Tuesday, October 27, 2015

மாட்டின் கழிவான மூத்திரம், சாணியில் மருத்துவக் குணம் இருந்தால்? மாட்டுக்கறியில் எவ்வளவு சத்து இருக்கும்? - எழுத்தாளர் மதிமாறன்



மாட்டுக்கறியும்  - மதவாத அரசியலும் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில்  எழுத்தாளர் மதிமாறன் உரை
சென்னை, அக். 27- மாட்டின் கழிவான மூத்திரம், சாணியில் இவ்வளவு மருத்துவக் குணம் இருந்தால், மாட்டுக்கறியில் எவ்வளவு சத்து இருக்கும்? என்று எழுத்தாளர் மதிமாறன் அவர்கள் உரையாற்றினார்  13.10.2015 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் மாட்டுக்கறியும் - மதவாத அரசியலும் என்கிற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட் டத்தில் எழுத்தாளர் மதிமாறன் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
மத, ஜாதி வெறி அழுக்குகளை வெளுக்கின்ற ஒரே வண்ணம் கறுப்புதான்
நான் கருப்புச் சட்டை அணிவதில்லை என்று நம் தோழர்களுக்கு மிகப்பெரிய வருத்தம். கறுப்புச் சட்டை போடக்கூடாது என்பது என்னுடைய எண்ணம் அல்ல. இந்த மண்ணில் மத, ஜாதி வெறி அழுக்குகளை வெளுக் கின்ற ஒரே வண்ணம் கறுப்புதான். அதுமட்டுமல்ல, காவி களுக்குப் பச்சை வண்ணத்தைப் பார்த்தால் ஆத்திரம் வருகிறது; வெள்ளை வண்ணத்தைப் பார்த்தால் வெறுப்பு வருகிறது. நீல வண்ணத்தைப் பார்த்தால், அதுகூட எங் களுடைய வண்ணம்தான் என்று ஒரு பச்சையான பாசிச பொய்யைச் சொல்லி காவி வண்ணம் பூசுகின்ற முயற்சி நடைபெறுகின்றது. காவிகள் கலங்குகின்ற ஒரே வண்ணம் கறுப்புதான்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கருப்பு வண்ணத்தை நான் வேண்டாம் என்று விட்டுவிடுவேனா? திட்டமிட்டே வேண்டாம் என்று நான் தவிர்த்தேன். ஏனென்றால், பெரியார் தொண்டர்கள் என்றால், கறுப்பு சட்டை போட்டவர்கள்தான் பெரியார் தொண்டர்கள் என்று ஒரு கருத்து இருக்கிறதே, எப்படி கறுப்புச் சட்டை போட்ட பெரியார் தொண்டர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார் களோ, அதைவிட பல மடங்கு கலர் சட்டை போட்ட பெரியார் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதின் குறியீடாகத்தான் நான் பொது இடங்களில் கலர் சட்டையில் பேசிக் கொண்டிருப்பதற்கான ஒரு காரணம்.
உலகத்திலேயே தாலியை அகற்றியதற்கு விருந்து வைத்த ஒரே தலைவர் ஆசிரியர்தான்
பொதுவாக திருமணங்களில் தாலி கட்டி முடித்த வுடன், சோறு போடுவார்கள். ஆனால், இதே மேடையில், தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்திவிட்டு, விருந்து வைத்தார் நம்முடைய தலைவர். உலகத்திலேயே தாலியை அகற்றியதற்கு விருந்து வைத்த ஒரே தலைவர் நம்முடைய தலைவர்தான். அது சாதாரண விருந்தல்ல; மாட்டுக்கறி விருந்து என்பதுதான் அதனுடைய சிறப்பு.
அதுவும் எப்படி, தாலி அகற்றும் நிகழ்வை நடத்தக் கூடாது; மாட்டுக்கறி விருந்து நடத்தக்கூடாது என்று தடை வாங்கியிருந்தார்கள். அப்படி நடந்த பிறகும், சட்டத்திற்கு உட்பட்டு, சட்டத்தை எப்படி மீறுவது என்பதை நம்முடைய ஆசிரியரிடம் கற்றுக்கொள்ளவேண்டும்.
இரவு தடை வாங்கினார்கள்; காலையில் அவர்கள் வருவதற்கு முன்பு, அதிகாலை சுபமுகூர்த்த வேளையில் தாலி அகற்றியாகி விட்டது. தாலி அகற்றி முடித்த பிறகு, மாட்டுக் கறி விருந்தும் நடைபெற்றது. அவர்கள் அந்த விழா நடைபெறக்கூடாது என்கிற உத்தரவைக் கொண்டு வந்து கொடுக்க வந்தார்கள். அந்த உத்தரவு இங்கு வருவதற் குள் இப்ப என்ன பண்ணுவ என்பதுபோல அந்த நிகழ்ச்சி அரங்கேறியது.
மாட்டுக்கறி என்பது பார்ப்பன எதிர்ப்பின் குறியீடு
அன்றைய நிகழ்ச்சிக்கு இன்னொரு சிறப்பு உண்டு. அந்த மாட்டுக்கறி விருந்தை என்றைக்கு வைத்தார் என்றால், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளன்று வைத்திருந் தார் என்பதுதான் மிக முக்கியம். நிறைய பேர் அம்பேத்கர் பிறந்த நாளன்று மாட்டுக்கறி விருந்து வைக்கலாமா? என்று கேட்டனர்.
இந்தியாவில் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் குடும்ப உணவு, அடிப்படை உணவு என்பது மாட்டுக்கறி. மாட்டுக்கறி என்பது பார்ப்பன எதிர்ப்பின் குறியீடு. தொடர்ந்து பார்ப்பன எதிர்ப்பாளராகவும், வேத எதிர்ப்பாளராகவும், இந்து மத எதிர்ப்பாளராகவும் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் அந்த விழாவை நடத்தாமல், ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் பிறந்த நாளிலா அந்த விழாவை நடத்த முடியும்!
அதுமட்டுமில்லாமல், இன்னொன்றைச் சொல்கிறார் கள். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மாட்டுக்கறியை சாப்பிடக்கூடாது என்று சொன்னார் என்று ஒரு பொய்ப் பிரச்சாரம் நடத்தினார்கள். அது எவ்வளவு பெரிய பச்சைப் பொய். அவர் மாட்டுக்கறியை சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லை. செத்த மாட்டை சாப்பிடக்கூடாது என்று தான் சொன்னார். ஏன் செத்த மாட்டை சாப்பிடக்கூடாது என்று சொன்னார் என்றால், இந்திய சமூக அமைப்பில், விவசாயிகள் என்றால், 100 சதவிகித நிரம்பிய விவசாயி யார் என்றால், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் அந்த விவசாயிகள். அவர்களுக்கு விவசாய வேலைகள் எல்லாம் தெரியும். ஆனால், அவர்களுக்கு நிலம் கிடையாது.
நிலமற்ற அந்த விவசாயிகள் கூலி விவசாயிகளாக இருக்கின்ற அந்த விவசாயிகள், 5 ஆயிரம் ஏக்கரிலிருந்து 3  ஏக்கர் நில உடைமையாளர்களிடம் பண்ணை அடிமை களாக, கூலி விவசாயிகளாக வேலை பார்ப்பார்கள். பண் ணையார்களிடமும், நில உடைமையாளர்களிடமும் அந்த தாழ்த்தப்பட்ட மக்கள் விடியற்காலை 4 மணியிலிருந்து மாலை 6 மணிவரையிலும் உழைப்பு, உழைப்பு கடுமையான உழைப்பைக் கொடுப்பார்கள். அப்படி உழைக்கும் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்றால், அந்தப் பண் ணையார்களும், நில உடைமையாளர்களும் சாப்பிட்டு விட்டு, மீதி உணவைத்தான் கொடுப்பார்கள். தனக்காக மாடு போன்று உழைக்கும் மனிதனை, மாட்டுக் கொட்டகையில் வைத்து சோறு போட்டுவிட்டு, மாட்டைக் கொண்டு வந்து வீட்டிற்குள் விடும் ஒரு சமூக அமைப்பு அது.
செத்த மாட்டை அப்புறப்படுத்துவதற்காகத்தான் கொடுப்பார்கள்
மிகச் சாதாரணமான மூன்று வேளை சாப்பிடுகின்ற உணவையே அந்த நில உடைமையாளர்கள்தான் கொடுக்க வேண்டும் என்கிற நிலை இருக்கையில், அவர்களுக்கு மாமிச உணவு என்பது, கனவில்கூட காண முடியாதது. அது ஒரு லக்சரி உணவு. ஆட்டுக்கறியையோ மாட்டுக் கறி யையோ வாங்கி அவர்களால் சாப்பிட முடியாது. நில உடை மையாளர்கள் ஆட்டுக்கறியை சாப்பிடுவார்கள். அந்தக் கறியை தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கொடுக்கமாட்டார்கள். மாடு ஆயிரக்கணக்கில் விலை உள்ளது. அவர்கள் மாட்டைச் சாப்பிடக் கொடுக்கமாட்டார்கள் நில உடைமை யாளர்கள். எப்பொழுது மாட்டைக் கொடுப்பார்கள் என்றால், விவசாய வேலைகளுக்கு தேவையற்று, அந்த மாட்டை எவ்வளவு சுரண்ட முடியுமோ, அவ்வளவு சுரண்டி, அந்த மாடு இறந்த பிறகு, அதனைச் சாப்பிடு வதற்காகக் கொடுக்கமாட்டார்கள். அந்த செத்த மாட்டை அப்புறப்படுத்துவதற்காகத்தான் கொடுப்பார்கள்.
ஒரு இந்து சமூக அமைப்பில், கோமாதா புனிதம் என்று சொன்னால், இந்து முறைப்படி அதனை எரிக்க வேண்டியதுதானே! ஏன் எரிக்கமாட்டீர்கள்? ஏன் அப்புறப்படுத்தச் சொல்கிறீர்கள்? ஒரு தாயை இப்படித்தான் தூக்கிக் கொடுப்பாயா, சாப்பிடச் சொல்லி.
செத்த மாட்டை திண்ணாதே என்றார் அம்பேத்கர்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இறைச்சி உணவு, அதனைச் சாப்பிட்டால்தான் அந்த வீட்டில் வேலை பார்க்க முடியும் என்கிற நிலையில், அந்த இறைச்சி உணவு எப்பொழுது கிடைக்கும் என்றால், ஜாதி இந்து வீட்டுகளில் இறந்த மாடுகளை அப்புறப்படுத்தும்பொழுதுதான் அவர் களுக்கான புரதச் சத்து உணவு கிடைக்கிறது. அந்த உணவை சாப்பிடுவதினால்தான் தீண்டாமை உருவாகிறது. செத்த மாட்டைத் திண்ணாதே! செத்த மாட்டை அப்புறப்படுத்தாதே! என்றுதான் என் தலைவர் அம்பேத்கர் சொன்னார்.
இது எப்படி மாட்டிறைச்சி சாப்பிடாதே என்று சொன்னார் என்று சொல்ல முடியும்? மாட்டிறைச்சியை புதி தாகச் சாப்பிடு! செத்த மாட்டை சாப்பிடாதே என்றுதான் நாங்களும் சொல்கிறோம். அதுதான் தீண்டாமையின் மூலக்கூறு என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னார்.

இன்றைக்கு மாட்டுக்கறியும் - மதவெறி அரசியலும் என்கிற தலைப்பில் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. மாட்டுக்கறி என்பது வெறும் மதவெறிக் குறியீடு அல்ல. மதவெறி குறியீடு என்பது இப்பொழுதுதான். மாட்டுக்கறி குறியீடு என்பது முதன்மையானதாக, அது ஒரு ஜாதியக் குறியீடு. இன்றைய சூழ்நிலையில், மாட்டுக்கறி - மத ஜாதிவெறிக் குறியீடாக இருக்கிறது. மாட்டுக்கறிக்குத் தடை என்பது அந்தக் குறியீடுதான். இந்தியாவில் மாட்டுக்கறியை மிக அதிகமாக எப்பொழுதுமே வரலாற்று ரீதியாக தாழ்த்தப் பட்ட மக்கள் உண்கிறார்கள். அதற்குப் பிறகு இஸ்லாமி யர்கள் உண்கிறார்கள். இந்த இரண்டு பெரும்பான்மை இன மக்களுமே உண்கிறார்கள். மாட்டுக்கறிக்குத் தடை என்பது மாடுகளின் மீதான அன்பல்ல தோழர்களே, இது தாழ்த்தப் பட்ட மக்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு அரசிய லின் குறியீடு. அதற்காகத்தான் மாட்டுக்கறிக்குத் தடை. அவர்கள் இரண்டு பேர்களைத்தான் அடையாளப்படுத்த முடியும்.
இடைநிலை ஜாதிகளின்மீது பல நூற்றாண்டுகளாக பார்ப்பனீயத்தை திணிக்கிறார்கள்.
இன்றைக்கு இந்து சமூக அமைப்புகள் எப்படி வருகிறார்கள் என்று பார்த்தோமேயானால், அவர்கள் எப்பொழுதுமே நேரடியாக வருவதில்லை. இது வரலாற்றில் தொடர்ச்சியாக நடைபெற்றிருக்கிறது. அவர்கள் பார்ப்பன அடிமைகளாக இருக்கின்ற இடைநிலை ஜாதிகளின்மீது இத்தனை நூற்றாண்டுகளாக பார்ப்பனீயத்தை அவர்கள் திணிக்கிறார்கள்.
மாட்டுக்கறி என்பது இந்தத் தீண்டாமை, ஜாதி உருவாவதற்கான முக்கிய காரணம்
யார் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள்? யார் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்கள்? என்பதற்கு பெரிய ஆய்வெல்லாம் தேவையில்லை. யாரெல்லாம் பார்ப்பனர்களை வைத்துப் புரோகிதம் செய்கிறார்களோ, அவர்களெல்லாம் மாட்டுக் கறி சாப்பிட மாட்டார்கள். யாரெல்லாம் பார்ப்பானை உயர்வாக நினைப்பார்களோ, யாரெல்லாம் மாட்டைப் புனிதமாக நினைக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் பார்ப்பானை உயர்வாக நினைப்பார்கள்.
இந்து சமூக அமைப்பில் மாட்டுக்கறி என்பது இந்தத் தீண்டாமை, ஜாதி உருவாவதற்கான வரலாற்றில் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.
இன்னொன்று, சைவ உணவு முறை பழக்கம் உள்ள வர்களை, மாட்டுக்கறி சாப்பிடும் பழக்கமில்லாதவர்களை, மாட்டுக்கறியை சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்துவதும், கட்டாயப்படுத்துவதும் எவ்வளவு பெரிய வன்முறையோ, அதைவிட கொடுமையான வன்முறை மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்களை, சாப்பிடக்கூடாது என்பது.
ஒரு உணவுப் பழக்கத்தைத் தடுப்பது என்பது, புதிதாக ஒரு உணவுப் பழக்கத்தைக் கட்டாயப்படுத்துவதைவிட கொடுமையான வன்முறையாகும். இந்து மதத்தில் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது; இந்தக் கறி சாப்பிடக்கூடாது, அந்தக் கறி சாப்பிடக்கூடாது என்று ஏதாவது திட்டவட்டம் இருக்கிறதா? இந்தக் கறியை சாப்பிடலாம்; இந்தக் கறியை சாப்பிடக்கூடாது என்றெல்லாம் கிடையாது.
மாட்டுக்கறியை சாப்பிடச் சொல்லும் வேத நூல்களை நீங்கள் கொளுத்தத் தயாரா? நம்முடைய கவிஞர் உரையாற்றும்பொழுது சொன்னாரே, வேத காலத்தில், ரிக் வேதத்தில்தான், சரியாகச் சொல்லவேண்டும் என்றால், உலக மதங்களிலேயே மாட்டுக்கறியை சாப்பிடுவதற்குப் பரிந்துரை செய்து, எப்படி வேக வைக்கவேண்டும்? எப்படி சாப்பிடவேண்டும்? யாருக்குக் கொடுக்கவேண்டும்? என்று சொல்கின்ற ஒரே வேதம் ரிக் வேதம்தான்.
மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்களை அடித்துக் கொளுத் துகிறீர்களே, உண்மையில் நீ மாட்டின்மேல் அன்பாக இருந்தால், மாட்டுக்கறியைப் பரிந்துரைக்கின்ற, அதை எப்படி சாப்பிடவேண்டும் என்று சொல்கின்ற வேத நூல்களை நீங்கள் கொளுத்தத் தயாரா? கொளுத்துங்கள் பார்க்கலாம்!
நான் என்ன சொல்கிறேன் என்றால், நீங்கள் பேசுவ திலாவது நீங்கள் நேர்மையாக இருங்கள்; அதனைச் செய்வீர்களா? உங்களால் செய்ய முடியாது. தமிழ்நாட்டிற்கு வாருங்கள்! தமிழ்நாட்டில் சைவ சமயத்தைத் தூக்கி நிறுத்துவதற்காக எழுதப்பட்ட பெரிய புராணம். அந்தப் பெரிய புராணத்தில் கண்ணப்ப நாயனார் என்கிற வேடர், பன்றி இறைச்சியை விரும்பி சாப்பிடுகிறவர். அவர் என்ன சாப்பிடுகிறாரோ, அதனை சிவபெருமானுக்குக் கொடுக் கிறார். அய்யனாருக்கோ, முண்டக்கன்னி அம்மனுக்கோ அவர் கொடுக்கவில்லை. சிவபெருமானுக்குக் கொடுத்தார் என்று கதை இருக்கிறது.
இன்றோ சிதம்பரம் கோவிலில் இருக்கின்ற சிவ பெருமானுக்கு கண்ணப்ப நாயனார் முறையில் பன்றி இறைச்சியை எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; சைவ முறைப்படி தேவாரம் ஓதினாலே, அங்கே இருக்கின்ற தீட்சதர்கள் ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள்.
தண்டச் சோறு சாப்பிடுகிற சிவனடியாரை அழைத்துச் சோறு போடுகிற சமூகம் இது
பெரிய புராணத்தில் சிறுதொண்ட நாயனார் என்று ஒருவர் இருக்கிறார். அவர் ஒரு சேனாதிபதி. பரஞ்ஜோதி அவருடைய பெயர். இங்கே தமிழ் அறிஞர்கள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள். அந்த சிறுதொண்ட நாயனாரு டைய பழக்கம் என்னவென்றால், வேலைக்குச் செல்வதற்கு முன்பாக, ஒரு சிவனடியாரை அழைத்துச் சோறு போட்டு விட்டுத்தான் பிறகு வேலைக்குச் செல்வராம். தனக்காக உழைக்கின்ற தாழ்த்தப்பட்டவனுக்கு மாட்டுக் கொட்ட கையில் வைத்து சோறு போட்டுவிட்டு, ஊரில் தண்டச் சோறு சாப்பிடுகிற சிவனடியாரை அழைத்துச் சோறு போடு கிற சமூகம் இது. உருப்படுமா இந்தச் சமூகம்? அன்றையிலிருந்து இன்றுவரை அப்படித்தான் இருக்கிறது. அப்படி ஒரு நாள் சிவனடியாரைத் தேடுகிறா ராம். யாரும் கிடைக்கவில்லையாம். சிவபெருமானே வேடம் போட்டு சிவனடியாராக வருகிறாராம்.
நான் கேட்ப தெல்லாம், சிவ பெருமானே வேடம் போட்டு எப்படி சிவனடியாராக வர முடியும்? அவரைத்தான் எப்படி சிவனடியார் என்று நம்பவேண்டுமாம். சிவனுக்கு அடியார்தானே வர முடியும். எவ்வளவோ பொய்களில் இதுவும் ஒன்று. அப்படியிருந்தாலும், வீட்டில் என்ன இருக்கிறதோ, விருந்துக்கு அழைக்கின்றவர்கள் என்ன கொடுக்கிறார்களோ அதைத்தானே சாப்பிடவேண்டும். சைவ சாப்பாடுதான் இருக்கிறது என்றவுடன், இல்லை, இல்லை நான் அசைவ சாப்பாடுதான் சாப்பிடுவேன் என்று சிவன் சொன்னாராம். உடனே அவர் ஆடு, கோழி, மீன் என்று பட்டியலைச் சொன்னாராம்.
பிள்ளைக்கறியை சாப்பிட்ட இந்து சமூகம்;  ஏன் மாட்டுக்கறி சாப்பிடுவதை தடை செய்கிறீர்கள்?
அவையெல்லாம் எனக்குப் பிடிக்காது. சரி, என்ன வேண்டும் என்று அவரைக் கேட்டவுடன், பிள்ளைக் கறி வேண்டும் என்று சொல்லியிருக்கிறாராம் அந்த சிவனடியா ராக வேடமணிந்த சிவன். உடனே சிறுதொண்டர், அவருடைய மகன் சீராளத்தேவனிடம் சென்று, தம்பி, சிவனடியார் ஒருவர் வந்திருக்கிறார். அவர் பிள்ளைக் கறி வேண்டும் என்று கேட்கிறார். உடனே, அந்தப் பையன் சரி என்று சொல்லிவிட்டானாம். அம்மாவும், அப்பாவும் ஒன்றாகச் சேர்ந்து அவர்களுடைய மகனை வெட்டி கூறுபோட்டு குழம்பு வைத்த பிறகு, சிவனடியார் அந்தப் பிள்ளைக்கறியை சாப்பிட்ட சமூகம்தான் இந்த இந்துச் சமூகம். பிறகு ஏன் மாட்டுக்கறி சாப்பிடுவதை தடை செய்கிறீர்கள்?
பெரிய புராணத்தில் சிவபெருமான், பார்ப்பனர் அல்லாத செட்டியார், வேடர், சேனாதிபதி ஆகிய எல்லா சிவனடியாருக்கும் காட்சியளிக்கிறாராம். அப்படி காட்சி யளிக்கும்பொழுது எப்படி வரவேண்டும்? செட்டியாருக்கு செட்டியார் வேடத்திலும், வேடருக்கு வேடர் வேடத் திலும்தானே வரவேண்டும். ஆனால், அந்த சிவன் எப்படி வந்தாராம் தெரியுமா? பார்ப்பன ரூபம் கொண்டு, பூணூல் அணிந்துகொண்டு வந்தாராம். ஏனென்றால், அவன் சூத்திரன் வேடத்தில் வரமாட்டாராம். பன்றி அவதராம் எடுத்துக்கூட வருவாராம் - ஆனால், சூத்திர, தலித் அவதாரத்தில் வரமாட்டாராம்.
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார்
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மாடு, பன்றிகளைவிட இழிவானவர்கள் என்று சொல்கிறார்கள்.
பிள்ளைகறியெல்லாம் சாப்பிடச் சொன்ன பெரிய புராணம், மாட்டுக்கறியைத் தடை செய்கிறது. பன்றி இறைச்சி சாப்பிட்டவனைக் கொண்டாடுகிறது. குழந்தையை வெட்டித் தின்றவனைக் கொண்டாடுகிறது. ஆனால், மாட்டிறைச்சியைச் சாப்பிடுகின்ற சமூகத்திலிருந்து வந்த நந்தனை, கோவிலுக்குள் அனுமதிக்காதது மட்டுமல்ல தோழர்களே, மற்ற சூத்திர ஜாதிக்காரர்களுக்கெல்லாம் கனவில் அல்லது நேரில் வந்து பார்ப்பன உருவில் வந்து காட்சி தந்த சிவபெருமான், நந்தனுக்கு நேரிலும் வரவில்லை; கனவிலும் வரவில்லை.
மாறாக, தில்லைவாழ் அந்தணரின் கனவில் வந்து, அவர் தீண்டாதவராக இருக்கிறார். அவர் உள்ளே வரக்கூடாது என்றாராம். மாட்டுக் கறி சாப்பிடுகிறவர்களின் கனவில் வருவதற்குக்கூட லாயக்கற்றவர்கள் என்று பெரிய புராணம் சொல்கிறது.
இந்து சமூக அமைப்பில் உண்மையில் மாடுகள் மீதான அன்பு என்பது மட்டும்தான் உயிர்கள் மீதான அன்பு. உயிர்கள் மீதான அன்பு என்பது ஒரு பொதுப் பண்பாக இருக்கவேண்டும். அந்தப் பொதுப் பண்பு எப்படி இருக்கவேண்டும்? வள்ளலாருக்கு இருந்ததுபோன்று இருக்கவேண்டும். மாடு மிகவும் சூப்பர்; ஆடு மட்டம், கோழி மட்டம் என்ற கண்ணோட்டம் கிடையாது வள்ளலாரிடம்.
ஜெகதீஸ்சந்திரபோஸ் என்கிற விஞ்ஞானி, தாவரங் களுக்கும் உயிர் இருக்கிறது என்று கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்குவதற்கு முன்பாகவே, தாவரங்களை ஒரு மிருகம், மனிதர்களைப் போல ரத்தமும், சதையும் உள்ள ஒரு உயிர் என்று கண்டுபிடித்தவர் வள்ளலார். அவர் நெல்லுக்கு மட்டுமல்ல, களை எடுத்து வீசுகிற புல்லையும் பார்த்து, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலார் அவர்கள் சொல்லலாம் பரிசீலிக்கலாம். ஒட்டு மொத்தமாக சாப்பிடாதீர்கள் என்று. அதை நாமும் .
முன்பு புத்தர் சொல்லியதை, 2500 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் சொல்கிறார்
மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடாதீர்கள் என்பதை விவாதிப்பதற்கு லாயக்கற்ற முறையாக இருக்கிறது. பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான முரளிதரராவ் அவர் ஒரு நான்கு நாள்களுக்கு முன்பு சொல்லியிருக்கிறார். மாட்டிறைச்சியை ஏன் அரசியலாக்கு கிறீர்கள்? அதை நாங்கள் ஏன் சொல்கிறோம் என்றால், இங்கே விவசாய வேலைகளுக்குக்கூட மாடுகள் இல்லாமல் போகிறது என்பதற்காகத்தான் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று சொல்கிறோம் என்றார். இது எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு. முன்பு புத்தர் சொல்லியதை, 2500 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் சொல்கிறார்.
நம் அய்யா சொல்லியதுபோல, மாட்டிறைச்சியை இவர்கள்தான் சாப்பிட்டார்கள். அன்றைக்கு புத்தர் பாதுகாக்கவில்லை என்றால், இந்த நாட்டில் விவசாயமே இருந்திருக்காது; மாடு இருந்திருக்காது, மனிதர்களும் இருந்திருக்க மாட்டார்கள், அய்யர்களும் இருந்திருக்க மாட்டார்கள், ஏனென்றால், மாடு இருந்தால்தானே, அய்யரும் இருப்பார்.
விவசாயிகளைக் கொன்றுவிட்டு, மாட்டைப் பாதுகாப்பார்கள்
அதனைப் பாதுகாத்து புத்தர் நடத்திய போராட்டத் தைத் திருப்பிப் போட்டு, இப்படிச் சொல்கிறார்கள். அதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கிறதா? இன்றைக்கு விவசாய வேலைகளுக்குப் பயன்படுவதற்காக டிராக்டர் இருக்கிறது;  மாடு எங்கே பயன்படுகிறது? எல்லா வகைகளிலும் பயன்படுவதற்கு நவீன இயந்திரங்கள் வந்துவிட்டன. மாட்டினுடைய பங்கு குறைவாகத்தான் இருக்கின்றன. மாடுகளே விவசாயிகளுக்குச் சுமையாகிவிட்டன. விவ சாயமே விவசாயிகளுக்குச் சுமையாகி விட்டன, இந்த அரசாங்கத்தில்.
விவசாயிகளின் நிலத்தைப் பிடுங்கி ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்வதற்கு அவ்வளவு சண்டை போடுகிறது இந்த அரசு, மீத்தேன் எரிவாயு திட்டம் கொண்டு வந்து விவ சாயிகளை  நடுத்தெருவில் நிறுத்துவதற்காகப் பாடு பாடுகின்ற இந்த அரசு, மாட்டைத் தின்றால், விவசாயிகள் கஷ்டப்படுவார்கள் என்று சொல்வது என்ன நியாயம்? விவசாயிகள் எவ்வளவு பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்; விவசாயிகளைக் கொன்றுவிட்டு, மாட்டைப் பாதுகாப்பார்கள் போலிருக்கிறது.
ராணுவத்தினர் மாட்டுக்கறி சாப்பிடலாம் பொதுமக்கள் மாட்டுக்கறி சாப்பிட்டால், தேசத்துரோகமா?
மாடு தாய், கோமாதா புனிதம்; இவையெல்லாவற்றை யும் நாம் சாப்பிடக்கூடாது; அப்படி சாப்பிட்டால், அது தேசத் துரோகம் என்று சொல்கிறார்கள். ஆனால், ராணுவத்தில் இருக்கின்ற சிப்பாய்கள் என்ன சாப்பிடுகிறார்கள். அங்கே மாட்டுக்கறி உணவு கிடையாதா? மாட்டுக்கறி உணவுதான் முதன்மையான உணவாக இருக்கிறது. இந்த தேசத்தை, இந்த தாய்நாட்டை, கோமாதா உள்பட இந்த ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாக்கவேண்டுமானால், மாட்டுக்கறியைச் சாப்பிட்டால்தான் பாதுகாக்க முடியும். ஏனென்றால், மாட்டுக்கறியைச் சாப்பிட்டுவிட்டு, எல்லையில் தயாராக இருக்கிறார்கள். நீங்கள் மாட்டுக்கறியைச் சாப்பிட்டால்தான் சக்தி கிடைக்கும் என்று சொல்லி ராணுவத்தினருக்கு மாட்டுக்கறியைக் கொடுத்துவிட்டு, மக்கள் மாட்டுக்கறி சாப்பிட்டால், தேசத்துரோகம் என்று சொன்னால், இது என்ன நியாயம்? நாட்டைப் பாதுகாக்கின்றவர்களே மாட்டுக்கறி சாப்பிடுகின்றார்கள்.
சரி, மாட்டுக்கறி சாப்பிடு வதை நாம் விட்டுவிடுவோம். மாட்டுக்கறியே வேண்டாம்; எளிய மக்களுக்கு வேண்டாம். வெறும் இஸ்லாமியர், தாழ்த்தப்பட்ட மக்களின் குறியீடு மட்டுமல்ல, பொதுவாக மாட்டுக்கறி சாப்பிடுவதன் காரணம் என்னவென்றால், ரிக்ஷா ஓட்டுகின்ற, மூட்டைத் தூக்குகிற, கல் உடைக்கின்ற நம் மக்களுக்கு, கடுமையான வேலை செய்கின்ற நம் மக்களுக்கு அடிப்படையான சக்தி வேண்டுமென்றால், மாட்டுக்கறியைத்தான் சாப்பிட வேண்டும். நாங்கள் என்ன தர்ப்பைப் பூல்லை தூக்கிக் கொண்டு அலைகிறோமா? எதையோ சாப்பிட்டுவிட்டுப் போகிறோமா?
பெரியாரை புறந்தள்ளுகிறவர்கள் முழுவதும் கல்புர்கியைக் கொலை செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்
இந்தியாவிற்கு ஆப்கான் மன்னர் வருகிறார். வெள்ளைக்காரன் காலத்தில் பக்ரீத் விழாவிற்காக இங்கே இருக்கின்ற இஸ்லாமியர்கள் அவரை அழைத்தனர். அப்பொழுது அமீர் சொன்னதாக பாரதியார் எழுதுகிறார், என்னை பக்ரீத் விழாவிற்கு கூப்பிடுவதாக இருந்தால், நான் இந்தியாவிற்கு வருகிறேன். ஆனால், இந்தியாவில் இந்துக்கள் புனிதமாகக் கருதுகிற மாட்டிறைச்சியை விருந்தில் கொடுக்கக்கூடாது. மாட்டிறைச்சியைத் தவிர்த்துவிட்டு விருந்து கொடுத்தால் நான் வருகிறேன் என்று அமீர் சொல்லியிருக்கிறார். அவனைப் பார்த்தாவது இங்கே இருக்கின்ற முஸ்லிம்களுக்குப் புத்தி வரவேண்டும் என்று முதன்முறையாக தமிழில் எழுதியவர் பாரதியார். பாரதியாரை நீங்கள் குருவாகக் கொண்டிருந்தால், இப்படித் தான் இருப்பார்கள். பெரியாரை புறந்தள்ளுகிறவர்கள் முழுவதும் கல்புர்கியைக் கொலை செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவன் கையில் இருப்பது பேனா போன்று இல்லை, கத்தி போன்றுதான் இருக்கிறது.
கோழிப்பண்ணை திறப்பு விழாவில் தந்தை பெரியார்
தந்தை பெரியார் அய்யா அவர்கள் ஒரு கோழிப் பண்ணை திறப்பு விழாவில் உரையாற்றுகிறார். அந்தக் காலத்தில் கோழிப்பண்ணை திறப்பு என்பது சாதாரணமான தல்ல. பண்ணை முறையே அப்பொழுது அறிமுகமாத ஒரு சூழல். ஆட்டுக்கறிதான் கடையில் விற்கும், அதுவும் அரிது தான். நம் நாட்டில் கோழிகளை வீடுகளில்தான் வளர்ப்பார் கள். ஒரு வழக்கு மொழி உண்டு. வீட்டிற்கு யாராவது விருந் தாளிகள் வந்தால், கோழி அடித்துக் குழம்பு வைப்பதுதான். கோழி வாங்கி குழம்பு வைப்பதெல்லாம் கிடையாது. வீட்டிலுள்ள கோழியைத்தான் அடித்து குழம்பு வைக்க முடியும். கோழி அடித்து குழம்பு வைத்தேன் என்கிற ஒரு சொல்லே, கோழி வளர்ப்பு முறை, கோழி விற்பனையே கிடையாத ஒரு சமூகத்தில், கோழிப்பண்ணையை ஊக்கு விப்பதற்காக அய்யா அவர்கள் பேசுகிறார்.
கோழிப் பண்ணையில் கோழி எவ்வளவு வளர்க்கி றீர்களோ அந்த அளவிற்கு மாமிசப் பற்றாக்குறை விலகும். நிறைய கோழிக்கறி கிடைக்கும் என்று அன்றே அய்யா பேசினார். இன்றைக்கு எங்கே பார்த்தாலும் அதுதானே நடைமுறையில் இருக்கிறது.
இறைச்சிக்காக மட்டுமே மாடுகளை வளர்க்கும், மாட்டுப் பண்ணைகளை உருவாக்கவேண்டும்
அதுமட்டுமல்ல, தீர்க்கத்தரிசனமாக இன்னொன்றை யும் அவர் சொல்கிறார். கோழிப்பண்ணையைப்பற்றி மட்டும் பேசவில்லை. அதற்குப் பிறகு ஒன்றைச் சொன்னார். கோழிப் பண்ணை போல், ஆடுகளை இறைச்சிகளுக்காக வளர்ப்பதுபோல், இதைவிட முக்கியம் இறைச்சிக்காக மட்டுமே மாடுகளை வளர்க்கும், மாட்டுப் பண்ணைகளை உருவாக்கவேண்டும் என்று பேசுகிறார்.
உலகம் முழுவதும் மாட்டுப் பண்ணைகள் இருக்கின் றன. மாட்டுப் பண்ணையில் இறைச்சிக்காக வளர்க்கப் படுகின்ற மாடுகள் இருக்கிறது. அன்றைக்கே அய்யா சொல்லியதுபோல், இந்தியாவில் மாட்டுப் பண்ணைகள் தமிழ்நாட்டில் பரவியிருந்தால், இன்றைக்கு இந்தியா முழுவதும் வந்திருக்கும். இந்தப் பிரச்சினையே இன்றைக்கு வந்திருக்காது.
மாட்டுக்கறி சாப்பிடாதே! மாட்டுக்கறி சாப்பிடாதே! என்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தினை நாம் நடத்தினால், உடனே அசைன் மெண்ட் அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள் என்றால், மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்துகிறீர்களே, பன்றி இறைச்சி சாப்பிடுவீர் களா? என்று கேட்கிறார்கள். பன்றி இறைச்சி சாப்பிடக் கூடாது என்று யார் சொல்கிறார்கள்? நாங்கள் எல்லாம் பன்றி இறைச்சியை சாப்பிட்டுவிட்டுத்தான், மாட்டுக்கறி சாப்பிடுகின்ற போராட்டம் நடத்துகின்றோம்.
சோற்றில் மதத்தைப் பிசைந்து சாப்பிடுபவர்கள்!
நான் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தேன். அங்கே ஆடு, மாடுகளைப் பார்க்க முடியவில்லை. அங்கே உள்ள சீனர்கள்  முழுக்க முழுக்கப் பன்றி இறைச்சியைத்தான் சாப்பிடுகிறார்கள். அங்கே சென்றுதான் முதன்முறையாக பன்றி இறைச்சியை சாப்பிட்டேன். உலகமே உணவு முறையில் மாறியிருக்கிறது. மாட்டுக் கறியிலிருந்து பன்றிக் கறிக்கு மாறியிருக்கிறார்கள்.
சோற்றில் மதத்தைப் பிசைந்து சாப்பிடுபவர்கள் இந்தியாவும், அரபு நாடுகள் மட்டும்தான். எதையும் நீங்கள் அறிவியல் ரீதியாகச் சொன்னாலும், அவர்கள் அறிவிய லையும் ஆன்மீக ரீதியாகப் பார்க்கின்ற சமூகத்தினர்.
உலகம் முழுவதும் உள்ள வெளிநாட்டினர் மாட்டுக் கறி சாப்பிடுபவர்கள்தான் புதிய புதிய அறிவியல் கருவி களைக் கண்டுபிடித்து நாட்டிற்குக் கொடுத்துக் கொண்டி ருக்கிறார்கள். இந்தியா, அரபு நாடுகளில் உள்ளவர்கள் அந்தக் கருவிகளை வாங்கி வைத்துக்கொண்டு, இதை யெல்லாம் எங்கள் மதத்தில் எப்பொழுதே சொல்லி விட்டார்கள், சொல்லிவிட்டார்கள் என்று.
மதத்திலிருந்து வெளியேற வெள்ளைக்காரன்தான் புதிய புதிய கருவிகளைக் கண்டுபிடித்தார்கள். அதை வைத்துக் கொண்டுதான் இவர்கள் வண்டி ஓட்டுகிறார்கள். நாங்கள் வேதத்திலேயே ஏரோபிளேன் ஓட்டினோம் என்று.
உணவில்கூட தேவை, வசதி, சக்தி எது? அதைத்தான் சாப்பிடவேண்டும். பன்றி இறைச்சி சாப்பிடக்கூடாது என்று யார் சொல்லியிருக்கிறார்கள். பன்றி இறைச்சி இஸ்லாமியர் களுக்குத்தான் தடை செய்யப்பட்டிருக்கிறது. பன்றி இறைச்சி சாப்பிடுகின்ற அடுத்த மதக்காரர்களைத் தடுக்க வில்லை இஸ்லாமியர்கள்.
மாட்டுக்கறி பொது உணவாக மாறினால் தீண்டாமை இருக்காது, ஜாதி இருக்காது!
அடுத்த மதக்காரன் என்ன சாப்பிடவேண்டும் என்று சொல்வதைத்தான் பாசிசம் என்று சொல்கிறோம். இஸ்லா மியர்கள் அப்படி சொல்லவில்லை. அப்படி சொன்னால், அதையும் நாங்கள் எதிர்ப்போம். அவர்களுடைய மதக் காரர்களுக்கு மட்டும்தான் அவர்கள் சொல்கிறார்கள்.
அசைவம் என்று சொன்னால், உலகம் முழுவதும் மாட்டுக்கறி பிரதான உணவாக இருப்பதுபோல், என்றைக்கு இந்தியாவில் அசைவம் என்று சொன்னால், மாட்டுக்கறி ஒரு பொதுவான உணவாக, ஒரு குடும்பத்தில் சாப்பிடுகிற உணவாக என்றைக்கு மாறுகிறதோ, அன்றைக்கு இந்திய சமூகத்தில் தீண்டாமை இருக்காது, ஜாதி இருக்காது, சிறுபான்மை இன மக்களுக்கான எதிர்ப்புகள் இருக்காது.
மாட்டுக்கறியில் மருத்துவக் குணத்தைப்பற்றி பேசுகி றோம் அல்லவா! இங்கே அய்யா உரையாற்றும்பொழுது மாட்டிறைச்சியில் உள்ள மருத்துவக் குணத்தைப்பற்றி பேசினார்கள். அவ்வளவு தூரம் போகவேண்டாம்; முன்பெல்லாம் இருதய அறுவை சிகிச்சை போன்ற எந்தவிதமான அறுவை சிகிச்சை நடைபெற்றாலும், சிகிச்சை முடிந்து தையல் போடுவார்கள்; அப்படி போட்ட தையலை மீண்டும் பிரிக்கின்ற ஒரு கொடுமை இருந்தது. ஆனால், இன்றைக்கு அந்த முறை இல்லை. அந்த முறையை எப்படிக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால், கோமாதா கொழுப்பிலிருந்து தயாரிக்கப்பட்ட நரம்பினால்தான் இன்றைக்கு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. அய்யர் ஏகப்பட்ட கொழுப்பைச் சாப்பிட்டு அடைத்துக் கொண்டால், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு மாட்டுக் கொழுப்பில்தான் தையல் போடுகிறார்கள். உன்னுடைய கொழுப்பைக் குறைப்பதற்கே, மாட்டுக் கொழுப்புதான் பயன்படுகிறது. இன்றைக்கு மாறிவிட்டது மருத்துவம்.
ஏன் நீங்கள் சொல்லிப் பாருங்களேன், கோமாதா கொழுப்பா? வேண்டவே வேண்டாம்; நரம்பை வைத்து தையல் போடுங்கள் என்று சொல்லித்தான் பாருங்களேன்.
எங்கெல்லாம் ஆச்சாரத்தைக் கடைபிடிப்பதினால் இழப்பு இல்லையோ, அங்கெல்லாம் ஆச்சாரத்தைத் தீவிர மாகக் கடைபிடிப்பார்கள். எங்கெல்லாம் ஆச்சாரத்தைக் கடைப்பிடித்தால் லாபம் இல்லையோ, அங்கெல்லாம் ஆச்சாரத்தை விட்டுவிடுவார்கள்.
ஆனால், கோவில் கருவறைக்குள் அடுத்த ஜாதிக் காரனை உள்ளே விடுவதில் அவனுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதற்காகத்தான் அதனை தடுத்துக் கொண்டிருக் கிறார்கள்.
பசு மாட்டுச் சிறுநீரில்,  பசு மாட்டுச் சாணியில் மருத்து வக் குணம் உள்ளது என்று சொல்கிறீர்களே, மாட்டின் கழிவிலேயே இவ்வளவு மருத்துவக் குணம் இருந்தால், மாட்டுக்கறியில் எவ்வளவு இருக்கும்? அதற்காகத்தான் மாட்டுக்கறி சாப்பிடுகிறோம். அதைத்தான் அய்யா அவர்களும் இங்கே சொன்னார்.
நீ மாட்டு மூத்திரத்தைக் குடிப்பதை நாங்கள் வேண்டாம் என்று சொன்னோமா? மாட்டு மூத்திரத்தைக் குடிப்பதற்குத் தடை செய்கிறோம் என்றால், நீ எவ்வளவு கோபப்படுவாய். மாட்டு மூத்திரம் குடிப்பது உன்னுடைய சுதந்திரம் என்றால், மாட்டுக்கறி சாப்பிடுவது எனது சுதந்திரம்.
இதில் என்ன பிரச்சினை என்றால், மாட்டு மூத்திரம் குடிப்பவன் உயர்ந்த ஜாதியாம்! மாட்டுக்கறி சாப்பிடுகிற வர்கள் தாழ்ந்த ஜாதியாம்! உலகத்திலேயே இந்தக் கேவலம் இங்கு மட்டும்தான் உண்டு. மனிதர்களின் மூத்திரத்தைக்கூட குடித்திருக்கிறார்கள் - நமது முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் கூட குடித்தவர்தான்.
மிருகாபிமானத்திற்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம்
மனிதனைக் கொன்றாவது மாடுகளைப் பாதுகாப்போம் என்கிற இந்த மிருகாபிமானத்திற்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம் என்று சொல்லி என்னுடைய உரையை முடிக்கின்றேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு எழுத்தாளர் வே.மதிமாறன் அவர்கள் உரையாற்றினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...