Saturday, July 5, 2014

பழகிய யானையாகவே இருங்கள்!

ஒரு கொள்கையை பரப்புதற்கோ அல்லது நமது கருத்துக்கு மாறானவர்களை, அவர்கள் வழி தவறானது என்று உணர்த்தி, சரியான வழிக்குக் கொணரு தல்மூலம் வெற்றியடைய வேண்டுமாயின் என்ன செய்யவேண்டும் என்ற விவாதம் கடந்த சூழியம் கலந்துரையாடலில் (30.6.2014) எழுந்தபோது, பேராசிரியரும் பெரும் பகுத்தறிவுப் புலவருமான டாக்டர் மா.நன்னன் அவர்கள் பழகியவர்களை வைத்து, பழகாதவர்களையும் பழக மறுப்பவர்களையும், நம் வயப்படுத்திட முயலவேண்டும் என்ற சிறந்த கருத்துரையைச் சொன்னார்கள்.

யானைகளைப் பிடித்தல், பழக்குதலில் கும்கி யானையை வைத்து மற்ற யானைகளைப் பிடிப்பது போலவா என்று ஒருவர் கேட்க,

உடனே பேராசிரியர் மா.நன்னன் அவர்கள், இதற்கேற்ப, இதே கருத்தை வலியுறுத்தும் திருக்குறளை உடனடியாக, கணினியைத் தட்டியதும் கிடைக்கும் விடை போல எடுத்துரைத்தார்கள்!

எத்தனையோ ஆண்டு வகுப்பு களைச் சுவையுடன் எடுத்த இலக்கியப் பேராசிரியர் அல்லவா அவர்; எனவே, இது அருவிபோல் வந்து விழுந்ததில் வியப்பே இல்லை அல்லவா?

இணைந்த செயலையும், இணைத்துக் கொண்டால் விளையும் பயனும் அதிகம் என்பதே இக்குறள்!

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று  (குறள் 678)

இதன் பொருள்: ஒரு வினையைச் செய்யும்போதே, அதனோடு ஒத்து வரக்கூடிய மற்றொரு வினையையும் சேர்த்து செய்து முடித்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்வது வெறிநீர் ஒழுகக்கூடிய கன்னத்தையுடைய ஒரு யானையை, மற்றொரு யானையைக் கொண்டு பிடிப்பது போன்றதாகும்!
இதன் அடிப்படைத் தத்துவம் பழகியவர்களைக் கொண்டு பழகாதவர் களைப் பக்குவப்படுத்துங்கள்.

முரட்டுத்தனமோ, வன்முறை வழியோ தீர்வினைத் தராது என்பதும்,

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதும்கூட இதில் தொக்கி நிற்கிறது என்பது நமது கருத்து.

எப்படியெனில், வினையால் வினை ஆக்கிக் கோடல், ஒரு செயலே மற் றொரு செயலுக்கு முன்னோடி - அச் சாரம் என்பதும் சிந்தித்தால் புலப்படும்.
பல நேரங்களில் நல்ல பயன் விளை யக்கூடிய செயல்கள்கூட, செய்யக் கூடாத முறையில் செய்யத் துவங்கு வதால், வெற்றியைத் தர முடியாம லேயே, தோல்வியில் முடிந்துவிடுவது உண்டு அல்லவா?

எப்போது நிறுவனங்களிலோ, வாழ் விணையரிடமோ அல்லது தலைவர் களிடமோ அல்லது மேலாண்மையாளர் களிடமோ அவர்கள் கருத்துக்களைக் கூறும்போது, எடுத்த எடுப்பிலேயே அதனை, பட்டென்று ((Blunt ஆக) முடியாதுங்க, எப்படி முடியுங்க என்பது போன்று எடுத்தேன், கவிழ்த் தேன் பதில்களை விட்டெறியாமல், இணக்கமாக அவர்கள் வழியிலே சிறிது நேரம் உரையாடி, பிறகு மெல்ல மெல்ல அதனுள் உள்ள தொல்லைகள், அதனால் ஏற்படக்கூடிய துன்பங்கள், துயரங்கள்பற்றியெல்லாம் மென்மையான வகையில் - அதேநேரத்தில் கருத்தில் சமரசமின்றி செய்தால், வெற்றி நிச்சயம்!

எடுத்தவுடன் மறுப்போர்கூட, சிறிது நேரத்தில், நாம் சொன்ன முறையினால் ஈர்க்கப்பட்டு, சிந்தித்து, கொண்ட கருத்தை மாற்றிக் கொள்ள முயலுவார்கள் என்பது திண்ணம். பழகிய யானையாக இருப்பது நல்லது - பக்குவமான அணுகுமுறையும் அவசியம் ஆகும்.

- கி.வீரமணி

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...