Total Pageviews

Thursday, October 15, 2015

பிரதமர் மோடி பேசாமலே இருந்திருக்கலாம்!


உத்தரப்பிரதேசத்தில் மாட்டுக்கறிப் புரளியைக் கிளப்பி விட்டு இஸ்லாமியப் பெரியவர் ஒருவரை சங்பரிவார்க் கும்பல் வன்முறையால் படுகொலை செய்தது.
இதன் பின்னணியில் பிஜேபி சட்டப் பேரவை உறுப்பினர் இருந்தார். இவ்வளவுக்கும் இவர் யார் என்றால் மாட்டுக் கறியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலைச் செய்து வருபவர்.
இந்தியா முழுவதும் மட்டுமல்ல; இந்தக் கேடு கெட்ட செயல் உலகெங்கும் பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியது. இந்தியாவில் அறிவு சான்ற பெரு மக்கள் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், தாங்கள் பெற்ற விருதுகளை எல்லாம் திருப்பி அனுப்ப ஆரம்பித்தனர் - நாளும் இந்த வரிசை நீள்கிறது.
இன்றைக்கு நாட்டை ஆளும் ஓர் அரசு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச் சார்பின்மைக்கு விரோதமாக - இந்து மத உணர்வை வெளிப்படையாக வலியுறுத்தும் அரசாகவே செயல் பட்டு வருகிறது - பிஜேபி அதன் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப் பினர்கள், மதவாத வெறி நாசகாரப் பேச்சுகளை உதிர்த் தும் வருகின்றனர். பிஜேபி ஆளும் சில மாநிலங்கள் மாட்டிறைச்சிக்குத் தடையும் விதித்துள்ளன. இத்தகு இந்து வெறிப் பேச்சுகளால் தான் உத்தரப்பிரதேசம், தாத்ரியில் முஸ்லிம் முதியவர் ஒருவர் கொல்லப்பட்டார். அதுவும் மாட்டுக் கறி சாப்பிட்டார் என்று பொய்யான புரளியைக் கிளப்பி விட்டு - இந்தப் படுகொலை நடந்திருக்கிறது.
பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலியின்  இசை நிகழ்ச்சி மும்பையில் நடத்தப்பட இருந்தது - சிவசேனை வெறியர்களின் மிரட்டலால் அந்நிகழ்ச்சி நடத்தப்பட முடியவில்லை.
இதுபோன்ற மனித உரிமைகளுக்கு எதிரான மதவாத நடவடிக்கைகளை எதிர்த்துதான் அறிஞர் பெரு மக்கள், எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளைத் திருப்பி அனுப்பினர்.
இவ்வளவு நடந்தும் பிரதமர் ஏன் வாய்த் திறக்க வில்லை என்ற வினா நாட்டின் நாலாத் திசைகளி லிருந்தும் வெடித்துக் கிளம்பியது. பிகார் தேர்தலிலும் எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது. இந்தச் சூழ் நிலையில்தான் பிரதமர் மிகவும் காலந் தாழ்ந்து வங்க மொழி நாளிதழான ஆனந்த பசாருக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்துத் திருவாய் மலர்ந்துள்ளார்.
தாத்ரி நிகழ்வு, கஜல்பாடகரின் நிகழ்ச்சித் தடை என்பவை துரதிர்ஷ்டமானது. இதில் மத்திய அரசுக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லை, மத்திய அரசு பொறுப்பு ஏற்கவும் முடியாது.
இதுபோன்ற நிகழ்வுகளை பிஜேபி ஒரு போதும் ஆதரிக்கவில்லை  எதிர்க்கட்சிகள் தான் பிஜேபி மதவாத அரசியலை நடத்துவதாகக் கூறுகின்றன. உண்மையில் எதிர்க்கட்சிகள் தான் ஒவ்வொரு நிகழ்வையும் மத ரீதியாக அரசியல் ஆக்குகின்றன. பாரதிய ஜனதா எப்பொழுதும் மதச் சார்பற்ற தன்மையுடன் கூடிய வளர்ச்சி என்ற நிலையில் உள்ளது என்று பேட்டி கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.
இந்தப் பேட்டியைக் கொடுப்பதைவிட கொடுக்காமல் இருந்திருந்தால், மோடிக்கும் அவரது ஆட்சிக்கும், கட்சிக்கும் ஓரளவு நல்ல பெயரையாவது ஏற்படுத்திக் கொடுத்திருக்கும்.
இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்குப் பொறுப்பு இல்லை என்பது அசல் சிறுபிள்ளைத் தன்மையான தல்லவா?
நடந்தது ஒரு மாநிலத்தில் என்றாலும் அது தேசியப் பிரச்சினை ஆகி விட்டதா இல்லையா?
வெளிநாடுகளிலும் எதிரொலிக்கிறது.
நாட்டையே குலுக்கிய இந்த நிகழ்சசியைக் குறைந்தபட்சம் தொடக்கத்திலேயே கண்டித்திருக்க வேண்டாமா? மாறாக பிஜேபியைச் சேர்ந்தவர்கள், நடந்த படுகொலைக்கு வக்காலத்து வாங்கிப் பேசி னார்களே, அப்படி இருக்கும்போது, இப்பிரச்சினையில் மோடிக்கும், பிஜேபிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சொல்லுவது சரியானதுதானா?
எதிர்க்கட்சிகள்தான் மத ரீதியாக அரசியலாக் குகின்றனவாம் - இதாவது உண்மைதானா? விருதுகளைத் திருப்பி அனுப்பியுள்ளார்களே - எழுத்தாளர்கள் - அவர்கள் எல்லாம் மோடியைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தானா?
இன்னொரு கடைந்தெடுத்த நகைச்சுவை, மதச் சார்பற்ற தன்மையை கடைப்பிடிக்கிறார்களாம்.
குடியரசு தினவிழாவைப்பற்றி ஏடுகளுக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளம்பரத்தில்கூட, திட்ட மிட்டே இந்திய அரசமைப்புச் சட்ட முகவுரையில் காணப்படும் மதச் சார்பின்மை, சோசலிசம் என்ற சொற்களை நீக்கி இருந்தனரே இதன் பொருள் என்ன?
பிரதமர் மோடி கருத்துத் தெரிவிக்கவில்லை என்பதைவிட அவர் பேசி கருத்துத் தெரிவிக்க ஆரம்பிக்கப் போய் அதிகமான அவப் பெயரைத் தேடிக் கொண்டு விட்டாரே - என்ன செய்ய!

0 comments: