Monday, April 29, 2013

முதல் அமைச்சர் அவசரம் காட்ட வேண்டும்


தமிழ்நாடு சட்டப் பேரவையில் பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மான்யக் கோரிக்கைமீது கடந்த வெள்ளிக்கிழமையன்று (26.4.2013) இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்லிஸ்ட்) உறுப்பினர் ஏ. லாசர், அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு தொடர்பாக மிக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு முறையை அமலுக்குக் கொண்டு வர வேண்டும். தகுதித் தேர்வில் உயர் ஜாதியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் வெற்றி பெறுவதற்கு தனித்தனி மதிப்பெண்களை மத்திய அரசு தீர்மானித்துள்ளது; ஆந்திரத்தில்கூட ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகபட்ச இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளனர். முற்பட்ட மக்களுக்கு (உயர் ஜாதியினருக்கு) 60 சதவீத மதிப்பெண், பிற்படுத்தப் பட்டோருக்கு 50 சதவீத மதிப்பெண், தாழ்த்தப் பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு 40 சதவீத மதிப்பெண் என்று தனித் தனியே நிர்ணயிக்கப் பட்டுள்ளன.
ஆனால் தமிழ்நாட்டில் ஒரே தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் சாசன உரிமையான இடஒதுக்கீடு முற்றிலு மாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
சி.பி.எம் உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் எழுப்பியுள்ள இந்தப் பிரச்சினை மிகவும் முக்கிய மானது.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விரிவாக அறிக்கையினை விடுதலையில் (2.4.2013) வெளியிட்டுள்ளார்கள்.
இந்த அறிக்கைக்கு 24 நாட்களுக்குப் பிறகு சட்டப் பேரவையில் இந்தப் பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது. மாநில அரசு இந்த மிக முக்கியமான பிரச்சினையில் சரியான முடிவுக்கு வந்திருக்க வேண்டாமா?
சட்டமன்ற, உறுப்பினர் எழுப்பிய பிரச்சினைக்குக் கல்வி அமைச்சர், இதுகுறித்து முதலமைச்சர் பரிசீலித்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளதோடு, இன்னொரு கருத்தையும் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நடத்தப்படும் தேர்வு, ஒரு தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் அத்தனைப் பேரும் தேர்ச்சி பெற்றால் அத்தனைப் பேருக்கும் வேலை கொடுக்க முடியாது. வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர்கள் பணிய மர்த்தப்படுகின்றனர் என்று பதில் கூறியுள்ளார்.
கல்வி அமைச்சர் கூறிய பதிலைப் பார்க்கும்போது, குறிப்பிட்ட பிரச்சினை என்ன என்பதை அறியாமல் பதில் சொல்லியிருக்கிறார் என்றே கருத வேண்டி யுள்ளது.
குற்றச்சாற்று - தகுதித் தேர்வுக்குத் தாழ்த்தப் பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், உயர் ஜாதியினர் என்ற பிரிவுகளுக்குத் தனித்தனியே மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படாதது ஏன்?
சகட்டுமேனியாக உயர் ஜாதியினருக்கு என்ன மதிப்பெண்ணோ, அதே மதிப்பெண் 60 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நிர்ணயித்திருப்பது இடஒதுக்கீடு சட்டத்திற்கு விரோதமானதாயிற்றே என்பதுதான் குற்றச்சாற்று.
இதற்குக் கல்வி அமைச்சரின் பதில் என்ன என்பதுதான் பிரச்சினையே -  அதற்கு நேரிடையான பதில் சொல்லாமல், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது என்று குறுக்குச்சால் ஓட்டுகிறார்.
தனித்தனியே மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இன்னும் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருப்பார்களே, அந்த வாய்ப்பு இப்பொழுது பறிக்கப் பட்டுள்ளது என்பதுதான் முக்கிய குற்றச்சாற்று.
இன்னொரு பிரச்சினையையும் சி.பி.எம். சட்டமன்றக் குழுத் தலைவர் தோழர் சவுந்தரராசன் கூறியிருப்பதும் முக்கியமானதாகும்.
தகுதி மதிப்பெண்களில் நிர்ணயிக்கப்பட்டதற்கும், அதிக மதிப்பெண் ஒருவர் பெற்றால் அவரைப் பொதுப் பிரிவுக்குக் கொண்டு செல்ல வேண்டும்; அப்படி நடைமுறையில் கொண்டு செல்லப்படுவதில்லை என்று கூறியிருக்கும் குற்றச்சாற்று மிகவும் கடுமை யானது. இதனை அலட்சியப்படுத்தவும் கூடாது. சி.பி.எம். உறுப்பினர் கூறிய குற்றச்சாற்றின் பொருள் தெளிவானது. இடஒதுக்கீடு இத்தனை சதவிகிதம் என்று சட்டப்படி பெற்றிராத உயர் ஜாதியினருக்குத் திறந்த போட்டிக்குரிய 31 சதவீதம் ஒட்டு மொத்தமாகத் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
இது எவ்வளவுப் பெரிய கொடுமை!  சமூக அநீதி! முதல் அமைச்சர் விரைந்து இதற்கு நியாயமான தீர்வு காணாவிட்டால் கடும் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.
முதற்கட்டமாக மக்கள் மத்தியில் பெரும் அளவில் எடுத்துச் செல்லப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...