Thursday, February 5, 2015

நீதி போதனை வகுப்பா?

உச்சநீதிமன்றத்தில் டில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சமூகத்தில் அறநெறிகள் குறைந்து வருகின்றன. பணம் சம்பாதிப்பது மட்டுமே சமூகத்தின் குறிக்கோளாக மாறி வருகிறது. இதுபோன்ற சமூகச் சீரழிவை மாற்றி அமைக்க வேண்டும். எனவே, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை நீதி போதனை வகுப்பைக் கட்டாய மாக்கி, மாணவர்களுக்கு அறநெறிகளைப் போதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த வழக்குரைஞர் கள், தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி சிக்ரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசும், மத்திய அரசின் கல்வி வாரியமும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்பேகூட இந்தக் கருத்து உலா வந்து கொண்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது இது நல்லதுதானே - நல்லொழுக்கத்தை மாணவர்களாக இருக்கும் பருவத்திலிருந்தே பயிர் செய்தால்தானே அவர்களின் எதிர்காலம் ஒழுக்கம் உள்ளதாக, கட்டுப்பாடு உள்ளதாக இருக்கும் என்று சொல்லக்கூடும்.

நடைமுறையில் பார்க்கும்பொழுது - அதுவும் பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் - சங் பரிவார்க் கூட்டத்தின் அழுத்தத்தில் ஆட்சி நடை போடும் ஒரு சமயத்தில் நீதி போதனை என்பது இந்து மதப் பிரச்சாரப் புயலாகத்தான் வீசும்.

ஏற்கெனவே அரியானாவில் கீதை கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டு விட்டது; கல்வித் திட்டத்தையே இந்து மயமாக ஆக்க இருப்பதாகவும் அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நீதி போதனை என்றாலே இதிகாசக் கதைகள், புராணக் கதைகளைத்தான் மாணவர்களுக்குப் போதிப்பார்கள்; பல ஆண்டுகளுக்குமுன் உயர்நிலைப் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு (Moral Instruction) நடைபெற்றுக் கொண்டு தானிருந்தது. அப்பொழுதும் புராண அளப்புகள்தான்; இராமன் கதை, அரிச்சந்திரன் கதை, குரு பக்திக்கு எடுத்துக்காட்டு கட்டை விரலைக் காணிக்கையாக துரோணாச்சாரிக்குக் கொடுத்த ஏகவலைவன் கதை களைத்தான் கதைத்துக் கொண்டிருந்தனர்.

குசேலனுக்கு 27 குழந்தைகள் - அவன் கிருஷ்ணன்மீது கொண்ட ஆழமான பக்தியின் காரணமாக கிருஷ்ண பகவான் தங்கத்தையும், பொருளையும் வாரி வழங்கி செல்வந்தனாக ஆக்கினார். ஆகவே, மாணவர்களே, பகவான்மீது பக்தி செலுத்துங்கள் என்று சொல்லுவதனால் மாணவர்கள் சோம்பேறிகளாக ஆவதைத் தவிர வேறு வழியே இல்லை!

தந்தை பெரியார்தான் அறிவார்ந்த வினாவை எழுப்பினார்.

ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்தால், அவன் வருஷத்துக்கு ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால், இருபது வயதிலும், அதற்கு மேற்பட்ட வயதும் நிறைந்த குழந்தை கள் எட்டாவது இருக்கும்.

இந்தக் குழந்தைகளும் சோம் பேறித் தடியன்போல், ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாத மாமிசப் பிண்டங்களாக அல்லவா இருந்திருக்கக் கூடும்! இப்படி இருபது வயதுக்கு மேற்பட்டவர்களை வீட்டிலே வைத்துக்கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போயிருந்தால், அந்த நாட்டில் மற்றவர்களும் இதுபோல் இருந்திருக்க வேண்டாமா? அப்படி இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படி ஆகியிருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியர்களுக்குக் கடவுள் செல்வம் கொடுக்கலாமா? (பொன்னி பொங்கல் மலர், 1948)

என்று தந்தை பெரியார் எழுதியுள்ளாரே! இதில் ஒரு வரியை மறுக்க முடியுமா? மதம் காட்டும் மார்க்கம், புராணம் காட்டும் புத்தியுரை இதுதானா?

இவற்றையெல்லாம்தானே நீதி போதனை வகுப்பில் சொல்லிக் கொடுத்தார்கள்? இனிமேலும் சொல்லியும் கொடுப்பார்கள்.

கொள்கைக்காக நஞ்சுண்டு மறைந்த சாக்ரட்டீசை பற்றியா சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?

பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து என்று கூறிய தந்தை பெரியார் அவர்களின் கொள்கையைப் பற்றியா எடுத்துக் கூறுவார்கள்?

இப்பொழுதே ஆசிரியர் தினம் என்பதை குரு உத்சவ் என்று சொல்லி வியாசரின் பிறந்த நாளைத்தான் இன்றைய தினம் மத்தியில் ஆட்சியிலிருக்கும் வகையறாக்கள் கொண்டாடுகிறார்கள்.

நேருவின் பிறந்த நாளைக் குழந்தைகள் நாளாக ஏற்காமல், சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி, வாலிப வயதில் பெண்ணைத் திருடிய கிருஷ்ணன் பிறந்த நாளை(?) கொண்டாடக் கூடியவர்கள்.

இத்தகைய ஓர் ஆட்சியில் நீதி போதனை என்ற வகுப்பு எந்தக் கேவலத்திற்கு - பிற்போக்குத் தனத்திற்கு, மூட நம் பிக்கைக்கு இழுத்துப் போகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

நீதி போதனை வகுப்பில் மதச்சார்பின்மை என்னும் தத்துவத்தின் சீலத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

ராமராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் - இந்து ராஜ்ஜி யத்தைப் படைப்போம் என்று காட்டுக் கூச்சல் போடுவோர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத் தில் நீதி போதனை வகுப்பு என்பது மாணவர்கள் மத்தியிலேயே மதவாதத்தைத் திணிக்கும் பேராபத்தில் கொண்டு போய் விடும் - எச்சரிக்கை!

எச்சரிக்கை!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...