Friday, March 6, 2015

தனி மனிதர் உண்ணும் உரிமையில் அரசு தலையிட முடியுமா?

மாட்டுக்கறி உண்ணவும் தடையா?
தனி மனிதர் உண்ணும் உரிமையில் அரசு தலையிட முடியுமா?
ஒத்த கருத்துள்ளோர் கூடி இந்துத்துவா கோட்பாட்டை முறியடிப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை


இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்)  தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!


மாட்டுக்கறி உண்பதைத் தடை செய்துள்ள மகாராட்டிர அரசின் நடவடிக்கையை ஒத்தக் கருத்துள்ளோர் ஒன்றிணைந்து முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. - சிவசேனா கூட்டு அரசு இயங்குகிறது.

பா.ஜ.க. முதல் அமைச்சராக பாட்னாவிஸ் என்ற (ஆர்.எஸ்.எஸ். -  பா.ஜ.க.) பார்ப்பனர் தலைமையில் அங்கே நடைபெறும் அரசு, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான - மதச் சார்பின்மைக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கையாக மாட்டிறைச்சியைத் தடை செய்து சட்டம் இயற்றியுள்ளது அதற்குக்  குடிஅரசுத் தலைவரும் ஒப்புதல் கொடுத்துள்ளார். இதே மகாராட்டிரத்தில் முந்தைய தபோல்கர், அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீரிய பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே மத வெறிச் சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுவரை உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படவே இல்லை.

கோமாதா - இந்துத்துவா கொள்கைக் கோட்பாடே!

ஹிந்துத்துவா கொள்கை அடிப்படையில் கோமாதா குல மாதா, கோ. பூஜை,  பசு மாட்டு வணக்கம் இந்த அடிப்படையில்தான் அங்கே மாட்டுக் கறி விற்பனை தடை செய்யப்பட்டு, மாட்டுத் தொட்டிகள் மூடப்பட்டு, பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு - வருவாய் - இழப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்!

கோதானம், கோ பூஜை என்ற பசு மாட்டு வணக்கம் என்பவை ஆரிய - சனாதன இந்து தர்மமே! இதை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களது ஆதர்ச புருஷ ராக - வழிகாட்டியாகக் கொள்ளும் விவேகானந்தர்கூட ஏற்கவில்லை என்பது அவரது கடுமையான தாக்குதல் - நீங்கள் மாட்டுக்குப் பிறந்த பிள்ளைகளா? என்றும், தாயின் ஈமச் சடங்கை, பிள்ளைதானே செய்ய வேண்டும்? நீங்கள் கோமாதா என்று கொண்டாடும் பசு மாட்டுக்குச் செய்கிறீர்களா? என்று கேட்டுள்ளாரே! (பெட்டிச் செய்தி காண்க) பதில் உண்டா?

உணவுப் பழக்கம் தனி மனிதர் உரிமை

உணவுப் பழக்கம் என்பது அவரவர் அடிப்படை உரிமை - பன் மதங்களும், பல கலாச்சாரம் உள்ள இந்தியத் துணைக் கண்டமெனும் நம் நாட்டில் ஒரு மதக்காரர் ஆடும், கோழியும் சாப்பிடுகிறார்கள்; தத்தம் கடவுளுக்கும் வைத்துப் படைக்கிறார்கள். இன்னொரு மதக்காரர் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்; பன்றி இறைச்சி சாப்பிடுவ தில்லை. சிலர் காய்கறி உணவு மட்டுமே எடுத்துக் கொள்ளும் பழக்க வழக்கமுடையவர்களாக உள்ளனர். இதனைத் தடுக்க மக்கள் ஜனநாயகத்தில் இயங்கும் அரசுக்கு எவ்வகையில் உரிமை உண்டு?
வைணவர்களில் சிலர் வெங்காயத்தைக்கூட உண்ண மாட்டார்களே!

காய்கறிகளில்கூட வைணவ மதத்தவர் வெங்காயம், வெள்ளைப் பூண்டு முதலியவற்றைத் தவிர்த்து விடுவர். அதை வெட்டினால் மகாவிஷ்ணுவின் சங்கு சக்கரம் போல் காட்சியளிக்கிறதாம்! எனவே சாப்பிடக் கூடாது என்கின்றனர். அத்தகையவர்கள்  சத பத பிரமாணத்தில், மாட்டிறைச்சியை பசு மாட்டின் பல பாகங்களை யாகம் வளர்த்து மந்திரம் சொல்லி அவிர் பாகம் என்று கூறி ருசித்துச் சாப்பிட்டவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள்தான் என்பது குறிப்பிடப்பட்டுள்ளதே!

வால்மீகி இராமாயணத்தில், காட்டிற்குச் சென்ற இராமன் இறைச்சியைத் தின்று பல வகை மது வகைகளை குடித்ததாக எழுதப்பட்டுள்ளதை, எவரே மறுப்பர்?

சுரர் என்ற பெயரே ஆரியர்களுக்கு சுரபானம், சோமபானம் குடித்ததினால் வந்த பெயர்தானே!

புத்தருக்குப்பின் வந்த மாற்றம் - பின்னணி என்ன?

புத்தரின் கொள்கையோ கொலைகளை எதிர்த்தது - உயிர்க் கொலையை எதிர்த்த பிறகு அவரது செல்வாக்கு உயருவதைத் தடுக்கவே, ஆரியப் பார்ப்பனர் பின்னாளில் இந்த புலால் - இறைச்சி மறுப்பும், காய்கறி உணவுப் பழக்கத்தையும் ஏற்றனர் என்பது வரலாறு.

(ஆதாரம்: திரு டி.எம். நாயர் எழுதிய ஜிhe Dynamic Brahmin   என்ற நூல்) அம்பேத்கர் எழுதிய நூலில் Who are the untouchables, why they are untouchbles என்ற நூலில், ஆரியர்கள் ஆதி காலத்திலிருந்து மாட்டிறைச்சி உண்டவர்கள் என்பதை சமஸ்கிருத நூலான சத பத பிராமணம் போன்ற நூலில் உள்ளதை எடுத்துக்காட்டி புத்தருக்குப் பின்பே அவர்கள் தமது இழந்த செல்வாக்கை மீட்டுருவாக்கிடவே இந்த இறைச்சி எதிர்ப்பு கோமாதா - பசுவதைத் தடுப்பு என்ற துருப்புச் சீட்டை இறக்கினர்!

எவரே மறுக்க முடியும்? எருமை மாடு என்ன பாவம் செய்தது? பசுவுக்கு மட்டும் பாதுகாப்பு - காரணம்  எருமை கறுப்பு, பசு வெள்ளை - இதிலும் வருணாசிரமக் கண்ணோட் டமா? பால் எல்லாம் வெள்ளைதானே! இன்னும் கேட்டால் எருமை அதிகமாக அல்லவா பால் தருகிறது?
உலகம் முழுவதும் பெரும்பாலோர் உண்ணும் சத்துணவு மாட்டிறைச்சியே! மாட்டிறைச்சியை உலகம் முழுவதும் உள்ள பெரும் பான்மை மக்கள் தங்களது முக்கிய உணவாகக் கொள்ளுகின்றனர்.

இங்கு -நம் நாட்டில் அது ஏழைகளுக்கு எளிய விலைக் குக் கிடைக்கும் - உணவாக இருக்கிறது, சத்துணவாகவும் உள்ளது.

இதைத் தடுக்கலாமா? மதவெறியைக் காட்டலாமா?

இந்த அடிப்படை உரிமையை பறிப்பதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது.

1972இல் தந்தை பெரியார் இதை வெகு காலத்திற்கு முன்பே சொன்னார். திராவிடர் கழகமும் ஆந்திர நாத்திகர் கோராவும் சேர்ந்து ஆங்காங்கு மாட்டுக்கறி - பன்றிக் கறி விருந்தும் நடத்திப் பிரச்சாரம் செய்தோமே! (மீண்டும் தேவையானால் செய்யத் தயார்)

உச்சநீதிமன்ற தீர்ப்புகளேகூட இந்த உணவுப் பழக் கத்தில் தலையிடுவதற்கு விரோதமாகத்தான் வந்துள்ளன.

எனவே, மும்பையில் இந்தச் சட்டத்தினை எதிர்த்து நீதிமன்றத்திலும் போராட வேண்டும்.

அதே நேரத்தில் வீதி மன்றத்திலும், பாதிக்கப்படும் மக்களை ஒன்று திரட்டி, அற வழியில் போராட முன் வர வேண்டும் மகாராஷ்டிரத்தில்.

ஒத்த கருத்துள்ளவர்கள் போராட முன் வருக!

இது அங்கே வந்த தீ என்று நாமும் அலட்சியமாக இல்லாமல், இங்கும் பரவ எவ்வளவு நேரம் ஆகும் என்ற உணர்வுடன், அதை எதிர்த்துக் குரல் கொடுக்க முன் வர வேண்டும் - ஒத்த கருத்துள்ள அத்தனை  அமைப்புகளும் (நாம் முன்பே இப்படி போராடியுள்ளோம்).

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

5.3.2015, சென்னை

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...