Thursday, December 6, 2012

அம்பேத்கர் தழுவிய பவுத்தம் எது? - கி.வீரமணி


அம்பேத்கர் தழுவிய பவுத்தம் எது?     - கி.வீரமணி
நமது நாட்டில் புத்தரையே கடவுளாக்கி விட்டார்கள். புத்த நெறியைப்பற்றிச் சொல்லும் பொழுது என்ன சொன்னார்கள்?  முதலில் `தரவாடா என்ற ஒரு நெறி. தரவாடா என்றால் ஹீனாயானம். அதாவது சிறிய  வண்டி. பெரிய வண்டி என்பது மாதிரி வைத்துக்கொள்ளுங்கள். மற்றொன்று மகாயானம். கடவுள் அவதாரக் கதையெல்லாம் இதற்குள் நடுவில் சேர்ந்தன. கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கொள்கைகள் மாறுபட்டன. திரிபுவாதங்களைச் செய்தார்கள். மூன்றாவது `வஜ்ராயானா. அம்பேத்கர் அவர்கள் தழுவிய நெறி இருக்கிறதே அது இந்த மூன்றும் அல்ல.
அதற்கு மாறாக அவர்கள் அற்புதமான ஒரு பெயரைச் சொன்னார்கள். `நவயானா என்று சொல்லக்கூடிய  அளவுக்கு அவர்கள்  புதுமையைப் பயன்படுத்தினார்கள். இந்தக் கருத்துதான் மிக மிக முக்கியம் என்பதை அவர்கள் தெளிவாகவே சொன்னார்கள்.
புத்த நெறியிலே பார்ப்பனீயம் ஊடுருவல்
பகுத்தறிவுக்கு உடன்பாடான சிந்தனையை எடுத்து  வைத்தார். இந்த மாதிரியான கருத்து களுக்குத்தான் அம்பேத்கர் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.  `தீட்க்ஷா பூமி என்பதிலே அவர்கள் போய்ச் சேருகிறார்கள். 1956 அக்டோபரில் போய்ச் சேருகிறார்கள். புத்த நெறிக்குப் போக வேண்டும் என்று அம்பேத்கர் அவர்கள் நினைக் கின்றார். ஆனால், புத்த நெறியிலே பார்ப்பனீயம் ஊடுருவியிருக்கிறது என்பது அவருக்கு ஏற்பட்ட  சங்கடம்.
கல்கத்தாவில் மகாபோதி சங்கத்தில் (சொசைட்டியில்)  உள்ள புத்த பிக்குகள் மூலம்தான் புத்த நெறிக்குச் செல்ல முடியும் என்ற சூழ்நிலை. அங்கு இருக்கிற பெரிய புத்த பிக்குகள் மூலமாகத் தீட்சை வாங்க இவர் தயாரில்லை. இந்தச் செய்தி மிக மிக முக்கியமானது. இந்தச் செய்திகள் எல்லாம் இந்த நூலிலே தெளிவாகச் சுட்டிக்காட்டப் பட்டிருக்கின்றன.
`வசந்த் மூன் என்பவர்தான் அம்பேத்கர் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு குறிப்புகளை எல்லாம் தொகுத்துக் கொடுத்தவர். எழுதியவர். நாக்பூர்  அரசில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரான `வசந்த் மூன் என்பவர் அதிகாரியாக இருந்தவர். அவர் ஓய்வுபெற்ற பின் அம்பேத்கர் அவர்கள் எழுதிய ஆங்கில எழுத்துக்களுக்கு ஆசிரியராக வருகின்றார்.
`சம்தா சைனிக்தல் என்று சொல்லக்கூடிய சமத்துவ சமுதாயத் தொண்டர்கள் அணியிலே அவர் இருந்து இவர்களை வரவேற்று எல்லா ஏற்பாடுகளையும் அவர் செய்கின்றார்.
Sangaraksaga is the English Buddist monk, founder of the ‘Friends of the western Buddhist order’. He was to play an important role in spreading Buddhism.
(சங்கரக்சகா என்பவர் ஆங்கிலேய புத்த பிக்கு ஆவார். மேலை நாடுகளின் புத்த நெறி நண்பர்கள் அமைப்பு என்பதன் நிறுவனர் அவர். புத்த நெறியைப் பரப்புவதில் மிகவும் தலையாய பங்கினை அவர் ஆற்றவிருந்தார்.)
வெள்ளைக்காரருக்கு ஜாதி உணர்ச்சி எல்லாம் இல்லை. ஆனால், இங்கே இருந்த புத்த பிக்குகள் ஜாதி உணர்ச்சிக்கு ஆளானவர்கள்  என்று நினைத்தது மாத்திரமல்ல, பார்ப்பனீய இந்து மதம் என்பதே இருக்கக்கூடாது என்று அம்பேத்கர் நினைக்கின்றார். அதனால் வெளிநாட்டு வெள்ளைக்கார புத்திஸ்ட் உதவியை நாடி, புத்த நெறிக்குச் செல்ல அம்பேத்கர் தயாராகிறார்.  இந்தியாவில் மிகவும் மூத்த பிக்கு யார் என்று இவர் ஆய்வு செய்கிறார். பர்மாவிலே இருந்து வந்த சந்திராமணி என்பவரிடத்திலே சென்று பேசுகிறார்.
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
என்ற மூன்று உறுதி மொழிகளுக்கு மேலே அம்பேத்கர்  அவர்கள் மேலும் 22 உறுதிமொழி களை எழுதுகின்றார்.
மகாபோதி சங்கம் அதிர்ச்சி
மகாபோதி சங்கத்துக்கு (சொசைட்டிக்குப்) பவுத்தத்தைத் தழுவப் போகிறேன் என்று அம்பேத்கர் எழுதுகிறார். அப்பொழுது அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்கத்தாவில் உள்ள மகாபோதி சொசைட்டியின் செயலாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்குத் தந்தி மூலம் ஒரு செய்தியை அனுப்புகின்றார். அம்பேத்கர் அவர்கள் பவுத்தத்தைத் தழுவப் போவதாகச் சொன்னதைப் பாராட்டித் தந்தி  வரவில்லை. என்ன செய்திருக்க வேண்டும் அவர்கள்?  நீங்கள் தழுவ வருவதை நாங்கள் பாராட்டுகிறோம் வரவேற்கிறோம் என்று அவர்கள் சொல்லியிருக்க வேண்டும்.  அதற்குப் பதிலாக தந்தியில்  என்ன குறிப் பிட்டிருந்தார்கள் என்றால் `நீங்கள் பவுத்தத்தைத் தழுவப் போவதாக எடுத்த முடிவைக் கண்டு இந்து மதத்தை விட்டு வெளியே வருவதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியுற் றோம். தயவு செய்து  உங்களுடைய முடிவை மறுபரிசீலனை பண்ணுங்கள் என்று தந்தியில் குறிப்பிட்டிருந்தார்கள்.
இப்படி  எழுதியவர் யார்? இவரென்ன ஆர்.எஸ்.எஸ்.காரரா? இப்படிப்பட்டவர் பவுத்த சங்கத்தில் இருந்திருக்கிறார் என்றால், பார்ப்பான் உள்ளே நுழைந்தான் என்றால் என்னென்ன கேடுகள் வரும் என்பதற்கு இதைவிட பெரிய எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது. பார்ப்பனீயம் புத்தமதத்தில் நுழைந்தது, .  கடவுளாக ஆக்கியது, ஆத்மாவைக் காட்டிய தெல்லாம் அப்புறம். ஆனால், அம்பேத்கர் அவர்களி டமே இந்த வேலையைக் காட்டினார்கள்.  இவருக்கே அந்த அனுபவம் ஏற்பட்டதால் தான் அம்பேத்கர் அவர்கள் - இவர்கள் மூலம் பவுத்தத்தை ஏற்காமல் வெளிநாட்டு, வெள்ளைக்கார பிக்கு மூலம் பவுத்த நெறியைத் தழுவுகிறார்.
`சங்கராட்சகா என்பவரிடம் நெருங்கிப் பழகியிருக்கின்றார். அவரைப்பற்றி நிறைய குறிப்பு களை அம்பேத்கர்  அவர்கள் எழுதியிருக்கின்றார்.  அப்பொழுது அம்பேத்கர்  அவர்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள்தான்  மிக முக்கிய மானவை.
அம்பேத்கருக்கு மாபெரும் துரோகம்
நண்பர்களே! நம்முடைய நாட்டில் நம் நண்பர்களில் பலபேர் கூட பவுத்தத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அம்பேத்கரைப் பின்பற்றிவிட்டோம். நாங்களும் பவுத்தத்தைப் பின்பற்றி விட்டோம் என்று சொல்லிவிட்டு, எல்லா இந்துக் கடவுளின் படங்களையும் ஒன்று விடாமல்  டஜன் கணக்கில் மாட்டி வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். எல்லா இந்துப் பண்டிகைகளையும் கொண்டாடு கின்றார்கள். கடவுள் படங்களை மாட்டி வைத்துக் கொண்டு, அம்பேத்கர் அவர்களுடைய படத்தையும் மாட்டி வைத்துக் கொண்டிருந் தால், இதைவிட அம்பேத்கர் அவர்களுக்குச் செய்யக்கூடிய மாபெரும் துரோகம் வேறு இருக்க முடியாது. ஏனென்றால் தலைவர்களுக்குப் பிறந்தநாள் விழா கொண்டாடுவது, அம்பேத்கர் ஜெயந்தி என்று சொல்வது, சிலைக்கு மாலை போடுவது - இதுதான் அம்பேத்கர் அவர்களுக்கு நாம் காட்டுகின்ற மரியாதையா? அவருடைய கொள்கைக்குத் திரிபுவாதம் இல்லாமல் நடக்கவேண்டும். அம்பேத்கர் அவர்கள்  எதைச் சொன்னாரோ அதைக் கடைபிடிக்கவேண்டும்.
(நூல்:அம்பேத்கர் புத்த நெறியைத் தழுவியது ஏன்?)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...