தமிழர்கள் நுழைய கதவடைப்பா?
இரயில்வே துறை நடத்திய குரூப் டி
பணியாளர் தேர்வு திட்டமிட்ட மோசடி!
இரயில்வே தேர்வு ஆணையம் (Rly Recruitment
Cell) என்ற அமைப்பின் மூலம் தெற்கு இரயில்வேயில் காலியாக உள்ள குரூப் டி
பதவிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்
தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்பதற்கான சூழ்ச்சி வலை பின்னப்பட்டுள்ளது
குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள
அறிக்கை வருமாறு:
5450 பணியாளர் பதவிக்குத் தேர்வு செய்திட
21.9.2013 அன்று ரயில்வே தேர்வு வாரியம் விளம்பரம் செய்திருந்தது. தேர்வு
2014 நவம்பர் 2ஆம் தேதி அய்ந்து கட்டங்களாக நடந்துள்ளது.
மத்திய அரசின் விளம்பரத்தில் வேலை
வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது, இணைக்கப்படும் சான்றிதழ்களுக்கு அரசு
பதிவிதழ் அலுவலரிடமிருந்து (Gazetted Officer) மேலொப்பம் பெற வேண்டும்
என்ற விதி நீக்கப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதில் என்ன மோசடி என்றால் ஆங்கிலத்தில்
வெளியிடப்பட்ட விளம்பரத்திலே கெசட்டட் அதிகாரிகளிடமிருந்து மேலோப்பம்
பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்விளம்பரங்களிலோ
அது தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழில் வெளிவந்த விளம்பரத்தின்
அடிப்படையில் சான்றிதழ்களுக்குக் கெசட்டட் அதிகாரிகளின் சான்றொப்பம்
தேவையில்லை என்ற அடிப்படையில் விண்ணப்பித்த ஏறத்தாழ இரண்டரை லட்சம் தமிழக
மாணவர்களின் விண்ணப்பங்கள் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கப்பட்டு விட்டன.
அதே நேரத்தில் சான்றொப்பமின்றி ஆன்லைனில்
விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மகா கொடுமையை
வஞ்சகத்தை என்னென்று சொல்லுவது!
தென்னக ரயில்வே துறைக்குப் பணியமர்த்தம் என்றாலும் வட மாநிலத்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தமிழில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளில்
ஏகப்பட்ட குழப்பங்கள் - தவறான மொழி பெயர்ப்புகள் - அதனால் சரியாக விடை எழுத
முடியாத நெருக்கடிகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேர்வில்
வெற்றி பெற்று விடக் கூடாது என்றே திட்டமிட்டும், அதே நேரத்தில் வட
மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மலையாளிகள் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்ற
வேண்டும் என்ற இமாலய சதியோடு சூழ்ச்சியோடு திரைமறைவில் காரியங்கள்
நடைபெற்றுள்ளன. (விரிவாக பக்கம் 2இல் வெளியிடப்பட்டுள்ளதை காண்க)
நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு
உடற் தகுதி தேர்வு வரும் 8ஆம் தேதி நடக்க உள்ளதாம். நடைபெற்ற இந்தத்
தேர்வு செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும், முறையாக தெளிவாக விளம்பரம்
செய்யப்பட்டு ஒழுங்கான முறையில் தேர்வுத்தாள் தயாரிக்கப்பட்டு மீண்டும்
தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை
நாடாளுமன்றத்தில் கேள்வியாக எழுப்பி நிவாரணம் தேடிட வழி வகை செய்ய வேண்டும்
என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
தலைவர்,
திராவிடர் கழகம்
6.3.2015
சென்னை
சென்னை
No comments:
Post a Comment