Total Pageviews

Wednesday, July 1, 2015

ஓநாய் சைவம் பேசுகிறது!

புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாஜக தலைவர் அமித்ஷா தற்போதுள்ள சூழலில் உலகம் முழுவதும் இந்துமதம் மாத்திரமே அமைதிக்கான ஒரே தீர்வாகும் என்று கூறியதைவிட நகைச்சுவை வேறு ஒன்றும் இருக்க முடியாது.

மும்பையில் 3 நாள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ள செல்லும் வழியில் அகமதாபாத நகரில் புத்தக வெளியீட்டுவிழா ஒன்றில் அமித்ஷா கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியவை நல்ல நகைச்சுவை விருந்தாகும்.  தற்போது உலகம் முழுவதிலும் தீவிரவாதம் மேலோங்கிவருகிறது. தீவிரவாதம் என்பது மதரீதியாக தற்போது அதிகரித்து வருகிறது, எந்த மதம் என்று குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை,

 இந்த நிலையில் இந்தியாவின் வரலாற்றை நாம் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும், இங்கே நீண்ட நெடுங்காலமாக அமைதி திகழ்ந்துவந்தது. அந்நியமதங்கள் இங்கு வரும் வரை நாட்டில் எந்த ஒரு சிக்கலுமில்லாமல் அவர வர்கள் வேலையை அவரவர்கள் செய்துகொண்டு இருந்தனர், பிற மதங்கள் இங்கு வந்த பிறகு பேதங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. சில நாடுகளில் ஒரு மதம் மாத்திரமே உள்ளது. அங்கு பிற மதங்களுக்கு வேலையில்லை, அதே நேரத்தில் அங்கு தீவிரவாதம் தழைத்தோங்கியுள்ளது. இதற்கு காரணம் எந்தமதம் என்பது அனைவருக்கும் தெரியும், தற்போதுகூட மதத்தின் பெயரால் தான் சில நாடுகளில் கொலைகள் செய்கின்றனர்.

ஆகையால் தான் நான் சொல்கிறேன் இந்துமதம் தான் உலகில் அமைதியை கொண்டுவரும் உன்னத மதமாகும். இதை நான் இந்து என்பதற்காக பெருமை யுடன் கூறவில்லை.  நான் இரண்டு ஆண்டுகளாக பெரும் சிக்கலில் மாட்டியிருந்தேன். அப்போது நான் இந்தியாவில் உள்ள அனைத்துக் கோவில்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்தேன் தமிழ் நாட்டின் பகவதி அம்மன் கோவில் முதல் காஷ்மீரின் வைஷ்ணவா தேவி மற்றும் அனைத்து சக்திபீடம் போன்ற கோவில்களுக்குச் சென்று வழிபட்டேன். இப்போது எனக்கு எந்த சிக்கலுமில்லாமல், தலைமைப்பதவியில் இருக்கிறேன். ஆகையால் இந்துமதம் எல்லா சமாதானத்திற்கும் தீர்வு என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளார் பிஜேபி தலைவர் அமித்ஷா.

பி.ஜே.பியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அதன் ஆணி வேர்களான சங்பரிவார்களானாலும் சரி பொய்ப் பேசுவதில் அசகாய சூரர்கள், பொய்களையும் திட்டமிட்டுச் சொல்லுவதில் அவர்களை வெல்ல யாரும் பிறக்கவில்லை என்று கூட சொல்லலாம்.

தீவிரவாதம் இந்து மதத்தில் கிடையாதாம் - வன்முறை என்ற பேச்சுக்கும் இடமில்லையாம்.
450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை ஒரு பட்டப் பகலில் இந்த அமைப்புகளின் மிகப் பெரிய தலைவர்கள் தலைமை தாங்கி, ஆயிரக்கணக்கான இந்து வெறியர்களைத் திரட்டி அடித்து நொறுக்கியவர்கள் எந்தத் துணிவில் இப்படிப் பேசுகிறார்கள்?

இந்து மதத்தின் அடிப்படையே பிறப்பிலேயே மனிதனைப் பிளவுப்படுத்துவது தானே? பிராமணர் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன்; பிர்மாவானவர் இந்தப் பிராமணனுக்கே இந்த உலகைப் படைத்தார் என்றும், இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களைச் சூத்திரர்கள் - வைப்பாட்டி மக்கள் என்றும், இவர்கள் பிராமணர்களுக்குச் சேவை செய்தே கிடக்க வேண்டும் என்பதையும்விட கொடூரமான வன்முறை எது? மனித விரோத ஏற்பாடு எது? இதுதான் ஒற்றுமைக்கான ஏற்பாடா?

இவர்கள் தூக்கி நிறுத்தும் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் இராமனே சம்பூகன் என்ற சூத்திரன் தவம் இருந்தான் என்பதற்காக, தவம் செய்ய சூத்திரனுக்கு அருகதை கிடையாது;  அவன் வருண தருமம் மீறினான் என்றுகூறி அந்த ராமனே வாளால் வெட்டிக் கொன்று இருக்கிறானே - இதுதான் பிஜேபி தலைவர் அமித்ஷா கூறும் இந்து மதத்தின் உன்னதமான சிலாக்கியமா? இந்து மதத்தில் கடவுள்களே சண்டை போட்டு இருக்கிறதே - எதிரிகளைக் கொலைசெய்திருக்கிறதே, பெண்களை  வன்புணர்ச்சி செய்திருக்கிறதே - இந்து மதத்தில் கடவுள்கள் தம் யோக்கியதையே இப்படி இருக்கும் பொழுது எந்தத் தைரியத்தில் இந்து மதத்தைத் தூக்கிப் பிடிக்க இவர்களால் முடிகிறது?

வில் கலையில் தேர்ச்சி பெற்ற ஏகலைவன் கட்டை விரலை காணிக்கையாக கேட்டுப் பெற்ற துரோணாச் சாரியாரின் மனப்பான்மை தானே இந்து மனப்பான்மை? இதனை இன்னும் நியாயப்படுத்துகிறாரா அமித்ஷா?

இந்து மதம் தாராள சிந்தனை உடையது தானா? அப்படி இருந்தால் இந்தியாவின் பிரதமர் அனைத்து மக்களையும் அரவணைத்து அழைத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு உள்ளவர் என்ன சொல்லுகிறார்? நான்  இந்து நேஷனலிஸ்ட் என்று தானே கூறுகிறார். இதுதான் இந்துமதம்  ஊட்டுகிற உன்னதமான உயர் பண்பாடோ!

சராபுதின் கொலை வழக்கு, இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் போன்றவற்றில் சம்பந்தப்பட்ட அமித்ஷாதான் இந்து மதத்தைப் பற்றிச் சிலாகிக்கிறார்.

ஓநாய் சைவம் பேசுகிறது - ஆம் அமித்ஷா உயர் சீலங்களைப் பற்றியும் பேசுகிறார்.


தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறுகிறவர் தானே இவர்களின் ஜெகத்குரு! சுடுகாட்டிலும்கூடப் பேதம் இருப்பது சரிதான் என்பவர்கள்தானே இவர் களின் லோகக் குரு!

0 comments: