Thursday, January 24, 2013

பெண்ணுரிமைக் கோட்பாடுகள்


திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (19.1.2013) மூன்று முக்கியப் பிரச்சினை களை முன்னிறுத்தித் தொடர் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதில் ஒன்று பெண்ணுரிமைக் கோட்பாட்டை முன்னிறுத்துவதாகும்.
பெண்கள் மனித சமூகத்தின் சரி பகுதி - ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை மதங்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வதில்லை.
இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக இருந்தவர்கள்கூட - பெண்கள் என்றால் அவர்கள் அடுப்பங்கரைக்குள் முடங்கிக் கிடக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.
இப்படிப் பெண்களை ஒன்றுக்கும் உதவாதவர் களாக அடிமைப்படுத்திய காரணத்தால் மனதள விலும், உடல் அளவிலும் பலகீனமானவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர்.
கடும் போராட்டங்களின் காரணமாக பல வகையான உரிமைகள் கல்வி, வேலை வாய்ப்பில் கிட்டி வந்தாலும் ஆண்களின் ஒடுக்குமுறை ஓய்ந்த பாடில்லை.
அதன் தீய விளைவுதான் புதுடில்லியில் மருத் துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில்  வன்  கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகும்.
அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளிலும் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் பெண் கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும், உயர்ஜாதி ஊடகங்கள் அவற்றை இருட்டில் பதுக்கிவிட்டன; ஆம், இந்த ஊடகப் பூனைகள் கண்களை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டு போய்விட்டதாகக் கற்பனையுலகில் சஞ்சரித்துக் கொண்டுள்ளன.
பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை  யிலிருந்து அவர்கள் மீட்கப்படவேண்டும்; நிரந்தரப் பரிகாரம் காணப்படவேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
எதற்கும் முதற்படி என்பது விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும், தன் பலமும்தான். படித்த பெண் களாக இருந்தாலும் உடல் அளவில் ஆண் களுக்கு நிகராகப் பலம் பெற்றிருக்கவில்லை. அதற்குப் பல வகையான வரலாற்றுக் காரணங்கள், உளவியல் ரீதியான காரணங்கள் சொல்லப்படலாம்.
எவ்வளவு காலத்திற்கு இந்தச் சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு இருக்க முடியும்? திராவிடர் கழகம் தீர்மான வடிவமாகச் சொல்லும் தற்காப்புப் பயிற்சி - குறிப்பாக கராத்தே பயிற்சி கல்வி நிறு  வனங்களில் தொடக்கப்பள்ளி முதலே கட்டாயமாக அளிக்கப்படவேண்டும். (பெரியார் கல்வி நிறுவனங் கள் இதனைச் செய்து வருகின்றன) துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து உடனடியாக அதற்கான அனுமதி யையும் அளிக்கவேண்டும்.
நான்கு இடங்களில் பெண்களிடம் வாலாட்டிய கொடியவர்கள் பதிலடி கொடுக்கப்பட்டனர் என்ற செய்தி வந்தால்  போதும், இந்த ஆண் சூராதி சூரர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளியக் கூடியவர்கள்தாம்.
மற்றொரு முக்கிய வாய்ப்பு என்பது சட்டமன்றங்  களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்குரிய 33 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறை வேற்றி, பெண்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக அவர்களே குரல் கொடுக்கும் பொழுதுதான் அதற்கான விடிவு விரைவில் கிடைக்கும்.
மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண் உறுப்பினர்கள் என்பது குறைந்தபட்சமாகும். அந்த நிலை ஏற்பட்டால், நாடாளுமன்றமே கிடுகிடுக்காதா?
எருதின் புண் காக்கைக்குத் தெரியாது. பெண் களுக்கான உரிமைகள், குறைபாடுகள் எந்த அள  வுக்கு ஆண்களால் உணரப்பட முடியும்? அப்படியே உணர்ந்தாலும் அவர்கள் பெண்களுக்காக முன்வந்து போராடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதே!
1996 ஆம் ஆண்டு முதல் இதற்கான மசோதா நிலுவையில் உள்ளதே. மாநிலங்களவையில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவையிலும் நிறைவேற்றப்படவேண்டும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் அந்தச் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
தேர்தல் நேரம்... அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தால், அனேகமாக எந்த அரசியல் கட்சியும் பெண்களுக்கு எதிராகச் செயல்படாது என்று எதிர்பார்க்கலாம்.
பெண்கள் அமைப்புகளும் இத்திசையில் குரல் கொடுப்பார்களாக! திராவிடர் கழகம் தொடர் பிரச்சாரத்தில் இதனை முன்னெடுத்துச் செல்ல உள்ளது - ஆதரவு தாரீர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...