Tuesday, October 20, 2015

பச்சையான பாசிசம்!


பாரதீய ஜனதா என்றால் பச்சையான பாசிச ஜனதா என்று சொல்லி விடலாம்; சங்பரிவார் என்றால் சந்தேகம் இல்லாமல் ஜார் மன்னனின் வாரிசுகள் என்றும் கூறி விடலாம். சிவசேனை என்றாலே சீரழிக்கும் கலாச்சாரக் கும்பல் என்ற அடையாளத்தை அளித்து விடலாம்.
அதுவும் மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி நரேந்திர மோடியின் தலைமையில் வந்தாலும் வந்தது - உள்நாட்டில் மட்டுமல்ல - உலக நாடுகள் எங்குமே இந்தியாவின் கதை சந்தி சிரிக்கிறது.
எதிலும் மதவெறிப் பார்வை, இட்லரிசம் கொடி கட்டிப் பறக்கிறது. மாட்டுக்கறி என்று சொல்லி, மாடுகளைக் காப்பதாகக் கூறி, மனிதர்களை அடித்துக் கொல்லும் மிருகமாகி விட்டது ஒரு கூட்டம்.
சட்டமன்றத்திலேயே சட்டமன்ற உறுப்பினரைத் தாக்குகிறது. இந்தியா - பாகிஸ்தான் நல்லுறவு என்று இரு நாட்டு ஆட்சியின் பிரதிநிதிகளும் ஒரு பக்கத்தில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்; இன்னொரு பக்கத்தில் இந்தியாவுக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்திக் கொண் டிருக்கும் கிரிக்கெட் வாரியத்தின் அலுவலர்களை அலுவலகம் புகுந்து தாக்குகின்றனர். பாகிஸ்தானிலி ருந்து இந்தியாவுக்கு வந்து இசை நிகழ்ச்சி நடத்து பவர்கள்மீது பாய்ந்து பிராண்டுகிறார்கள்.
மும்பையில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் புகுந்து கருப்பு மய்யை வீசி அசிங்கப்படுத்துகிறார்கள். இவ்வளவுக்கும் அதில் சம்பந்தப்பட்டவர் வேறு யாரோ அல்ல - சுதீந்திர குல்கர்னி என்பவர் பிஜேபியைச் சேர்ந்தவர்தான் - அந்த நூல் வெளியீட்டு விழாவை நடத்தியவர்.
வெளியிடப்படும் நூலில் என்ன சொல்லப்பட் டுள்ளது என்பது கூடத் தெரியாது. அந்த அளவுக்குக் கூடப் பொறுமை இல்லாமல் ஆத்திரக்காரர்களாக நடந்து கொள்வது வெட்கக் கேடு! வெட்கக் கேடு!!
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச் சரான குர்ஷித் கசூரி என்பவரால் எழுதப்பட்ட அந்த நூல் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் நல்லுறவின் அவசியத்தை வலியுறுத்துவதுபற்றிதான், இரு நாடுகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சுமூகத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான். அந்த நூலின் மய்யப் புள்ளியாகவும் இருக்கிறது. சிவசேனையைப் பொறுத்தவரை இத்தகைய பாசிச நடவடிக்கைகள் ஒன்றும் புதியதல்ல. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் கிரிக்கெட் போட்டி நடத்த இருந்த சூழ்நிலையில் ஆடுகளத்தைச் சிதைத்தார்களே! 1996 மே திங்களில் மும்பையில் எம்.எப். உசேனின் ஓவிய அரங்கினைத் தீ வைத்துக் கொளுத்தவில்லையா?
அவ்வளவு மோசமான - அநாகரிகமான செயலைச் செய்த பிறகும் கூட சிவசேனா தலைவர் பால்தாக்கரே என்ன சொன்னார் தெரியுமா?
உசேன் ஹிந்துஸ்தானத்துக்குள் நுழைய முடிகிற தென்றால் நாங்கள் அவர் வீட்டுக்குள் நுழைய முடியாதா? என்று கேட்டாரே!
1999 செப்டம்பர் 23 உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோவில் நாடகத்தை நடத்தி விட்டு சஹ்மத் ரங்கி மஞ்ச நாடகக் குழுவினர் திரும்பி வந்து கொண்டி ருந்தபோது, பிஜேபி ஆர்.எஸ்.எஸ். கும்பல் வழிமறித்து கலைஞர்களைத் தாக்கியதை மறக்க முடியுமா?
1989 மே நாளன்று கருநாடக மாநிலம் பெங்களூ ருக்கு அருகில் ஆனெகல் என்ற இடத்தில் சமுதாய நாடகக் குழுவினர் நாடகம் நடத்திக் கொண்டிருந்த போதே பெங்களூர் மாநகராட்சி பிஜேபி உறுப்பினர் எம். நாகராஜ் தலைமையில் காவிக் கும்பல் உள்ளே நுழைந்து கலைஞர்களைத் தாக்கியதுண்டே!
இந்தியாவில் புகழ் பெற்ற நடிகரான திலீப்குமார் பாகிஸ்தான் அரசிடம் பெற்ற விருதினைத் திருப்பித் தர வேண்டும் என்று கோரி 1989 ஜூலை 13 அன்று டில்லியில் லெ-மெரிடின் ஓட்டலுக்கு முன் சிவசேனை யினர் திலீப்குமாரின் கொடும்பாவியைக் கொளுத்தி னார்களே.
அவுட்லுக் இதழின் பிரபல கார்ட்டூனிஸ்ட் இர்பான் ஹுசேனைக் குரூரமாகக் கொன்று சாக்குப் பைக்குள் போட்டுத் தைத்து சாக்கடைக்குள் உருட்டி விட்டனரே!
வாட்டர் என்ற ஒரு திரைப்படம் - விதவைகளின் கண்ணீரைப் படம் பிடிக்கும் திரைப்படம், தீபாமேத்தா என்பவர் அதன் இயக்குநர் - இந்து விதவைப் பெண்கள் பற்றி படம் எடுக்கக் கூடாது என்று கூறி படப் பிடிப்பைத்தடுத்து கலவரம் செய்து நிறுத்தினார்களா இல்லையா?
இந்தத் திரைப்படத்தை வேறு எங்கு எடுத்தாலும் சரி கல்லடி விழும் ஜாக்கிரதை என்று வன்முறையைத் தூண்டும் பேச்சுக்குச் சொந்தக்காரர் உமாபாரதிதான்! (இன்றைய மத்திய அமைச்சர்)
இப்படி எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டு களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
போகிற போக்கைப் பார்த்தால் மோடி அரசு அய்ந் தாண்டுகள் வரை தாக்குப் பிடிக்காது - மக்களே கிளர்ந்து எழுவார்கள் என்பதில் அய்யமில்லை.
நடக்கட்டும் நடக்கட்டும் - எவ்வளவு காலத்துக்குத் தான் ஆட்டம் போடுவார்கள் - அதையும்தானே பார்க்கப் போகிறோம்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...