Thursday, January 24, 2013

பா.ஜ.க.வின் கூடாரத்திற்குள்ளே குத்து-வெட்டு?


எங்கள் பாரதீய ஜனதா கட்சி முற்றிலும்  வித்தியாசமானதொரு கட்சி; மிகவும் தனித்தன்மை வாய்ந்த ஒன்று என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.
முன்பு வாஜ்பேயி அவர்கள் தலைமையில் 13 நாள்களே ஆட்சியிலிருந்து, தாமே, நம் பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு அஞ்சி கடைசி நேரத்தில் அவர் ராஜினாமா செய்து விட்டுச் சென்ற கட்சி இது!
அடுத்து மற்ற இந்திய மாநிலக் கட்சி களோடும் கூட்டுச் சேர்ந்து ஆட்சியைப் பிடித்து, ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த கட்சி!
அதன் பிறகு முந்தைய படிப்பினையை யொட்டி, சுமார் 23 கட்சிகளை இணைத்து, தேசிய ஜனநாயக முன்னணி (National Democratic Alliance-NDA) என்ற பெயரில் ஆட்சி செய்து, இதற்கு முந்தைய இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தலைமையில் உள்ள அய்க்கிய முற்போக்கு முன்னணியிடம் தோற்று, எதிர்க்கட்சியாக இருந்துவரும் கட்சியாகும்.
முதுமை, உடல்நிலை காரணமாக திரு. அடல்பிகாரி வாஜ்பேயி (வாஜ்பேயம் என்ற யாகப் பிரிவைச் செய்யும் உரிமை படைத்த உயர் பார்ப்பன வகுப்பினர் என்பதன் அடையாளமே வாஜ்பேயி என்ற ஜாதிப்பட்டம்).
அத்வானி, எப்படியும் பிரதமராக வேண்டுமென்ற கனவு நிறைவேறவில்லை - இனியும் வாய்ப்பு கிட்டுமா என்பது சந்தேகம்தான்!
மோடி தன்னை பிரதமர் பதவி ஈர்க்கும் என்ற பேராசையுடன் முனைகிறார்; இதற்கு அவர்களுடைய கூட்டணியிலும் எதிர்ப்பு உண்டு. பா.ஜ.க.,விலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்  ஆதரவு இல்லாத நிலை.
ஆர்.எஸ்.எஸ். தயவின்றி பா.ஜ.க. அரசியல் நடத்துவது இயலாத ஒன்றாகும்.
கட்கரியைக் கடைசி நேரத்தில் கவிழ்த்து விட்டது - பா.ஜ.க.வில் உள்ள அவரது ஆர்.எஸ்.எஸ். பிடியிலிருந்து தங்களை விடு வித்துக் கொள்ள முயன்ற அத்வானி அணி!
திடீரென்று உ.பி.யின் ராஜ்நாத் சிங்கிற்கே திடீர் யோகம் அடித்து, யானை கழுத்தில் போட்ட மாலை போல் அவருக்கு விழுந்தது!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு மகா எரிச்சல்! அதனை வைத்தியா என்ற மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் வெளியே கொட்டி யுள்ளார்!
குழப்பவாதிகள் கையில் பா.ஜ.க. சிக்கிவிட்டது என்று கூறியுள்ளார் அவர்!
அந்தக் குழப்பவாதிகள் பட்டியலில் யார் யாரோ? லால்கிஷன் அத்வானி, யஷ்வந்த் சின்கா, ராம்ஜெத்மலானி, சுஷ்மா சுவராஜ், அருண்  ஜெட்லி இவர்களா? வைத்தியாக்களுக்கே வெளிச்சம்!
காவிகளுக்கே புரியாத கோஷ்டிப் பூசல் உச்சக்கட்டத்தில். இதில் மோடி எந்தப் பக்கமோ!
கையில் இருந்த பா.ஜ.க. மாநில அரசு களோ, வெடிக்கும் பலூன்கள் போல, திடீர் திடீரென காணாமற் போகின்றன!
ஜார்க்கண்ட் மாநில அரசு காணோம் - தேர்தல்மூலம் இமாச்சலப் பிரதேச பா.ஜ.க. ஆட்சி தோல்வி!
கருநாடக அரசு இப்போது வெண்டி லேட்டர்மூலம் செயற்கை சுவாசம் தரப்பட்டு இழுத்துக் கிடக்கிறது!
கருநாடகப் பேரவைத் தலைவர் காணா மற்போய் இரண்டொரு நாள் அதைக் காப்பாற்றுகிறார்!
ராஜஸ்தானிலும் சிந்தியா மகராணி முன்னாள் முதல்வர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் கோஷ்டிச் சண்டை உச்சத்தில், நிலைமை இன்னும் மோசமாகி விட்டது; 2014 இல் பா.ஜ.க.வின் நிலை நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் பலவீனமாகிவிடக் கூடும் என்பதால்தான், எப்படியாவது நாடாளுமன் றத்திற்கு முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வர முடியாதா? என்று தவமாய் தவமிருக்கின்றனர் காவிக் கட்சியினர்!
காங்கிரஸ் கூர்ந்து கவனித்துக்கொண்டு, ராகுல்மூலம் முண்டாதட்டிப் பார்க்க களத்தில் இறங்கத் தயாராகிறது!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெறாத முக்கிய தலைவர்கள் எவருமே பா.ஜ.க.வில் இல்லை என்றாலும், ராஜ்நாத் சிங்கும் 13 வயதிலேயே அதில் சேர்ந்து ஷாகாவில் நின்றவர்தான் என்ற போதிலும்கூட, ஆர்.எஸ்.எஸ். திருப்தி அடையவில்லை போலும்; காரணம், அது யாரை நிறுத்தி, அல்ல கைகாட்டுகிறதோ அவர்தான் பா.ஜ.க. வின் தலைவராக, பிரதமராக, எந்த முக்கியப் பொறுப்பிற்கும் வர முடியும்.
முன்பு அமைந்த பா.ஜ.க. அமைச்சரவை களில்கூட, யாருக்கு எந்த இலாகா என்பதை ஆர்.எஸ்.எஸ். தான் தீர்மானிக்கும். ஆட்சி பா.ஜ.க.விடம் என்ற நிலையில்கூட, மூக் கணாங்கயிறு ஆர்.எஸ்.எஸ். கையில்தான் இருக்கும்! வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவர் கண்டிப் பாக இருந்தே தீரவேண்டும். ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்ற ஒருவர்தான் பி.ஜே.பி.யின் அகில இந்தியப் பொதுச்செயலாளராக வர முடியும் என்ற நிலை உண்டு.
அந்த நிலை மாறிவிடுமோ என்பதால், கூடாரம் - முன்பு கோட்டை இப்போது ஓட்டை - என்பதாக ஆகி நிற்கும் நிலை!
இதனால்தானே பிரதமர் யார் என்பதற்கு முன்னாலேயே, கட்சியின் தலைவர் தேர்வே குழப்பவாதிகளால் நடத்தப்பட்டது என்று அதன் தாய் மூல அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர்களே, மனம் நொந்து கூறும் அளவுக்கு வந்தனர்!
மற்றவர்களை - மற்ற கட்சிகளைக் குறை கூறுவதற்குமுன், உங்கள் கூடாரத்தினை நீங்கள் சரியாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பரிவாரங்களுக்குப் பலர் கூறும் நிலையே இன்று! வேடிக்கை விசித்திரம்!

- ஊசி மிளகாய்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...