Monday, December 10, 2012

விடுதலைச் சிறுத்தைகள் வேறல்ல; கருஞ்சிறுத்தைகள் வேறல்ல


இரட்டைக் குழல் துப்பாக்கியோடு
இணைந்த மூன்றாவது குழலாக திருமாவளவன்
80ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
சென்னை, டிச.8-தி.க. -தி.மு.க. இரட்டைக் குழல் துப்பாக்கி என்றால், மூன்றாவது குழலாக இணைந்திருப்பது விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுடைய 80 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடல் எம்.ஆர். ராதா மன்றத்தில் 2.12.2012 அன்று மாலை நடைபெற்றது. அவ் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
இயக்க வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயம் என்ற இணைப்பை ஏற்படுத்தக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சாரத் திருவிழாவி னுடைய தலைவர் மானமிகு அருமைச் சகோதரர் கழகத்தின் பொருளாளர் வழக்குரைஞர் சாமிதுரை அவர்களே,
அசுர குலத்தினுடைய ஒப்பற்ற தலைவர்
அடுத்து நாமெல்லாம் ஆவலாக இருந்து தமிழ்நாட்டிலே அண்மைக்காலத்திலே தோன்றி யுள்ள நோய்களுக்கெல்லாம் உண்மை மருத்துவம் பார்த்தாகவேண்டும் என்று சொல்லக்கூடிய நிலையிலே, இந்த மேடையிலே வெறும் பாராட் டுரை வழங்குவதற்காக அல்ல, சமூக மருத்துவத் திற்கான வழிமுறைகளைச் சொல்லுவதற்காக வந்திருக்கிறோம் என்று சொல்லக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிற மானமிகு சுயமரியாதைக் காரரான அன்பிற்குரிய அசுர குலத்தினுடைய ஒப்பற்ற தலைவர் அய்யா டாக்டர் கலைஞர் அவர்களே,
இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு எனக்கு முன்னாலே மிகச் சிறப்பாக உரையாற்றி, அருமை யான கருத்துகளை எடுத்து வைத்த கவிப்பேரரசு அருமைச் சகோதரர் பகுத்தறிவுக் கவிஞர் வைரமுத்து அவர்களே,
கலைஞர் அவர்களுக்கு அரசுகள் வரும் போகும்; ஆனால், ஒரு அரசு கலைஞரோடே இருக்கும் எப் பொழுதும், அதுதான் கவிப்பேரரசு. இந்த அரசை கலைஞரிடம் இருந்து பறிக்க முடியாது யாராலும். அப்படிப்பட்ட பெருமை மிகுந்த சகோதரர் கவிப்பேரரசு அவர்களே,
ஒடுக்கப்பட்ட சமுதாயம் உயர்கிற நேரத்தில், அதனுடைய எழுச்சி பொங்குகிற காலகட்டத்திலே, நிச்சயமாக ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று நினைக்கக் கூடிய ஆதிக்கபுரியினர் மட்டுமல்ல, அந்த ஆதிக்க புரியினர் என்ற வில்லுக்கு அம்பாகி நிற்கக் கூடியவர்கள் உங்கள்மீது வசைமாரி பொழி வார்கள் என்பதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று சொல்வதற்காக இந்த மேடையை உங்களுக்குத் தந்திருக்கிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள்  வேறல்ல; கருஞ்சிறுத்தைகள் வேறல்ல!
அதேநேரத்திலே சிறுத்தைகள் யாருக்காகவும் பயப்படவேண்டிய அவசியமில்லை. அதுதான் மிக முக்கியம்; சிறுத்தைகள் என்று சொல்லும்போது விடுதலைச் சிறுத்தைகள்  வேறல்ல; கருஞ் சிறுத்தைகள் வேறல்ல. எல்லாம் சிறுத்தைகள்தான். சிறுத்தைகள் எப்போது கம்பீரமாக வர வேண்டுமோ, அப்போது வரும். இது சர்க்கஸ் கூடாரத்து சிறுத்தைகள் அல்ல; காட்டிலே சுதந் திரமாக உலவுவதுபோல, நாட்டிலே வலம்வரக் கூடிய சிறுத்தைகள். ஆகவே, அப்படிப்பட்ட சிறுத்தைகளாக இருந்து  நாம் இயக்கத்தை நடத்தக்கூடிய நேரத்திலே, அதற்கு இன்றைக்கு முத்திரைப் பதித்துக் கொண்டிருக்கக் கூடிய அருமைச் சகோதரர் என்றென்றைக்கும் இதுவரை இரட்டைக்குழல் துப்பாக்கிகள்; இனிமேல் தேவையானால், மூன்று குழல்கள் மட்டுமல்ல, முப் பரிமாணங்கள் என்று சொல்லக்கூடிய வகையிலே இந்த விழா   முத்திரை பதிக்கக்கூடிய ஒரு விழா. எனக்கு 80 என்பது  இருக்கின்றதே அது  ஒரு அடையாளப் பிரச்சாரம். இந்த விழாவிலே கலந்து கொள்ள வந்திருக்கின்ற எனது அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர், எழுச்சி திராவிடர், என்றென் றைக்கும் தலைவணங்காத நிலையிலே, அரசியல் நாடகங்கள் முக்கியமல்ல, இனத்தின் மீட்டுருவாக் கம்தான் மிக முக்கியம் என்ற உணர்வோடு, எங்களோடு இருக்கக் கூடிய, இரட்டைக் குழலோடு இணைக்கப்பட்ட இன்னொரு குழலாக இருக்கக் கூடிய அருமைச் சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களே,
எங்கள் குடும்பத்தின் நிரந்தர சுயமரியாதை பீரங்கி, சுயமரியாதை முழக்கச் செம்மல், எந்த நிலையிலும் இன்றைக்கு தலை தாழாத சிங்கமாக இருக்கக் கூடிய ஒருவர் - திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையினுடைய பொதுச்செயலாளராக இருக்கக் கூடிய - எங்கள் இயக்கத்தின் சுயமரியாதைக் குடும்பத்தின் தலைசிறந்த போர்வாளாக இருக்கக் கூடிய அருமைச் சகோதரர் சுப.வீரபாண்டியன் அவர்களே,
இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு உரை யாற்றிய கழகத்தின் பொறுப்பாளர்களாகிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களே, செயலவைத் தலைவர் மானமிகு அறிவுக்கரசு அவர்களே மற்றும் கழகப் பொறுப்பாளர்களே, வெள்ளம்போல் திரண் டிருக்கக் கூடிய கழக கொள்கை உறவுகளே, பெரி யோர்களே, சான்றோர்களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம்.
இந்த நிகழ்வைப் பொறுத்தவரையிலே, சிறப்பாக சொல்லவேண்டுமானால், மிகப்பெரிய அளவிலே ஒரு வாய்ப்பை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். என்னவென்று சொன்னால், சமுதாயத் திலே, ஒரு இழிவை நீக்குவதற்காக, இந்த நாட்டில் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது. இதுவரையிலே வேறு வகையான போராட்டங்கள்தான் நடந்திருக் கின்றன. ஆனால், மனிதனுக்கு இருக்கிற இழிவு இருக்கிறதே, வேறு எங்கும் இல்லாத, உலகத் திலுள்ள எந்த பாகத்திலும் இல்லாத ஒரு இழிவு நம்முடைய நாட்டில் உண்டு. பேதங்கள் பல வகைகளிலே உண்டு வெளிநாட்டிலே - அது ஆண்டான், அடிமை என்ற பேதம் இருக்கிறது.
untouchability என்பதைவிட Unseability
ஆனால், இந்த சமுதாயத்தில்தான், முப்பத்தி முக்கோடி தேவர்கள், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகள் என்பதிலிருந்து அஷ்ட திக்க பாலர்கள் இருந்து வரிசையாக கடவுளை அடுக்கிக் கொண்டி ருக்கின்ற இந்த நாட்டில்தான், பிறக்கும்போதே ஒரு மனிதன் கீழ்ஜாதியாக பிறக்கிறான்; இறந்த பிறகும் அவனுடைய கீழ்ஜாதி தன்மை மாறிவிடுவதில்லை. சுடுகாட்டிலே போய் அது முன்னாலே நிற்கிறது.   அவன் இறந்தான்; அவனை பிடித்த ஜாதிகள் இறப்பதில்லை என்று சொல்லக்கூடிய - தொட் டால் தீட்டு - பார்த்தால் தீட்டு  என்பதில் பார்க்கக் கூடாது அதுதான் மிக முக்கியம். untouchability என்பதைவிட Unseabilityஎன்று சொன் னால், பல வெளிநாட்டுக்காரர்களால்இன்னமும்கூட விளங்கிக்கொள்ளவே முடியவில்லை; அவர்களுக்கு நம்மால் விளக்கவே முடியவில்லை. எனவே, இவ்வளவு பெரிய காட்டுமிராண்டித்தனம் இந்த நாட்டுக்கே உரியது என்று சொல்லும்பொழுது, அதனுடைய தோலை உரித்தவர் யார் என்றால், அவர்தான் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.  அதற்காகப் பிறந்த இயக்கம்தான் சுய மரியாதை இயக்கம். அதனுடைய பணிகள் முடிந்து விட்டனவா என்றால், இல்லை - அதனுடைய பணிகளுடைய விளைவுகள் வெற்றியாக ஆகாமல், தோல்வியடைந்துவிட்டனவா என்றால், அதுவும் இல்லை.அது தொடர்கிறது என்பதற்கு அடையா ளம்தான் இந்த மேடை! ஒருவருக்கொருவரைப் பாராட்டிக் கொள்வதற்காக வரவில்லை
இங்கே நாங்கள் கூடியிருக்கிறோம்; அழைத்தி ருக்கிறோம் - நம்முடைய கலைஞர் அவர்கள் இங்கே வந்திருக்கிறார் என்றால், ஏதோ நாங்கள் ஒருவருக்கொருவரைப் பாராட்டிக் கொள்வதற்காக வரவில்லை - ஒரு பெரிய சமுதாயப் போர் நடந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் - ஒரு உரிமைப்போர் நடந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் - பல தளங்கள் உண்டு - பல களங்கள் உண்டு - அடுத்த களத்தை எப்படி அமைப்பது - அடுத்த தளத்தை நோக்கி எப்படி செல்வது என்கின்ற திட்டத்தை தீட்டுகின்ற மேடையாகத்தான் இந்த மேடையை நாங்கள் கருதுகிறோம். அய்யா அவர்கள் சொல் வார்கள்:
பிறக்காதவர்களுக்கும் நம் நாட்டில் பிறந்த நாள் விழா! பிறந்த நாள் விழா என்பதுபற்றி சொல்வார்கள், இந்தக் கொள்கையுடைய எல்லோரும் பிறந்த நாள் விழா கொண்டாடவேண்டும் என்று சொல்வார்கள். ஏன் தெரியுமா? நண்பர்களே, அய்யா அவர்கள் சொல்லும்பொழுது மிகவும் வேடிக்கையாகவும் சொல்வார்; வினயமாகவும் இருக்கும்.  தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவில் அய்யா அவர்கள் உரையாற்றும்போது,  அதாவது பிறந்த வர்களுக்குத்தான் பிறந்த நாள் விழா என்பது கிடையாது. பிறக்காதவர்களுக்கும் நம் நாட்டில் பிறந்த நாள் விழா கொண்டாடிக் கொண்டிருக் கிறார்கள். யாருக்கு என்று சொன்னால், கடவுள் களுக்கெல்லாம் பிறந்த நாள் கொண்டாடு கிறார்களே, அவர்கள் எல்லாம் பிறந்தவர்களா? என்று கேட்டார். அதுதான் பகுத்தறிவுச் சிந்தனை.
விநாயகருக்குச் சதுர்த்தி, சுப்பிரமணியனுக்கு சஷ்டி, ராமனுக்கு நவமி இவர்களெல்லாம் பிறந்தவர்களா? இதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ஏன் அதைக் கொண்டாடுகிறார்கள்; அதுவும் வருடாவருடம் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று சொன்னது மட்டுமல்ல, அய்யா அவர்கள் இந்தப் பகுத்தறிவு பிரச்சாரத்தின்போதும் மிக அழகாகச் சொல்வார்கள், மனிதன் கடவுளை மறந்துவிடுவான்
வருடா வருடம் திருமணம் செய்து வைக்கி றார்கள் கடவுளுக்கு; போன வருடம் செய்த திருமணம் என்ன ஆயிற்று என்று எவனாவது கேட்கிறானா?  என்று சொல்லிவிட்டு, இதெல்லாம் பிரச்சார யுக்தி - அவ்வளவுதான். ஏனென்றால், கடவுள் எங்கும் நிறைந்தவன்  என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், இதனை விட்டுவிட்டால், மனிதன் கடவுளை மறந்துவிடுவான். ஆகவே, அவனுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் இத்தனைக் கடவுள்களைப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை தெளிவாகச் சொன்னார் அய்யா.
கடினமான தண்டனை வேறு எதுவும் கிடையாது
அந்த அடிப்படையிலே நண்பர்களே, எங்களு டைய பிறந்தநாள் விழாக்கள் என்று கொண்டாடப் படுவதோ, இது வெளிச்சம் போட்டு எங்களைப் பாராட்டவேண்டும் அல்லது பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. பாராட்டைக் கேட்பதைவிட எங்களுக்குக் கடினமான தண்டனை வேறு எதுவும் கிடையாது.
சுயமரியாதைக்காரராக இருக்கக்கூடிய எங் களைப் போன்றவர்களுக்குப் இந்தப் பாராட்டு களைக் கேட்டுக் கொண்டிருப்பது இருக்கிறதே அது மிகக் கடினம். வழக்கமாக அதைக் கேட்டும் பழக்கப்பட்டவர்கள் அல்ல.
திருமா அவர்கள் சங்கடப்பட வேண்டாம்!
நாராசமாக இருக்கக் கூடிய பல்வேறு செய்தி களைக் கேட்டு அதையெல்லாம் கேட்டு - நம் முடைய திருமா அவர்கள் - அவரிடம் உரிமை எடுத்துக்கொண்டு சொல்லலாம் - அவருடைய சகோதரரைப் போல - அவர் ரொம்ப நேரம் சங்கடப்பட்டார் - தன்னைத் தாக்குகிறார்களே என்று - எங்களுக்கெல்லாம்  தாக்கத் தாக்கத்தான் அது மேலும் ஊக்க மாத்திரையாகும் அதுதான் மிக முக்கியம். அவ்வளவு தூரம் நாம் புகுந்து குடைந்திருக்கிறோம் அவர்கள் உள்ளத்திலே என்று அர்த்தம். ஆகவே அவர் சங்கடப்படவேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு நாங்கள் இரண்டு பேரும் சாட்சி; கலைஞரைவிடவா பெரிய சாட்சி வேண்டும்?
அவர்மீது தொடுக்கப்படாத தாக்குதலா? அன்றைக்கும்  தாக்கினார்கள்; இன்றைக்கும் தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். செய்தாலும் தாக்குகிறான்; செய்யாவிட்டாலும் தாக்குகிறான்; எழுந்தாலும் தாக்குகிறான்; உட்கார்ந்திருந்தாலும் தாக்குகிறான். இதெல்லாம் எங்களுக்குப் பழக்கப் பட்டது. பெரியார் அவர்களுடைய முறை இருக்கிறது அதைத்தான் நாங்கள் வரித்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே எதிர்ப்பில் எதிர்நீச்சல் அடிப்பதுதான் சிறப்பானது.
கலைஞர் அவர்கள் ஈரோட்டுக்குருகுலத்திலே கற்றுக்கொண்ட பாடமே அதுதானே. பெரியாரி டத்திலே கற்றுக்கொண்ட பாடமே அதுதானே. நெருக்கடி காலம், மிசா காலம், எழுத்துரிமை, பேச்சுரிமை வெளிப்படையாக பறிக்கப்பட்ட காலம். அந்தக் காலத்திலே கலைஞரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்கள் - சிலருக்கு அது ஞாபகம் இருக்கும் - பழைய தோழர்களுக்கு - ஆனால், இளைய தலைமுறையினருக்கு புதிய தலைமுறை யினருக்கு சொல்லியாகவேண்டும். ஒரு புகழ்வாய்ந்த காலகட்டம் முக்கியமல்ல; ஆட்சியில் அவர் இருக்கும்போது எத்தனையோ பேர் வருவார்கள் அதுவும் முக்கியமல்ல; அவர்களுக்கு சங்கடங்கள் வரும்போது, எங்களுக்கு எதிர்ப்புகள் வரும்போது இந்த இயக்கம் எப்படி நிமிர்ந்து நிற்கும்; எப்படி எதிர்கொள்ளும் என்பதற்கு அடையாளம் முக்கிய மானது. அந்த அடையாள நிகழ்ச்சிகளை சொல்ல வேண்டுமானால், பிடித்தவர்களுக்கும் தெரியாது - போனவர்களுக்கும் தெரியாது
கலைஞரிடம் போய் கேட்டார்கள், எங்களை யெல்லாம் மிசா கைதிகளாகக் கொண்டு போனார்கள். என்ன குற்றம் செய்தோம் என்று பிடித்தவர்களுக்கும் தெரியாது - போனவர்களுக்கும் தெரியாது. அதற்குப் பெயர்தான் மிசா.
அப்படியொரு காலகட்டத்திலே, கலைஞரைப் பார்த்து கேட்டார்கள் - இந்த ஈரோட்டுக் குருகுலம் எப்படி மனத்திண்மையை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது  - அவைகள் நாங்கள் பெற்ற பாடங்கள் - அதைத்தான் இன்றைக்கும் திரும்பப் படிக்கின் றோம் - இதைத்தான் இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். நம்முடைய சகோதரர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
கலைஞரைப் பார்த்து கேட்டபொழுது, உங்கள்மேல் பெரிய குற்றச்சாட்டு என்ன தெரியுமா?
தேசிய நீரோட்டத்தில் நீங்கள் கலக்கவில்லை. தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை என்றால், அந்தக் காலகட்டத்தில் என்ன சொல்லியிருப்பார்கள் - அய்யோ சிறைச்சாலையில் தோழர்கள் இருக்கிறார்கள்; பேச்சுரிமை இல்லை, எழுத்துரிமை இல்லை. அந்தக் காலகட்டத்தில் கலைஞர் அவர்கள் என்ன சபித்தாரா,  இல்லை வியாக்கியானம் சொன் னாரா - இல்லை நான் நெருக்கடி காலகட்டத்தை ஆதரிக்கிறேன் என்று சொன்னாரா - நெருக்கடி காலகட்டத்திலும், மிசா காலகட்டத்திலும் இருந்த தோழர்கள் இந்த அரங்கத்திலும் இருக்கிறார்கள் - இந்த மேடையிலும் இருக்கிறார்கள் - இன்னமும் உயிரோடுதான் பல தோழர்கள் இருக்கிறார்கள். கலைஞர் சொன்னார், ஈரோடு போனவர்கள், நீரோடு போக முடியாது
ஏனென்றால் ஈரோட்டுக் குருகுலம் எப்படிப் பட்டது - சுயமரியாதை இயக்கம் எப்படிப்பட்டது - ஏன் தன்னை ஒரு வரி விமர்சகராக சொல்லும் பொழுது, மானமிகு சுயமரியாதைக்காரன் என்று சொல்லுகிறார். கலைஞர் பளிச்சென்று சொன்னார் - தேசிய நீரோட்டத்திலே நாங்கள் கலக்கவில்லை என்பதுதானே உங்கள் குற்றச்சாட்டு. ஆமாம், எங்களால் அந்த நீரோட்டத்தில் கலக்க முடியாது; ஈரோடு போனவர்கள், நீரோடு போக முடியாது என்று சொன்னார்.
எதிர்நீச்சல் அடித்தால்தானே அவன் வீரன் என்று அர்த்தம். நீரோடு போனால் அவன் வெற்றி பெற்றுவிட்டான் என்று அர்த்தமா? தண்ணீரே கொண்டு போய் சேர்த்துவிடுமே! ரொம்ப பேரை தண்ணீர்தானே கொண்டு போய் சேர்த்திருக்கிறது.
ஆகவேதான், இந்த அமைப்பைப் பொறுத்த வரையிலே, இந்த இயக்கத்தைப் பொறுத்தவரையிலே - எங்களுக்கு எவ்வளவு தூரம் கொச்சைப்படுத் தினாலும், எவ்வளவு தூரம் எங்களை அசிங்கப் படுத்தினாலும், எவ்வளவு எங்களைக் கேவலப் படுத்தினாலும் - அதையெல்லாம் தாங்கக்கூடிய சக்தி உண்டு. இன்னும் ஒருபடி மேலே போய் சொல் கிறோம் அன்றைக்குக் கலைஞர் அவர்களுக்கு எவ்வளவு சங்கடங்கள் - அதைத் தாங்கி, அதனைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல் - அவருக்குப் பேனா இருக்கிறது - அவருக்கு எழுத்து இருக்கிறது - அவருக்கு துணிவு இருக்கிறது - இவையெல்லா வற்றையும் விட - அய்யாவிடம், அண்ணாவிடம் பெற்ற பாடம் தெளிவாக இருக்கின்றது என்கிற காரணத்தினால்தான், நாங்கள் இன்னும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக - எந்தக் காலகட்டத்தையும் சந்திக்கக்கூடிய தெம்போடும், திராணியோடும் எங்கள் பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...