உத்தரகாண்ட் பேரழிவுக்குப் பின், புண்ணிய தலங்கள் - அவற்றின் மகாத்மியங்கள்பற்றிப் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அய்யப்பாடு ஏற்படுவது இயல்பே!
எந்தக் கோவில், கடவுள் மகாசக்தி வாய்ந்தவர்கள் - அங்கு சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்று நம்பிச் சென்றார்களோ, அந்தக் கடவுள்கள் தங்களைக் காப்பாற்ற வில்லை;
இயற்கைச் சீற்றத்தின் காரணமாக பல்லாயிரக் கணக்கான பக்தர்கள், குழந்தைகள், முதியவர்கள் சகிதமாகப் பரிதாபகரமாகத் துடிதுடித்து மாண்டனர் என்பதை - அவற்றைப் பார்த்த நிலையில், எப்படித்தான் எடுத்துக் கொள்வார்கள்?
இதற்குப் பெரியதோர் ஆய்வுகள் தேவைப்படாது - பிரத்தியட்சமாக நேரில்பார்த்து வந்துள்ளனர்;
தப்பித்தோம், பிழைத்தோம் என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்துள்ளனர்.
இராணுவம் என்ற ஒன்று இல்லாவிட்டால், லட்சக் கணக்காக அவ்விடங்களுக்குச் சென்றிருந்த அத்தனை மக்களும் வெள்ளத்தால் அடித்துக்கொண்டு செல்லப்பட்டு இருப்பார்கள்.
அங்கு சென்று பாதிப்புக்கு ஆளான மக்கள் மட்டுமல்லர், இந்தச் செய்திகளை ஏடுகளில் படித்தவர்கள், தொலைக் காட்சிகளில் பார்த்தவர்களும் என்னதான் நினைப்பார்கள்?
கடவுள் சக்தி என்பதெல்லாம் சுத்தப் புரட்டு; கருப்புச் சட்டைக்காரர்கள் சொல்லுவதில் அர்த்தம் இருக்கிறது என்றுதானே சாதாரணமாகவே நினைப்பார்கள்.
அந்த நிலை ஏற்பட்டுவிட்டால் கடவுள் சக்தியின்மீது நம்பிக்கை இழக்கப்பட்டால் தங்களின் ஜாதி ஆதிக் கத்துக்கும், புரோகிதச் சுரண்டலுக்கும் ஆபத்து வந்துவிடுமே என்ற அச்சம் உலுக்க உலுக்க ஏடுகள் நடத்தும் பார்ப்பனர்கள் எவ்வளவு பம்மாத்தாக, நயவஞ்சகமாக எழுதுகிறார்கள் - செய்திகளை வெளியிடுகிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.
கேதார்நாத் அழைக்கிறது எனும் தலைப்பில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு, நிதி திரட்டும் வேலையில் இறங்கி இருக்கும் தினமணி (2.7.2013, பக்கம் 1) எப்படி செய்தியை வெளியிடுகிறது?
கேதார்நாத் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு பகுதியாகவோ, ஒரு குறிப்பிட்ட மதத்தின் புனிதத் தலமாகவோ மட்டும் இருக்கவில்லை. சபரிமலை, வேளாங்கண்ணி போன்று அனைத்து மக்களுக்கும், அனைத்துப் பகுதியினருக்கும் நம்பிக்கையூட்டும் ஒரு புகலிடம் அது - இன்னும் சொல்வதாக இருந்தால், அது இந்தியாவின் பாரம்பரியச் சின்னம்! கலாச்சாரத்தின் அடையாளம்! என்று தினமணி எவ்வளவுத் தளுக்காக எழுதுகிறது பார்த்தீர்களா?
அது என்ன அனைத்து மதத்தினருக்கும் புகலிடம்? அந்தப் புகலிடம் பாதுகாப்பானதாக இல்லையே!
கடவுளை மய்யப்படுத்தும் அந்தப் புகலிடம் அனைத்து மதப் பக்தர்களின் உயிருக்குப் பாதுகாப்பாக இல்லையே! இதை ஒப்புக் கொள்வதற்கு, எழுதுவதற்கு என்ன தயக்கம்?
இது அறிவு நாணயமற்ற தன்மை என்பதைத் தவிர வேறு என்னவாம்? அடுத்து தினமணி எழுதுகிறது? இந்தியா வின் பாரம்பரியச் சின்னம் - கலாச்சாரத்தின் அடை யாளமாம்.
இதற்கு ஏதாவது அர்த்தம் புரிகிறதா? வெறும் வார்த்தைக் குப்பைகள் அல்லாமல் வேறு என்னவாம்?
இந்தியா என்பது எப்பொழுது வந்தது? இந்தியாவுக்கு என்று தனித்த கலாச்சாரம் என்ன? பல இனம், பல மொழி, பல பண்பாடு, பல மதங்கள், மதமற்ற தன்மைகள் என்று பிளவுபட்டுக் கிடக்கும்போது, எங்கிருந்து வந்தது கலாச்சார சின்னம்?
பாவம், உத்தரகாண்ட் இயற்கைச் சீரழிவு பார்ப்பனர் களைப் பெரிய அளவுக்குத் தாக்கி இருக்கிறது. அதனுடைய உளறல், உதறல்களாகவே இந்த எழுத்துக்கள் அமைந்துள்ளன.
தமிழர்களின் முதலீட்டில் புதிய தலைமுறை என்ற இதழ் - ஆசிரியரோ அவாள்! கடவுளைக் காப்பாற்றித் தீர வேண்டுமே எழுதுகிறார்கள் பாருங்கள் (நாள்: 4.7.2013, பக்கம் 4).
இயற்கை என்பது கடவுளின் கைவண்ணம்; தொழில் நுட்பம் என்பது மனிதனின் குழந்தை. கடவுளுக்கும், மனிதனுக்கும் இருக்கும் வித்தியாசமே இதுதான் என எழுதிக் கொண்டிருந்ததை முதுகுக்குப் பின்னிருந்து படித்துக் கொண்டிருந்த சகா உருக்குலைந்து கிடக்கும் உத்தரகாண்ட் படங்களைப் பார்த்த பின்பும்கூட இப்படிச் சொல்வீர்களா? என்றார். நான் புன்னகைத்தேன்.
இப்போதும் கடவுள் மனிதனைக் கடிந்துகொண்டி ருக்கிறார். ஆனால், கைவிட்டுவிடவில்லை என்று சொல்வேன் என்றேன்.
என்ன எழுதுகிறார்? கடவுள் மனிதனைக் கண்டிக் கிறாராம். அப்படி என்றால், அவர் கண்டிப்பு தம்மை நாடி வந்த பல்லாயிரக்கணக்கான மக்களை துடிதுடிக்க அதிர்ச்சியூட்டி சாகடிப்பதுதானா?
கடவுள் யாரைக் கண்டிக்கிறார் என்பதைவிட, தண்டிக்கிறார் - அப்பாவி பக்தர்களை - இது எந்த வகை நியாயம்?
இயற்கையை அழித்தவர்கள் எங்கோ இருக்கிறார்கள்? அவர்களுக்காக பக்தர்கள் பழிவாங்கப்படவேண்டுமா?
பழி ஓரிடம்; பாவம் மற்றோரிடம் என்பார்களே! அது இவர்களின் கடவுளுக்கும் பொருந்துமோ!
கடவுளைக் காப்பாற்றப் போய், கழிவிரக்கம் அற்ற மனிதர்கள் பார்ப்பனர்கள் என்பதை மற்றொரு முறை நிரூபித்துக்கொண்டு விட்டனர்.
No comments:
Post a Comment