Monday, April 29, 2013

இப்படித்தான் கோயில்கள் தோன்றினவோ!


மனைவி செண்பகவள்ளியின் சிலைக்கு தீபாராதணை காட்டும் சுப்பையா
இப்படித்தான் கோயில்கள் தோன்றினவோ!  புதுக்கோட்டை நகரப்பகுதிக்குள் இருக்கும் உசிலங்குளம் ஏழாம் வீதியில் உள்ளவர்  சுப்பையா. இவர்  தொலைபேசித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . இவர்  தன் மனைவிக்குக் கோயில் கட்டி அதில் மனைவியின் சிலையை நிறுவி மற்ற கோயில்களில் நடக்கும் ஆகம விதிப்படி இங்கும் பூசைமுறைகளைக் கையாண்டு மனைவியை வணங்கி வருகிறார் .
இது குறித்து சுப்பையாவிடம் கேட்டபோது என் அப்பா மன்னர்  காலத்தில் கையெழுத்துப் போடத் தெரிந்த காரணத்தால் அப்போதே காவல் துறையில் வேலையில் சேர்ந்து விட்டார் . 1958-ஆம் ஆண்டு ஓய்வு பெற்று விட்டார் . நான் பிறந்தது 1.7.1935இ-ல். என் மனைவி செண்பக வள்ளி பிறந்தது 23.3.1943. அவர்  எனக்கு தாய்மாமன் பொண்ணு. ஏழெட்டு வயதாக இருக்கும்போதே என் வீட்டுக்கு அடிக்கடி வருவாள். அந்தப் பழக்கமானது வாலிபப் பருவத்திலும் தொடர்ந்ததால் எனது 21-ஆவது வயதில் இருவருக்கும் பெற்றோர்  திருமணம் செய்து வைத்தார்கள். அப்போது நான் தொலைபேசித்துறையில் பணி புரிந்து வந்தேன். எங்களுக்கு ஆண் குழந்தைகள் 5 பெண்குழந்தைகள் 5-என பத்துக் குழந்தைகள் பிறந்தனர் . அவர்களில் ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் இறந்து விட, இருப்பது எட்டுப்பேர் . அனைவருக்கும் திரு மணம் ஆகி விட்டது. அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். மக்கள் மருமக்கள் அனைவரும் அர சுப் பணிகளிலும் தொழில்துறை களிலும் இருக்கிறார்கள்.
எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்போம். ஒருநாள்கூட ஒருவர்  மீது ஒருவர கோபப்பட்டது கிடையாது. கடந்த 7.9.2006இ-ல் என் மனைவி செண்பகவள்ளி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார் . அவரது பிரிவு என்னை மிகவும் பாதித்து விட்டது. இந்நிலையில் அவருக்கு ஒரு கோயில் கட்ட நினைத்து மகன்களிடம் சொன்ன போது யாரும் ஒத்துக் கொள்ள வில்லை. மகள்கள் மட்டும் ஒத்துக் கொண்டார்கள்.
அதன்படி என்மனைவியின் போட்டோவைக் கொடுத்து சிலை செய்யச் சொன்னேன். கிட்டத்தட்ட முக்கால்வாசி அவருடைய உரு வத்தை ஒத்து வந்தது. ரூபாய் 2-லட்சம் செலவில் அய்ம்பொன் சிலை கும்பகோணத்தில் செய்யப் பட்டது. திறப்பு விழாவிற்கு மகன்கள் நான்கு பேருமே வர மறுத்து விட்டார்கள். மகள்களும் மருமகன்களும் மட்டும் வந்தாரகள். திறப்பு விழா செய்தேன். இன்றுவரை தினமும் வழிபட்டு வருகிறேன். எனக்கு தெய்வமாய் இருந்து வழிகாட்டி வருகிறார்.
மகன்களுக்கு மட்டும் இந்தக் கோயில் கட்டுவதிலோ வழிபாடு நடத்துவதிலோ விருப்பமே இல்லை. அதனால் எந்தச் செலவுக்கும் பணம் தர மறுத்து விட்டார்கள். ஆனாலும் மகன்கள் பெயர்கள் எல்லாம் வருகிறமாதிரி கிரில் சன்னல்களும் கல்வெட்டுக்களும் வடிவமைத்து விட்டேன். பிற்காலத்தில் அவர்களது பெயர்களும் நிலைக்க வேண்டும் என்பதற்காக. எனது சொந்தப் பணத்தைப் போட்டுத்தான் சிலை வடித்தேன் கோயிலும் கட்டினேன். எல்லாமுமாக மூன்று லட்ச ரூபாய் செலவானது.
இப்போதும் தினமும் என் செண்பகவள்ளியை வணங்கி விட்டுத்தான் மற்ற பணிகளுக்குச் செல்வேன். சில நேரங்களில் ஆக மத்திற்காக பூசகரை வைத்து வழி பாடு நடத்துவேன். ஆண்டுக்கொரு முறை மகள்களும், மருமகன்களும் மட்டும் வந்து வணங்கிச் செல் வார்கள் என்றார்.
இந்தச் செயல்பாடுகளில் பல உண்மைகள் தெரிய  வரும். கோயில் என்றால் அது என்னவோ பெரிய சக்தி மாதிரி வெளியில் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையை நாம் உணர வேண்டும். மன்னருக்கு முடிந்ததால் மனைவிக்கு தாஜ்மகால் கட்டினார். இவருக்கு முடிந்ததால் மூன்று லட்சத்தில் கோயில் கட்டியிருக்கிறார்  என் பதைத் தவிர வேறொன்றுமில்லை. அதே போல் நான்கு புறமும் சுற்றி வருவதால் இயல்பாகவே ஆண் களுக்கு பக்தியில் நம்பிக்கை இல்லை. ஆனால் பெண்களுக்கு அதை விட்டால் வேறு வழியே இல்லை என்பதுபோலவும் அதே நேரத்தில் அவர்கள் அறிந்தது அவ்வளவுதான் என்கிற அளவில் பக்தியைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும் சுப்பையா மட்டும் மணியடித்துக் கொண்டிருந்தால் யாரும் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார்கள் என்பதால் ஆகம விதிப்படி என்று சொல்லி பூசகரை வரவழைத்து பூசைகள் செய்வது. அந்தக் கோயில் இல்லை என்றால் அவர் வேறு கோயிலுக்குச் சென்று மனைவியை நினைத்து உருகிக் கொண்டிருப்பார். மனநிலை பாதிக்கப் பட்டிருப்பார் என்பது தானே உண்மையாக இருக்க முடியும்.
அதேபோல் இன்றைக்கு உருவாக்கி வைத்திருக்கும் கிரில் கேட்டும் கல்வெட்டும்தான் நாளைய வரலாறு. இன்றைக்கு மகன்கள் வரவில்லை என்றபோதிலும் நாளை அவர்களது பிள்ளைகள் வரும் போது நம் பாட்டி என்று வணங்குவார்கள். அவர்களது பிள்ளைகள் வரும்போது முன்னோர் தெய்வமாக்கப்பட்டு விடுவார் செண்பகவள்ளி. இப்படித்தான் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வோர் இடத்திலும் கோயில்கள் உருவாகி இருக்கின்றனவே தவிர வேறொ ன்றுமில்லை. அந்தக் கோயில்களால் மட்டுமல்ல எந்தக் கோயிலாலும் ஊருக்கும் மக்களுக்கும் எதுவும் நடந்து விடப்போவதில்லை. ஒன்று மட்டும் நடக்கும் என்பது உண்மை.
அதாவது சிறிய கோயிலாக இருந்து பிரபலமானால் கோயில் பூசகருக்கு மட்டும் வருமானம். அதுவே பெரிய கோயிலாகி விட்டால் பார்ப்பன இனத்துக்கே வருமானம் தரும் கோயிலாக நம் துணையோடு மாற்றப்பட்டு விடும். அதில் பார்ப்பானின் பணமோ உடல் உழைப்போகூட இருக்காது. எனவே கோயில்களின் தன்மை அறிந்து ஒதுங்கிக் கொள்வது ஒன்றே நமக்கும் அடுத்த தலைமுறைக்கும் நல்லது.
- - புதுக்கோட்டையிலிருந்து கண்ணன்

1 comment:

Anonymous said...

அப்படியே காலப்போக்கில் ஒரு ஸ்தல புராணம் புனைந்து இவர் பார்வதியின் ஒரு வடிவம் என்று இணைத்து கடவுளாக்கி விடுவார்கள்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...