Wednesday, July 3, 2013

கும்மிடிபூண்டி அழைக்கிறது வாரீர்!

தோழர்களே கடந்த ஆறு மாதங்களில் அடுக் கடுக்கான மாநாடுகள்! மாநாடுகள்!! ஆத்தூர், சிறீரங்கம், கோவை, செயங்கொண்டம், ராஜபாளையம், மதுக்கூர் அடுத்து கும்மிடிபூண்டி மாநாடு.
எந்த கால கட்டத்திலும் நமது இயக்கத்தில் மட்டுமல்ல. வேறு எந்த கட்சிகளும் இந்த அளவு மாநாடுகள் நடத்தியதும் இல்லை.
ஒவ்வொரு மாநாட்டிலும் நாம் நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் காலத்தின் கர்ஜனைக் குரல்கள்!
ஜாதி தீண்டாமை ஒழிப்பு சமூக நீதி
பாலியல் நீதி
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு மூடநம்பிக்கை ஒழிப்பு
இவற்றை மய்யப்படுத்தி மாநாடுகள் வெற்றி கரமாக நடந்தேறியுள்ளன.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - சேது சமுத்திரத்திட்டம் இவற்றை வலியுறுத்தி குமரியிலிருந்து ஒரு பிரச்சாரப் படையும், தென் காசி யிலிருந்து இன்னொரு பிரச்சாரப் படையும் முறையே செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் மதுரை நோக்கி வந்து கொண்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களிலும் பிரச்சார அலைகளை எழுப்பி ஜூலை 8ஆம் தேதி மதுரையில் சங்கமம் ஆக உள்ளன.
இந்தச் சங்கம விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் செய்ய இருக்கிறார்.
நாலாதிசைகளிலும் நமது பணிகளின் வீச்சு மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது - ஈர்த்துள்ளது.
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் 6ஆம் தேதி சென்னை மண்டல திராவிடர் கழக மாநாடு நடைபெற உள்ளது.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் இரவும் பகலுமாக நடந்து கொண்டுள்ளன. கழகத் தோழர்கள் பம்பரமாக பணியாற்றி வருகின்றனர், தேனீக்களாக பறந்து திரிந்து செயலாற்றி வருகின்றனர்.
வேறு எந்த மாநாட்டிலும் இல்லாத அளவுக்கு கும்மிடிப்பூண்டியைச் சுற்றியுள்ள 300 கிராமங்களுக்கு ஒலி பெருக்கி விளம்பரம் ஓகோ என்று நடந்து கொண்டிருக்கிறது. நமது கழகப் பேச்சாளர் மாங்காடு மணியரசனின் மணியோசை எங்கும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
கும்மிடிப்பூண்டியை பொறுத்தவரை இதுவரை கழக மாநாடுகள் நடந்ததில்லை. ஆனாலும் கும்மிடிப் பூண்டிக்கு என்று தனியாக ஒரு மாவட்டத்தை உருவாக்கும் அளவிற்குக் கழகத் தோழர்கள் (பெரும்பாலும் இளைஞர்கள்) நிறைந்து காணப்படு வதால், இதை ஒரு தனி மாவட்டமாகவே அறிவித்தார் நமது கழகத் தலைவர்.
அதன் அருமை நமக்கு இப்பொழுது தெரிகிறது. மாநாட்டுக்குப் பிறகு ஏராளமான இளைஞர்கள் இயக்கத்திற்குக் கிடைக்க இருக்கின்றனர்.
இந்தப் பகுதியில் மகளிர் அணி செழித்து நிற்கிறது கும்மிடிப்பூண்டி மண்டல மாநாடு மகளிர் அணி மாநாடா? என்று வியக்கும் அளவிற்கு பெண்கள் பெருந்திரளாக வருகை தர இருக்கின்றனர். கழகப் பொதுக்குழு உறுப்பினர் சகோதரி மேரி அக்சீலியா வின் களப்பணி பிரமிப்பை ஊட்டுகிறது.
மண்டலச் செயலாளர் மானமிகு வெ.ஞானசேகரன், ஆவடி மாவட்ட கழக செயலாளர் தென்னரசு ஆகியோர் முகாமிட்டு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
நமது கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இன்று கும்மிடிப்பூண்டி சென்று கழகத் தோழர்கள், பொறுப்பாளர்களைச் சந்தித்து செயல்பாடுகள் செதுக்கப்பட்டுள்ளன.
இருபது ஆண்டுகட்குமுன் இதே கும்மிடிப்பூண் டியில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் பேசினார்.
மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், தீக்குண்டம் இறங்குதல் முதலிய நிகழ்ச்சிகள் ஊரையே கலக்கின. அந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள் இயக்கத் தின் பக்கம் திரண்டனர்.
கும்மிடிப்பூண்டி மாவட்டத்தில் இளைஞர் சேனையை கட்டாயம் பார்க்கலாம். பேரணியில் அதன் எழுச்சியைக் கண்டு களிக்கலாம்.
சென்னை மண்டலம், காஞ்சி மண்டலம், வேலூர் மண்டலம், புதுச்சேரி கழகத் தோழர்கள் குடும்பம் குடும்ப மாகக் கூட உள்ளனர்.
தமிழ் நாட்டில் எங்கு மாநாடு நடந்தாலும் திண்டி வனம் மாவட்டக் கழக குடும்பத்தினர் தனி வாக னங்கள் மூலம் வந்து சேர்ந்து விடுவார்கள்.
அண்மைக் காலமாக இயக்கத்திற்கு இளைஞர் சேனை திரண்டு வந்து கொண்டிருக்கிறது.
இந்திய அளவில் மதவாதம் மிரட்டுகிறது என்றால், தமிழ்நாட்டிலோ அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு திராவிட இயக்கப் போர்வையில் நேர்மா றான செயல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.
ஆகஸ்டு ஒன்றாம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அரங்கேறுவதற்கு முன் நடைபெறும் மாநாடு கும் மிடிப்பூண்டி மாநாடு என்பதால் இந்த மாநாடு முக் கியத்துவம் பெறுகிறது. ஏதோ சென்னை மண்டல மாநாடு என்று அதனைக் குறுகலாகக் கருத வேண்டாம், கொள்கை வீச்சில் மிக முக்கியமான மாநாடு.
நாட்டு நடப்பு கண்ணோட்டத்தில் கவனிக்கப் படத்தக்க மாநாடாக அமையப் போகிறது.
காலையிலேயே மாநாடு, களை கட்டப்போகிறது. இந்தியாவில் பெண்கள் மதிக்கப்படுகிறார்களா?
மிதிக்கப்படுகிறார்களா? என்னும் அருமையான தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.
பேரணி உண்டு, தீர்மானங்கள் முக்கியமானவை. தமிழர் தலைவர் இருவேளைகளிலும் எழுச்சியுரை ஆற்ற இருக்கிறார்.
இதற்கு மேல் என்ன வேண்டும் தோழர்களே கும்மிடிப்பூண்டி கொள்கைப் பூண்டியாக மலரட்டும்.
ஜாதி - தீண்டாமை சழக்குக் குணங்கள் வேரறுந்து வீழட்டும்! சமூக நீதி புது சரிதம் படைக்கட்டும்!
காவிரி, முல்லைப் பெரியாறு, சேது சமுத்திரத் திட்டம், ஈழத்தமிழர் வாழ்வுரிமை என்கிற பேரிகைகள் முழக்கம் கேட்கட்டும்! கேட்கட்டும்!!
பாலியல் நீதி புதுவெள்ளம் பாய்ந்து வரட்டும்! வரட்டும்!!
எந்தவிதப் பிரதிபலனையும் எதிர்பாராமல் இலட்சியம் ஒன்றே உயிர் மூச்செனக் கொண்டு முழங்கும் கருஞ்சட்டைப்படை வேறு எங்குண்டு?
பெரியார் பிஞ்சு முதல் முதியோர் வரை தலைமுறை இடைவெளியின்றி போர்ச்சங்கு முழங்கும் பாசறை அழைக்கிறது.
தோழர்களே, குடும்பம் குடும்பமாக கும்மிடிப்பூண்டி வாரீர்! வாரீர்!!
கும்மிடிப்பூண்டி புது வரலாறு படைக்கட்டும்! படைக்கட்டும்!!
அது உங்கள் கைகளில்தான் இருக்கிறது சந்திப்போம் சனியன்று!
- மின்சாரம் -

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...