தறிவு? சாத்தான்கள் மீது நம்பிக்கை உள்ள ஒருவர் மந்திரவாதிகளைப்பற்றி விமர்சிக்கத் தகுதி உடையவர்தானா?
ராமன் கோவிலைக் கட்டுவோம்; ராம ராஜ் ஜியத்தை உருவாக்குவோம் என்பதைத் தங்களின் கொள்கைத் திட்டமாகவே பறைசாற்றிக் கொண்டு இருப்பவர்கள் மூடநம்பிக்கைகளைப்பற்றிப் பேச லாமா?
மக்களின் வளர்ச்சித் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றும்போது, அய்யய்யோ ராமன் பாலத்தை இடிப்பதா? என்று கூக்குரல் போடுபவர்களிடத்தில் இருப்பது பகுத்தறிவுச் சிந்தனையா - வளர்ச்சியை நோக்கிப் பாய்ச்சலா? அல்லது புராணகாலப் புத்தியா?
விநாயகனைப் பற்றிச் சொல்லும்பொழுது, சிவன் யானையின் தலையை வெட்டி விநாயகன் கழுத்தில் பொருத்தியிருக்கிறான்; அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறை நம் நாட்டில் இருந்திருக்கிறது என்று தன் முதுகைத் தானே தட்டிக் கொண்டவர் தானே பிரதமர் நரேந்திர மோடி. இன்னும் கையில் மந்திரக் கயிறைக் கட்டிக் கொண்டு திரிபவர்கள் எல்லாம் இன்னொருவரைப் பார்த்து விரலை நீட்டி, நீ மந்திரத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறாய்! என்று கூசாமல் பேசுவது எல்லாம் இரட்டை நாக்கு அல்லவா!
கங்கை என்னும் ஒரு ஆற்றைக் கடவுளாக்கி, அதைச் சுத்தம் செய்வதற்கு ஆயிரக்கணக்கான கோடி அரசின் பணத்தைக் கொட்டி அழுவது எந்த அடிப்படையில்? நாட்டில் எத்தனை எத்தனையோ நதிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன? அவற்றை எல்லாம் சுத்திகரிக்காமல், கங்கை நதியின்மீது மாத்திரம் அப்படி என்ன அக்கறை பீறிட்டுக் கிளம்புகிறது?
சிவபெருமான் தலையில் கங்கை (அதாவது பார்வதி தேவியின் சக்களத்தி) இருக்கிறார் என்பது அறிவுக்குப் பொருந்தக்கூடியதுதானா?
ஒருவன் தலையில் ஓடுகிற ஒரு நதி குடியிருக்க முடியுமா? பாலர் கல்வி நிலையத்தில் படிக்கும் ஒரு சிறுமியையோ, சிறுவனையோ கேட்டால்கூட பொட் டில் அடிப்பதுபோல திருப்பிப் பதிலடி கொடுப் பார்களே!
ஒரு விஞ்ஞானிகள் மாநாட்டில் ஒரு பிரதமர் இப்படி அழுக்கு மூட்டையாகப் பேசியிருப்பதுபற்றி கடும் விமர்சனங்கள் வெடித்துக் கிளம்பினவே! இந்திய அரசமைப்புச் சட்டத்தில்  (51-ஏ(எச்)) விஞ்ஞான மனப்பான்மையை மக்கள் மத்தியில் தூண்டவேண்டும் - சீர்திருத்த உணர்வை ஊட்ட வேண்டும் - இது ஒவ்வொரு குடிமகனின் அடிப் படைக் கடமை என்று கூறப்பட்டுள்ளதே - இதைப்பற்றி எல்லாம் அவர் சிந்தித்ததுண்டா? இந்த 18 மாதங்களில் எந்த ஓரிடத்திலாவது இதுகுறித்து சுட்டிக்காட்டிப் பேசியதுண்டா?
ராம்தேவ் போன்ற சாமியார்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, அவருக்கு அரசு சார்பில் இசட் பிரிவு பாதுகாப்புகளையும் கொடுத்துக்கொண்டு இருப்பவர் - நிதிஷ்குமார் சாமியார்களை நம்புகிறார் என்றெல்லாம் பேசலாமா?
மாட்டு மூத்திரத்தை கிருமி நாசினியாகப் பயன் படுத்தவேண்டும் என்று மருத்துவ அறிவியலுக்கு விரோதமாக மோடி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுற்றறிக்கை விட்டுள்ளாரே - இது பசு மாட்டைக் கடவுளாக மதிக்கும் இந்துத்துவா மூடநம்பிக்கையின் வெளிப்பாடு அல்லவா!
மாட்டு மூத்திரத்தின் வழியாக எலிக் காய்ச்சல் (Leptospirosis) பரவும் என்று மருத்துவர்கள் கூறி வருவது பிரதமரின் காதுகளில் விழவில்லையா?
இதுபோல ஆயிரம் ஆயிரம் மூடநம்பிக்கைகளை பிரதமர் மோடியை மட்டுமல்ல - அவர்களின் ஒட்டு மொத்தமான பி.ஜே.பி.யையும், சங் பரிவார்களையும் இணைத்துப் பேசிக்கொண்டே போகலாம் - எழுதிக் குவித்துக் கொண்டே போகலாம்.
யாராக இருந்தாலும் மூடநம்பிக்கைவாதிகளாக இருப்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, வீட்டுக்கும், நாட்டுக்குமே கேடானதே!

0 comments: