Friday, June 26, 2015

இரயில்வேயும் தனியார் துறைக்குச் செல்லுகிறதா?


இரயில்வே சீர்திருத்தத்துக்காக விவேக்தேவ்ராய் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. அந்தக் குழு கடந்த மார்ச்சு மாதத்தில் இடைக்கால அறிக்கை ஒன்றை அளித்தது - அதன் பிறகு கடந்த வாரத்தில் இறுதி அறிக்கையையும் அளித்து விட்டது. அய்ந்து ஆண்டுகளில் இரயில்வே துறையை எப்படியெல்லாம் மேம்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் அவ்வறிக்கை விலாவாரியாகக் கூறியுள்ளதாம்.
* ரயில்வேக்கு தனி அமைச்சகம், தனி பட்ஜெட் தேவையில்லை. அதை மத்திய போக்குவரத்துத் துறையுடன் இணைத்து விடலாம்.
* இந்திய ரயில்வே உள்கட்டமைப்புக் கழகம், ரயில்வே போக்குவரத்துக் கழகம் என இரண்டாகப் பிரிக்க வேண்டும். உள்கட்டமைப்புக் கழகத்தை அரசு நிர்வகிக் கலாம். தண்டவாளம், ரயில் நிலையங்கள், சிக்னல்கள் இதில் அடங்கும். போக்குவரத்துக் கழகத்தில் தனியாரை இணைக்கலாம். ஏர்போர்ட் போல ரயில் நிலையம் அரசிடம் இருக்கும் (இதையும் படிப்படியாக தனியாருக்குத் தரவேண்டும்).
ரயிலை தனியார் நிறுவனங்கள் ஓட்டலாம்.
* புறநகர் ரயில்கள் போன்ற நஷ்டம் ஏற்படுத்தும் ரயில் களை மாநில அரசுகளிடம் தந்துவிட வேண்டும். அல்லது, மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து இயக்கலாம். * சரக்குப் போக்குவரத்தை தனியார் கையில் தர வேண்டும்.
* ரயில் போக்குவரத்தில் மட்டுமே ரயில்வே துறை கவனம் செலுத்த வேண்டும். பள்ளி, மருத்துவமனை, ரயில்வே பாதுகாப்புப் படை போன்றவற்றை தனியாரிடம் தந்து விடவேண்டும்.
* கட்டண நிர்ணயிப்பில் அரசு தலையிடக்கூடாது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தனியாரே நிர்ணயித்துக் கொள்ளலாம். * ஓய்வுபெறும் ஊழியர்கள், பணியின்போது மரணம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு பணிக்கொடை உள்ளிட்ட செட்டில்மென்ட்டுகளை பணமாகத் தராமல், புல்லட் பாண்ட்டாக தரவேண்டும். (இதை 30 ஆண்டுகள் கழித்தே பணமாக்க முடியும்
 * தனியாருக்கும் ரயில்வே துறைக்கும் உள்ள பிரச் சினைகளைத் தீர்க்கவும், கட்டணத்தைக் கண்காணிக்கவும் ரயில்வே ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க வேண்டும். 
* அடுத்த 4 ஆண்டுகளில் ஓய்வுபெறவுள்ள 2.25 லட்சம் தொழிலாளர்களுக்கு மாற்றாக ஆட்களைத் தேர்வு செய்யக்கூடாது.
இத்தகைய பரிந்துரைகளின் அடிநாதம் எது என்றால் அரசுத் துறையில் இருக்கும் இந்தப் பெரிய இந்திய நிறுவனம் தனியார்த்துறைக்குத் தாரை வார்க்கப்பட வேண்டும் என்பதுதான்.
12,617 பயணிகள் இரயில்கள், 7,421 சரக்கு இரயில்கள், 7,172 தொடர் வண்டி நிலையங்கள், 1.16 லட்சம் கி.மீ., இருப்புப்பாதை  13 லட்சம் ஊழியர்களை கொண்டது இந்திய இரயில்வே துறை. நாள் ஒன்றுக்கு சராசரியாக  2.30 கோடி மக்கள் பயணிக்கும்  மிக முக்கியமான துறை இது. உலகில் உள்ள அரசுத் துறை நிறுவனங்களில் இந்தியாவின் இரயில்வே துறையே மிகப் பெரியது. மக்கள் பயணிப்பது மட்டுமல்ல; சரக்குப் போக்குவரத்து என்பது பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையானதாகும்.
இப்பொழுது நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பொருளாதாரக் கொள்கை என்று எடுத்துக் கொண்டால் தனியார்மயம் என்ற தண்ட வாளத்தில் ஓடக் கூடியதாகும். பன்னாட்டு நிறுவனங் களும், உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளும் சகட்டுமேனிக்கு மேய்வதற்கு அகலப் பாதையைத் திறந்து விடும் கொள்கையைக் கொண்டதாகும்.
இதனைப் புரிந்து கொண்டால் இரயில்வே நிருவாகம் பெரும்பாலும் தனியார்த்துறைக்குத் தள்ளி விடப்படுவதன் இரகசியம் எளிதாகவே புரிந்து விடும். தொடக்கத்தில் சில பணிகள் மட்டும் தனியாருக்கு என்று சொல்லுவார்கள்; நாளடைவில் முழுக்க முழுக்க கூடாரத்தில் ஓட்டகம் நுழைந்த கதையாகத்தான் முடியும். இரயில்வேயில் நட்டம் ஏற்படுகிறது என்றால் அதனைச் சரி செய்வதற்கான முயற்சியையும், திட்டங்களையும் மேற்கொள்வதுதான் புத்திசாலிகள் செய்யக்கூடிய செயலாக இருக்க முடியும்.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் லாலு பிரசாத் அவர்கள் இரயில்வே அமைச்சராக இருந்தபோது இரயில்வேயை இலாபகரமான நிறுவனமாக நிகழ்த்திக் காட்டினாரே! இந்தப் பார்ப்பன உயர்ஜாதி ஊடகங்கள் அடேயப்பா, எப்படி எப்படியெல்லாம் அவரைக் கேலி செய்வார்கள் தெரியுமா? அவர்களின் முகங்களில் எல்லாம் கரியைத் தடவும் வகையில் அவர் சாதனை வீரராகக் கம்பீரமாக வெளிவந்தாரே! இன்னொன்றும் இதில் முக்கியமாகும்.
 அரசாங்கம் நடத்தும் எல்லாத்துறைகளுமே இலாபத்தில் நடக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கக் கூடாது மக்கள் நலன்தான் முதன்மையானது -அதனை வெறும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது.
 கட்டணத்தை முடிவு செய்வதில் அரசு தலையிடக் கூடாதாம். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தனியாரே நிர்ணயித்துக் கொள்ளலாமாம். இது ஒன்று போதாதா தனியார் முதலாளிகளுக்கு? தானடித்த மூப்பாகத்தானே வரிந்து கட்டிக் கொண்டு சம்பாதிக்க முயலுவார்கள்.
ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதில் என்ன நடந்து கொண்டுள்ளது? எண்ணெய் நிறுவனத்தவர்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற பூட்டுச் சாவியை முதலாளிகளின் கையில் கொடுத் ததால் அதன் சுமை பொது மக்கள் தலையில் விடிந்து கொண்டு இருக்கிறது.
 அதே பாணியில்தான் இரயில்வே துறையும் இயங்கும் நிலை ஏற்படப் போகிறது.
 உலகில் இரயில்வே துறையில் எட்டாவது இடத்தில் இருக்கும் நாடு அர்ஜென்டினா. 47 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அங்கு இரயில் இயக்கப்படுகிறது; 95 ஆயிரம் ஊழியர்கள்அங்கு பணியாற்றினர். சில ஆண்டுகளுக்குமுன் அரசுத் துறையில் இருந்த இரயில்வே, தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட பலன் சோகமானது.
இரயில்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி தண்டவாளங்களையும், இரயில் நிலையங்களையும்கூட நேர்த்தியாகப் பராமரிக்க முடியவில்லை.
 70 ஆயிரம் பேர்களின் வேலைகள் பறிக்கப்பட்டன.
 உற்பத்திப் பொருள்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதிலும் தோல்வி ஏற்பட்டதால் விலைவாசிகள் விண் ணைத் தொட்டன. அதன் விளைவு, சிறிது சிறிதாக மீண்டும் அரசு கைக்கு இரயில்வே துறை பயணித்துக் கொண்டுள்ளது.
அர்ஜென்டினாவின் கசப்பான அனுபவத்தைப் பார்த்த பிறகாவது மத்திய அரசு புத்திக் கொள்முதல் பெற வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உறுதி செய்யப்பட்ட சோசலிலிஸ்ட் என்பதையும் கவனத்தில் கொள்ள அரசு கடமைப்பட்டுள்ளது. தனியார்மயம் சமூகநீதிக்கு குழிவெட்டக் கூடியது என்பதையும் மறக்கக் கூடாது.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...