இவர் குடும்பத்தில் மூத்த மகன் மத ஒழிப்புத் திருமணத்தைச் செய்து கொண்டார். இன்னொரு மகன் மாநில எல்லையைத் தாண்டி திருமணம் செய்து கொண்டார். மகளோ மலேசிய மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். இன்னொரு மகளோ சிங்கப்பூர் மண்ணில் கழகக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் மகனை வாழ்க்கைத் தோழனாக வரித்துக் கொண்டார்.
பேத்தி செய்ததோ இவற்றையெல்லாம்விட அதிரடி! மாமனார் பஞ்சாப்காரர், மாமியாரோ ஆந்திராக்காரர் - அந்தக் காலத்திலேயே காதலித்துக் கடிமணம் செய்து கொண்டோருக்குப் பிறந்த பொறியாளரை தமது வாழ்க்கை இணையராகத் தேர்வு செய்து கொண்டார்.
இதைப் போல பிள்ளைகள் இருந்தால் பெற்றோர் களுக்கு எவ்வளவு சுமை மிச்சம்.
அடடா, பெண்ணுக்கு மாப்பிள்ளையையும், மாப்பிள்ளைக்குப் பெண்ணையும் தேடி அலைந்து அலைந்து களைத்துப் போன எத்தனை எத்தனை பெற்றோர்களை நாளும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்!
அடடா, பெண்ணுக்கு மாப்பிள்ளையையும், மாப்பிள்ளைக்குப் பெண்ணையும் தேடி அலைந்து அலைந்து களைத்துப் போன எத்தனை எத்தனை பெற்றோர்களை நாளும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்!
நண்பர்களைச் சந்தித்து விட்டால் தங்கள் சோகக் கதைகளை ஒரு வழியில் கொட்டி முடித்து, கொஞ்சம் ஆசுவாசம் அடைவதைப் பார்க்கிறோம்.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழி உண்டு. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழிகூட உண்டு.
இந்தப் பிள்ளைகளின் பாட்டனார் பாட்டிகள் என்ன சாதாரணமானவர்களா? 1934ஆம் ஆண்டிலேயே புரட்சி செய்தவர்கள். மணமகனோ மனைவியை இழந்தவர்; மணமகளோ துணைவரை இழந்தவர்; வெவ்வேறு ஜாதிகளையும் சேர்ந்தவர்கள். இந்த இருவரின் புரட்சித் திருமணம் உண்மையான புரட்சித் தலைவரான தந்தை பெரியார் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்றது.
அந்த வாழ்க்கை ஒப்பந்தம் நடந்து 18 ஆண்டு களுக்குப் பின் (1953) முதல் தாரத்தின் மகனின் மனைவி (அதாவது மருமகள்) சொத்துத் தொடர்பாக வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தார்.
அதனை இரு நீதிபதிகள் ஜஸ்டிஸ் ராஜகோபாலன் அய்.சி.எஸ். ஜஸ்டிஸ் எஸ். சத்தியநாராயணராவ் என்ற இரு பார்ப்பனர்கள் விசாரித்தார்கள்.
அந்தத் தீர்ப்பில் என்ன கூறப்பட்டது தெரியுமா?
சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொண்ட வர்கள் இவர்கள். சாஸ்திரங்களின்படி நடைபெறவில்லை. சப்தபதி என்ற ஏழு அடி எடுத்து வைக்கவில்லை. ஓமம் வளர்க்கப்படவில்லை. எந்தச் சடங்கும் நடத்தப்படவில்லை. இப்படி நடப்பது வழமையான (Customary Marriage) திருமணமா என்றால் அதுவும் இல்லை. யாரோ சிலர் கூடி விருப்பத்துக்கு ஏற்ப, நாங்கள் திருமணம் நடத்துகிறோம் என்று கூறி அவர்கள் விருப்பத்துக்கேற்ப ஒரு தற்காலிக ஏற்பாடாக (In Some AD hoc form) செய்ய அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் அனை வரும் சட்டப்படியான பிள்ளைகளாகவே கருத முடியாது; இந்து மதத்தில் வைப்பாட்டிகளாக இருப்பதற்கும், அவர் களுக்குப் பிள்ளைகள் பிறப்பதற்கும், அப்பிள்ளை களுக்குத் தகப்பன் சொத்தில் பங்கு பெற உரிமை உண்டு என்பதால் இவர்களது பிள்ளைகளுக்குச் சொத்தில் பங்கு உண்டு; ஆனால் இவர்கள் சட்ட விரோத வைப்பாட்டியின் பிள்ளைகளாகவே கருதப்படுவார்கள் என்று தீர்ப்புக் கூறினார்கள் இரு பார்ப்பன நீதிபதிகள். என்னே கொடுமை!
தமிழர்கள் மத்தியில் தமிழர் தலைவர்களைக் கொண்டு தாய் மொழியில் நடத்தப்பட்ட திருமணத்திற்கு பார்ப்பன தர்பாரில் எவ்வளவு கேவலமான அவமானங்களை தமி ழர்கள் சுமக்க நேர்ந்திருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்.
இவ்வளவு அவமானங்களையும் சுமந்து கொண்டு, சட்டமும், சாஸ்திரமும் என்ன சொல்லுகிறது என்பது முக்கியமல்ல.
எங்கள் தலைவர் தந்தை பெரியார் என்ன சொல்லுகிறார்? எங்கள் தன்மானம் என்ன சொல்லுகிறது? என்பதுதான் முக்கியம் என்று லட்சோப லட்சம் திருமணங்களை சுயமரியாதை முறையில் செய்தார்களே அவர்களின் கொள்கை உணர்வுக்குக் கோடி கோடி வணக்கங்களைச் சொல்ல வேண்டாமா? இப்படியொரு புரட்சியை உண்டு பண்ணிய பகலவன் பெரியாருக்கு வாழ்நாளையே தமிழர்கள் தத்தம் செய்ய வேண்டாமா ? பிரச்சினைக்கு வருவோம். 1934இல் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற அந்த சுயமரி யாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது அந்தத் திருமணத் துக்குச் சொந்தக்காரர்கள் யார் தெரியுமா?
நமது தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் என்று மதிப்போடு உலகத்தால் அறியப்பட்ட நமது மானமிகு கி. வீரமணி அவர்களின் மாமனார் மாமியார் தான் அவர்கள்! கோட்டையூர் சிதம்பரம், அவர் துணைவியார் ரெங்கம்மாள் ஆகியோர் ஆவர்.
1934இல் நடந்த திருமணம் செல்லுபடியாகாது என்ற தீர்ப்பு 1953இல். 1968இல் இதற்கு முன்பும் - பின்பும் நடைபெற்ற - நடைபெறும் சுயமரியாதைத் திரும ணங்கள் அனைத்தும் செல்லும் என்ற ஒரு சட்டத்தை உருவாக்கி முதல் அமைச்சர் அண்ணா, அமைச்ச ரவையே தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக் கையாக்கினார்களே! அதையும் இந்த நேரத்தில் நினைவு கூர்வோம். நடைபெறும் ஒவ்வொரு சுயமரியாதைத் திருமணத்தின்போதும் அறிஞர் அண்ணாவுக்கு வணக்கம் கூறி ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னார் தந்தை பெரியார்.
ஒவ்வொரு திருமண நிகழ்ச்சியில் பேசும் போதெல் லாம் இது இந்த வருட மாடல் திருமணம்; மாறிக் கொண்டே இருக்கும் என்று சொன்னதோடல்லாமல், திருமண விஷயம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்ட இருவருக்கும் உரியது; மூன்றாவது மனிதனுக்கு அங்கு என்ன வேலை என்ற வினாவை எழுப்பியதோடு மற்றொன்றையும் குறிப்பிட்டார்கள்.
வீட்டில் உள்ளவர்களை மட்டும் வைத்துக் கொண்டு திருமணம் நடத்தும் பழக்கம் விரைவில் வரும். முன்கூட்டி அழைப்பு இருக்காது; பின்னால் அறிவிப்பு மட்டுமே இருக்கும் (விடுதலை 21.10.1970)
என்றாரே தந்தை பெரியார்! அதன்படி நூற்றுக்கு நூறு துல்லியமாக, கொள்கை மணமாக அமெரிக்காவில் நடைபெற்று இருக்கிறது கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி - மோகனா இணையரின் பேத்தி திருமணத்திற்கு பெற்றோரும் செல்லவில்லை; பாட் டனார் பாட்டியும் செல்லவில்லை. ஆனால், இரு தரப்பு பெற்றோரின் முழு இசைவும் கிடைத்தது! அன்று பெரியார் சொன்னார்; செய்து காட்டினார் இன்று நமது கழகத் தலைவர்! கொள்கைக் குடும்பத் தலைவர் சொல்லுவதும் செய்வதும் - வெல்லுவதும் ஒன்றே! கழகக் கோட்பாடு - தந்தை பெரியார் வகுத்துக் கொடுத்த சுயமரியாதைத் திருத்தப்பாடு!
உலகம் ஒரு குடும்பம் என்ற உன்னத மனித மேம்பாடு இங்கே புன்னகைக்கவில்லையா?
நம் இயக்கத்திற்கும், கொள்கைக்கும் ஈடு இணை ஏது இவ்வையகத்தில்?
தலைவர் வழி தொண்டர்களும் துல்லியமாக நடப்போம்!
உலகம் முழுவதும் உள்ள கோடானு கோடி பெரியார் கொள்கைக் குடும்பங்களின் சார்பில் கவின் அன்புராஜ் - ரோகித் தரேஜா இணையரை வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!!
- கவிஞர் கலி. பூங்குன்றன்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மருத்துவக் கல்லூரி விளைச்சலைப் பாரீர்!
- தோழர் ஆனைமுத்து அவர்களுக்கு....
- மோடி ஆட்சியில் மதக் கலவரம் இல்லையா?
- சால்வை வேண்டாம் சந்தாக்களைத் தாரீர்!
- வாழ்க பெரியார் அம்பேத்கர் ஜிந்தாபாத்!
No comments:
Post a Comment