Sunday, April 28, 2013

நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!


ஜாதியை ஒழித்து இன ஒற்றுமை காத்தார் தந்தை பெரியார், ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்கலாமா?
இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!
தமிழர் தலைவரின் காலங் கருதிய அறிக்கை
அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் ஒற்றுமை மிகவும்  தேவை, ஜாதி தீயை மூட்டி இன ஒற்றுமையைக் குலைக்க வேண்டாம். இரு தரப்பினரையும் அழைத்து நல்லிணக்கத்தை உருவாக்கக் கழகம் தயார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சில மாதங் களுக்குமுன் தருமபுரியிலும், சில நாட்களுக்கு முன் மரக்காணம் பகுதியிலும் ஜாதியை வைத்து நடைபெற்று இருக்கிற கலவரங்கள், தீவைப்புகள், கொலைகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்து கின்றன.
தந்தை பெரியாரின் கோட்பாடு
ஜாதிகளால் பிளவுபட்ட தமிழர்கள் மத்தியில் முக்கால் நூற்றாண்டு காலம் அயராது பாடுபட்டு, தந்தை பெரியார் அவர்கள் ஜாதி மனப்பான்மையை அகற்றி தமிழர் என்ற ஓரினக் கோட்பாட்டை உருவாக்கினார்கள்.
பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் ஒழிந்திருப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் என்பது நாம் பெருமைப்படக் கூடிய ஒன்றாகும். இந்த நிலையில் அண்மைக் காலத்தில் இந்த நிலை மாற்றப்படுவதற்குக் காரணம் என்ன? தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள்  - ஒடுக்கப்பட்டவர்கள்!
வன்னியர், தேவர், நாடார் போன்ற மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற நிலைப்பாட்டுக்கு உரியவர்கள் அல்லர் என்றாலும், கல்வி உரிமை, உத்தியோக உரிமை மறுக்கப்பட்டு வந்த உடலுழைப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் இவர்களின் முன்னேற்றம்தான் சமுதாயத்தின் முன்னேற்றமாக இருக்க முடியும்.
இந்நிலையில் இவர்கள் ஒன்றுபட்டு நின்றால் தான், போராடினால்தான் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு சமூகத்தில் சுயமரியாதைக்கான தகுதிகள் கிடைக்க முடியும்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய சமூகப் புரட்சித் தலைவர்கள் இந்த அடிப்படையில்தான் கருத்துக்களைக் கூறி வந்துள்ளனர். பாடுபட்டும் வந்திருக்கிறார்கள்.
இதனை தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் உணர்ந்திட, உணர்ந்து நடந்திடத் தவறக் கூடாது.
ஏணிப்படி ஜாதிமுறை
வருணாசிரம அமைப்பு முறையில் ஏணிப்படி ஜாதி முறை (Graded Inequality) என்பதன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே அவ்வப்போது நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
தந்தை பெரியார் தெளிவாகவே மிக திட்டவட்டமாகவே பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது!  என்று சொன்னதை பார்ப்பனர் அல்லாதார், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக் களும், அவர்களை வழி நடத்த வேண்டிய பொறுப்புள்ள தலைவர்களும் உணர வேண்டியது மிகவும் அவசியமாகும்.
மாமல்லபுரத்தில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற சித்திரை முழு நிலவு இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் திரு. ச. இராமதாஸ் அவர்களும், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிலரின் உரைகளும், எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை, இவற்றைப் பேசியவர்கள் ஒலி நாடா மூலமாகவோ, வீடியோ மூலமாகவோ போட்டு மறுபடியும் கேட்டுப் பார்க்கட்டும்.
சமூக நல்லிணக்கத்தை வளர்க்கக் கூடிய உரைகளா அல்லது தீண்டத்தகாத மக்களாக ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பகைமை, வெறுப்பு உணர்வை தூண்டக் கூடியவைகளா என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கட்டும்.
18 சதவிகித இடஒதுக்கீட்டைக் குறை கூறுவதா?
ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்கள்மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை என்று இடை இடையே பேசிக் கொண்டே, ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 18 சதவீத இடஒதுக்கீட்டை சுட்டிக்காட்டி, அதன்மீது எதிர் விமர்சனம் செய்தது எந்த அடிப்படையில்?
விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களும், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களும் இணைந்து இருவரும் கைகோர்த்து பண்பாட்டுக் களத்தில் வலம் வந்தபோது அக மகிழ்ந்தோம்.
இன்று அந்த நிலை, சீர்குலைவு அடைந்தது நியாயம்தானா?
தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர்களுக் கிடையே ஜாதி மறுப்புத் திருமணம் நடைபெறுவது சமுதாயக் குற்றமா?
இன்னும் சொல்லப் போனால் தந்தை பெரியார் அவர்களின் பெயரை அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருக்கும் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு இது தெரிந்திருக்க வேண்டாமா?
அங்கொன்றும், இங்கொன்றுமாக காதல் திருமணத்தில் சில பிழைகள் நடந்திருந்தால்கூட அதனைச் சரி செய்ய முயல வேண்டுமே தவிர, அதனை ஒட்டு மொத்தமாக ஒரு சமுதாயத்திற்கு எதிரான பிரச்சாரமாகப் பெரிதுபடுத்தி, ஏதோ ஒரு தத்துவார்த்தம் போல திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்யலாமா?
இளைஞர்களைப் பெரும் திரளாகக் கூட்டி தாழ்த்தப்பட்டவர்கள்மீது வெறுப்புத் தீயை மூட்டும் பணி பொறுப்பானதுதானா?
தலைவர்கள் என்றால் யார்?
தலைவர்கள் என்றால் நெருக்கடியான ஒரு சூழலிலும் கூட பொறுமை காட்டி மக்களை ஆற்றுப்படுத்தி வழிகாட்ட வேண்டும். அதற்கு மாறாக எரியும் நெருப்பில், பெட்ரோலை ஊற்றும் வகையில் நடந்து கொள்ளலாமா?
பிரச்சினைக்கே சம்பந்தமில்லாத அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுவது அவர்கள் யாராக இருந்தாலும் நியாயம்தானா?
அவர்களின் வீடுகளும், கடைகளும் கொளுத் தப்படுவதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?
அருள்கூர்ந்து சமுதாயத்துக்கு வழிகாட்டும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.
அரசு என்ன செய்ய வேண்டும்?
தந்தை பெரியார் தமிழர்களை ஒன்று படுத்தினார் - சிலர் ஒன்றுபடுத்தப்பட்ட தமிழர் களை - பார்ப்பனீயத்தின் தொங்கு சதையாக மாறி மீண்டும் ஜாதி பிளவுக்குள் தள்ளுவது மன்னிக்கப் படக் கூடியதா?  ஜாதிக் கலவரம் போன்ற நிகழ்வுகள் நடை பெறும்போது அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது - அரசியல் ஆதாயம் என்ற தூண்டிலைப் போட்டுப் பார்க்க ஆசைப்படக் கூடாது.
இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; கடைசியாக ஒரு வேண்டுகோள்: தமிழ்நாட்டுத் தலைவர்கள், அமைப்புகள் கட்சிகளை மறந்து, ஜாதித் தீ எங்கு மூட்டப்பட்டாலும் அதனைக் கண்டிக்க, தடுத்து நிறுத்திட, நான் முந்தி, நீ முந்தி என்று முன்வர வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். யாரோ ஒரு பக்கத்துக்கு வக்காலத்து வாங்குவதாகக் யாரும் கருதக் கூடாது.
நல்லிணக்கத்தை உருவாக்கத் தயார்!
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை ஓங்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு! ஜாதி ஒழிந்த சமத்துவ - ஒப்புரவுச் சமுதாயம் மலர வேண்டும் என்பதற் காகவே பாடுபடக் கூடிய இயக்கம் திராவிடர் கழகம்.
தேவைப்பட்டால் இரு தரப்பினரையும் அழைத்து நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் என்றுமே தயாராக இருக்கிறது.
முன்பு தென் மாவட்டங்களில் ஜாதிக்கலவரம் மூண்டபோதுகூட இதே கருத்தைத்தான் முன் வைத்தோம் என்பதையும் தெரிவித்துக் கொள் கிறோம்.
ஒழியட்டும் ஜாதித் தீ!
ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை உணர்வு!
இனமானம் வளரட்டும் - ஜாதி அபிமானம் மடியட்டும்! வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
28.4.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...