Total Pageviews

Tuesday, October 27, 2015

எல்லை தாண்டுவதாகக் கூறி எல்லை தாண்டுகிறது இலங்கை அரசு நிரந்தரத் தீர்வுக்கு மத்திய அரசு வழிகாணட்டும்!

எல்லை தாண்டினால் தமிழக மீனவருக்கு ரூ.15 கோடி அபராதமாம்!
எல்லை தாண்டுவதாகக் கூறி எல்லை தாண்டுகிறது இலங்கை அரசு
நிரந்தரத் தீர்வுக்கு மத்திய அரசு வழிகாணட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தமிழக மீனவர்கள் கடலில் எல்லையைத் தாண்டினால் ரூ.15 கோடி அபராதம்வரை என்று இலங்கை அரசு எல்லை தாண்டி செயல்படுகிறது. மத்திய அரசு தமிழக மீன வர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இலங்கையை நம் இந்திய அரசு நட்பு நாடு என்று கூறத் தயங்குவதே இல்லை.
அந்த நட்பு எப்படி இருக்கிறது?
நமது தமிழ்நாட்டு மீனவ சகோதரர்களின் வாழ்வாதாரத்தை அன்றாடம் பறித்து, ஏதோ ஒரு சாக்குக் கூறி, அவர்களது படகுகளைப் பறிமுதல் செய் வதும், அவர்களைச் சிறையில் அடைப்பதும், பிறகு கொஞ்ச காலம் கழித்து, இந்திய அரசினரின் கோரிக் கையை ஏற்று அவர்களை மட்டும் (படகுகளைத் திருப் பித் தராமல்) விடுதலை செய்வதுமான வாடிக்கையான வேடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது! இது ஏதோ ஒரு நாடகக் காட்சிகள்போல் நடைபெறுகின்றன!
ரூ.15 கோடி அபராதமாம்!
நேற்று இலங்கை அரசிடமிருந்து ஒரு மோசமான அறிவிப்பு வெளிவந்துள்ளது! நமது மீனவர்கள் மீன்பிடித் தொழிலை அன்றாடம் கடலில் செய்து கொண்டுள்ளபோது, அவர்களது எல்லைக்குள் சென்றால், பிடித்துச் சிறையில் போடுவதல்லாமல், 15 கோடி ரூபாய்வரை அபராதம் விதிப்பார்களாம் (நமது ரூபாயில் ஏழரை கோடி ரூபாய்).
பக்கத்து அண்டை நாடு எதிலும்கூட இதுபோன்ற சட்டம் - கருப்புச் சட்டம் - போட்டிருப்பதாகத் தெரிய வில்லை. பாகிஸ்தானிலோ, பங்களாதேஷிலோ இருப்பதாகத் தெரியவில்லையே!
ஏற்கெனவே நமது கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலைச் செய்யும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை சிங்களக் கடற்படை திட்டமிட்டே வலையை அறுப்பது, தாக்குவது, படகுகளைச் சுற்றி வளைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற அக்கிரம, அநியாயங்களைச் செய்து எப்போதும் அச்சப்பட்டுக் கொண்டே நம் மீனவர்கள் இருக்கவேண்டும் என்ற நெருக்கடிக்குள் தள்ளி அவதிக்கும், தீராத மன உளைச்சலுக்கும் ஆளாக்குகிறார்கள்!
இப்போது இப்படி ஒரு அநியாயச் சட்டம் - அபராதம் 15 கோடி ரூபாய் என்று வந்துவிட்டால், பிறகு கேட்கவா வேண்டும்?
நாட்டு எல்லைகளைத் தரையில் - நிலத்தில் வேலி போட்டும், மதிற்சுவர் எழுப்பியும் பாதுகாக்கலாம்; பாதுகாத்தும் வருகின்றனர்.
அலைகடலுக்கு எல்லை உண்டா?
அதுபோல, கடலுக்கு, காற்றுக்கு வேலி அமைக்க முடியுமா?
கடல் அலைக்கு அணைகள்தான் கட்ட முடியுமா? திடீரென்று காற்று வீசி, அலையெழும்பி அந்த மீனவர் களை இன்னொருபுறம் தள்ளக்கூடுமே! உயிர் பிழைப் பதே நிச்சயமற்ற அபாய நிலை! இதில் இப்படி ஒரு அடக்குமுறையை- சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்!
தமிழக முதலமைச்சர் சார்பில், தமிழ்நாட்டு ஆளுங் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர் களைச் சந்தித்து நிரந்தரத் தீர்வு காண வற்புறுத்தியது பயன் தரவேண்டாமா?
வன்மையாகக் கண்டிக்கிறோம்!
குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக - மீனவ சகோதரர்களின் சோகம் தொடர்கதையாகலாமா?
நட்புறவுக்கு பாலம் தேவையே தவிர, அடக்குமுறை, கருப்புச் சட்டங்கள் தேவையில்லை. இலங்கை அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்!கி.வீராமணி
தலைவர்,   திராவிடர் கழகம்
27.10.2015
சென்னை
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: