Wednesday, July 24, 2013

பசித்திரு - அறியத் துடித்திடு!

ஆப்பிள் கம்ப்யூட்டர் குழுமத்தை ஆலமரமாக வளர்த்தெடுத்த அதன் நிறுவனத் தலைவரான ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) அவர்கள் குறுகிய காலத்தில் புகழ் செல்வத்தையும், தொழிற் செல்வத்தையும் அடைந்து மறைந்தும், மறையாமல் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும் அவரது படைப்புகள், படையெடுப்புகளாக வெற்றி கரமாக சாம்ராஜ்யத்தை அமைத்துவிடும் அளவுக்கு உயர்ந்தார்!
அவர் அமெரிக்காவில் உள்ள பிரபல ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகப் (Stanford University) பட்டமளிப்பு விழாவில் குறிப்பிட்ட பட்டதாரிகளுக்கு வழங்கிய அறிவுரை - இரண்டு வாக்கியங்கள் - உலகம் முழுவதும் பிரபலமாகிப் பயன்படுத்தப்படும் வாசகங்களாக, பொன்மொழி களாக ஆகிவிட்டன!
‘‘Stay Hungry
Stay Foolish’’
‘‘என்றும் அறிவுப் பசியோடு இருங்கள்;
‘‘என்றும் அறியாமையைப் புரிந்து அறிந்து
(கற்று) கொள்ளும் நிலையிலேயே இருங்கள்!’’
இவ்விரண்டு வாக்கியங்களுக்குள், திருவள்ளு வரின் திருக்குறள்போல, ஆழமான முத்தான கருத்துக்கள் புதைந்துள்ளன - அல்லவா?
என்றும் பசியோடு இருப்பவன்தான் எப்போதும் உழைத்திட வேண்டும் என்ற உறுதியோடு அன்றாடம் தன் கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பான்.
பசியோடு இருப்பவன் என்றால் நலம் குன்றாத மனிதன் என்கிற பொருளிலும்கூட இதைப் புரிந்து கூறிய ஸ்டீவ் ஜாப்ஸ் எவ்வளவு பாராட்டுக்குரியவர்!
அவர் பசி என்பது உடல் உணவுக்காக அல்ல; உள்ளத்துப் பசி - அறிவுத்தாகம் கொண்டு அலை வது ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக் காட்டவே ஆகும்!
அறிவுக்கு எல்லை ஏது? மேலும் மேலும் பல்வேறு செய்திகளை நாம் அறிந்துகொண்டே  ஆர்வம் குன்றாத ஆர்வமாக அமைதல்தான் நம்மை பல்முனைகளிலும் உயர்த்திட உதவும்.
இன்றைய புதுமை - வியப்பு!
நாளை அதுவே பழைமை - சாதாரணமாகி விடுகிறது!
வள்ளலார் அவர்கள் பசித்திரு என்று ஒரு சொல்லில் கூறியதை அவரது பக்தர்கள் பலரும் வெறும் அன்னதானத்திற்கு மட்டுமே உரியது என்று ஒரு குறுகிய சிமிழுக்குள் அடைத்துவிட்டனர்!
பசித்திருத்தல் - எல்லாத் துறைகளிலும் தேவை!
எல்லா வயதினருக்கும் தேவை!
எல்லாக் காலங்களிலும் தேவை!!
அடுத்து, நம் அறியாமையை நாம் அறிந்தும் அறிந்துகொண்டும் வளரவேண்டும் என்று அவா வுறுதலும், ஆர்வங்கொண்டு அலைவதும்  அவசியம்; மனிதகுல முன்னேற்றத்திற்குரிய முக்கியத் தேவைகள் ஆகும்!
எனக்குத் தெரிந்ததெல்லாம் என் அறியாமை ஒன்றுதான் என்று மிகுந்த தன்னடக்கத்தின் உச்சியில் நின்று, தணியாத அறிவு வேட்கையைப் புலப்படுத்தினார்-
மனித குல மாணிக்கம் உண்மைத் தியாகி
கிரேக்கத்துச் சாக்ரட்டீஸ் அவர்கள்!
நமக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவமும்!
நான் என்ற அகம்பாவமும், நமது, நாங்கள் என்பதைக் கைவிட்டு - நான், எனது என்ற அகங்கார உச்சரிப்பும் வளர்ச்சியைத் தடுக்கும் உச்சகட்ட முட்டுக்கட்டை.
இதைத்தான் அறிவை விரிவு செய் - அகண்ட மாக்கு என்றார் புரட்சிக்கவிஞர்.
அறிதோறும் அறியாமை என்று வள்ளுவர் சொன்னார்.
புதிய பருவங்களில் புதிய சொற்றொடர்கள் புதையல்களாகக் கிடைக்கின்றன நமக்கு!
போற்றுவது முக்கியமல்ல!
பின்பற்றுவதே - அதிமுக்கியமானது - தேவையானது!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...