Tuesday, July 30, 2013

69 சதவீதத்தில் குளறுபடி நடந்தால் நாடு அமைதியாக இருக்காது! - கி. வீரமணி

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு 9ஆவது அட்டவணை பாதுகாப்புள்ளது
50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு செய்யலாம் என்று தீர்ப்பிலேயே உண்டு
உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல் தருவது கண்டிக்கத்தக்கது
69 சதவீதத்தில் குளறுபடி நடந்தால் நாடு அமைதியாக இருக்காது!
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு என்பது - இந்திய அரசமைப்புச் சட்டம் 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புப் பெற்றது.  ஏற்கெனவே 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு உள்ள மாநிலங்களில் அது தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தவறான தகவலைத் தந்து குழப்புவது குற்றமான செயலாகும். தமிழ்நாட்டில் 69 சதவீதத்தில் குளறுபடி நடந்தால், தமிழ்நாடு அமைதியாக இருக்காது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக 69 சதவீத இடஒதுக்கீடு (50+18+1 = 69) தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் (SC & ST) பிற்படுத்தப்பட்டவர்கள் (BC) மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (M.BC) என்று சமூக நீதி அடிப்படையில், அவர்களது மக்கள் தொகை விகிதச்சாரத்திற்கு மிகவும் குறைவாகவே கொடுக்கப்படுகிறது.
முன்னேறிய ஜாதியினர்  எத்தனை சதவீதம்?
முன்னேறிய ஜாதிக்காரர்கள் (Forward Communities) என்பவர்கள் மொத்தத் தொகை மிகவும் தாராளமாகவே கணக்கிட்டால்கூட, 10  சதவிகிதத்திற்கு மேல் தமிழ்நாட்டில் கிடையாது.
மண்டல் கமிஷன் பரிந்துரை என்பது (1980-க்கு முந்தைய கணக்குப்படியேகூட) பிற்படுத்தப்பட்டவர்கள் 52 சதவிகிதம்; வடநாட்டில் மற்ற க்ஷத்திரிய, வைசியப் பிரிவுகள் உண்டு; தெற்கே அது கிடையாது என்பது உயர்நீதிமன்ற தீர்ப்புகளாகும்.
இத்துடன்  சமூகநீதி பெற வேண்டிய 23 சதவிகித  தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், இஸ்லாமிய, கிறிஸ்துவர் சிறுபான்மையினர் சேர்ந்தால் 85 முதல் 90 விழுக்காடு ஆகிவிடும்!
திராவிடர் கழகத்தின்  அரிய முயற்சியால்...
இந்நிலையில் பெரியாரின் சமூகநீதிப் பூமியாகிய இத்தமிழ்நாடு - திராவிடர் கழகத்தின் தனிப்  பெரும் அரிய பெரிய முயற்சியால் - 69 சதவிகித இடஒதுக்கீடு, இந்திய அரசின் சட்டத்தின் 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் உள்ளது. (இதன் கீழ் உள்ள 69 விழுக்காடு தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்காட அனுமதிப்பதே எவ்வளவு தூரம் நியாயமானது என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்!)
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக ஜஸ்டீஸ் கபாடியா அவர்கள் இருந்தபோது  இறுதித் தீர்ப்பு வந்து விட்ட பிறகும்கூட, இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புக் காட்டும் ஒரு தமிழ்நாட்டுப் பார்ப்பனரின் முகமூடி அமைப்பும், அதன் முக்கிய வல்லடி வழக்குரைஞரும் மறுஆய்வு மனு போட்டு; அதுவும் தள்ளப்பட்டு விட்டது.
என்றாலும் ஏதாவது அட்மிஷன் சீசனில் - இடம் கிடைக்காத, சிலரைப் பிடித்து வழக்குப் போட்டு, கூடுதல் இடங்கள் பெற்றே வருகின்றனர்!
கூடுதல் இடங்கள் மூலம் அதிகமான பிள்ளைகளுக்கு - மாணவர்களுக்கு இடம் கிடைப்பது நமக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், கொள்கை அளவில் 69 சதவிகிதத்தை ஏற்காதது போன்ற ஒரு புறத்தோற்றம் உருவாக்கப்படுவது எவ்வகையில் நியாயம்?
நீதிமன்றத்தில் தவறான தகவலா?
நேற்று உச்சநீதிமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பொதுப் பிரிவுக்கு உருவாக்கச் சொல்லி, ஆணையிட்டுள்ள நீதிபதிகள் விசாரித்தபோது, மனுதாரர்களுக்காக வாதாடிய வழக்குரைஞர் ஒரு தவறான தகவலை நீதிமன்றத்தில் கூறியுள்ளார். (பொதுப் பிரிவு முன்னேறிய ஜாதிக்காரர்களுக்கு மட்டுமல்ல)
மண்டல் கமிஷன் அறிக்கையில் மண்டலேகூட, 50 விழுக்காட்டுக்கு  மேல் இடஒதுக்கீடு கூடாது என்று கூறியுள்ளார்; அதை மீறி தமிழ்நாட்டில் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு உள்ளது என்று கூறியுள்ளார்!
இது மிகவும் தவறான தகவல்!
உச்சநீதிமன்றத்திற்குத் தவறான சட்ட நிலையை எடுத்துக் கூறுவது சரியானதுதானா?
ஏற்கெனவே சில தீர்ப்புகளில் உள்ள கருத்துக்கள் காரணமாக 52 சதவிகிதம் உள்ள பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 52 சதவிகித இடஒதுக்கீட்டுக்குப் பரிந்துரை செய்கிறோம்.
உச்சநீதிமன்றம் கூறியது என்ன?
ஆனால் உச்சநீதிமன்றத்தின் பழைய சில வழக்குகள் தீர்ப்பின்படி (அதுகூட மூலத் தீர்ப்பு அல்ல (Obiter dictum) 50க்கு மேல் போகக் கூடாது என்று கூறப்பட்டதால், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குத் தரப்பட்டுள்ள (15+75 = 22.5) சதவீதம் - அதாவது 23 விழுக்காட்டினை அப்படியே அவர்களுக்கு பாதகம் ஏற்படாமல் பாதுகாத்து 50இல், 23அய் கழித்து மீதி 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பரிந்துரை செய்கிறோம் என்று கூறியுள்ளதோடு, அதே சமயத்தில் எந்தெந்த மாநிலங்களில் ஏற்கெனவே பல ஆண்டுகளாக 50 சதவிகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு அமலில் உள்ளதோ, அது அப்படியே பின்பற்றப்படல் வேண்டும் என்று மண்டல் கமிஷன் பரிந்துரை கூறியுள்ளது.
இதை மறைக்கலாமா? வாதத்தில் இந்த சமூகநீதிக்கு எதிரான வழக்காடிகள்?
அது மட்டுமல்ல. மண்டல் ஆணையம் சம்பந்தமான இந்திரா சகானி வழக்கில் தீர்ப்புக் கொடுத்த நீதிபதிகள், 50 விழுக்காட்டிற்குமேல் இடஒதுக்கீடுக்கு தரும் மாநிலங்கள் அதற்குரிய தேவை ஏற்படின் அந்த மாநிலங்கள் தாராளமாக இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேல் தொடரலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறதே! அதை அந்த வழக்குரைஞர்கள் அறிய மாட்டார்களா? அறிந்தவர்களாக இருப்பின் இதை ஏனோ வசதியாக மறைக்க வேண்டும்?
சுதந்திரத்திற்கு நாம் தரும் விலை எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பதுதான் என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி!
69 சதவீதத்திற்கு ஊறு ஏற்பட்டால்...
நம் நாட்டில் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல; சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் நாம் தரும் விலை எப்போதும் நம் கண்களை அகல விரித்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருப்பதுதான் போலும்!
69 சதவிகிதத்தில் ஏதாவது குளறுபடி நடந்தால் நாடு அமைதியாக இருக்காது; இதை இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் உணரட்டும்!
கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்
சென்னை  
30.7.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...