ஆபத்தை உணர்த்தி எச்சரிப்பதே எங்களது பணி
காஞ்சிபுரம் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் சிறப்புரை
காஞ்சிபுரம்,ஜன.26-
காஞ்சிபுரம் வட்டார திராவிடர் எழுச்சி மாநாட்டில் (24.1.2015) அன்று
பங்கேற்க வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சிறீபெரும்புதூரில்
விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பினர், பழங்குடியினர் முன்னேற்ற சங்கத்தினர்
மற்றும் கழகத் தோழர்கள் பெருந்திரளாகத் திரண்டு பயனாடைகளை அணிவித்து
வரவேற்றனர்.
காஞ்சிபுரம் நகர எல்லையில் மாவட்டத்
தலைவர் டிஏஜி அசோகன் தலைமையில் கழகத் தோழர்களும், திமுக மாவட்டச் செயலாளர்
சுந்தர் தலைமையில் திமுக வினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
சார்பிலும் பெருந்திரளாக தமிழர் தலைவர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து
வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பைத் தொடர்ந்து செய்தியாளர்கள்
சந்திப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திராவிடர் விழிப் புணர்வு
மாநாடு நடத்தப்படுவதன் அவசியம்குறித்தும், செய்தியாளர்கள் தொடுத்த
வினாக்களுக்கும் விடையளித்தார்.
காஞ்சிபுரம் வணிகர் வீதியில்
(மண்டித்தெரு) சுயமரி யாதைச் சுடரொளிகள் மு.ஏழுமலை, இராவணன், வெள்ளி
எழிலன்நினைவரங்கில் திராவிடர் விழிப்புணர்வு மாநாடு காஞ்சிபுரம் மாவட்டத்
தலைவர் டி.ஏ.ஜி. அசோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்
இரா.சக்திவேல் வரவேற்றார். கழகப் பேச்சாளர் காஞ்சி பா.கதிரவன் இணைப்புரை
வழங்கினார்.
காஞ்சிபுரம் நகரத் தலைவர் கி.இளையவேள்,
வாலாஜாபாத் ஒன்றிய அமைப்பாளர் ஆ.மோகன், சுங்குவார் சத்திரம் கோ.நடராஜ்,
உத்திரமேரூர் ஒன்றிய அமைப்பாளர் எ.பிரகாஷ், காஞ்சி மாவட்ட இளை ஞரணித்
தலைவர் மு.அருண்குமார், காஞ்சி மண்டல மாண வரணிச் செயலாளர் டி.ஏ.ஜி.அர்ஜுன்,
காஞ்சி ஒன்றிய அமைப் பாளர் த.சத்தியா, மாவட்ட மாணவரணித் தலைவர்
அ.அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டையொட்டி பெரியார் பெருந்தொண்டர்
டி.ஏ.ரத்தினம் கழகக்கொடியை ஏற்றிவைத்தார். ஈட்டி கணேசன் மந்திரமா?
தந்திரமா? பகுத்தறிவு செயல்விளக்க நிகழ்ச்சியை நடத்தினார். கழகப் பேச்சாளர்
யாழ்திலீபன் மாநாட்டின் தொடக்கத்தில் உரையாற்றினார்.
மாநாட்டைத் திறந்து வைத்து காஞ்சிபுரம்
(தெற்கு) மாவட்ட திமுக செயலாளர் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர்
பேசும்போது, தந்தை பெரியார் கொள்கைகளை அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் திமுக
ஆட்சியின்போது நிறைவேற்றினார்கள். மத்திய, மாநில அரசுகள் செய்துவரும்
அனைத்துத் திட்டங்களும் தந்தை பெரியார் கொள்கைகளை அடிப்படையாகக்
கொண்டுள்ளவை என்பது குறித்து எடுத்துரைத்தார்.
மக்கள் மன்றம் வழக்குரைஞர் மேகலா, மனிதநேய
மக்கள் கட்சி சனாவுல்லா, இந்திய யூனியன் முசுலீம்லீக் உஸ்மான் செரீப்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாசறை செல்வராஜ், இந்திய பொதுவுடைமைக்கட்சி
நாரா யணசாமி, வைணவ சமயத்தவரான மாதவ இராமானுஜ தாஸ், மார்க்சிய
பொதுவுடைமைக்கட்சி முத்துக்குமார், திராவிடர் கழக வடமாவட்டங்களின்
அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் ஆகியோர் மதசார்பின் மைக்கும்,
தமிழுக்கும், தமிழர்களுக்கும், சிறுபான்மையருக் கும் ஏற்பட்டுள்ள
அச்சுறுத்தல்கள் குறித்தும், தந்தைபெரியார் மண்ணில் அதற்கு இடம் கிடையாது
என்பதையும் ஆணித்தரமாக ஒருமித்த குரலில் ஒலித்தார்கள்.
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
மாநாட்டில்
காஞ்சிபுரம் மாவட்ட (தெற்கு) திமுக அவைத்தலைவர் சி.வி.எம்.அ.பொன்மொழி,
காஞ்சிபுரம் நகரதிமுக செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், திமுக தலைமைச்
செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ.சேகரன், காஞ்சி திமுக ஒன்றிய செயலாளர்கள்
பி.எம்.குமார், க.குமணன், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் க.செல்வம்,
வழக்குரைஞர் சி.வி.எம்.ஏ.பி.எழிலரசன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாதாசன், சிபிஎம் கே.நேரு, சிபிஅய்
எஸ்.எம்.ஏழுமலை, பழங்குடியினர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தென்னரசு,
திராவிடர்கழக மண்டலத் தலைவர் பு.எல்லப்பன், செங்கை மாவட்டத் தலைவர்
அ.கோ.கோபால்சாமி, அரக்கோணம் மாவட்டத்தலைவர் ச.லோகநாதன், வேலூர் மாவட்டத்
தலைவர் சடகோபன், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், மாநில இளை ஞரணித்
துணைச் செயலாளர் சிவக்குமார், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் விமல்ராஜ்,
தென்சென்னை சா.தாமோதரன், வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், முனைவர்
மு.தமிழ்மொழி உள்பட ஏராளமானவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம் நகரச் செயலாளர் ச.வேலாயுதம்
நன்றி கூறினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து ஏராளமானவர்கள்
கீதைகுறித்த நூல்களின் தொகுப்பைப் பெற்றனர்.
மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்
மொழிப் போர் தியாகிகளை நினைவுப்படுத்தும்
வகையில் மாநாட்டில் பங்கேற்ற பொதுமக்களும், பல்வேறு கட்சிகளைத் சேர்ந்த
சிறப்பு விருந்தினர்களும், தமிழர் தலைவரும் எழுந்து நின்று மொழிப்போர்த்
தியாகிகளின் தியாகத்தை நினைவுகூர்ந்து சில மணித்துளிகள் அமைதி காத்தனர்.
தமிழர் தலைவர் தமது சிறப்புரையில் குறிப் பிட்டதாவது:
கழகத்தின்சார்பில் சேலத்திலே எடுத்த
முடிவுக்கு ஏற்ப திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகள் மாநிலம் தழுவிய அளவிலே
ஒவ்வொரு வட்டாரத்திலும் அடுத்த 6 மாதம் அல்லது ஓராண்டுக்குள்ளாக 2000
பிரச்சார நிகழ்ச்சிகளை, மாநாடுகளை நடத்த வேண்டும் என்ற அந்தத்
தீர்மானத்தைச் செயல்படுத்தக்கூடிய வகையிலே கடந்த 24ஆம் தேதி அறிவாசான்
தந்தை பெரியார் நினைவு நாளில் (24.12.2014) தொடங்கி பல்வேறு பகுதிகளிலே
மாநாடுகள் நடைபெறுகின்றன.
நம்முடைய கருத்தைப் பரப்புங்கள்
எப்போதும் கட்டுப்பாட்டை மதிக்கும்
இயக்கம் நம்முடைய இயக்கம். அறிவு ஆசான் தந்தைபெரியார் காலத்திலிருந்தே
நாங்கள் கொள்கை விளக்கங்களை சிறுசிறு புத்தகங்களாக இங்கே கொண்டுவந்திருக்
கின்றோம்.லாபத்தைக்கருதியோ, வியாபார நோக்கத் தோடோ அல்ல.
மாறாக உண்மைகளை மக்கள்
புரிந்துகொள்ளவேண்டும். மக்களுக்கு உண்மைகள் போய்ச் சேர வேண்டும். அப்படி
சேர்ந்தால்தான் மக்களிடம் தெளிவும், விழிப்பும் உண்டாகும் என்பதற்காகத்தான்
இந்தப் புத்தகங்களை நாங்கள் அச்சிட்டு கொண்டு வந்திருக்கிறோம். இவைகளை
நீங்கள் வாங்க வேண்டும்.
படிக்கவேண்டும். கருத்துகளை ஏற்கவேண்டும்
என்று கூட நாங்கள் சொல்லமாட்டோம். நீங்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகள்.
இதைப்படித்தாலே, இந்த மருந்து வேலைசெய்யும். அதிலே ஒன்றும் சந்தேகமே இல்லை.
இந்த புத்தகங்களை வாங்குங்கள், படியுங்கள், பிறருக்கும் கொடுங்கள். இந்தக்
கருத்தைப்பரப்புங்கள். ஏனென்றால், இந்த நாட்டில் உள்ள ஊடகங்கள் என்பவை
பெரும்பாலும் உண்மைகளைப் பரப்புவதில்லை.
நீங்கள் நன்றாக சிந்தித்துப்பார்த்தால்
இன்றைய சூழ்நிலை எப்படி இருக்கிறது? இந்த மாநாட்டுக்கு என்ன தலைப்பு?
நம்முடைய மார்க்சிஸ்ட் நண்பர்களும், இடதுசாரி தோழர்களும்,
விடுதலைசிறுத்தைகளும், ஏனைய தோழர் களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின்
மாவட்டச் செயலாளர் அவர்களும் சமுதாயத்திலே இன்றைய சூழ் நிலை எப்படி
இருக்கிறது? என்று எடுத்துச் சொன் னார்கள். அதைத்தான் எண்ணிப் பார்க்க
வேண்டும்.
உடற்கொடை
நம்முடைய தோழர்கள் எல்லாம், அசோகன்
மற்றவர்கள் எல்லாம் பெரியார் உடற்கொடைக் கழகம் சார்பிலே இவர்கள் தங்களுடைய
உடலை மருத்துவ மனைக்கு மறைந்தபிற்பாடு கொடுக்கப்போகிறோம் என்று எழுதியே
கொடுத்திருக்கிறார்கள். காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவ
மனைக்கு உடற்கொடை அளித்து எழுதி, பதிவு செய்திருக்கிறார்கள். இது ஒரு
எடுத்துக்காட்டான செய்தி.
மதத்தினுடைய அடிவேரிலேயே வெந்நீர்
ஊற்றுகின்ற சங்கதி இருக்கிறதென்றால் அது இதுதான். இது
வெறும்கொடையைப்பொருத்தது மட்டுமல்ல. அதைவிட மதத்தினுடைய ஆணிவேர்
வெட்டப்படுகிறது. எங்க ளுடைய தோழர்களுக்கு வாழ்நாள்முழுவதும் நாங்கள்
பயனுள்ள வாழ்க்கையை வாழவேண்டும், இறந்த பிற் பாடும்கூட எங்களுடைய உடல்
பயன்படவேண்டும் என்ப தற்கு பகுத்தறிவாளர்கள் எவ்வளவு மனிதநேயத் தோடு
இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மதவெறியை மாய்ப்போம் மனித நேயத்தை காப்போம்
இந்த நகரத்தைப் பொருத்தவரையிலே இது
புதிதல்ல. சீரிய பகுத்தறிவாளராக இருந்தவர், அன்றைக்கு நகர் மன்றத் தலைவராக
இருந்த கே.டி.எஸ்.மணி நம்முடைய சகோதரர்ஆவார். அவருடைய உடல்
மருத்துவமனைக்கு தரப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்சிலிருந்துதான் அவர் திராவிட
இயக்கத்துக்கு வந்தவர். வியப்பாக இருக்கும். ஏனென்றால் அவர் சிந்தித்தார்.
சிந்தித்தபிறகு நம்முடைய இனத்துக்கு,
சமுதாயத்துக்கு துரோகம் செய்கிறோமே என்று நினைத்தார்கள். தீவிர
பகுத்தறிவாளராக அவர் இருந்தார். அவர் ஏற்படுத்திய சரித்திரம் அவரோடு
முடிந்து விடவில்லை. அது இன்னமும் தொடர்கிறது.
இளைய தலைமுறைகூட அந்த முடிவிலே
இருக்கிறார்கள் என்று சொன்னால், இதுவே மதவெறி மாய்ப்போம், மனித நேயத்தைக்
காப்போம் என்று சொல்வதற்கு அற்புதமான நடைமுறை எடுத்துக்காட்டாகும். நாங்கள்
பேசிவிட்டு போகக்கூடியவர்கள் அல்ல. எதைப்பேசுகிறோமோ? அதைச்
செய்யக்கூடியவர்கள்.
எதைச் செய்கிறோமோ அதைமட்டும்தான்
பேசக்கூடியவர்கள். அவர்களுக்குப் பெயர்தான் பெரியார் தொண்டர்கள்,
சுயமரியாதைக் காரர்கள் என்று அதற்குப் பொருள். அந்த அளவிலே தான்
திராவிடர்களுக்கு விழிப்புணர்வு தேவை.
வீட்டுக்காரர்கள் நன்றாக குறட்டைவிட்டுத்
தூங்கி னால்கூட, காவலாளி தூங்கமுடியுமா? கருப்புச் சட்டைக்காரன்
காவலுக்குக் கெட்டிக்காரன்.ஆக, எங்களுடைய வேலை பதவிக்குப் போவதில்லை.
பெருமைகளைத் தேடுவது அல்ல. நீங்கள் இன்றைக்குப் பாராட்டுகிறீர்கள்.
இந்த பாராட்டைப்போலவே நீங்கள் கல்லை
எடுத்து போட்டாலும் இந்தக் கருத்தைச் சொல்லிக்கொண்டுதான் இருப்போம்.
எங்களுடைய உயிருக்கு ஆபத்து என்று மற்றவர்கள் மிரட்டினாலும் கூட,
அதைப்பற்றி கவலைப்படாமல் இந்தக் கொள்கையைச் சொல்லிக்கொண்டிருப்பதில்தான்
எங்களுடைய வாழ்வு முடியவேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் நாங்கள்.
நம்நாட்டில் சட்டம் ஒழுங்கு!
அப்படிப்பட்ட விழிப்புணர்வு நமக்கு
இன்றைக்கு ஏன் தேவை? விழிப்புணர்வு எப்போது தேவை? தூங்கு பவர்களுக்கு
ஆபத்து வந்தால் அந்த நேரத்தில் தூங்கக் கூடாது, விழிப்பாக இருக்க வேண்டும்.
வீட்டில் தீப் பிடித்துக் கொண்டு எரியும்போது தூங்கிக்கொண்டிருக்க
முடியுமா?
நம் நாட்டிலேதான் சட்டம் ஒழுங்கு
பிரமாதமாக இருக்கிறது என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே, அண்மையிலேகூட
கிருஷ்ணகிரியிலே ஒன்றும் அதிகமில்லை, 10கோடி அளவில் வங்கியிலேயே
உள்ளதையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டான். இப்போது சைரன்
வைத்திருக்கிறார்கள். கைவைத்தாலே சத்தம் வரும்.
சிலபேர் வீட்டுக்குள் காலை வைத்தாலே
சத்தம் வரும். அந்த சைரனுக்கு என்ன வேலை என்றால், அய்யா! ஆபத்து,
எழுந்திருங்கள், விழிப்பாக இருங்கள் என்று சொல்வதுதான் அதனுடைய வேலை.
இப்போது எழுப்புவதற்கு தனியே கடிகாரம்
தேவையில்லை.இப்போது எல்லோர் கையிலும் கைத்தொலைபேசி (செல்போன்) இருக்கிறது.
இதனால் பல பொருட்களை தேவை இல்லை என்று ஆக்கி விட்டார்கள். செல்போன் கேமரா,
ஒலிஅமைப்பு, கடிகாரம், காலண்டர் என அனைத்தையும் அதிலேயே அடக்கி உள்ளார்கள்.
தந்தை பெரியார் இனி வரும் உலகம் நூலில்
குறிப்பிட்டுள்ளார். 10 காசுக்கு விற்ற புத்தகம். அதில், ஒவ்வொ ருவர்
கையிலும், சட்டைப்பையிலும் வானொலியும், தொலைபேசியும் இருக்கும். ஒருவருக்
கொருவர் ஆள்காட்டி, உருவம் காட்டிப் பேசிக்கொண்டு இருப்பார்கள் என்று
தந்தைபெரியார் எழுதினார்.
சங்கராச்சாரியார் கண்டுபிடித்த விஷயமா?
அவருக்கும் சேர்த்து மற்றவன்தான் கண்டுபிடித்திருக் கிறான். சத்ய சாய்பாபா
கையைத் தூக்கிய உடனே பொத்தென்று விழுந்த விஷயமா? முப்பத்துமுக்கோடி
தேவர்கள், நாற்பத்தைந்தாயிரம் ரிஷிகள், கிண்ணரர், கிம்புருடர், அஷ்டதிக்கு
பாலகர்களில் ஒரு பயலுக்காவது செல்போன் என்றால் என்ன என்று தெரியுமா?
இவ்வளவும் அறிவு, சிந்தனை, வளர்ச்சி. ஏன்?
எப்படி? என்று கேள்வி கேட்டு கேட்டு அறிவியல் வளர்ந்த துடைய
விளைவாகஇவ்வளவு வளர்ந்திருக்கிறது.
-இவ்வாறு தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தம்பேச்சில் குறிப்பிட்டார்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- தமிழர் தலைவரின் ஒருநாள் ஆந்திரா பயணம் (3)
- தமிழர் தலைவரின் ஒருநாள் ஆந்திரா பயணம் (2)
- ஆந்திர மாநிலம் குண்டூரில் சமூகநீதி பாராட்டுப் பெருவிழா!
- சென்னை மாகாணம் - இரண்டாவது சட்டசபை - சாதனைகள்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- சங்கராச்சாரியாரும் - மதமாற்றமும்
- தமிழர் தலைவரின் புவனேசுவரப் பயணம்! - ஒரு தொகுப்பு (3)
- தமிழர் தலைவரின் புவனேசுவரப் பயணம்! - ஒரு தொகுப்பு (2)
- ஒடிசா மாநிலத்தில் சமூகநீதிக்கான கி.வீரமணி விருது - 2014 வழங்கும் விழா!
- தத்துவ விசாரணைகள்
No comments:
Post a Comment