Total Pageviews

Thursday, September 10, 2015

இறைச்சி உணவிற்கு மும்பையில் தடையா?

மும்பையில் ஜைன மதத்தினரின் நோன்புக் காலத்தில் மும்பை, தானே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  இம்மாதம் 10 முதல் 18 ஆம் தேதிவரை மாமிச உணவுகள் முற்றிலும் விற்கக்கூடாது என்று மும்பை, தானே மாநகராட்சி சுற்றறிக்கை விட்டுள்ளது.   மும்பை தானே நகரில் பெரும் தொழில் நிறுவனங்களை நடத்திவரும் ஜைன மதத்தினர் வெறும் 1.3  விழுக்காடு மட்டுமே வாழ்கின்றனர்.  
செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதிமுதல் 18 ஆம் தேதிவரை ஜைனர்களுக்கான நோன்பு நாட்கள் ஆகும். இந்த நோன்பு நாட்களை முன்னிட்டு மும்பை மற்றும் தானே மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு வெட்டுதல், கோழி வெட்டுதல், இவற்றின் இறைச்சியை விற்பது, பொது இடங்களில் அசைவ உணவு பரிமாறுவது, அசைவ உணவுகளை வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து மும்பை மற்றும் தானே மாநகராட்சிக்கு கொண்டு வருவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. 
இந்த தடை உத்தரவு குறித்து மும்பை, தானே மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறியுள்ளதாவது, பெருகிவரும் ஜைன மக்களின் விருப்பத்தையும், கோரிக்கையையும் நிறைவேற்றவே இந்த தடை விதிக்கப்படுவதாகவும் இதை மீறி இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள குரோஷி இன மக்கள், இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் நாங்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். ஏற்கனவே மாட்டிறைச்சித் தடையால் எங்களில் பெரும் பாலானோர் வேலைவாய்ப்பை இழந்து  தவிக்கின்றனர். இந்த நிலையில் இது போன்ற தடைகளால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவோம், இந்தத் தடையை நீக்க வேண்டும் என மும்பை மேயரை சந்தித்து முறையிடுவோம் எனக் கூறினர்.
அப்படி மேயர் எங்களது கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடவேண்டிவரும்.  போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மும்பை மாநகராட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை சரியானதல்ல என்று கூறிய அவர்கள்  சீக்கியர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் அனைவருமே இங்கு சிறுபான்மை இனத்தவர்கள்தான். நாம் அவர்கள் அனைவருக்கும் மதிப்பளிக்க வேண்டும். இந்நிலையில், அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என கட்டுப்படுத்தும் இந்த தடையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினர்.
ஜெயின் சமூகத்தினர் மண்ணுக்குக் கீழே விளையும் எந்தப் பொருளையும் உண்ண மாட்டார்கள். அதற்காக அவற்றையும் தடை செய்வார்களோ!
சிவசேனா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ரவுத் கூறியபோது குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டும் திருப்திப்படுத்த நினைக்காமல் அரசியலமைப்புச் சட்டத்துக்கு மதிப்பளித்து மும்பை மாநகராட்சியின் நிர்வாகம் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மும்பை, தானே இரண்டு மாநகராட்சிகளையும் சிவசேனா, பாஜக கூட்டணி நிர்வாகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாநிலத்தில் ஏற்கனவே மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. சட்டத்தை மீறினால் 5 ஆண்டுகள் சிறை 10 ஆயிரம் ரூபாய் அபராதம்  விதிக்கப்படும். அந்தத் தடையின் காரணமாக பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையில் மண்ணள்ளிப் போடப்பட்டு விட்டது. இப்பொழுது போதும் போதாதற்கு மாட்டிறைச்சி மட்டுமல்ல. 9 நாட்களுக்கு ஆடு, கோழி, மீன் என்று கூறப்படும் எந்த அசைவு உணவும் பயன்படுத்தப்படக் கூடாது; அதற்கான தொழிலை நடத்தக் கூடாது என்பது கடைந்தெடுத்த காட்டு விலங்காண்டித்தனமான அடக்கு முறை அராஜக ஆணையாகும்.
உணவுப் பழக்கம் என்பது தனி மனிதரின் உரிமையைச் சேர்ந்தது. அதில் மூக்கினை நுழைக்க யாருக்கும் உரிமை வழங்கப்படவில்லை.
குடிமக்களின் மூன்று வேளை உணவுக்கு உத்தர வாதம் செய்ய வக்கற்ற அரசு, தனி மனிதன் உண்ணக் கூடிய உணவு விடயத்தில் அத்துமீறி நுழைவது சட்ட விரோதமும், மனித விரோதமும் ஆகும்.
மத்திய பிஜேபி ஆட்சி வந்ததும் வராததுமாக அது தன்னுடைய ஹிந்துத்துவா நாற்றமெடுத்த நிகழ்ச்சி நிரலை வலுக்கட்டாயமாகத் திணிப்பதிலேயே மூர்க்கத் தனத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.
வெகு மக்கள் கிளர்ச்சியின் மூலமாகத்தான் இந்த ஹிந்துத்துவா பாசிச சக்திகளை அடக்க முடியும். மிதிக்க மிதிக்க புழுவும் புலியாகும் என்பது இயற்கை நியதி;  அதனை பிஜேபியும் அதன் சங்பரிவார்களும் உணரத் தவறினால் அதற்கான விலையைக் கொடுத்தே தீர வேண்டும் என்று எச்சரிக்கின்றோம்.
மாட்டிறைச்சித் தடையை அகில இந்திய அளவில் கொண்டு வரும் திட்டத்தை மத்திய அரசு விரிவு படுத்தும்போது இதன் தன்மை என்னவென்று அப் பொழுது கண்டிப்பாகவே புரிந்து விடும்.

0 comments: