Saturday, February 16, 2013

மேடைகள் பலவாயினும் ஒத்த குரல் கொடுத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம்!


கொலைகாரன் ராஜபக்சே தண்டனை பெற்றாக வேண்டும்
மேடைகள் பலவாயினும் ஒத்த குரல் கொடுத்து
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம்!
தமிழர் தலைவர் அறிக்கை ஜெனிவாவில் நடைபெற உள்ள அய்.நா. மனித உரிமைக் கூட்டத்தில் கொலைகாரன் ராஜபக்சேவுக்குத் தண்டனை கிடைத்தாக வேண்டும். இங்குள்ள தமிழர்களாகிய நமக்கு மேடைகள் பலவானாலும் ஒத்த குரல் கொடுத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறித்து, அந்நாட்டின் மண்ணின் மைந்தர்களான, அந்நாட்டு குடிமக்களான ஈழத்துச் சனங்களாகியவர்களுக்கு சாதாரண அடிப்படை மனித உரிமைகளைக்கூடப் பறித்து, அவர்களையெல்லாம், யுத்தக் குற்றவாளிகளைவிட மிக மிகக் கொடுமையான வகையில் நடத்தி வருகின்றது - அங்குள்ள சிங்களப் பேரினவாத இராஜபக்சே அரசு.
இதற்குமுன், உலகத்தின் பற்பல நாடுகளின் கண்களில் எல்லாம் மண்ணைத் தூவி தனது அரசு, பயங்கரவாதிகளை எதிர்க்கும் அரசே தவிர, அப்பாவி பொது சனத்தை குறி வைப்பதல்ல; அடுத்த ஒரு நல்ல அரசியல் தீர்வை நாங்கள் ஏற்படுத்துவோம் என்றுகூறி, அதை அப்படியே காற்றில் பறக்க விட்டதோடு, தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம்; தமிழ்ப் பெயர்கள் (பல நூற்றாண்டுகளாக) இருக்கும் ஊர்களையெல்லாம் சிங்களமயமாக்கி, பண்பாட்டுப் படையெடுப்பை மிகவும் தீவிரமாக நடத்தி, தமிழ் இனத்தின் அடையாளத் தினையே ஒட்டு மொத்தமாக அழித்திடும் நீண்ட கால இன அழிப்பு, இன ஒடுக்கல் கொள்கைகளையே அன்றாட நடைமுறையாக்கி வருகிறது!
பயங்கரவாதமா? சுதந்திரப் போரா?
முன்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப் பட்டதிலிருந்து, அமெரிக்காவோ வேறு பல நாடுகளோ எது பயங்கரவாதம், எது சுதந்திரப் போர் என்று பிரித்துப் பார்க்கும் தன்மையை இழந்துவிட்டனர்.
இந்திய அரசுக்கு ஏதோ ஒரு தனி அஜெண்டா; இலங்கை இராணுவத்திற்கு முக்கிய ஆயுத விநியோகம் முக்கிய கருவிகளைப் பயன்படுத்தப் பயிற்சி தந்து தீவிரவாதத்தினை தடுத்து நிறுத்துகிறோம் என்ற பிரச்சாரத்திற்குப் பலியானார்கள்!
அராஜக வழியில் படுகொலை!
இதன் விளைவு...? உலக நாடுகள் இன்று லேசாகக் கண் விழித்துப் பார்க்கும் நிலையில், அய்.நா. கூட மிரட்டப் பட்டு (இலங்கை அரசால்) அதன் கடமையிலிருந்து பின்வாங்கி, தமிழர்கள் பல்லாயிரம் பேர்களை பலியாக் கவும், 90 ஆயிரம் தமிழச்சிகள் விதவைகள் ஆன நிலைமை, பல்லாயிரவர் காணாமற் போனவர்களாகவும், சட்ட முறைகளுக்கு மாறான அராஜக வழியில் கொல் லப்பட்டனர்.
இவை எல்லாம் இப்போதுதான் மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக வெளிச்சத்திற்கு வருகின்றன!
ஜெனிவா, மனித உரிமை ஆணையம் அதன் பார்வையை விசாலப் பார்வையாக ஆக்கி வருவது, ஓரளவு நொந்த தமிழர்கள் உள்ளத்திற்குச் சற்று ஆறுதலைத் தருகிறது!
டெசோவின் பணியும் பயணமும்
டெசோ துவங்கி எவரது விமர்சனமும் காமாலைக் கண் பார்வையால் கனன்று விழும் வெட்டிப் பேச்சுகள் பற்றிக் கவலைப்படாமல், நம் கடன் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதே என்பதாக பணியாற்றி வருகிறோம்; சர்வதேசத்தவரின் பார்வைக்கு அநீதி, அக்கிரமங்களைக் கொண்டு செல்லும் பணியும், இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் பணியும் நமதுதொடர் பணிகளாக இருந்து வருகிறது!
நமது பொது எதிரி இராஜபக்சே, கோத்தபய இராஜ பக்சேக்களின் சிங்களப் பேரினவாத அரசே தவிர, இங் குள்ள விமர்சகர்களான அரசியல் ஏவுகணைகளான பரிதாபத் திற்குரியவர்கள் மீது அல்ல என்பதே, எமது அணுகுமுறை!
எல்லோரும் அங்கே தனித்தனிதான்
ஏகமனதாகி அவர் நம்மை எதிர்ப்பதெங்கே?
என்ற புளகாங்கிதத்துடன் நவீன ஹிட்லர் இராஜ பக்சே திருப்பதிக்கு வந்து செல்கிறான்!
தமிழர் உணர்வை மீட்டெடுப்போம்!
அடுத்த மாதம் (மார்ச்) ஜெனிவாவில் நடைபெறவிருக் கும் மனித உரிமை ஆணையத்தில் போர்க் குற்றவாளி யான இராஜபக்சேகளுக்குத் தக்க தண்டனை கிடைத் தாக வேண்டும்.
இங்கே, மேடைகள் பலவாயினும் குரல் ஒன்றே என்று தமிழர்கள் கட்சி, ஜாதி, மதம் இவைகளைத் தாண்டி ஓர் குரலில். ஈழத் தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு முழு மூச்சும் குடிசெய் வார்க்கில்லை பருவம் என்ற குறள்வழி பணியாற்றி எஞ்சிய எம் தமிழர் சனங்களைக் காப்பாற்றிடும் பணியும், தமிழர் மீதான பண்பாட்டுப்  படையெடுப்பினை முறியடித் திடும் வகையில் ஒத்த குரல் கொடுப்போம்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
16.2.2013

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...