Friday, February 13, 2015

டில்லி யூனியன் பிரதேசத்தில் இராமனுக்குப் பிறக்காதவர்கள் இவ்வளவு அதிகமா?

டில்லி யூனியன் பிரதேசத்தில்
இராமனுக்குப் பிறக்காதவர்கள் இவ்வளவு அதிகமா?

டில்லி சட்டமன்றத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் அமைப்புகளுக்கும், பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசுக்கும், அக்கட்சிக்கும் படுதோல்வியைப் பரிசாக, டில்லி வாக்காளர்ப் பெரு மக்கள் வழங்கி, விட்டனர். மதவெறி அரசியலும், அதிகாரப் போதை, ஆணவ உளறலும், இனிமேல் செல்லாது என்று உணர்த்தி உள்ளனர்.

அமித்ஷா - மோடி கூட்டு ஏதோ பெரிய அற்புத அதிசயங்களை யெல்லாம் தரக்கூடிய அலாவுதீனின் அற்புத விளக்கு என்பதைப் போன்ற (மாய்மாலப் பிரச்சாரப் புரட்டு என்ற) பெரிய பலூனை - கெஜ்ரிவால் என்ற சின்ன குண்டூசியைக் கொண்டு குத்தி ஒன்று மில்லாமல், பரிதாபத்திற்குரிய நிலையில் எதிர்க்கட்சித் தகுதியைக்கூடப் பெறாது வீழ்த்திப் பாடம் புகட்டி யுள்ளனர்!

நாடாளுமன்றத் தேர்தலில் மோடியால் இளைஞர் களுக்கும், ஏனையோருக்கும் தரப்பட்ட குளோரோபாம் - மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவில்லை; மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவும் கூடாது; அது மரணத்தில்தான் போய் முடியும்!

ஆகவே நாடு அழிவை நோக்கி - மதவெறி பழைய வர்ண தர்ம வெறி, சிறுபான்மையினரை மிக மோசமாக சித்தரித்து நடத்திய வன்கொடுமைக்கு வாக்கு பெட்டி வழியே இப்படி ஒரு மவுனப் புரட்சியை டெல்லி வாக்காளர்கள் நடத்திப் பாடம் போதித்துள்ளனர்.

5 முறை தேர்தல் பிரச்சாரத்தினை மும்முரமாக நடத்திய மோடி பிரச்சாரம் பரிதாபத்திற்குரிய நிலையில் 5 இடங் களைக்கூட பெற முடியாமல், வெறும் 3 இடங்களையே பெற்றுள்ளது!

கிரண்பேடி என்ற ஒரு பச்சோந்தி பதவி ஆசைப் பெண்ணை -விளம்பர வியாதியால் வீணே அலைந்த ஒரு பெண்ணை - ஒரே நாளில் கட்சித் தாவ வைத்து, எடுத்த எடுப்பிலேயே முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்து பெண்கள் வாக்குளைப் பெற இந்த மாயமான் காட்சியை நடத்தியும்கூட கை கொடுக்கவில்லை.

அவரே தோற்றுப் போனார்!

கூடு விட்டுக் கூடு பாயும் குணவதிக்கு வாக்குகளால் பாடம் கற்பித்துள்ளனர்!
அவருக்குத் திடீர் பிரோமோஷன் கொடுத்த ஷாவின் வித்தைகளின் விலா எலும்பு முறிக்கப்பட்டுள்ளது!

அதைவிட டில்லி வாக்காளர்கள் இந்தப் பெருத்த தோல்வியை பா.ஜ.க.  அணிக்குத் தந்து, நன்றாகக் கரி பூசி விட்டனர்.

எவ்வளவு கேவலமான பேச்சு! - தேர்தல் பிரச்சாரத்தில்? ஒரு ஆர்.எஸ்.எஸ். கதாகாலட்சேப பெண்ணைக் கொண்டு வந்து மத்திய இணை அமைச்சராக்கியதோடு, அவரை டில்லி தேர்தல் பிரச்சாரத்திலும் களம் இறக்கினர் - பிரதமர்.

அந்தப் பெண் அமைச்சர்  உதிர்த்த நாகரிகமான கருத்து - தேர்தல் பிரச்சார வரலாற்றில் எங்கே தேடினாலும் கிடைக்காது.

அருவருக்கத்தக்க ஆணவப் பேச்சு! பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லாம் இராமனின் பிள்ளைகள். மற்றவர்களுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லோரும் முறை தவறிப் பிறந்தவர்கள்

- எத்தகைய கேவலமான இழி நிலைப் பேச்சு! இப்படிப்பட்டவர் மோடி அரசில் இன்னமும் மந்திரியாக தொடருவதும், பிரதமர் மவுனமாக இருப்பதும் சரிதானா?

67 இடங்களைப் பெற்று வியக்கத்தக்க வெற்றி பா.ஜ.க.வுக்கு எதிராகக் கிடைத்துள்ளது. பா.ஜ.க. வெறும் மூன்றே இடங்களைத்தான் பெற்றுள்ளது! அப்படியானால்

ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பிரச்சாரகரான அந்தஅமைச்சர் அம்மாவின் கணக்குப்படி டில்லி யூனியன் பிரதேசத்தில் இராமனுக்குப் பிறந்தவர்கள் வெறும் மூன்று தொகுதிகளில்தான் உள்ளனர்.

மற்றவர்கள் எல்லாம்....? நமக்கே எழுதிடக் கை கூசுகிறது!
 
இப்படிப்பட்ட கழிசடைகளையெல்லாம் துடைப்பத் தால் கூட்டி வாரிக் குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டார்கள்!

வார்த்தைகளால் பதில் கூறாமல் வாக்குகளால் செயலில் காட்டி, மூக்கறுத்துள்ளனர்.

கெட்டிக்காரன் புளுகுக்கேகூட உச்ச வரம்பு எட்டு நாள்கள்!

ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங் புளுகுக்கு எட்டு மாதங்கள் போலும்!
இனியாவது ஆர்.எஸ்.எஸ். பல குரல்  மன்னர்களின் ஆணவம் குறையுமா?
எங்கே பார்ப்போம்!


- ஊசி மிளகாய்



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...