Monday, October 28, 2013

சாமிகளின் பிறப்பும் இறப்பும்-14

மக்கள் சாமிகளும் மதச் சாமிகளும்
- ச. தமிழ்ச்செல்வன்
நாம் இதுவரை இரண்டுவிதமான சாமிகளைப் பற்றிப் பார்த்திருக்கிறோம். மக்களோடு வாழ்ந்து செத்துப்போனவர்களையே சாமியாகக் கும்பிடும் பழக்கத்தில் வந்த நாட்டுப்புறச் சாமிகள் அல்லது ஏழைச்சாமிகள் ஒருவகை.
இரண்டாவது வகை கற்பனையாக மனிதர்கள் உண்டாக்கிய புலால் மறுப்பு (சைவச் சாப்பாடு) போன்ற கருத்துகளை ஒட்டி உண்டாக்கப்பட்ட கற்பனைச் சாமிகள். அவற்றுக்கு மன்னர்களின் ஆதரவு இருந்ததால் அவை வசதியான சாமிகளாக _ பணக்காரச் சாமிகளாக மாறின. அவை பின்னர் மதங்களாக நிறுவன வசதியுடன் வளர்க்கப்பட்டன.
நம்ம ஏழைச்சாமிகளுக்கு மதம் கிடையாது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அது எப்படிச் சாமியாக உண்டானதோ அப்படியே அந்தந்த ஊர்களில் மக்களால் வழிபடப்பட்டு வந்தது.
மன்னர்கள் என்றால் யார் என்று நாம் முதலில் புரிந்துகொண்டால்தான் அவர்கள் ஏன் மதங்களுக்குப் பின்னால் நின்று ஆதரித்தார்கள் என்பது புரியும். மன்னன் என்பவன் நம்மைப் போல சாதாரண ஆள்தான். அவன் வேலை என்ன? நாட்டை ஆள்வது மன்னனின் வேலை என்று நமக்குச் சொல்லித் தரப்பட்டுள்ளது. அது எப்படி அவன் மட்டும் பெரிய இவனா? மக்களையெல்லாம் ஆள்வதற்கு அவனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
ஆதிகாலத்தில் நாமெல்லாம் குரங்குகளாக இருந்தபோது மன்னன் கிடையாது. இனக்குழுக்களாக வேட்டையாடித் திரிந்த அடுத்த கட்டத்திலும் மன்னன் கிடையாது. எல்லோரும் எந்த மரத்திலும் பழம் பிடுங்கிச் சாப்பிடலாம். எந்த விலங்கையும் வேட்டையாடலாம். காட்டில் எதை வேண்டுமானாலும் தோண்டிச் சாப்பிடலாம் என்ற நிலைதானே அப்போது இருந்தது. அதில் ஒருவன் வந்து, இந்த மரம் என் மரம், இதை யாரும் தொடக்கூடாது.
தொட்டால் அடிப்பேன் என்று அடியாள் வைத்து தகராறு பண்ணினான். அவனுக்குப் பயந்து, சரி சரி உன் மரம்தான் நாங்க தொடவில்லை, விடு சாமி என்று ஒதுங்கிக் கொண்டார்கள். நாள் ஆக ஆக காட்டு மரங்களெல்லாம் என்னுடையது என்று சொல்ல ஆரம்பித்துவிட்டான். அடியாட்கள் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினான்.
காட்டைத் திருத்தி நான் சொல்றபடி யாரெல்லாம் எனக்காக விவசாயம் செய்கிறீர்களோ அவர்களுக்கு நான் சாப்பிடத் தருவேன் என்று ஆரம்பித்தான். இப்படி அநியாயத்துக்கு அடியாள் வைத்து பொதுச் சொத்தைத் தனிச் சொத்தாக மாற்றிய ரவுடிகள்தான் மன்னன் என்ற பேர் பெற்று உலகின் பல பாகங்களிலும் உருவானார்கள்.
சும்மா கிடந்த காடுகளையெல்லாம் அடியாள் வைத்து வளைத்துப் போட்டாலும் உழுது பயிரிட்டு செல்வமாகக் குவிக்க உழைப்பாளிகள் வேண்டுமே? ஆகவே மன்னர்கள் குதிரைப்படையை அனுப்பி காடுமலைகளில் எங்கெல்லாம் மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் போய் மக்களை இழுத்து வந்து மன்னனுடைய வயல்வெளிகளில் உழச்சொல்லிக் கட்டாயப்படுத்தினார்கள்.
அப்படி இழுத்து வரப்பட்ட மக்கள் அடிக்குப் பயந்து மன்னனுக்காக உழுதாலும் அவர்கள் மனசெல்லாம் அவர்கள் விட்டு வந்த ஊர் நினைப்பிலும் ஊரில் விட்டு வந்த அவர்களது சாமிகள் நினைப்பிலுமே இருந்தது.
யாதும் ஊரே யாவரும் கேளிர், அதாவது எல்லாம் உன் ஊர்தான் சும்மா அழும்பு பண்ணாம மன்னனுக்காக உழுங்கப்பா என்று பாட்டெல்லாம் கூட மன்னர்கள் புலவர்களை வைத்து எழுதிப் பாடிப் பார்த்தார்கள். உடல் மன்னருக்குக் கட்டுப்பட்டதாக இருந்தது. ஆனால் அவர்களின் மனசு பூராவும் ஊரில் விட்டு வந்த சாமிகளிடமே இருந்தது.
பார்த்தான் மன்னன். இது சரிப்பட்டு வராது. உடம்பு மனசு ரெண்டுமே நம்ம கண்ட்ரோலுக்கு வரணும், அப்பத்தான் மக்கள் எப்போதும் சீராக நமக்கு அடிமையாகக் கிடப்பார்கள். என்ன பண்ணலாம் என்று திட்டமிட்டான். அப்போது அவனுக்கு உதவிக்கு வந்தது மதம். எல்லோருக்கும் ஒரே சாமி ஒரே மதம் என்கிற நிலையை உருவாக்கினார்கள். ஆனால் மக்கள் ஏற்கவில்லை.
உங்க சாமி சிவபெருமான் எங்க சாமி சுடலைமாடனாச்சே. ரெண்டும் எப்படி ஒன்னாகும் என்று எதிர்க்கேள்வி போட்டார்கள். மதவாதிகள் அதற்கு ஒரு திட்டம் வகுத்தார்கள். ஏமாத்தணும்னு முடிவு பண்ணிட்டா அப்புறம் வழிகளுக்கா பஞ்சம்?
அம்சம், அவதாரம் என்கிற இரண்டு கருத்துகளை மதவாதிகள் உருவாக்கினார்கள். காளியாத்தா யாரு? அது பார்வதியோட அம்சம் என்றார்கள். சுடலைமாடன் யாரு? அது சிவபெருமானோட இன்னொரு அவதாரம் என்றார்கள். இப்படியே நம்ம மக்கள் உண்டாக்கி வைத்திருந்த எல்லாச் சாமிகளையும் பணக்காரச் சாமிகளின் அம்சம், அவதாரம்தான் என்ற கதைகளைக் கட்டிவிட்டார்கள்.
அதை இதிகாசமாகப் புராணமாகக் கதையாக எழுதி ஊர் ஊராகப் போய் பாடிப் பரப்பவும் செய்தார்கள். கதாகாலட்சேபம், பாட்டுகள் மூலம் பிரச்சாரம் செய்து எல்லா மக்கள் தலையிலும் ராமாயணத்தை ஏற்றிவிட்டார்கள். படிக்காத மக்களுக்கும் கூட ராமாயணக் கதை அப்படித்தான் பரவியது.
மக்கள் உண்டாக்கிய சாமிகளுக்குப் பெரிய கோவிலோ கோபுரமோ உண்டா? கிடையாது, அவ்வளவு பெரிசாகக் கட்டுவதற்கு மக்களிடம் பணம் ஏது? ஆனால் மன்னர்கள் உண்டாக்கிய மதச் சாமிகளுக்கு மன்னர்கள் பெரிய பெரிய ஆலயங்கள், கோபுரங்கள் என்று கட்டினார்கள்.
ஒரு கோட்டை அழிக்காமல் சின்னக்கோடாக மாற்ற என்ன செய்ய வேண்டும்? அதற்குப் பக்கத்திலேயே ஒரு பெரிய கோட்டைப் போட வேண்டும். அதைத்தான் மன்னனும் மதவாதிகளும் செய்தார்கள். பெரிய பிரம்மாண்டமான கோபுரங்களுக்குக் கீழே நம்ம மக்களின் சாமிகள் அடங்கிப் போயின.
காலப்போக்கில் கோபுரச் சாமிகளைப் பெருந்தெய்வங்கள் என்றும், மக்கள் உண்டாக்கின சாமிகளைச் சிறு தெய்வங்கள் என்றும் சொல்லிச் சிறுமைப்படுத்தினார்கள். உண்மையில் மக்கள் உண்டாக்கிய சாமிகள் சிறு தெய்வங்களா? இல்லை. அவைதான் முதலில் உண்டான சாமிகள். நம் ஊர்களுக்கு முதலில் வந்த சாமிகள் சீனியர் சாமிகள். இந்த சிவபெருமான், கிருஷ்ணர், ராமர், விநாயகர் எல்லோருமே ஜூனியர் சாமிகள். பின்னால் வெளியிலிருந்து நம்ம ஊருக்குள் மன்னர்கள் உதவியோடு வந்து சேர்ந்தவர்கள்தான்.
ஆகவே அறிவியல் பூர்வமாக, வரலாற்றுப் பூர்வமாக சாமிகளைப் பற்றிக் கற்றுக் கொள்ளும் நாம் நாட்டுப்புறத் தெய்வங்களை சிறு தெய்வங்கள் என்று சொல்லவே கூடாது. அவற்றை மக்கள் படைத்த தெய்வங்கள் அல்லது மக்கள் தெய்வங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மற்ற சாமிகளை மன்னர் படைத்த சாமி அல்லது மதசாமி என்று சொல்லலாம்.
இரண்டு சாமிகளும் வேறு வேறுதான். அடிப்படையிலேயே வேறானவை. அவற்றைக் கயிறு போட்டுக் கட்டினாலும் ஒன்று சேராது.
அப்படி என்ன அடிப்படை வேறுபாடுகள்?
(தொடரும்)
//
Share

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...