Monday, August 31, 2015

சட்டத்தின்மூலம் ஜாதியை ஒழித்து விட்டு ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லட்டும்!

ஊன்றிப்  படித்து உண்மையை உணர்வீர்!
  • குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தை வைத்து ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்பதா?
  • ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கர் ஞான கங்கையில் ஜாதி காப்பாற்றப்பட வேண்டும் என்கிறாரே!
  • சட்டத்தின்மூலம் ஜாதியை ஒழித்து விட்டு ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள சமூக நீதிக்கான அறிக்கை

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை  வெற்றிக்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி!

ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்போர் - சட்டப்படி ஜாதியை ஒழித்துவிட்டு, அதன்பிறகு அந்தக் கோரிக்கையை முன் வைக்கட்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

குஜராத்தில் அண்மையில் பட்டேல் ஜாதியினர் தாங்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப் பட்டு, இடஒதுக்கீடு தர வேண்டும்; குஜராத் மக்கள் தொகையில் 15 விழுக்காடு தாங்கள் உள்ளதாகக் கூறி, மிகப் பெரிய கிளர்ச்சி நடத்தினர்.

குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் அரசு இதனை அடக்க முடியாத அளவுக்குச் சென்றதால், இராணுவத்தை அழைத்து அமைதி திரும்பும் நிலையை ஏற்படுத்த வேண்டியதாயிற்று.

150 பேருந்துகள் எரிக்கப்பட்டன; துப்பாக்கிச் சூடு! 10 உயிர்களுக்கு மேல் பலி! காவல்துறையின் அடக்குமுறை காரணமாக ஏற்பட்டது என்பது குஜராத் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள செய்தி; பல ஊர்களில் ஊரடங்கு உத்தரவு.
சட்டம், ஒழுங்கு, வளர்ச்சி - எல்லாம் மாடல் குஜராத்திலேயே கேள்விக் குறியாயிற்று!

மோடியே புலம்புகிறார்

காந்தி பிறந்த மண்ணில் இப்படியா என்று பிரதமர் மோடியே புலம்பியுள்ளார்!
இதன் தாக்கமும், வேகமும் மற்ற வட மாநிலங்களிலும் பரவும் என்ற நிலை உள்ளது.

இதனை முன்னெடுத்து, அழைப்புக் கொடுக்க பட்டேல் ஜாதியைச் சேர்ந்த ஹார்திக்பட்டேல் என்ற 22 வயது இளைஞர் - பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி - என்ற ஓர் அமைப்பின் அமைப்பாளராக உள்ளார்.

ஹார்திக்பட்டேலின் குழப்பம்

அவருக்கு இடஒதுக்கீடு - சமூக நீதி பற்றிய முழுத் தெளிவு இல்லை என்பது பற்பல நேரங்களில் அவரது கருத்துக் குழப்பத்தின் மூலம் தெரிகிறது.

பட்டேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு தேவை; அது கிடைக்கா விட்டால் யாருக்குமே கிடைக்காத அளவுக்கு அந்த இடஒதுக்கீடு அறவே ஒழிக்கப்படுதல் வேண்டும் என்று பேசுவது அவரது கருத்துக் குழப்பத்திற்குச் சரியான எடுத்துக்காட்டு.

(அவரே டில்லி பேட்டியில் - 30.8.2015) அதை மாற்றி OBC  பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எங்களை இணைத்ததோடு இதைக் கோரும் மற்ற ஜாதியினரை இணைத்து ஒரு தேசீய முன்னணியை உருவாக்கும் என்றும் பேசியுள்ளார்)

எம்.ஜி. வைத்யா என்ன கூறுகிறார்?

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை விளக்கவாதியான எம்.ஜி. வைத்யா (என்ற பார்ப்பனர்) ராய்ப்பூரில் நேற்று உடனே செய்தி யாளர்கள் சந்திப்பில், (ஆதாரம்: 31.8.2015 ஹிந்து நாளேடு)
ஜாதி அடிப்படையில் தரும் இடஒதுக்கீடு (கல்வி, உத்தியோகங்களில்) உடனடியாக ஒழிக்கப்படல் வேண்டும்; ஏனெனில் இனி ஜாதியை அடிப்படையாகக் கொள்வது என்பது எவ்வகையிலும் பொருத்தமானது அல்ல என்று கூறுகிறார்.

இதன் மூலம்தான் இந்த இடஒதுக்கீடு போராட்டத் திட்டம் விதை எங்கே உருவானது என்ற நியாயமான சந்தேகம் நாட்டில் பல சமூகநீதிப் போராளிகளுக்கும் உண்டாவது இயல்புதானே!

ஜாதி ஒழிப்புக் கொள்கை ஆர்.எஸ்.எசுக்கு உண்டா?

ஆர்.எஸ்.எஸ். கருத்து - கொள்கை என்பது தெளிவாகிறது. அவர்களை நோக்கி நாம் சில

கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம்:

(1) ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டினை ஒழிக்க வேண்டுமென்று  முழங்கும் ஆர்.எஸ்.எஸ்.,  ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லத் தயங்குவதேன்?
 
ஜாதிபற்றி கோல்வால்கர்

சட்டம் போட்டு - ஜாதியை ஒழித்தால் -  ஜாதி அடிப்படை இடஒதுக்கீடு தானே ஒழிந்து விடுமே! அதற்கு ஆர்எஸ்.எஸ். தயாராகாது; சந்தேகமிருந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தத்துவ கர்த்தா -  சர்சங்க் ஜாலக் முதன்மையர் கோல்வால்கரின் ஞான கங்கை (Bunch of Thoughts) நூலைப் படிக்கட்டும்.

நமது சமுதாயத்தின் மற்றொரு விசேஷ அம்சம் நான்கு வருண அமைப்பு ஆகும். இன்று அது ஜாதிவாதம் என்று கூறிக் கேலி செய்யப்படுகிறது. வருண அமைப்பு என்று கூறுவதே கேவலமானது என்று நம் மக்கள் எண்ணுகின்றனர். அந்த நால்வருண அமைப்பில் உருவாகிய சமூக அமைப்பினை, சமூக சமநீதிக்குப் புறம்பானது என்று தவறாக எண்ணுகின்றனர்.

வருண அமைப்பில் தோன்றிய உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற  ஏற்றத் தாழ்வு உணர்வு சமீப காலத்தில் தோன்றியதாகும் என்று எழுதியுள்ளார் கோல்வால்கர்.

எவ்வளவு பெரிய கோணிப் புளுகு இது! மனு தர்மத்தை வெள்ளைக்காரனா எழுதினான்?

இவர்களின் சாஸ்திரங்கள் என்ன கூறுகின்றன?

மனுஸ்மிருதியில் எடுத்த எடுப்பில் முதலாவது அத்தியாயத்தில் 87ஆவது சுலோகத்தில் உள்ளது என்ன?

அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்று வதற்காக தன் முகம், தோள், துடை, பாதம் இவைகளினி ருந்து உண்டான பிராமண, க்ஷத்திரியர், வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு உபயோகமான கருமங்களை தனித்தனியாக பகுத்தார்.

 88வது சுலோக பதில்:

பிராமணனுக்கு ஓதுவித்தல்; ஓதல், யக்யம் செய்தல், தானங் கொடுத்தல், தானம் வாங்குதல் ஆகிய தொழிலை ஏற்படுத்தினர்.

91வது சுலோகத்தில்

சூத்திரனுக்கு இம்மூன்று வருணத்தாரும் பொறாமை இன்றி பணி செய்வதை முக்கியமான தருமமாக ஏற்படுத்தினார்.

இதன்படி கீழ்ஜாதி மக்களுக்கு காலங்காலமாய் கல்வி அதன் காரணமாய் வேலை வாய்ப்பு உரிமை மறுக்கப் பட்டதன் விளைவாக எழுந்த குரல் தான் பிறகு சமூகநீதி முழக்கமாய் மாறியது.

எல்லார்க்கும் எல்லாம் என்றால் இடஒதுக்கீடு தேவைப்படாது. இருப்பது குறைவானது; பசித்தவர்கள் அதிகம். யாருக்குத் தரப்படல் வேண்டும் என்பதற்கான பதில்தான் இடஒதுக்கீடு.

பசியேப்பக்காரனுக்கு முதல் பந்தி புளியேப்பக்காரனுக்குக் கடைசிப் பந்தி
இது எப்படி தவறாகும்?

உயர்ஜாதியினரால் சேவை என்ற முகமூடி போர்வையைப் போர்த்திக் கொண்டு ஹிந்து வருண தர்மத்தைத் தாங்கிப் பிடிக்கும் ஹிந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அதன் தலைவர் எப்படி ஜாதியை ஒழிக்கச் சொல்வார்?

ஜாதி வாரிக் கணக்கெடுப்பை வெளியிடாதது ஏன்?

(2) நாடு முழுவதும் முன்பு அரும்பாடுபட்டு முந்தைய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது ஒப்புக் கொள்ள வைத்த ஜாதிவாரி கணக்கு - மக்கள் தொகைக் கணக்கு எடுக்கும்போது இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையின்படி, எடுக்கப்பட்ட ஜாதிவாரி புள்ளி விவரத்தை - சென்சஸ் மக்கள் தொகை கணக்கீட்டை, பழைய சட்ட வரைமுறையின்படி அது ரிஜிஸ்டிரார் ஜெனரல் சுதந்தரமாக வெளியிட வேண்டிய கணக்கீட்டை, இம்முறை மோடி அரசு பிரதமர் அலுவலகம் மூலம் வெளியிட்டதே -சட்ட நடைமுறை விரோதச் செயல் அல்லவா! அதுவல்லாமல் முழுமையாக ஜாதி வாரியும் இணைத்து வெளியிடாமல் மதக் கணக்கினை மட்டும் வெளியிட வேண்டிய அவசரம் என்ன?

ஜாதிவாரியான கணக்கீடு வெளியிடாததற்கு தென்னை மரத்தில் ஏறியவன் புல் பிடுங்கப் போனதாகச் சொன்ன சமாதானம், போல தவறுகள் உள்ளன என்று ஏனோ தானோ வெண்டைக்காய் விளக்கம் எதற்கு? மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாகத் தானே வெளியிடப்பட வேண்டும்? இதனை பிரதமர் அலுவலகமா ஆணையிட்டு சில பகுதிகள் மட்டும் வெளியிட வேண்டும்?

எனவே, ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ். மாய்மாலம் சுத்தப் புரட்டு ஆகும்!

அரசியல் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி என்ற சொல் இடம் பெற்றுள்ளதை அறியாதவர்களா இவர்கள்?

 அறியாமையா? தகிடு தத்தமா?

(3) தற்போதைய சமூகநீதி இடஒதுக்கீட்டுக் கால நிர்ணயம் இந்திய அரசியல் சட்டத்தில் கல்வி வேலை வாய்ப்பில் கிடையாது.

அரசியல் தேர்தலில் ரிசர்வ் தொகுதிக்குத்தான் 10 ஆண்டு முதலில் கூறி அது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அதையும், காலநிர்ணயம் செய்யப்படாத கல்வி, வேலை வாய்ப்பையும் ஒன்றாகக் குழப்புவதும் ஒன்று அறியாமை; இன்றேல் திட்டமிட்டு தகிடுதத்தம்  புரிந்து கொள்ளுங்கள்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

31.8.2015,
சென்னை

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...