Total Pageviews

Wednesday, July 1, 2015

மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவுவாதிகளே, சமதர்மவாதிகளே முன்வருக!

உலகம் முழுவதும் மதத்தின் பெயரால் படுகொலைகள்
மதங்களால் மக்களுக்கு அமைதியில்லை - ஒற்றுமையில்லை!
மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவுவாதிகளே, சமதர்மவாதிகளே முன்வருக!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அழைப்பு!
இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்)  தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

உலகம் முழுவதும் மதங்களின் பெயரால் படுகொலைகள் நடந்த வண்ணமே உள்ளன; மதங்களால் உலகில் அமைதி நிலவாது; ஒற்றுமை யும் ஏற்படாது. எனவே பகுத்தறிவுவாதிகளும், சமதர்மவாதிகளும் மத எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்திட முன் வருமாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
மத ஓடத்தில் ஏறிய மாந்தரே - பலி
பீடத்திலே சாய்ந்தீரே
என்று 70 ஆண்டுகளுக்கு முன் கவிதை வரிகளில் மக்களைப் பார்த்து, பரிதாபப்பட்டுக் கேட்டார் புரட்சிக் கவிஞர்.
மதம் என்பது மக்களை ஒரு போதும் ஒன்று சேர்ந்து அமைதியாக கூடிவாழ உதவி செய்யாது; அது தன் வெறியை உண்டாக்கி மனித குலத்தின் ஒற்றுமைக்கு உலை வைத்து அவர்களை நிம்மதியாக வாழ விட்டதாக வரலாறு இல்லை என்றார் தந்தை பெரியார்.
மதம் மக்களுக்கு அபின், போதை என்றார் கார்ல் மார்க்ஸ்.
மதம் மக்களுக்குச் செய்த நன்மை என்ன? என்று கேட்டு, இல்லை இல்லை என்று விளக்கம் கூறினார் இங்கர்சால்.
இக்கூற்றுக்கு இன்றும் - மனிதன் விண்வெளியில், ராக்கெட் விட்டு, பறந்து, அடுத்து செவ்வாய்க்கோளில் குடியேறவும் ஆயத்தமாகிறார்கள் என்ற செய்தி வரும் நிலையில், நமது ஞானபூமியில் மட்டும் மதச் சண்டை அதன் விளைவான ஜாதிச் சண்டை நடந்து கொண்டே உள்ள அவலம் அன்றாட அவலமாகக் காட்சியளிக்கிறது. மதவாதிகள் கூற்றும் - நடைமுறை முரண்பாடுகளும்
எந்த மதமும் மனிதர்களை ஒழுக்கவாதியாக சமூகத்தில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் நிலவுவதற்கே ஏற்பட்டன என்ற மதக் குருமார்களும், மதவியாபாரிகளும் இன்றுகூட கூறத் தவறுவதில்லை.
ஆனால், நடைமுறைக் காட்சி  முந்தைய வரலாற்றுக் காலம் முதல் இன்றைய கால நிகழ்வுகள் வரை என்ன?
அய்ரோப்பாவில் சிலுவைப் போர்கள் (Crusades) என்பவை முதல் தொடங்கி, இன்றும் மதங்களிடையே போர்களும், வன்முறைகளும் தொடர் கதையாகவே தொடருகின்ற கொடுமையின் கோரத் தாண்டவம் மாறி உள்ளதா? இல்லையே!
மூன்று கண்டங்களில் நடந்த மதக்கொலைகள்!
அண்மைக்காலத்தில் மூன்று கண்டங்களில் நிகழ்ந்த மதப் படுகொலைகள் மனித குலத்தின் மாண்பினைத் துடைத்தெறிகின்றன!
அந்தோ கொடுமை! கொடுமை!!
1. துனிஷியாவில் 37 (அந்நியர்கள் உட்பட)  சுட்டுக் கொல்லப்பட்டனர். தேசிய கண்காட்சி அகத்தில் இது நடந்துள்ளது.
2. குவைத் நாட்டில் மசூதியில் தொழுகையில் இருந்த வர்களை நோக்கி மனிதவெடிகுண்டு 25 பேர்களைக் கொன்றுள்ளது. (இவர்கள் ஒரே மதம்  - இஸ்லாமின் ஒரு பிரிவிற்கும் மற்றொரு பிரிவுக்கும் நடந்த சண்டை).
3. பிரான்சில் அமெரிக்கருக்குச் சொந்தமான தொழிற்சாலை - அதற்குமுன் ஒரு பத்திரிகை அலுவலகம்!
துனிஷியாவிலும், குவைத்திலும் மொத்தம் 67 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்!
பாபர் மசூதி இடிப்புக்குப் பின்
இதற்கிடையில் பாபர் மசூதி இடிப்புக்குப்பின் இந்தியாவில் சிறுபான்மைச் சமூகத்தவர்களான இஸ்லாமியர், ஹிந்துத்துவா பஜ்ரங்தளம் போன்ற தீவிரவாத குழுக்களால் அச்சுறுத்தப்படுகின்றனர்.
ஆஸ்திரேலியப் பாதிரியார் - தொழுநோயாளிகளுக்கு உதவிட குழந்தைகளோடு வந்து தொண்டு செய்த ஸ்டேன்ஸ் பாதிரியார் குடும்பத்துடன் எரிக்கப்பட்ட கதை மறக்கக் கூடியதுதானா?
75 வயது நிறைந்த கன்னியாஸ்திரி கல்கத்தாவில் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார்; கிறித்தவர்களின் சர்ச்சு களும் இடிக்கப்படுகின்றன.
கர்வாப்சி என்ற கட்டாய மதமாற்றம் ஆக்ரா போன்ற பகுதிகளில் - தங்கு தடையின்றி நடைபெறுகின்றன.
மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி உணவுக்குத் தடைச் சட்டம்!
உலகம் முழுவதும்கூட மதச் சண்டைகளுக்கு பஞ்சமில்லையே!
மதங்களுக்குள்ளேயே சண்டைகள்
இஸ்ரேல் - பாலஸ்தீனங்கள் பிரச்சினை இரு மதங் களின் அடிப்படையில் தானே ஏற்பட்டுள்ளன.
ஒரே மதத்திலும்  இச்சண்டை; எல்லா மதங்களிலும் இந்த நிலை! புத்தரின் பர்மா - மியன்மாவில் - இலங்கையில் - இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டு விரட்டப்படும் நிலை ஒருபுறம்; ஏற்கெனவே இலங்கை புத்த பூமி - ரத்த பூமி ஆனது  - சிங்கள இராஜபக்சே ஆட்சிகளில் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது!
மதம் மக்களுக்கு நன்மை செய்யாது. யானைக்கு வடகலை நாமமா? தென் கலை நாமமா? வழக்குக்கு சண்டைத் தீர்வு இன்னும் அர்த்தமுள்ள (?) இந்து மதத்தில் காணப்படவில்லையே!
எனவே, மதங்களால் கெட்டுள்ள உலக அமைதி - மக்கள் ஒற்றுமை கைப்புண் போலத் தெரிந்தும், இன்னமும் மத குருமார்களுக்கு செல்வாக்கும், செழுமையும் இருக்கலாமா?
இன்னமும் பாபா ராம்தேவ்களுக்கும், சங்கராச்சாரிகளுக் கும், ராம்பால் போன்ற ஹரியானா சாமியார்களுக்கும், ஆசாராம்களுக்கும் நித்தியானந்தா போன்ற காமக் கொடூரர்களுக்கும் (தனக்கு ஆண்மை இல்லை என்று பொய் சொன்ன மதத் தலைவர் இந்த மத வியாபாரி) செல்வாக்கு இருப்பது எதனால்?
மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவாளர்களே முன்வருக!
ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதனாலும், அமைச்சர்கள் அடிபணிந்து விளம்பரப்படுத்துவதாலும் மக்களின் அறியாமையினாலும் தானே!
எனவே இதனை எதிர்த்து கடும் பிரச்சாரம் மனிதநேயப் பிரச்சாரம் செய்ய அனைத்துப் பகுத்தறிவாளர்கள், சமதர்மவாதிகள் முன் வர வேண்டும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: