பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு
எழுதும் இருபால் மாணவர்களுக்கும் சிறப்பு வழிபாடு ஒன்று சென்னை
சைதாப்பேட்டையில் காரணீஸ்வரர் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
இந்தச் சிறப்பு வழிபாட்டில் பங்கு கொள்ள
விரும்பும் மாணவர்கள் முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டுமாம். இந்த
வழிபாட்டில் பங்கு கொள்ளும் இருபால் மாணவர்களிடம் அகல் விளக்குகள்
வழங்கப்படுமாம். அந்த அகல் விளக்கை ஏற்றி எங்கள் வாழ்வில் ஒளியேற்று இறைவா!
என்று மாணவர்கள் வேண்டிக் கொள்ள வேண்டுமாம். அதன் பிறகு சிவாச்சாரியார்கள்
வேத மந்திரங்கள் முழங்கிட சிறப்பு வழிபாடு நடத்துவார்களாம். அதன் பிறகு
பூஜையில் வைக்கப்பட்ட காப்புக் கயிறுகளை மாணவர்களுக்கு வழங்குவார்களாம்.
இதனைப் படிக்கும் பொழுது, இந்த 21ஆம்
நூற்றாண்டின் நுழைவு வாசலில் ஆன்மீகவாதிகள் எதிர்கால நம்பிக்கை ஒளி
விளக்குகளின் கைகளில் அகல் விளக்கைக் கொளுத்தி கடவுளிடம் விண்ணப்பம்
போட்டால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக வெற்றி பெறுவார்கள்
என்று சொல்ல முன் வருகிறார்கள் - வெட்கக்கேடு!
இது மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குப் பதிலாக மூடநம்பிக்கையையும், சோம்பேறித்தனத்தையும் தானே வளர்க்கும்.
கடவுளிடம் கையேந்தினால் தேர்வில் வெற்றி
பெறலாம் என்ற பொய் நம்பிக்கையை மாணவர்களிடம் திணித்தால் அவர்கள் கல்வியில்
எப்படிக் கவனம் செலுத்துவார்கள்? அன்றாடம் பாடங்களைப் படிக்க வேண்டும் என்ற
எண்ணம் எப்படி ஏற்படும்?
அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும், தேர்வில்
சிறப்பாக வெற்றி பெறுவதற்குமான அறிவார்ந்த வழிமுறைகள் உள்ளன.
கல்வியாளர்கள் அதைப்பற்றி எல்லாம் எடுத்துக் கூறியுள்ளனர். அவற்றையெல்லாம்
புறந்தள்ளி, அறிவுக்கு ஒவ்வாத முறையில் தவறான வழியில் மாணவர்களைத் திசை
திருப்பலாமா!?
மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை
வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வை ஊட்ட வேண்டும். அது ஒவ்வொரு இந்தியக்
குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி(பி)
தெளிவாக, திட்டவட்டமாகக் கூறுகிறது.
இந்த நிலையில், இதற்கு முற்றிலும்
முரண்பாடாக மூடநம்பிக்கை வலைக்குள் மாணவர்களைச் சிக்க வைப்பது சட்டப்படி
குற்றமல்லவா!? மாணவர்களின் எதிர் காலத்தை இருட்டறையில் தள்ளுவது குற்றம்
அல்லவா?
இது ஏதோ ஒரு மதப்பிரச்சினை என்று கருதி
விடக் கூடாது; எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இது போன்ற வேலையில்
ஈடுபட்டாலும் அது குற்றம் குற்றமே!
இதுகுறித்து ஏடுகளும், இதழ்களும், ஊடகங்களும் விமர்சிக்க வேண்டாமா?
ஆனால் நம் நாட்டு ஏடுகளும், இதழ்களும்
ஊடகங்களும் ஆன்மீக மலர்களைத்தானே வெளி யிட்டுக் கொண்டு இருக்கின்றன.
அவர்களுக்கு எதை விற்றாவது கல்லாப் பெட்டியை நிரப்ப வேண்டும் என்பதுதானே
நோக்கம்.
சரி, கல்வியாளர்கள் இல்லையா? அவர்கள்
முன்வந்து கருத்துக்களைச் சொல்லக் கூடாதா என்று கேட்கலாம்; அப்படிச்
சொல்லுவதற்கு முதுகெலும்பு வேண்டுமே, நமக்கு ஏன் வீண் வம்பு என்று
ஒதுங்கிக் கொள்ளும் சுயநல கதகதப்பில் அல்லவா வாழ்ந்து கொண்டு
இருக்கிறார்கள்!
அரசியல்வாதிகள் கருத்துச் சொல்ல
பெரும்பாலும் விரும்பாததற்குக் காரணம் இது கடவுளோடு, பக்தி யோடு
சம்பந்தப்பட்டது என்பதால் வாக்கு வங்கியை நினைத்து வாய் மூடிக் கொள்ளும்
நிலைதான்.
கடைசியில் எங்கு வந்து நிற்கிறது என்றால்,
இது பகுத்தறிவாளர்கள் அதிலும் குறிப்பாக திராவிடர் கழகத்தைச்
சேர்ந்தவர்களின் பிரச்சினை என்று நினைத்து ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
இதில் உண்மை நிலை என்னவென்றால் எதிர்
காலத்தின் உலகை நிர்மாணிக்கக் கூடிய மாணவர்களை தன்னம்பிக்கையற்றவர்களாக
ஆக்கி விடக் கூடாது என்று கருதுகிற ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டிய,
தலையிட வேண்டிய ஒன்றாகும். இது வெறும் கழகப் பிரச்சினையல்ல.
இதில் இன்னொரு கேள்வியும் உண்டு, தேர்வுகளுக்குமுன் இப்படி வழிபாடு நடத்திய மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்று
விட்டனர் என்பதற்கான புள்ளி விவரங்கள் உண்டா?
கடவுள் நம்பிக்கை இல்லாத மாணவர்கள் எல்லாம் தேர்வில் தோல்வி அடைந்து விடுகின்றனரா?
பக்தி என்பது தவறான பாதைக்கு இழுத்துச் செல்லக் கூடிய மூட உணர்வு என்பதற்கு இந்த ஏற்பாடுகள் ஓர் எடுத்துக்காட்டே!
No comments:
Post a Comment