Total Pageviews

Thursday, October 15, 2015

மன நலம் - மன வளம் - முக்கியம்! (4)மனதில் மாசு இல்லாத அகவாழ்வு, நம்மிடம் உள்ள அஞ்சாமைப் பண்பைப் பெருக்கும் மிகப் பெரிய ஊற்று ஆகும்!
அஞ்சுவதற்கு அஞ்சுதல் என்பதை யும் அஞ்சாமையையும் பலர் குழப்பிக் கொள்ளுகிறார்கள் அது தேவையற்றது.
அஞ்சுவதற்கு அஞ்சுவது ஓர் எடுத்துக்காட்டு மின்சாரக் கம்பியில் கை வைத்து வீரம் காட்ட முனைய லாமா? விளைவு என்னவாகும்?
பேய், பிசாசு மற்றும் பல மூடநம் பிக்கை சடங்கு, சம்பிரதாயங்களை எல்லாம் கண்டு, எதை எடுத்தாலும் அஞ்சி அஞ்சிச் சாவார்; இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே; என்று கூறுவது அஞ்சக் கூடாத கற் பனைகளை மூலையில் தள்ளுவதற் குப் பதில் மூளையில் பத்திரப்படுத்தி வைப்பது நியாயமா? தேவையா?
அகவாழ்வு - நம் உள்ளத்தைத் தூய்மையுடன் வைத்தல் மூலம் பல ஆக்கச் சிந்தனைகள், தானே மலரும்; எதிர்மறை எண்ணங்கள் (Negative Thougts)
நமக்கு ஏற்படாமல் தடுத்துக் கொள்ளும் வாய்ப்பு நிச்சயம் நமக்குக் கிட்டும்.
மன அழுத்தம் (Stress)  என்பது எத்தனைப் பேர்களை - அவர்கள் இளையர்களாக இருப்பினும் - நடுத்தர வயதானவர்களாயினும் திடீர் மாரடைப்பு ஏற்படக் காரணமாக அமைகிறது! எங்கே மன இறுக்கம் - மனதில் சதா தொடரும் மன உளைச்சல் - இவை தூக்கத்தைக் கெடுக்கிறது; பசியைத் தடுக்கிறது. ரத்த அழுத்தம் அளவுமீறி ஏற்பட்டு அதுவே மாரடைப்பாக, சீரகத்தின் பழுதாக ஆவதற்கு மூல காரணமாக அமைகிறது!
எனவே மன அமைதி, மனதில் எவரையும் தாழ்த்தி எண்ணுதல் - அவரிடம் நேரில் புகழ்ந்து நாமாவளி பாடி விட்டு, பிறகு அவர் நகர்ந்தவுடன், புறம் கூறிப் பொய்த்துயிர் வாழும் போக்கு மற்றவர்களை அழிக்குமுன் இத்தகைய மனம் - உள்ளம் படைத்தோரையே அதிகம் பாதிக்கும்!
எவரிடத்திலும் குறைகண்டால் - தவிர்க்க முடியாத நிலை என்றால், -உரிமை எடுத்துக் கொள்ளக் கூடிய நண் பர்கள், அல்லது உறவினர்கள் என்றால் மட்டும் முகத்துக்கு நேரே மிகுந்த நயத் தக்க சொற்களால் சுட்டிக் காட்டுங்கள், இன்றேல் - புது அறிமுகம் என்றால் புரிந்து கொண்டு அத்தகையவர்களிட மிருந்து ஒதுங்கி விடுங்கள்.
உங்களை நோக்கி சிலர் ஆதார மில்லாத குற்றச்சாட்டுகளை - பொய்ப் புகார்களை அள்ளி விடும்போது; உங்கள் மனம் படாதபாடுபடும்; சிலர் கொதித் தெழுவார்கள். அதுகூட உடனே அப்படி பதிலடி கொடுக்கத் தான் வேண்டுமா? என்று ஒரு முறை அல்ல பல முறை யோசியுங்கள்.
பதில் கூறத்தான் வேண்டும் என்ற நிலை - விடை கிடைக்குமேயானால், அதை சற்று நேரம் ஆறப் போட்டு செய்தால் அதன் மூலம் நம் உடல், உள நலம் பாதிக்காமல், எதிர்பார்க்கும் பலனும் அதன் மூலம் கிடைத்தே தீரும்!
புத்தர் பற்றி ஒரு நிகழ்வு சொல்லப் படுவது உண்டு.
ஒருவன் வசைமாரிப் பொழிந்தான்; புத்தர் பிட்சை கேட்க  போன போது, புத்தர் புன்னகையடன் இருந்தார்; அவ னுக்கு மேலும் மேலும் கோபம் - ஆத்திரம் எரிச்சல் புத்தர் மீது பொங்கியது! அமைதியாகச் சொன்னாராம் புத்தர்; நீங்கள்  கொடுக்கும் இந்த உணவை நான் ஏற்காமல் போனால் அது யாரிடம் இருக்கும் - உங்களிடம்தானே? அது போல உங்கள் வசவு மொழிகளை நான் ஏற்கவில்லை; அது உங்களுடன்தான் தங்கிவிடும்!
அதுபோல் உங்கள் வசவு களை, நான் ஏற்கவில்லை. என்றார் மிக அமைதியாக. வெட்கத்தால் தலை குனிந்தவன் மனம் மாறி நல்ல மனிதன் ஆனான்! எனக்கேகூட ஒரு குறை - நான் உணர்ந்து திருத்திக் கொள்ள முயலும் குறை - எனக்கு நூற்றிற்கு நூறு சரியென்று பட்டதை - ஆதாரம் உள்ள செய்திகளை  - பிறர் மறுத் தாலோ, தவறாகச் சொன்னாலோ, அடித்துச் சொல்லும் பாணியில் உரத்த குரலில் பதில் சொல்லும் பழக்கம்.
இது தவறான ஒன்று என்று உணருகிறேன். ‘Aggressive tone’ தேவையில்லை. அழுத்தம் கருத்தில் இருந்தால் போதாதா? ஏன் குரலில் இருக்க வேண்டும்?
சிலருக்கு இது மனப்போக்கு. மாற் றிக் கொள்ள வேண்டியதும் ஆகும்!
குறை இருப்பது இயல்பு; அதைக் கண்டறிந்த பின்பு, அதை மாற்றிக் கொள்ளுவது தான் சீரிய பகுத்தறி வுள்ள மனிதரின் கடமை!
என்னே மனம் என்ற மூன்று எழுத்து - எப்படி நலம் என்ற மற் றொரு மூன்று எழுத்து கொண்டு நம்மை வாழ வைக்கிறது என்பதை உணர்ந்து,
மனத்துக்கண் மாசிலனாக வாழ்ந்து, மனிதம் படையுங்கள். மாமனிதத்திற்கு உயர முயற்சியுங்கள்!
(நிறைவு)

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: