அடுத்து உலக சமஸ்கிருத தின அறிவிப்பிற்கான நடவடிக்கையில் இறங்கி விட்டது மோடி அரசு உலகம் முழுவதும் ரூ.7000 கோடி க்குமேல் வருவாய் ஈட்டும் யோகாவை உலக யோகா தினமாக மாற்றி சந்தைப்படுத்திய நிலையில், அடுத்து சமஸ் கிருதத் தையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல, உலக சமஸ்கிருத தினத்தை விரைவில் கொண்டுவர மோடி அரசு முடிவெடுத்துள்ளது; ஜனவரிமாதம் நடந்த பகவத்கீதை விழாவின் போது சமஸ்கிருத மொழியின் சர்வதேச தூதுவராக சுஸ்மாசுவராஜ் நியமிக்கப்பட்டார்.
அப்போதே உலகம் முழுவதும் சமஸ்கிருதத்தை எப்படி கொண்டு செல்வது என்று திட்டமிடப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் ஆலோசகர் கிருஷ்ணகோபால் யோகாதினத்தின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதின் முடிவை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறினார். இதனை அடுத்து யோகா தினம் முடிந்த கையோடு சுஸ்மா சுவராஜ் அடுத்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
இம்மாதம் 28-ஆம் தேதி துவங்கி ஜூலை 2 வரை உலக சமஸ்கிருத மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலக சமஸ்கிருத மொழித்தூதுவராக இருக்கும் சுஸ்மா சுவராஜ் ஜூன் 24 அன்று காலை புறப்பட்டுச் சென்றார். இந்த மாநாட்டில் முதல் முறையாக முழுக்க முழுக்க சமஸ்கிருதத்திலேயே உரையரங்கேற்றம் மற்றும் கட்டுரைகள் நடைபெறுகிறது. மொழிபெயர்ப்பிற் கென்று சிறப்பு மென்பொருள் அடங்கிய ஒலிப்பேழை அனைவருக்கும் வழங்கப்படும். மாநாட்டு நிகழ்ச்சி நிரலின் போதே ஆரம்ப சமஸ்கிருதப் பயிற்றுவிப்பும் நடைபெறுமாம். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது சமஸ்கிருத மொழிக்கென தனித்துறை ஒதுக்கப்பட்டு அதற்காக நிதிவாரியமும் அமைக்கப்பட்டது. இதற்கு சமஸ்கிருத பாரதி என்று பெயர் சூட்டப்பட்டது. தற்போது மோடி தலைமையில் ஆன அரசு மீண்டும் சமஸ்கிருதத்திற்கு உயிர்கொடுக்கும் முயற்சி யில் ஈடுபட்டு வருகிறது, சமஸ்கிருத பாரதியின் தலை வரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஸ்மா சுவராஜுடன் பாங்காக்செல்லும் போது அவருடன் 250 பேர் அடங்கிய குழுவில் 40 ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் களும் 8 இந்து அமைப்பின் முக்கியப் பிரமுகர்களும் உடன் சென்றுள்ளனர் - யார் வீட்டுப் பணத்தில் பார்ப்பனீயம் கொழிக்கிறது?
சமஸ்கிருத பாரதி அமைப்பின் செயலாளர் தினேஷ்காமத் கூறும்போது இம்முறை சமஸ்கிருத மொழிக்கான முழு மரியாதையும் கிடைத்திருக்கிறது. பாங்காக்கில் இது போன்ற மாநாடு நடைபெறுவது முதல் முறையாகும். பாங்காக்கில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் சமஸ்கிருத மாணவர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சமஸ்கிருத தினமாக அறிவிக்க அரசு எடுத்துவரும் முயற்சி குறித்து ஆய்வறிக்கை வெளியிடப் படுகிறது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் 60 நாடுகளில் இருந்து சமஸ்கிருத வித்வான்கள் கலந்துகொள்கிறார்கள் யோகா தினம் போல் உலக சமஸ்கிருத தினம் ஒன்றை அறிவிக்க பல்வேறு நாடுகளுக்கு பிரச்சாரத் திட்டம் இந்த மாநாட்டில் உருவாக்கப்படுமாம். இந்தப் பிரச்சாரக் குழுவிற்கும் சுஸ்மா சுவராஜ் தலைவராக இருப்பார். இந்தக் குழு இந்த ஆண்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்து சமஸ்கிருத தினம் கொண்டாட அய் நாவை வற்புறுத்தும் என்று சமஸ்கிருத பாரதி தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டு களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த மாநாட்டை வெற்றி கரமாக முடித்துத் தர தாய்லாந்து அரசு முழுமையாக ஒத்துழைப்பு நல்கும் என்று தெரிவித்துள்ளார். வரும் 2017-ஆம் ஆண்டிற்குள் சமஸ்கிருத தினம் அறிவிக்க முழுமுயற்சி எடுக்கப்படும்; இதனை அடுத்து 2018-ஆம் ஆண்டு உலக சமஸ்கிருத நாளில் மாநாடு நடைபெறும் என்று தினேஷ்காமத் கூறினார்.
இது குறித்து மோடியின் பிரதமர் அலுவலகம் மற்றும் ஸ்மிருதி இராணியின் மனிதவளத்துறை அமைச் சரகம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை விவரித்துள்ளது.
தாய்லாந்தில் துவங்கும் சமஸ்கிருத மாநாடு வெற்றிபெற இந்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் சமஸ்கிருதத்தை உலகெங்கும் கொண்டுசெல்ல இந்த மாநாடு நல்ல துவக்கமாக அமையும் என்றும் உலகமெங்கும் சமஸ்கிருத பிரச்சார அமைப்புகள் துவங்க இந்த மாநாட்டில் முடிவெடுத்து சமஸ்கிருத பாரதி தரப்பில் அதற்கு நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மக்கள் தொகையில் 0.1 சதவீதம் பேசும் மொழிக்கு இவ்வளவு அமர்க்களம்!
ஆர்.எஸ்.எஸின் அடிப்படையில்தான் இன்றைய மத்திய அரசு இயங்குகிறது என்பதற்கு இது ஒரு கூடுதல் சான்றாகும். இந்தியாவுக்கு ஆட்சி மொழியாக சமஸ் கிருதம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான கோல்வால்கர் கூறியுள்ளார்; குருநாதர் கூறியதை மோடிகளால் அலட்சியப்படுத்த முடியுமா?
1938ஆம் ஆண்டிலே சென்னை மாநிலத்தின் பிரத மராக சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இருந்த போது சென்னை லயோலா கல்லூரியில் என்ன பேசினார்? சமஸ்கிருதத்தைப் படிப்படியாகக் கொண்டு வரவே இப்பொழுது இந்தியைக் கொண்டு வந்துள்ளேன் என்று பேசிடவில்லையா?
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் குறியாக இருப்பார்கள் பார்ப்பனர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; பார்ப்பன எதிர்ப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என்பது மட்டும் அசைக்க முடியாத பேருண்மையாகும்.
No comments:
Post a Comment