Saturday, July 5, 2014

குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை கொள்கைப் பயிர்களை உருவாக்கிய விதைப் பண்ணை

குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை
கொள்கைப் பயிர்களை உருவாக்கிய விதைப் பண்ணை

தமிழர் தலைவர் சூட்டும் புகழாரம்

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க உரிமை இல்லையாம்!

கடந்த மாதம் ஜூன் 26 முதல் 29 முடிய குற்றாலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப் பெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் சிறப்பு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  கடந்த ஜூன் 26,27,28,29 ஆகிய நான்கு நாள்களிலும் குற்றாலத்தில் வீசிய கொள்கைச் சாரலும், அருவி போல் கொட்டிய தந்தை பெரியார் தம் தத்துவக் கோட்பாடுகள் பற்றிய விளக்கங்களும் மிகச் சிறப்பானதாகவும், இதமானதாகவும். இணையற்ற முறையிலும் அமைந்திருந்தது.

கொள்கைப் பயிரை உருவாக்கும் விதைப் பண்ணை

38ஆம் ஆண்டு தொடர்ந்து (ஆண்டு தோறும் பெரியாரியல் பயிற்சி முகாம்) நடைபெறும் இக்கொள்கைப் பயிற்சிப் பட்டறை இளைய தலைமுறையிடம் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியதாகும். பலரும் தேர்ந்த பேச்சாளர்களாகவும், கருத்தாளர்களாகவும் ஆகி, புகழ் மலர்களைப் பெற்று மகிழ்கின்றனர்.

நல்லொழுக்கம் - கட்டுப்பாடு - பகுத்தறிவுச் சிந்தனை என்ற பயனுறு வாழ்வியல் கூறுகளை அங்கே கூடும் இளைஞர்கள்  குறுகிய காலத்தில் கற்றுத் துறைபோக ஆயத்தமாகி விடுகின்றனர்!

கொள்கைப் பயிர்களை உருவாக்கும் விதைப் பண்ணையாகவும், நாற்றங்கால் ஆகவும் இப்பயிற்சிப் பட்டறை அமைகிறது என்பதைத் தொடர்ந்து கவனித்து வருபவர் களுக்குப் புரியும்.

அடுத்த பட்டறை புதுச்சேரியில்..

தமிழ்நாட்டில் மட்டுமல்ல; புதுச்சேரி மாநிலத் திலும்கூட இத்தகைய பயிற்சிப் பட்டறைகள் மூலம் பெரியார் இயல் பிரச்சாரத்தினை நடத்திட புதுவை மாநிலத் தோழர்களும் தலைமைக் கழகத்தினைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்!

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வள்ளல் வீகேயென் கண்ணப்பன்

முன்பெல்லாம் இடந்தேடி அலையும் நிலையும், அலைக்கழிக்கப்படும் அவலமும் இருந்தது. ஆனால், ஒப்பாரும் மிக்காருமில்லாத நம் உறவான வள்ளல் வீகேயென் கண்ணப் பனார் அவர்கள்; ஒரு பெரும் மாளிகையை அமைத்து, ஆண்டுதோறும் அவர்களே விருந்தோம்பல் நடத்துவதில் - நாம் எவ்வளவு அவர்களுக்குத் தொல்லை - செலவு இருக்கக் கூடாது என்பதற்காக குறைந்தபட்சம் சமையலை யாவது நாங்களே செய்து கொள்கிறோம் என்று  மன்றாடியும்கூட, அவர்கள் பிடிவாதமாக, இல்லை நான்தான் உபசரிப்பாளராக இருப்பேன்; அதில் யாம் பெறும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையேது என்று உறுதிபட மறுத்துவிட்டார்.

அவரின் வற்றாத பெரு உள்ள அன்பின் ஊற்றுதான் என்னே!

பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களோ - எவ்வாண்டும் இல்லாத அளவு 51 பட்டதாரிகள் - மொத்தம் புடைத்து சலித்து எடுத்து அனுமதிக்கப்பட்டவர்கள், எண்பது இருபால் இளைஞர்கள்.

பொறியாளர்கள், மேற்பட்டப் படிப்பாளிகள், பட்டதாரிகள் முதல் பலரும் உண்டு. ஈர்ப்புடனே பெரியார் இயலைச் சுவாசித்தினர்.

அவர்களுக்கு 4 நாள்களும் தங்கி வகுப் பெடுத்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, தலைமைக் கழக பொதுச் செயலாளர் வீ. அன்பு ராஜ், பிரச்சாரப் பொறுப்புப் பொதுச் செயலாளர் டாக்டர்  துரை. சந்திரசேகரன்,  டாக்டர் கவுத மன், பேராசிரியர் காளிமுத்து, கோ. கருணாநிதி, டாக்டர் அன்பழகன் ஆகியோர் பாராட்டுக் குரியோர் ஆவர். நாள்தோறும் காலையில் யோகா பயிற்சி தஞ்சை யோகராசா என்னும் இராசமாணிக்கம் அவர்களால் அளிக்கப்பட்டது.

இளைஞரணி பொறுப்பாளர் பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாணவரணி செயலாளர் பிரின்சு  என்னாரெசு பெரியார், இளைஞரணி மாநிலச் செயலாளர் இராசபாளையம் திருப்பதி ஆகியோர் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக மேற்பார்வையிட்டு நடத்திய தென் மாவட்ட அமைப்புச் செயலாளர் மதுரை வே. செல்வம், நெல்லை மண்டலச் செயலாளர் பால். இராசேந்திரம், நெல்லை மண்டலத் தலைவர் பொறியாளர் மனோகரன், மாவட்டத் தலைவர் டேவிட் செல்லதுரை அனைவரது ஒத்துழைப்பும், வீகேயென் ஊழியத் தோழர்கள் திரு. பாண்டியன் தலைமையில் பம்பரமாய் சுழன்ற பாங்கு மறக்கற்பாலதோ!

நான்கு நாட்களும் பார்வையாளராக இருந்து பயிற்சி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகை யில் ரூ.5000 மதிப்புள்ள இயக்க நூல்களைப் பரிசாக அளித்த ஈரோடு தோழர் சம்பத்குமார் அவர்களின் செயல் ஓர் எடுத்துக்காட்டானது.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை  
 
3.7.2014

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...