Thursday, February 14, 2013

வெறித்தனம் வீழ்த்தப்படவேண்டும்!


காரைக்காலைச் சேர்ந்த - சென்னையில் பணி யாற்றிக் கொண்டிருந்த பொறியாளர் வினோதினி என்னும் பெண் ஒருதலைக் காதல் கொண்ட வெறியன் ஒருவனால் அமிலம் (ஆசிட்) வீசப்பட்டு மூன்று மாத மருத்துவ உதவிக்குப் பிறகு நேற்று மரணமடைந்தார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, தீவிர மான மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு மரணமடைந் தார் என்ற செய்தி நாட்டை உலுக்கி எடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதி களிலும் அது தொடர்கதையாகி விட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் அந்தக் கொடுமைகள் நடந்து வந்திருக்கின்றன. ஊடகங் களின் நேர்மையற்ற தன்மையால் பெரிய அளவுக்கு வெளிச்சத்திற்கு வரவில்லை.
காரைக்கால் வினோதினி நேற்று மரணமடைந் தார் என்ற தகவல் வெளிவந்த ஒரு சில மணி நேரத்தில், மயிலாடுதுறை பகுதியில் மாமன் மகளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட ஒருவன், அதற்கு அந்தப் பெண் இசையாத நிலையில், அவரைத் தீ வைத்துக் கொளுத்தி இருக்கிறான். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.
இது நாடா?  கொடிய விலங்குகள் திரியும் காடா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான மூல நோய் எது என்பது அறியப்படவேண்டும். நோய் நாடி நோய் முதல் நாடி தீர்வு காணப்படவேண்டும்.
பெண்கள் என்றால் மென்மையானவர்கள், பல கீனமானவர்கள் என்ற நிலையில் மாற்றம் தேவைப் படுகிறது. அதற்கான பயிற்சிகள் அவசியம் தேவை!
பாலுணர்வு என்பது இயற்கையானதுதான். அது ஒரு பசியாகவோ, தாகமாகவோ கூட இருக்கலாம்; இருக்கக்கூடும். அதுவே வெறியாகும்பொழுதுதான் இதுபோன்ற விபரீதங்கள் தலைதூக்கி நிற்கின்றன.
நம்முடைய கல்வி முறை, கலாச்சார சாதனங்கள், ஊடகங்கள் இந்தப் பிரச்சினைகளில் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
அறிவியல் ஒருபக்கம் வளர்வது சமுதாய வளர்ச் சிக்கு அவசியம் என்றாலும், அதுவே தவறாகப் பயன்படுத்தப்படும்பொழுது எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இணைய தளம் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் வெட்கித் தலைகுனிய வைக்கின்றன.
ஏடுகள், இதழ்கள் என்பனவற்றை எடுத்துக் கொண்டால், அட்டைப்படத்திலிருந்து உள்ளடக் கங்கள் வரை பெரும்பாலான இடத்தை சினிமா தொடர்பான சங்கதிகள்தான் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.
அட்டைப் படங்களே அரைகுறை ஆடைகளை உடைய ஒரு பெண் - அது பெரும்பாலும் நடிகை என்பது ஒரு முடிந்த முடிவாகி விட்டதோ என்று கருதவேண்டியுள்ளது. நடிகைகளின் அந்தரங்கங் களை அலசுவதுதான் ஊடகங்களின் முக்கிய பணியா? நாய் விற்ற காசு குரைக்காது என்ற எண்ணமா?
ஊடகங்களுக்கு ஏனிந்த வக்கிரப்புத்தி? சின்னத் திரைகளும், பெரிய திரைகளும் தத்தம் பங்குக்கு இவற்றில் சமுதாயத்திற்குப் பெரும்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.
கல்லூரிப் பேராசிரியைகளைக் கேலி செய்யும் மாணவர்கள், ஆசிரியைகளைக் காதலிக்கும் மாணவர்கள், இரட்டைப் பொருள் தரும் வசனங்கள், குத்துப்பாட்டு நடனங்கள் என்று புரை ஏறும் அளவுக்கு சமாச்சாரங்கள் அன்றாடம் நம்மைச்சுற்றி நடந்துகொண்டுதானிருக்கின்றன.
பொழுதுபோக்கும் அம்சங்கள் பொழுதையே முற்றிலும் போக்கும் - நாசப்படுத்தும் அம்சங்களாக மாறி இருப்பது கெட்ட வாய்ப்பாகும். சுற்றிச் சுற்றி எங்கு வந்தாலும் சந்திக்கக் கூடிய இடம் பாலியல் உணர்வுகள்தானா? இதைத்தவிர வாழ்க்கையில் வேறு முக்கிய அம்சங்களே கிடையாதா?
இந்தத் திசையில் சிந்தனைகள் வெடித்துக் கிளம்பவேண்டும். கல்லூரிகள் அளவிலாவது பாலியல் தொடர்பான கல்வி என்பது உலகம் முழு வதும் பேசப்படுகிறது - வேறு எந்த காலகட்டத்தை யும்விட இந்தக் காலகட்டத்தில் சிந்தித்துச் செயல் படுத்தப்படவேண்டியது காலத்தின் கட்டாயம் இது!
படிக்கும் வயதில் படிப்பு, விளையாட்டு, என்.சி.சி. போன்ற பயிற்சிகள் சமூகப் பணி என்று மாணவர்கள் சிந்தனை மேம்பட்ட நோக்கில் செலுத்தப்படு வதற்கான கல்வித் திட்டம்பற்றி கல்வியாளர்களும், ஆட்சியாளர்களும் சிந்திக்கட்டும், செயல்படட்டும்! பயிற்சிக்கான பருவமாக இருக்கவேண்டுமே தவிர, பாழ்படும் பருவமாக அது இருக்கக்கூடாது - கவனம்! கவனம்!!
பெற்றோர்களுக்கும் இதில் பொறுப்புண்டு!


.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...