Wednesday, July 24, 2013

அமர்த்தியா சென்னின் கருத்து பேரலையாய் வீசும்!

பிரபல பொருளாதார அறிஞரும், அத்துறையில் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் - பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திர மோடி குறித்துத் தெரிவித்துள்ள கருத்து - இந்திய அளவில் பெரிய இமாலய அலையாய் வீசப் போகிறது என்பதில் அய்யமில்லை.
அவர் ஒன்றும் அரசியல்வாதியல்ல; எந்த அரசியல் கட்சியோடும் தொடர்புடையவரும் அல்லர்.
பிரதமருக்கான வேட்பாளர் மதச் சார்பற்றவராக இருக்கவேண்டும்; மோடியைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்களின் நலனையும், பாதுகாப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாதவர் என்று மய்யப் படுத்தித்தான் அவரின் குற்றச்சாற்று அமைந் துள்ளது.
இதே குற்றச்சாற்றைத்தான் பிரபல சிந்தனை யாளர் இராமச்சந்திர குகா, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ போன்ற வர்கள் வைத்திருக்கின்றனர். ஏன், அன்னா ஹசாரே கூட இந்த வகையில் வாய்த் திறந்துவிட்டாரே!
இதே குற்றச்சாற்றைத்தான் - பி.ஜே.பி.யின் கூட்டணியில் அங்கம் வகித்த அய்க்கிய ஜனதா தளத்தின் - குறிப்பாக அக்கட்சியின் சார்பாக பிகாரில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிதிஷ் குமாரும் முன்வைத்துள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மிக முக்கியமான கொள்கைகளில் முற்றிலும் மாறுபட்ட வர் எப்படிப் பிரதமராக வர முடியும் என்ற கேள்வி மோடியின் கழுத்தை மிகவும் நெருக்கிப் பிடித்து அழுத்திக் கொண்டிருக்கிறது.
இதே காரணத்திற்காகத்தான் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் செல்ல விசா மறுக்கப்பட்டது.
இதே காரணத்தைச் சொல்லிதான் அன்றைய பிரதமரும் - சொந்தக் கட்சியைச் சேர்ந்தவருமான அடல்பிகாரி வாஜ்பேயியும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாட்டுக்குச் செல்வேன்? என்று புலம்பினார்.
இவ்வளவுக்குப் பிறகும், அரசியல் நாகரிகத் துக்காகக்கூட தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள மோடி தயாராகவில்லை.
சிறுபான்மை மக்களை - குறிப்பாக முஸ்லிம் களைக் குறிப்பிடும்பொழுதெல்லாம் தம் வன்ம உணர்வை வெளிப்படுத்திடத் தவறுவதில்லை. அம்மக்கள் சார்ந்த இடத்தில், பரிவர்த்தனைக்காகக் குல்லாயைக் கொடுத்தபோதுகூட ஒரு நாகரிகத் துக்காகக்கூட சற்று நேரம்கூட அதனை அணிந்து கொள்ளத் தயாராக இல்லையே!
முஸ்லிம்கள்பற்றிக் குறிப்பிடும்பொழுது அவருக் குக் கிடைத்த உதாரணம் நாய்க்குட்டிதான்; ஏன் நாயைக் குறிப்பிடுகிறார் தெரியுமா? முசுலிம்கள் பொதுவாக நாய்களை வளர்க்கமாட்டார்கள் - எனவே, அதைச் சொல்லி வம்பு வளர்க்கும் அற்பப் புத்தி.
காங்கிரசைக் குறிப்பிடும்பொழுது மதச்சார் பின்மை என்னும் பர்தாவுக்குள் தன்னை மறைப்பதாக, அந்தப் பர்தா என்னும் முசுலிம் பெண்கள் அணியும் உடையைப் பயன்படுத்துகிறார்.
மதச்சார்பின்மை என்னும் போர்வை அல்லது முகமூடி என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம்; அப்படிச் சொன்னால், மோடியின் இந்துத்துவா வெறி ஆசுவாசம் கொள்ளாதே!
அவர் முதலமைச்சராக இருக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் ஒரே ஒரு முசுலிம்கூட வேட்பாளராக நிறுத்தப்படாததிலிருந்தே அந்த மனிதனின் கோர ரூபத்தை அடையாளம் காணலாமே!
சும்மாவா சொன்னார் - உச்சநீதிமன்ற நீதிபதி நீரோ மன்னன் என்று மோடியை?
120 கோடி மக்களைக் கொண்ட இந்தியா என்னும் துணைக் கண்டத்திற்குப் பிரதமராக வரக்கூடியவர் மதச் சார்பற்றவராக இருக்கவேண்டும் என்று இந் தியாவுக்குள் உள்ள மக்கள் மட்டுமல்லர்; இந்தியா வைத் தாண்டியுள்ள மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்தத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் கூடப் பெறத் தகுதியில்லாதவர் நரேந்திர மோடி என்பதால், தொடக்கத்தின் தேர்விலேயே இந்தியத் துணைக் கண்ட மக்களால் தள்ளுபடி செய்யப்படக் கூடிய வராகவே ஆகிவிட்டார்.
அதுவும், அமர்த்தியாசென் போன்றவர்கள் கூறிய பிறகு இந்தக் கருத்துப் பேருரு பெற்று - புதிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக்கொண்டு விடலாம்.

1 comment:

டிபிஆர்.ஜோசப் said...

உண்மைதான். ஆனால் பிஜேபி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால்தானே இதைப்பற்றி கவலைப்பட வேண்டும். மோடியை எப்போது முன்னிலைப்படுத்தினார்களோ அன்றே பிஜேபியின் தோல்வி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. தென்னிந்தியாவில் பிஜேபிக்கு எவ்வித செல்வாக்கும் இல்லை. கிழக்கே கொல்கொத்தாவில், மேற்கே மும்பையில், வடக்கே உத்தரபிரதேசத்தில், தில்லியில் என எங்குதான் பிஜேபிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் அளவுக்கு இடங்கள் கிடைக்கப் போகின்றன. பிஜேபி இப்போது ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் கூட இது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. மோடியின் அரசியல் வாழ்க்கை இத்துடன் அஸ்தமிக்கப்போகிறது என்பது உண்மை.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...