Total Pageviews

Saturday, August 29, 2015

மதிய உணவுத் திட்டத்திலும் கை வைக்கும் மத்திய பிஜேபி அரசு.

இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பெரும் பணக்காரர்கள் - ஜாதியில் உயர்ந்த இடத்தில் இருக் கும் பார்ப்பனர்களின் கூட்டாட்சியாகவே நடைபெறுகிறது என்பது வெளிப்படை.

இந்த இரண்டு நிலைப்பாடுகளுமே ஏழை  எளிய மக்களுக்கும், சமூக நீதி தேவைப்படும் மக்களுக்கும் எதிரானதே.

ஓர் அரசின் முக்கிய கடமை அடிப்படைக் கல்வியை அனைவருக்கும் கொடுப்பதே! அந்த வகையில் தேவையான அனைத்து உதவிகளையும் ஆர்வமோடு செய்தாக வேண்டும். ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசின் சிந்தனையும், செயல்பாடும் எந்தத் திக்கு நோக்கி இருக்கிறது?

திடீரென்று ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. மாநிலங்களில் மிக முக்கியமாக செயல்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்துக்காக வழங்கப்படும். மானியம் இல்லாத எரிவாயு உருளைக்கான உதவி நிதியை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் பொருள் என்ன? வீட்டில் மதிய உணவுக்கு வழியில்லாத நிலையில், பள்ளிகளில் அளிக்கப்படும் ஏழை, எளிய மக்கள் வீட்டுப் பிள்ளைகளின் வயிற்றில் தடி கொண்டு தாக்கும் மனிதாபிமானமற்ற  குரூர மனப்பான் மையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள மட்டரகமான முடிவு இது என்பதல்லாமல் வேறு என்னவாம்?

இந்தியாவிலேயே இலவச உணவுத் திட்டத்தை (காலை சிற்றுண்டி) முதன் முதலாக அறிமுகப்படுத்தியது நீதிக் கட்சியே! பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோது சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் அதனைச் செயல்படுத்திக் காட்டினார். (இலவச புத்தகம், உடை உட்பட) அதன் காரணமாக நடைபாதைகளில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள்கூடப் பள்ளிக்கு வரும் உந்துதல் உண்டாக்கப்பட்டது.

கல்வி வள்ளல் காமராசர் காலத்தில் அது மேலும் விரிவாக்கப்பட்டது; எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக வந்தபோதும், கலைஞர் அவர்கள் ஆட்சியின்போதும் மேலும் மேலும் கவனம் செலுத்தப்பட்டு சத்துணவுத் திட்டமாகப் பரிணாமம் பெற்றது என்பது தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் குறிப்பிடத்தக்க  - அடிக் கோடிட்டுக் காட்டத்தக்க செயல்பாடாகும்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் என்ற பெயரில் (1.7.1982) புதுப் பொலிவுடன் இத்திட்டம் வளர்ச்சி பெற்றது 2 முதல் 5 வயதுக்குட்பட்ட முன் பருவக் கல்வி பயிலும் குழந்தைகள் மற்றும் 5 முதல் 9 வயதுக்குட்பட்ட தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கும் இச்சத்துணவுத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. அரிசிச் சோறு, காய்கறிகள், பருப்பு உள்ளடக்கிய சத்துணவு வழங்கப்பட்டது. 1984 முதல் 10 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பயன் பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டது.

1989 இல் ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்களோ, அர்த்தமுள்ள சத்துணவுத் திட்டமாக வளர்த்தெடுத்தார் சத்துணவில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2001ஆம் ஆண்டில் கொண்டைக் கடலை பச்சைப் பயிறு, வேக வைத்த உருளைக்கிழங்கு வழங்கப்பட்டன. 2006ஆம் ஆண்டில் வாரம் மூன்று முட்டைகள் அளிக்கப்பட்டன. பின்னர் 5 முட்டைகளாகின. முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழமும் வழங்கப்பட்டது.

மதிய உணவுத் திட்டம் என்கிறபோது - இந்தியா விலேயே தமிழ்நாடு இத்திசையில் தனி அத்தியாயம் படைத்த பூமியாகும். தமிழ்நாடு அறிமுகப்படுத்திய இத்திட்டம்தான் இப்பொழுது இந்திய அளவிலே செயல்படுத்தப்படுகிறது. இந்த வளர்ச்சியைத் தடுப்பது தான் மத்திய அரசின் மனு நீதிக் கொள்கையா!?

14 வயது வரையில் அனைத்து இருபால் சிறுவர் களுக்கும் அடிப்படை  இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் 44ஆம் பிரிவு அடித்துக் கூறுகிறது. ஆனாலும் அது நிறை வேற்றப்படவில்லை; மறுபடியும் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு அதே உறுதிமொழி மேற் கொள்ளப்பட்டது. இந்த அடிப்படைக் கடமைகூட நிறைவேற்றப்படாத நிலையில் மதிய உணவுத் திட்டத்தைக் கொல்லைப்புற வழியாக மத்திய பிஜேபி ஆட்சி முடக்குவது - ஒரு வகையான மனுதர்மச் சிந்தனையே!

வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லி கடல் அளவுப் பிரச்சாரம் செய்து மக்களை மயக்கி ஆட்சிப் பீடம் ஏறிய நரேந்திரமோடி பள்ளிப் பிள்ளைகளின் கல்விக் கண்களைக் குத்துவது எந்த வகையில் நியாயமானது?
மதிய உணவு திட்டத்தால் இந்தியா முழுமையும் பலன் அடையும் மாணவர்கள் 10 கோடி உதவி பெறும் பள்ளிகளில் எண்ணிக்கை 11.67 லட்சமாகும்.

இதனை மேலும் வளர்க்க வேண்டிய ஓர் அரசு, அதனைக் குழி தோண்டிப் புதைக்க எத்தனிக்கலாமா? கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியைக்கூட இந்தப் பிஜேபி அரசு குறைத்து விட்டது என்பது கசப்பான - வெளிப் படுத்தித் தீர வேண்டிய உண்மையாகும்.

1966ஆம் ஆண்டு கோத்தாரி ஆணையம் மத்திய அரசின் மொத்த உற்பத்தியில் 6 விழுக்காடு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறியது. ஆனால் அதிகபட்சமாக ஒரே ஒரு ஆண்டில் மட்டும்தான் 4.2 விழுக்காட்டை எட்டியது. பிஜேபி ஆட்சியில் கடந்த நிதியாண்டில் கல்விக்கான நிதி ரூ.4000 கோடி  குறைக்கப்பட்டது. இதனால் படிப்பில் இடை யில் நிற்கும் (Dropouts) மாணவர்களின் எண்ணிக்கை கூடுதல் ஆகும் ஆபத்து இருக்கிறது.

இவ்வளவுக்கும் கல்விக்கென்று அரசு தனி வரியையே வசூலிக்கிறது. மதிய உணவு திட்டத்திற்குக் கடந்த ஆண்டு ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இவ் வாண்டோ வெறும் ரூ.9 ஆயிரம் கோடிதான் ஒதுக்கப்பட் டுள்ளது. இந்த நிலையில் மதிய உணவுக்கான எரிவாயு மானியத்தையும் நிறுத்துகிறது என்றால் இதன் பின்னணி என்ன?

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 6 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுக்கும் அரசுக்கு மதிய உணவுக்கான எரிவாயு மானியத்தினால் என்ன நெருக்கடி ஏற்படப் போகிறதாம்?

குழந்தைத் தொழிலாளர்கள் சட்டத்தில் ஏற்கனவே ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குலத் தொழிலைச் செய்தால் அது குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வராது என்று கூறப் பட்டுள்ளது. இதன் மூலம் ஆச்சாரியாரின் (ராஜாஜியின்) குலக் கல்வித் திட்டத்தை வேறு வழியில் அமல்படுத்த முனைந்துள்ளது.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்கிற மனு தர்ம ஆட்சியை (பிஜேபியின் நோக்கமே இந்துத்துவா ஆட்சியை அமைப்பதுதானே!) மறைமுகமாகக் கொண்டு வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களே உரிமைப் போருக்குத் தயாராவீர்!

மத்திய அரசின் சமையல் எரிவாயு மானியம் ரத்து குறித்து தமிழ்நாடு அரசு வாயைத் திறக்காதது ஏன்? அரசு விளக்க வேண்டும்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: