மீண்டும் குலக்கல்வித் திட்டமா?
பிஜேபி அரசின் அபாய அறிவிப்பு!
கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை!
தமிழர் தலைவரின் தணல் பொங்கும் அறிக்கை
தமிழர் தலைவரின் தணல் பொங்கும் அறிக்கை
குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் பிஜேபி அரசு கொண்டு வரும் சட்டத்தில் புதைந்துள்ள குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது மத்திய அரசு. (13.5.2015).
14 வயதுக்கு உட்பட்டவர்கள் குழந்தைகள் என்றும், அவர்களை எந்தவித தொழில்களிலும் ஈடுபட வைப்பது குற்றம் என்பதும் குழந்தைத் தொழிலாளர் சட்டமாகும்.
14 வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தினால் அந்தநிறுவனத்தின் மீதும் பெற்றோர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க, தற்போதுள்ள சட்டம் வழி செய்கிறது. ஆனால் நேற்று மத்திய அமைச்சரவை விதி விலக்குகளை இதில் திணித்துள்ளது.
சட்டம் என்ன சொல்லுகிறது?
குடும்பப் பாரம்பரிய தொழில்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் என்பது போன்ற பொழுது போக்கு சார்ந்த பணிகள், சர்க்கஸ் தவிர்த்துப் பிற விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன் 14 வயதுக்குட்பட்டவர்களை ஈடுபடுத்தவும், வேறு எந்தப் பணிகளிலும் அவர்களை அமர்த்துவதைத் தடுக்கும் வகை யிலும் குழந்தைத் தொழிலாளர்கள் சட்டத்தில் திருத்தங்கள் என்பதுதான் மத்திய அமைச்சரவையின் முடிவாகும்.
விவசாயம், கைவினைத் தொழில் போன்றவற்றை மேற் கொண்டு வரும் பெற்றோருக்கு அவர்கள் குழந்தைகள் பள்ளி நேரத்திற்குப் பிறகோ, விடுமுறை நாள்களிலோ உதவலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்பு சட்டம் என்றால் - எந்த வேலையும் செய்யக் கூடாது என்பது தானே சரியானதாக இருக்க முடியும்? இதில் விதி விலக்கு என்பது எப்படி சரியாகும்?
மாணவர்களின் கல்விக் கவனத்தைச் சிதைப்பதா?
கல்விக் கூடங்களுக்கு அனுப்பப்படும் மாணவர்களின் சிந்தனைகளில் சிதைவை ஏற்படுத்தாமல் அவர்களின் கவனம் முழுவதும் கல்வியில்தான் இருக்க வேண்டும்; பள்ளிக்குச் சென்று வந்தவுடன் வீட்டுப் பாடங்கள் செய்வது, பாடங்களைப் படிப்பது என்ற முறை இருந்தால் மட்டுமே, அவர்கள் சரியான முறையில் கல்வி கற்று, சிறந்த வகையில் வெற்றி பெற்று வெளியேறவும் முடியும்.
அதற்கு மாறாக படிக்கும் பொழுதே குலத் தொழிலில் அவர்களை ஈடுபட வைத்தால், படிப்பில் கவனம் செலுத்துவதிலிருந்து திசை திருப்பப்பட்டு, நாலு காசுகள் கையில் புரளும் தொழிலின்மீது மோகமும், வேகமும் பீறிட்டுக் கிளம்புவது தவிர்க்கவே பட முடியாத ஒன்றாகும். இதன் காரணமாக உயர்நிலைப் பள்ளியையே தாண்டாமல் இடையில் (Drop Outs) நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் அய்யமில்லை.
2009 கல்வி உரிமைச் சட்டத்தின் நிலை என்ன?
2009இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது பிஜேபி அரசு கொண்டு வரவிருக்கும் சட்டம் இந்தக் கல்வி உரிமைச் சட்டத்தின் ஆணி வேரை அசலாக வெட்டி வீழ்த்தக் கூடிய விபரீத சூழ்ச்சியே!
விவசாயத் தொழில், கைவினைத் தொழில்களைச் செய்வோர் யார்? ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தானே! அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் குலத் தொழிலைச் செய்து குட்டிச் சுவராகப் போக வேண்டும், உயர் ஜாதிக்காரர்கள் இந்தத் தொழில்களைச் செய்வதில்லை. அதனால் உயர் ஜாதிக்கார மேல் தட்டு மக்களின் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் முழு நேரமும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தானே இதன் நோக்கம்!
ராம ராஜ்ஜியம் வருகிறது - எச்சரிக்கை!
ராமராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் என்றும், மனு தர்மம் இந்திய அரசமைப்புச் சட்டமாக ஆக்கப்பட வேண்டும் என்றும், கீதை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்கப்படும் என்றும் இன்றைய மத்திய அரசில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் (பிரதமர் உட்பட) கூறி வருவதன் நீட்சியே, தொடர்ச்சியே இப்பொழுது பிஜேபி அரசு அறிவித்துள்ள இந்த வருணாசிரம குல தர்ம சட்டம் ஆகும்.
1952இல் சென்னை மாநிலத்திற்கு முதல் அமைச்சராக வந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்களால் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தின் பச்சையான நகலே இந்த சூழ்ச்சித் திட்டமாகும்.
ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம்
ஆச்சாரியாரின் அந்த நயவஞ்சகத் திட்டத்தை இது ”குலக் கல்வித் திட்டம்” என்ற சொல்லாடல் மூலம் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் அம்பலப்படுத்தினார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்.
எதை எதையோ சமாதானமாக ஆச்சாரியாரும் பார்ப்பனர்களும், அவர்களின் ஊடகங்களும் சப்பைக் கட்டுக் கட்டிப் பார்த்தனர். ஆனால் தந்தை பெரியார் வெளிப்படுத்திய, அடையாளப்படுத்திய அந்தக் ”குலக் கல்வித் திட்டம்” என்பது வெகு மக்களின் எண்ணங்களில் வேர் பிடித்து வெகுண்டெழக் காரணமாக அமைந்தது. தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே எரிமலையாய் சீறி எழுந்தது.
பெட்ரோலும் தீப்பந்தமும்!
தீப்பந்தமும், பெட்ரோலும் தயாராக இருக்கட்டும்! என்று தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை கொடுக்கும் அளவுக்கு அந்தக் குலக் கல்வித் திட்டம் பார்ப்பனர் அல்லாத மக்களின் வாழ்வுக்கு மரண அடி கொடுக்கத் துடித்த சூழ்ச்சிப் பொறியாகும். தந்தை பெரியார் கொடுத்த எழுச்சித் தீயின் முன் - உடல் முழுவதும் மூளை உள்ளவர் என்று அக்கரகாரத்தால் போற்றப்படும் ராஜாஜி அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாமல், முதல் அமைச்சர் பதவியை விட்டே ஓடினார் என்பது தான் தமிழ்நாட்டின் வரலாறு.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதைபோல, மத்தியில் உள்ள பிஜேபி அரசு அசல் மனுதர்ம ஆட்சியாக - வருணாசிரமத்தை நிலைநாட்டும் இந்துத்துவா ஆட்சியாக தன் கோரமுகத்தைக் காட்டிக் கொண்டு விட்டது. சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மம் இதன் பின்னணியில் புதைந்து இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் தலை எடுக்கத் தொடங்கி விட்டார்களே என்ற ஆத்திரத்தில் பின்னப்பட்ட நயவஞ்சக சூழ்ச்சி வலையாகும்.
மத்திய அரசின் இந்தத் திட்டத்தை சுற்றி வளைத்து, இன்றைய தினமணி ஏடு வரவேற்று எழுதியதிலிருந்தே, இதற்குள் இருக்கும் சூழ்ச்சி கலந்த ஆபத்தை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்துத்துவா போர்வையில்....
இந்துத்துவா போர்வையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட, சூத்திர பஞ்சம மக்களை பார்ப்பனீயத்தின் கீழ் மீண்டும் ஒடுக்க நினைக்கும் இந்த மனு தர்மத்தை எதிர்த்து, இந்தியா முழுமையும் உள்ள சூத்திர பஞ்சம மக்கள் பொங்கி எழ வேண்டிய கால கட்டம் இது.
வெடிக்கட்டும் பஞ்சமர் சூத்திரர் புரட்சி!
அன்று ஆச்சாரியார் ஆட்சிக்கு குலக் கல்வித் திட்டம் சாவு மணி அடித்தது போல, இன்றைய பிஜேபி அரசிற்கு இந்தத் திட்டமும், சட்டமும் உலை வைக்கும் என்பதில் அய்யமில்லை. காரணம் - இது வெகு மக்களின் எதிர்கால வாழ்வுக்கு எதிரான வருணாசிரம வெடிகுண்டாகும்!
வெடிக்கட்டும் பஞ்சமர் சூத்திரர் புரட்சி!
இந்தத் திட்டத்தை கைவிடா விட்டால் திராவிடர் கழகம் ஒத்த கருத்துள்ளவர்களை ஒன்று திரட்டிக் களத்தில் குதிக் கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை, 14.5.2015
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை, 14.5.2015
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- என்ன விலை கொடுத்தேனும் ஜாதியை ஒழிப்போம்!
- பெங்களூரு உயர்நீதிமன்ற தீர்ப்பு நியாயப்படி சரியா, தவறா என்று விவாதிப்பதைவிட, மவுனம் காப்பதைத் தவிர வேறு வழியே இல்லை
- இன்று அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு நாள்
- மத்தியில் மோடி தலைமையிலான பிஜேபியின் ஓராண்டு கால ஆட்சியில் என்ன நடந்தது?
- கோட்டைக்குள்ளேயே குமுறல்!ஓராண்டில் பாஜக அரசு ஒன்றும் செய்யவில்லை
No comments:
Post a Comment