Thursday, July 25, 2013

மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ? - காற்றுதான் சிலரை நீக்கி வீசுமோ?

தந்தை பெரியார் அவர்களைத் தரணிக்கு தந்த ஈரோடு பெரு நகரத்தில், இரண்டு அற்புத இன்றைய இருபால் இணையர்களை மருத்துவமனைக்கு சென்று கண்டு, மகிழ்ந்தேன் - சில ஆண்டுகளுக்கு முன் - அவரது பெரியார் பற்று - அதைவிட ஆழமான அவரது நன்றிப் பெருக்கு, நானிலமே போற்றிப் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று அல்லவா!
அதற்குரிய சான்றுதான் இந்தக் கடிதம்!
ஈரோடு - 18.07.2013 வியாழன் அன்று பிரபல எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் பி.டி.சக்திவேல்-மகப்பேறு மருத்துவர் சவுந்திரம் சக்திவேல் இணையரின் மகன் பிரதீப்குமார் அவர்களுக்கு இந்த ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.

சமஸ்கிருதம் படித்தால்தான்  மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றி ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புக் கதவை நீதிக்கட்சி ஆட்சி மருத்துவப் படிப்பிற்குத் திறந்தது. அதற்கும் தந்தை பெரியார்தான் காரணம், அதனைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டிற்காக போராடி, இட ஒதுக்கீடு பெற்றுத்தந்ததும் தந்தை பெரியார்தான்; இன்றுவரை தந்தைபெரியாரின் இயக்கமான திராவிடர் கழகம் சமூக நீதிக்காக பல்வேறு களங்களைக்கண்டு மாபெரும் வெற்றிகளைத் தமிழ்ச் சமுதாய ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்களின்  பணி அளப்பரியது.தந்தை பெரியார், விடுதலை, ஆசிரியர் கி.வீரமணி இவர்களது உழைப்பால் இடஒதுக்கீடு (கல்வி,வேலை வாய்ப்பு) தமிழ் நாட்டிலும்,மண்டல்கமிசன் மூலம் இந்தியா வெங்கும் சிறப்பான முறையில் நடைமுறைக்கு வந்துள்ளது.

இட ஒதுக்கீட்டு முறையில்தான் நானும், எனது இணையர் சவுந்திரம் அவர்களும் மருத்துவர்களாக படித்து பயன்பெற்றோம்,அதனால் நாங்களும் இச்சமூகத்திற்குப் பயன்படுகிறோம். அந்த வகையில் எங்களது மகன் பிரதீப் குமாருக்குக் கோவை அரசு மருத்துவக்கல்லூரி யில் 2013-இந்த ஆண்டு இடஒதுக்கீடு அடிப் படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத் துள்ளது. எனவே வாழையடி வாழையாக தமிழ்ச் சமூகம் உயர்வதற்கு உழைத்துவரும் விடுதலை" வளர்ச்சிக்கு  நன்றியுடன்  ரூபாய் 10000/- (பத்தாயிரம்) வங்கிவரைவோலையாக வழங்கி மகிழ்கிறோம். நன்றி.
நன்றியுடன் மருத்துவர் பி.டி.சக்திவேல்  எம்.பி.பி.எஸ். எம்.எஸ்.ஆர்த்தோ,  ஈரோடு.
அறிவு ஆசான் கல்வி வள்ளலாக இருந்து பரிந் துரைக் கடிதங்களை நூற்றுக்கணக்கில் ஆயிரக் கணக்கில் கடந்த பல ஆண்டுகளாகத் தந்து - அவர்கள் வாழ்ந்த காலத்தில் கல்வியாண்டு துவக்கப் பருவத்தில் எழுதி, எழுதிக் கொடுப்பார்கள் - எங்களைப் போன்ற உதவியாளர்களுக்கு, அத்தகவலை உரியவர்களை நேரில் பார்த்து அய்யாவின் விருப்பத்தை அப்படியே எடுத்துக்கூறி, அதன் காரணமாக மருத்துவத்தில், பொறியியலில், கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் இடம் பெற்று, பட்டதாரிகள் ஆனவர்கள் பல்லாயிரவர் இருந் திருப்பார்கள்; இருக்கிறார்கள் இன்றும்கூட!
பயன் பெற்றோர் பலரும் தவறாது தமிழன் என்றொரு இனமுண்டு.
தனியே அவர்க்கொரு குணமுண்டு என்ற நாமக்கல் கவிஞரின் கருத்துக்கு ஏற்ப, நன்றி கூற மறந்தவர்களும், தவறியவர்களுமே அநேகர்!
அது தமிழனின் தனிக்குணம் போலும்!
நன்றி விசுவாசம் காட்டுவதும் நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு  என்பது தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு.
இதில்அத்தி பூத்ததுபோல், தவறாது நன்றி சொன்னவர்கள், செய்பவர்களும் இல்லாமல் இல்லை! நன்றி மறந்த இந்தப் பரந்த பாலைவனத்தில், அத்தகையவர்கள் ஒயாசிஸ் - சோலைகள் போன்றவர்கள் ஆவார்கள்!
அதற்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டுதான் மேலே காட்டிய டாக்டர் இணையர்களின் எடுத்துக் காட்டான கடிதமும், நன்கொடையும்!
தந்தை பெரியார் தந்த பரிந்துரைகளால் பயன் பெற்ற - இடம் கிடைக்கப் பெற்ற தோழர், தோழி யர்கள் விடுதலை நாளேட்டிற்கு ஒரு சந்தா கட்டி னால் இன்று பல லட்சம் பிரதிகள் சர்க்குலேஷன் ஆகிக் கொண்டிருக்குமே!
என்ன செய்வது! நம் இனத்தின் கூறுபாடு இது! அதற்காக நாம் நமது தொண்டறத்தை, மனிதநேய அடிப்படையிலான கல்விக்கண் பெற வைத்தல், உத்தி யோக மண்டலக் கதவுத் திறக்க உழைத்தல் போன்ற பணிகளை நிறுத்திவிட முடியுமா?
மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றுதான் சிலரை நீக்கி வீசுமோ?
நம் பணி என்றும் தொண்டறம் தானே!
நன்றி என்பது பயனடைந்தவர் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்க வேண்டிய ஒன்றல்ல; அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமே
- 1931இல் தந்தை பெரியார் அன்று குடிஅரசு ஏட்டில் எழுதிய வரிகள் இவை.
எனவேதான் இந்த நன்றி பாராத (Thankless Jobs) என்ற பயனுறு பணி செய்யும் பாதையான ஈரோட்டுப் பாதையில் என்றும் எப்போதும், எந் நிலையிலும் பயணிக்கிறோம்.
- கி.வீரமணி

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...