Friday, February 15, 2013

குரைக்கும் குமுதம் ரிப்போர்ட்டரே, நிறுத்து, உன் ஊத்தை வாயை!


இந்த வார 'குமுதம்  ரிப்போர்ட்டர்' (21.2.2013) எனும் அக்கப் போர் இதழில்,

"கொந்தளிக்கும் குடும்ப உறவுகள்" என்று தலைப்பிட்டு கலைஞர் அருகில் குஷ்பு இருப்பதாக அட்டைப் படம் போட்டு "இன்னொரு மணியம்மை?"  என்றும் தலைப்பிட்டுள்ளது.


உள் பக்கத்தில் 3 பக்கங்களில் க(கா)ட்டுரை தீட்டப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளவைகளுக்கு தி.மு.க. - அதன் தோழர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அதே நேரத்தில் அன்னை மணியம்மையாரைக் கொச்சைப்படுத்தும் "குக்கல்கள்" மரியாதையாக மன்னிப்புக் கோர வேண்டும்.

வாழ்வின் வசந்தங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, தந்தை பெரியார் ஒருவரே இந்த இனத்தினைக் காக்கும் மீட்பர் - அவருக்குத் தொண்டு செய்து கிடப்பதே என் பணி என்று தம் வாழ்வை முற்றிலும் ஒப்படைத்த அன்னையைக் கேவலப்படுத்தும் கயமையை  "வேறு தொழில்!"  செய்ய வேண்டியவர்கள் பத்திரிகைத் தொழிலுக்கு வந்துவிட்ட காரணத்தால் கண் மூடித்தனமாக - கொச்சைப்படுத்தினால் அதனைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிஞ்சிற்றும் இல்லை.

பெரியார் திரைப்படத்தில் குஷ்பு அவர்கள் மணியம்மையாராக நடித்ததால், அவர் மணியம்மை ஆகிவிட மாட்டார் - நினைவில் இருக்கட்டும்!

அன்னை மணியம்மையாரை சட்டப்படிக்கான ஒரு நிலையாக திருமணம் என்ற பெயரில் இயக்கத்திற்கு ஓர் ஏற்பாட்டினைச் செய்தார் தந்தை பெரியார் என்பது நாடறிந்த உண்மை! அவரின் தந்தையாரும் திராவிடர் கழகத்தவர் - பெரியார் பெருந்தொண்டர் என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

தொடக்கத்தில் அம்மா பற்றி எதிர் விமர்சனம் செய்த அறிஞர் அண்ணாவே, பிற்காலத்தில் அந்தக் கருத்தினை மாற்றிக் கொண்டார்.

அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும் என்று அண்ணா அவர்களே சொன்ன வரலாறெல்லாம் இந்தக் "கத்துக்குட்டி"களுக்குத் தெரியுமா?

"என் காயலா சற்றுக் கடினமானதுதான். எளிதில் குணமாகாது. மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும்.  ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவைச் சிகிச்சை)  தேவையிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரியது என்றார் தந்தை பெரியார்.

(விடுதலை தந்தை பெரியார் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 17.9.1967).

அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழ வல்லோம்? - என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

இத்தகைய தொண்டின் தூயத் தாயை சம்பந்த மில்லாமல்  முடிச்சுப் போட்டு, மானமிகு கலைஞர் அவர்களின் குடும்பம் மற்றும் கழகத்தில் குழப்பம் ஏற் படுவதற்கு உவமானமாகக் கூறுவதைக் கழகத்தவர்கள் மட்டமல்ல;தன்மானத் தமிழர்களும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று எச்சரிக்கிறோம்.

நடிகைகளின் அந்தரங்க வாழ்வையெல்லாம் அலசி நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்ற ரீதியில் பத்திரிகை நடத்தவோர் யாரைப்பற்றி எழுதுகிறோம்? அவர்களின் உயர் பண்பு - பெற்றி என்னஎன்பதைப் பற்றியெல்லாம் கவனம் - கவலை கொள்ளாமல் நாய் விற்றக் காசு குரைக்காது என்ற தன்மையில் கீழ்த்தரத் தொழிலில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம். இதைவிட டபுள் எம்.ஏ. வேலை பார்க்கலாமே! ஊழலில் சிக்கி, தன்னைக் காப்பாற்றும்படி  முதல் அமைச்சர் கலைஞர் காலில் விழுந்து கண்ணீர் விட்டுக் கதறித் தப்பிய கதை எல்லாம் தெரியாதா?

தி.க. தலைவர் வீரமணி கருணாநிதியை வாழும் பெரியார்! என்று சொன்னதாக இந்தக் கழிசடை ஏடு எழுதுகிறதே!  இதற்கு ஆதாரம் காட்ட முடியுமா? எங்கே சொன்னார்? எப்பொழுது சொன்னார்? விரலை மடக்க முடியுமா?

பெரியார் ஒருவர்தான். ஆம்,  பெரியார் ஒரே ஒருவர்தான்! தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களும் அப்படி சொன்னதும் இல்லை. மானமிகு கலைஞர் அவர்களும் அதனை நம்புபவரும் அல்லர்.

பெரியார் இயக்கத்திற்குச் செய்த ஏற்பாடு மிகச் சரியானதுதான் - பெரியார் தொலை நோக்கோடு  செய்த ஏற்பாடு நூற்றுக்கு நூறு சரிதான் என்பதை, தந்தை பெரியார் அவர்களின் மறைவுக்குப் பிறகு கழகத்திற்கு, இயக்கத்திற்கு அறக்கட்டளைக்குத் தலைமையேற்று சிறப்பாகச் செயல்பட்டு நிரூபித்துக் காட்டியவர் அன்னை மணியம்மையார்.


தந்தை பெரியார் நலனைக் காப்பதிலும், அவர்களின் மறைவிற்குப்பின் கழகத்தைக் கட்டிக் காப்பதிலும் கருத்துச் செலுத்தி உழைத்த அன்னையார், தன் உடல் நலம் பேணாது, 59 வயதிலேயே தன் வாழ்வை முடித்துக் கொண்ட தியாகத் தலைவரை, தொண்டின் இலக் கணத்தை - வகை தொகை அறியாமல், வக்கிரப் புத்தி யோடு பொருத்தமற்ற இடத்தில் இணைத்து எழுதியது கண்டிக்கத்தக்கது.

அறிவு நாணயம் இருந்தால், பண்பாடுபற்றி அக்கறை இருந்தால் குமுதம் ரிப்போர்ட்டர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். கழகத் தோழர்களே அமைதி காப்பீர்களாக!

- மின்சாரம்

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...