Monday, December 10, 2012

ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பை முன்னிறுத்தி பொதுக் களத்தைக் கட்டுவோம்! கட்டுவோம்!!


தமது பிறந்தநாள் விழாவில் தமிழர் தலைவர் பிரகடனம்!
சென்னை, டிச.9-ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பை முன்னிறுத்திப் பொதுக்களத்தை உரு வாக்குவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
சென்னையில் 2.12.2012 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற - தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் ஆசிரியர் ஏற்புரை ஆற்றியதன் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பெரியார் மாத்திரைகள்தான் இப்போது தேவை
அருமைச் சகோதரர்களே, திருமாவளவன் போன்ற சகோதரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் கொஞ்சம்கூட இதற்காக இவ்வளவு நேரத்தை செலவு செய்யவேண்டிய அவசியம் இல்லை. பெரியார் மாத்திரைகள்தான் இப்போது தேவை. வேறு மாத்திரைகள் தேவைப்படாது.
அய்யா அவர்களிடம் யாராவது கேள்வி கேட்டால், அய்யா அவர்கள் பதில் சொல்வார். நீங்கள், காங்கிரசிலிருந்து போகும்போது, பணத்தைத் திருடிக்கொண்டு போய்ட்டீங்களாமே என்று எழுதிக் கொடுப்பார்கள். அதைப் பார்த்து அய்யா கோபப்படமாட்டார். அதற்கும் பதில் சொல்வார்:
இவ்வளவு முட்டாளா, இவ்வளவு அலட்சியமா காங்கிரஸ்காரர்கள் இருந்தால், நான் எடுக்காமல் இருப்பேனா - இருந்தது அவனுடைய தவறே தவிர, என்னுடைய தவறு இல்லையே! நான் எப்போ திருடினேன், எப்போ போனேன் என்று கணக்கு வழக்கு சொல்லமாட்டார்.
நேரு ஆட்சி செய்த காலகட்டத்தில், போஸ்டல் ஸ்டிரைக் நடைபெற்றது. கம்யூனிஸ்ட்டுகள் எல்லாம் ஸ்டிரைக்கை ஆதரித்தார்கள். அப்போது தந்தை பெரியார் ஸ்டிரைக்கை எதிர்த்து பொன் மலையில் உரையாற்றினார். பெரியார் அந்தக் கூட்டத்தில் உரையாற்றும்போது, இந்த ஸ்டிரைக்கை நடத்துவதால், ஏற்படும் இழப்புகளைப்பற்றி உரையாற்றிக் கொண்டிருந் தார்; அப்போது ஒரு சீட்டு எழுதி கொடுத்தனர்; நேருவிடம் நீங்கள் 10 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டுதான் இந்த ஸ்டிரக்கை உடைக்கவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட பிரச்சாரத்தை செய்கிறீர்கள் என்று பரவலாக எல்லோரும் சொல்கிறார்களே, இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று அந்த சீட்டில் எழுதியிருக்கிறது.
எதிரிக்கு பதில் சொன்னால், எதிரி வாழ்ந்துவிடுவான்
பொன்மலையில், பெரியார் உரையாற்றிய மேடையின் எதிரே  கம்யூனிஸ்ட் அலுவலகம் இருந்தது. ஆமாம், அவன் 10 லட்சம் ரூபாய் கொடுத்தான்; நான் வாங்கினேன், அதனால் ஆதரித்துப் பேசுகிறேன். அட முண்டமே, அவன்தான் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் இவன் ஆதரித்துப் பேசுவான் என்று உனக்குத் தெரியும் இல்லையா - நீ 12 லட்சம் ரூபாய் கொடுத்து உன்னை ஆதரிக்கும்படி சொல்லி இருக்கவேண்டும் அல்லவா என்று பெரியார் உரையாற்றினார்.
எதிரிக்கு பதில் சொன்னால், எதிரி வாழ்ந்து விடுவான்; அதனால் பதில் சொல்லாதே- சில விஷயங்களுக்கு - அதனை செயலிலே காட்டு என்பதுதான் பெரியார் கற்றுத்தந்த பாலபாடம்.
பாராட்டி போற்றி வந்த பழைமைலோகம்
ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்
என்று எழுதியவர் தான் கலைஞர் அவர்கள். இன்றைக்கும் அந்த எதிர்ப்பு சக்திதான்.
சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம்
கலைஞரைப்பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ளவேண்டுமானால், ஆட்சியில் இருக்கின்ற கலைஞரை வைத்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது. எதிர்ப்பிலே கலைஞர் எப்படி இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய தத்துவம். எதிர்ப்பு வரட்டும் அதுபற்றி கலைஞர் கவலைப்படமாட்டார். எவ்வளவு ஏகடியங்கள், எவ்வளவு ஏளனங்கள், எவ்வளவு ஏத்தங்கள், இவைப்பற்றியெல்லாம் கவலைப்படாத அந்த உணர்வு - ஆகவே அப்படிப்பட்டவர்கள் இன் றைக்கு வந்திருக்கிறார்கள் - இவர்களெல்லாம்  பாராட்டுகிறார்கள்  என்று சொல்லும்பொழுது நான் தலைவணங்கி அந்தப் பாராட்டிற்கு நான் தகுதியாகிவிட்டேன் என்று சொல்லமாட்டேன் - இந்த இயக்கம் சிறப்பாக நடக்கிறது என்பதற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இது எதிரிகளுக் காக என்பதுதான் மிக முக்கியம் - எங்களுக்காக அல்ல!
தந்தை பெரியார் அவர்களுடைய உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதை எவ்வளவு துணிச்சலான முடிவு எடுத்தவர் கலைஞர் என்பது வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி - அது எல்லோருக்கும் தெரியும். அதை இந்த அரங்கத்திற்கு மீண்டும் சொல்லி நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.
செய்தியாளர்கள் கேட்ட கேள்வி
அய்யா அறிவாசான் தந்தை பெரியார் அவர்க ளுடைய உடல் - அந்தப் பொன்னுடல் கிடத்தப் பட்டிருக்கிறது ராஜாஜி ஹாலிலே! ஒரு பக்கம் அன்னை மணியம்மையார் அவர்கள்- மற்றொரு பக்கம் நானும் அமர்ந்திருக்கிறோம். ஏராளமான மக்கள் வந்து பார்த்து போகிறார்கள்; கலைஞர் போன்றவர்களெல்லாம் மிகுந்த மன உளைச்சலிலே, வருத்தத்திலே, வேதனையோடு - என்னென்ன ஏற்பாடுகளையெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்துகொண்டிருக்கிற அந்த நேரத்திலே - மிக சோகமான சூழ்நிலையிலே - இரண் டாம் நாள்  மாலை பெரியார் திடலிலே அடக்கம் என்று அறிவிக்கப்பட்ட பின்னாலே, மதியம் 12 மணி இருக்கும் - எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது - செய்தியாளர்கள் கூட்டமாக வருகிறார்கள் - கூட்டமாக வந்து என்னிடத்திலே ஒரு பேட்டி வேண்டும் என்று சொல்கிறார்கள். எனக்குக் கோபம், வருத்தம் எல்லாம்.  இதுதான் நீங்கள் செய்தி சேகரிக்கின்ற நேரமா? நாங்களெல்லாம் எப்படி நிலைகுலைந்து போயிருக்கிறோம் என்று சொன்னேன். இல்லை, இல்லை. மிகவும் முக்கிய மானது - ஒரே ஒரு கேள்விதான். அதற்கு மட்டும் நீங்கள் பதில் சொல்லவேண்டும் என்று கேட் டார்கள்.
என்ன கேள்வி? என்று கேட்டேன். பெரியாருக் குப் பிறகு திராவிடர் கழகம் இருக்காது. அது தி.மு.க.வோடு இணைந்துவிடும் என்று எல்லோரும் சொல்கிறார்களே, அதுபற்றி பொதுச்செயலா ளரான உங்களின் கருத்து என்ன? என்று கேட் டார்கள்.
திராவிடர் கழகம் தனித்தன்மையோடு இருக்கும்
இந்தக் கேள்வியை இந்த நேரத்தில் நீங்கள் கேட்டிருக்கக் கூடாது; இருந்தாலும் நீங்கள் கேட்டுவிட்டதால், நான் பதில் சொல்கிறேன். நான் பதில் சொல்லவில்லையென்றால், பதில் சொல்ல மறுக்கிறார், பதில் சொல்ல மறுக்கிறார் என்று நீங்கள் செய்தியை போட்டு விடுவீர்கள். ஆகவே நான் பதில் சொல்கிறேன்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையிலே, அது எந்த இயக்கத்தோடும் இணையாது,  கலை யாது, அதனுடைய தனித்தன்மையோடு அது இயங் கும் என்று மூன்று வரிகளில்தான் சொன்னேன். அய்யா அவர்களுடைய மறைவிற்கு இரங்கல் கூட்டம் நடத்திய நேரத்தில், அன்றைக்கு முதல்வர் கலைஞர் அவர்கள் அந்தக் கூட்டம் ராயப் பேட்டை பகுதியில் நடைபெற்றது.
அந்த இடத்திலே  கலைஞர் அவர்கள் சொன் னார்கள், அய்யாவைபற்றியெல்லாம் கலைஞர் பேசிக்கொண்டு வரும்பொழுது, எனது இளவல் வீரமணி அவர்கள் ஒரு கேள்விக்குப் பதிலளித் திருக்கிறார். வேண்டுமென்றே திட்டமிட்டு அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. அது என்னவென்றால், இனிமேல் திராவிடர் கழகம் இருக்காது. அது தி.மு.க.வோடு இணைந்துவிடும் என்பதுமாதிரி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் சொன்ன பதில், என் பதிலை வரவேற்ற கலைஞர்!
அது எந்த இயக்கத்தோடும் இணையாது,  கலையாது, அது எப்பொழுதும் தனித்தன்மை யோடு இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். இந்தப் பதிலை நான்  வரவேற்கிறேன், பாராட்டுகிறேன், என்று அவர் சொன்னார்.  இதன் அர்த்தம் என்ன?
சமுதாயத் துறையிலே உழைப்பதற்கு ஒரு இயக்கம்; அதேநேரத்திலே அரசியலிலே செய்ய வேண்டிய செயல்கள் சரியாக செய்வதற்கு இன் னொரு இயக்கம் என்கிற இரட்டைக்குழல் எப் பொழுதும் தேவைப்படும் சமுதாயத்திற்கு என்ற கருத்தைத்தான் அவர்கள் அன்றைக்கு முன்னாலே வைத்தார்கள். இன்றைக்கும் அப்படித்தான் நாங்கள் நடந்துகொண்டிருக்கிறோம்.
எங்களைப் பாதிக்கவில்லை!
இடையிலே எங்களுக்குள் ஊடல்கள் வந்த துண்டு; உரசல்கள் நிகழ்ந்ததுண்டு. ஆனால், அவை  எங்களைப் பாதிக்கவில்லை. என்னையும் பாதிக்க வில்லை, அவரையும் பாதிக்கவில்லை.
காரணம் என்னவென்றால், 1944 ஆம் ஆண்டு முதல் இந்த இயக்கத்தில் எங்களை ஒப்படைத்துக் கொண்டவர்கள் நாங்கள் என்பதுதான் மிக முக்கியம். குருகுலத்து மாணவர்கள். அந்த வகை யிலே எனக்கென்ன அவர்மேல் கோபம் இருக்கும்; இன்னும் இதைவிட வேகமாக அவர் போகவில்லை என்பதற்காகத்தான் கோபம் இருக்குமே தவிர, வேறு எந்த வகையான காரணமும் இருக்க முடியாது. உறவின்பால்பட்டது - உரிமையின்பால்பட்டது
அதேபோல், என்னிடத்தில் அவருக்கு என்ன வருத்தம் இருக்க முடியும் - என்னோடு அவர் முழுக்க முழுக்க இல்லையே, தள்ளி இருக்கிறாரே என்ற வருத்தம் இருக்கும். அது உறவின் பால் பட்டது, உரிமையின்பால்பட்டதே தவிர, அதற்கு வேறு எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது. அதனால்தான் நாங்கள் என்றைக்கும் பிரிக்க முடியாதவர்களாக இருக்கிறோம் என்பதுதான் மிக முக்கியம். ஆகவேதான் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கும் சொல்கிறேன், எப்போதும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்பது தத்துவம்.
இரட்டைக் குழல் துப்பாக்கியைப்போல...
காரணம் என்ன, ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கம் இல்லாவிட்டால், இன்னொரு பக்கம் இல்லை என்று சொல்வதைப் போலத்தான், இரட்டைக் குழல் துப்பாக்கியைப் போல, திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நாணயத்தினுடைய இரண்டு பக்கங்களாக இருக்கும். அந்த நாணயத்திற்கு இன்னும் பாது காப்புக் கவசமாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் இருக்கும் என்பதுதான் மிக முக்கியம்.
இந்தக் காலகட்டத்தில் ஒன்று மிக முக்கியம் - ஜாதீயம் மீண்டும் தலைவிரித்தாடக் கூடிய நிலை யிலே இருக்கிறது. கொசுவை யாகம் செய்து ஒழித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் கொசுவை ஒழிப்பார்களா? நீங்கள்  நன்றாக  நினைத்துப் பார்க்கவேண்டும். கொசுவை ஒழிக்க வேண்டுமென்றால், அய்யா ரொம்ப காலத்திற்கு முன்னாலே இந்தத் தத்துவத்தை சொன்னவர்.
கொசுவை விரட்டுபவர்கள் எல்லாம் கொசு துவேஷியா?
ஜா(தீ)தி என்று சொன்னால், அது முழுக்க முழுக்க பார்ப்பனர்  கொசுக்கள் மூலம் வருகிறது. அது எங்கிருந்து வருகிறது என்றால், இந்து மதம் என்ற சாக்கடையில் இருந்து உரு வாகிறது. அந்தச் சாக்கடையைத் தூர்க்காத வரையிலே, இந்தக் கொசுக்கள் இருக்கின்ற வரையிலே ஜாதியை ஒழிக்க முடியாது.  ஆகவேதான், எனக்கு ஒன்றும் தனிப் பட்ட முறையில் அந்த வருணத்தின் மீது கோபம் அல்ல. அவதிப்படுகிறார்களே என்று சொன்னார்.
இன்றைக்கும் ஜாதிக் கொசுக்கள், ஜாதீயம் அப்படித்தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. டெங்கு காய்ச்சல் வந்து ஏன் உயிரிழப்பு ஏற்படு கிறது? கொசுக்களை அழிக்கவேண்டும். கொசுக் களை அழிப்பதற்கு யாரும் தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது. பெரியாரைப் பார்த்து, இவர் பார்ப்பன துவேஷி என்று. கொசுவை விரட்டுபவர் கள் எல்லாம் கொசு துவேஷியா? என்று பெரியார் கேட்டார்.
அந்த அடிப்படையிலே இன்றைக்குக் கொசுவை ஒழிக்கவேண்டும் என்று சொல்லி, இந்த ஜாதியை ஒழிக்கக் கூடிய, ஜாதி மிகவும் ஆபத்தானது என்பதை ஒழிக்கக்கூடிய தத்துவத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டிய அடுத்த கட்டம் இப்பொழுது தொடங்குகிறது.
சூத்திர மக்களுக்காக இருக்கின்ற ஆட்சி!
திராவிட முன்னேற்றக் கழகம் வெறும் அரசிய லுக்காகப் போன இயக்கம் அல்ல. முழுக்க முழுக்க இது சமுதாய இயக்கம் என்பதை அடிப்படையாக வைத்துத்தான் - இது சூத்திர மக்களுக்காக இருக்கின்ற ஆட்சி என்று சொன்னார்.
கலைஞர் அவர்கள் சொன்னதை, திருச்சியிலே அய்யாவிடம் அவசர அவசரமாக நாங்கள் சொன்னபொழுது, முதல்வர் இப்படி சொன்னார் என்று சொன்னபோது,  அய்யா அவர்கள் உடனே, விடுதலையிலே தலைப்பாகப் போட்டு பாராட்டி எழுதுங்கள் என்று சொன்னார்.
பாராட்டி எழுதிவிட்டோம்;  தலைப்புச் செய்தியாக விடுதலையிலும் வருகிறது என்று அய்யாவிடம் சொன்னோம். அய்யா அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்து பாராட்டினார் என்பதை நாங்கள் உடனடியாக அன்றைக்கு விடுதலையிலே பதிவு செய்திருக்கிறோம். ஏனென்றால், தலைவர் எப்படி நினைக்கிறாரோ, திராவிட இயக்கத்திலே தொண்டர்களும் அப்படித் தான் நினைப்போம்; தொண்டர்கள் எப்படி நினைக்கிறார்களோ, அப்படித்தான் தலைவர்களும் செயல்படுவார்கள்.
அடையாளம் காட்டுவதுதான் எங்களுடைய வேலை
இன்றைக்கு அந்தக் கொசுக்கள் இருக்கிறதே, மிக முக்கியமாக, அதை அழிக்கவேண்டும் என்று சொல்கிறபோது, சிலர் நினைக்கிறார்கள், தாங்களும் வேஷம் போட்டு அரசியல் ரீதியாக வருகிறபொழுது, கொசு வர்த்தி விற்பனை செய்யலாம் என்று நினைக்கிறார்கள். கொசுவர்த்தி விற்பனையாளர்கள் வேறு; கொசு ஒழிப்பாளர்கள் வேறு. கொசு ஒழிப் பதை  என்றைக்காவது கொசுவர்த்தி தயாரிப் பாளர் கள் விரும்புவார்களா? நிச்சயமாக விரும்பமாட் டார்கள்.
நம் நாட்டில் நிறைய பேர்  அரசியலில் கொசு வர்த்தி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காட்டுவதும் எங்களுடைய வேலைதான். ஆகவே, இந்த நாட்டில், காதலை எதிர்த்து, ஜாதியை எதிர்த்து, ஜாதி ஒழிப்பை எதிர்த்தெல்லாம் நிலைத்துவிட முடியும் என்று நினைக்க முடியாது.
அதைவிட பெரிய பெருமை திராவிடர் இயக்கத்திற்கு வேறு கிடையாது
ஆகவே, அங்கே செய்யவேண்டிய பணி இருக்கிறது. அந்தப் பணியினுடைய அடுத்த கட்டம் ஜாதி ஒழிப்பு, சமுதாய மேம்பாடு, தீண்டாமை ஒழிப்பு என்ற சொல்லக்கூடிய அந்தக் கால கட்டத்தை உருவாக்குவது  இன்றைக்கு நடைபெறக் கூடிய காரியமல்ல. இந்தத் திராவிடர் இயக்கத் திற்குப் பெயரே பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று அன்றைக்கு கிராமத்தில் ஒதுக்குவார்கள். அது எங்களுக்குப் பெருமை. அதைவிட பெரிய பெருமை திராவிடர் இயக்கத்திற்கு வேறு கிடையாது. ஏனென் றால், யார் ஒடுக்கப்பட்டவனோ, யார் அழிக்கப் படவேண்டியவன் என்று மற்ற ஆதிக்கக் காரர்கள்  நினைத்தார்களோ அவர்களுக்குத் தோள் கொடுப்பதுதான் எங்களுக்கு முக்கியம்.
ஆகவேதான், எங்களுடைய திட்டங்கள் வேக வேகமாக அடுத்து தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு என்பதை நோக்கிப் போகும் - 80 வயது ஒரு பொருட் டல்ல - 90 வயது ஒரு பொருட்டல்ல - எங்களுடைய உள்ளமும், உறுதியும்தான் பொருட்டு என்பதற்கு இந்த இயக்கத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
தலைவணங்கி நன்றி செலுத்துகின்றேன்
இளைஞர்களே வாருங்கள்! இந்த அனுபவம் பேசும்; முதிர்ச்சி கைகொடுக்கும். அந்த வகையிலே தான் இனிமேல் ஒரு புதிய திட்டத்தைப் போட்டாக வேண்டும். அது தேர்தலைப் பொறுத்தது அல்ல; அடுத்த தலைமுறையைப் பொறுத்த திட்டமாக, மானமுள்ள மக்களாக நம் மக்களை ஆக்கவேண்டும். திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்குவோம் என்று சொன்னார் களே, அதனை உருவாக்க வேண்டும். அந்த மீட்டுரு வாக்கத்தை செய்கின்ற பணியை செய்வதற்கு நம்மை ஊக்கப்படுத்து வதற்காக வந்திருக்கின்ற கலைஞர் அவர்களே, உங்களுக்கு தலைவணங்கி நன்றி செலுத்துகின்றேன்.
நம்முடைய இயக்கங்கள் கைகோர்த்து நின்று செய்யவேண்டிய காலகட்டம், ஒத்தக் கருத்துள்ள வர்கள் அத்தனை பேரையும் இணைப்போம். இந்த நேரத்திலே ஜாதியத்தை வேறு ஒரு ரூபத்திலே கொண்டுவர முயற்சித்தால், அது தவறு. நம்மைத் தூண்டிவிட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்கிறான். தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள், ஜாதி விஷம்தான்; இட ஒதுக்கீட்டிற்கு அளவுகோலாக பயன்படுத்தவேண்டும்
இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையிலே சமூகநீதி என்ற அளவுக்கு ஜாதி அளவுகோல் தேவை. அதை வைத்துத்தான் நம்மை அழித்தார்கள் அதிலே. எப்படி ஒரு நோய்க்கொல்லி மருந்திலே ஆண்டிப யாடிக் என்று கொடுக்கக்கூடிய மருந்திலே அளவான விஷத்தை நாம் தேர்ந்தெடுப்போமோ, அதே அள வான விஷத்தை நாம் தேர்ந்தெடுத்து வைத்தால்தான், அந்தக் கிருமியைக் கொல்லும். அந்த மருந்தில் பாய்சன் என்று போட்டிருப்பார்கள். அதுமாதிரி ஜாதி விஷம்தான்; ஆனால், அதை இட ஒதுக்கீட் டிற்கு அளவாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சொன்னார்.
அதை பலர் இன்று அந்த விஷத்தையே முழுமை யாகக் கொடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். இதனை நம் இயக்கம்தான் பிரச்சாரத்தின்மூலம் தெளிவுபடுத்த முடியும். ஜாதியை அழிப்போம்; இட ஒதுக்கீட்டிற்கு அதை எந்த அளவிற்குப் பயன்பட வேண்டுமோ அதற்கு மட்டுமே அந்த அடையா ளங்கள்; அதுவும் நீண்ட காலத்திற்கு அதைப் பயன்படுத்த வேண்டிய தில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வருவோம் என்ற பெரியார் தத்துவத்தை, திராவிடர் இயக்கத் தத்துவத்தை, சமூகநீதி தத்துவத்தை எடுத்து தெளி வாக முன்வைப்போம் என்பதுதான் மிக முக்கியம்.
அரசியல் களம் அல்ல; சமுதாய தளம்
அந்த வகையிலே மீட்டுருவாக்கம் செய்வதற்காக இது ஒரு அரசியல் களம் அல்ல; மாறாக சமுதாய தளம். இந்த சமுதாய தளத்தை நாம் பக்குவப்படுத்தி னால்தான், மக்களைப் பக்குவப்படுத்தினால்தான்  இந்த உணர்வுகள் வரும். பார்ப்பனர்கள் இப்போது மற்றவர்களைத் தூண்டிவிட்டு, எப்படி கூலிப் படைகளை ஏவி கொலைகள் நடக்கிறதோ, அதுபோல் பல பேரை ஏவிவிட்டு, நீங்கள் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்துகொள்ளுங்கள்; அவர்கள் உங்களுக்குப் பதில் சொல்வார்கள்; நீங்கள் அவர்களுக்குப் பதில் சொல் லுங்கள். ஆகவே, நாங்கள் பத்திரமாக இருப்போம் என்கிற தந்திரத்தைக் கையாள்கிறார்கள். ஆனால், எங்களுக்கு இந்தத் தந்திரம் எல்லாம் ஈரோட்டுப் பாடம் படித்தவர்களுக்குத் தெளிவாகத் தெரியும், இது புரியும். ஒரு பொது  இயக்கத்தைக் கட்டுவது
எனவே, எங்களுடைய அடுத்த திட்டம் என்பது ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு திட்டம் என்பதற்கு  ஒரு பொது  இயக்கத்தைக் கட்டுவது  என்று - அதிலே எங்களுடைய இயக்கங்கள் நிச்சயம் பங்காற்றும். அதனுடைய முதல் குரல் தருமபுரியிலே கேட்கவிருக்கிறது. அதனுடைய முதல் தெளிவான முழக்கம் கேட்கவிருக்கிறது.
தருமபுரியில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு
அதுதான் வருகின்ற 9 ஆம் தேதியன்று அதே தருமபுரியிலே ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்பது மிகப்பெரிய ஒரு மாநாடாக நடைபெற விருக்கிறது என்று கூறி, அதற்கும் உங்களுக்கு அழைப்பு விடுத்து, இவ்வளவு சிறப்பாக இந்த விழாவை நடத்திய உங்கள் அனைவருக்கும் நன்றி! என்னோடு ஒத்துழைத்து, என்மீது நம்பிக்கை வைத்திருக்கிற உங்களுக்கு நன்றி! எல்லோருக்கும் நன்றி!! யார் யார் இந்த சமுதாயத் திலே எங்களுக் கெல்லாம் அரசியலுக்கு அப்பாற் பட்டு நின்று ஒத்து ழைக்கிறார்களோ, அவர்கள் எங்களுக்காக அல்ல வருங்கால சந்ததிகளுடைய வாழ்வுக்காக - மானமீட் பரர்களாக இருக்கவேண்டும் என்று சொல்லி, எந்த விலையும் கொடுக்கத் தயார்!
இவ்வளவு பெரிய விழாவை ஏற்பாடு செய்து, இந்த விழாவிற்கு நீங்கள் எல்லாம் வந்து உற்சாகப் படுத்திய உங்களுக்கு நிச்சயமாக உழைப்போம். கடைசிவரையிலே நான் உழைப்பேன். நம்பிக்கை யோடு உழைப்பேன். தந்தை பெரியார் அவர்களிடம் காட்டிய விசுவாசத்தை அந்தக் கொள்கையிடம் காட்டுவதுதான் என்னுடைய ஒரே பணியாக இருக்கும். அதற்கு என்ன விலை கொடுக்க வேண்டு மானாலும், அந்த விலையைக் கொடுக்கத் தயார்! தயார்!! தயார்!!! என்று அறிவிக்கின்ற மேடையாகத் தான் இந்த மேடையைப் பயன்படுத்திக் கொள் கிறோம். எனவே, மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்; மீட்பதற்கு எப்போதும் தயாராக இருப்போம். மீட்டுருவாக்கம்தான் நம்முடைய ஒரே பணி என்று கூறி முடிக்கின்றேன். வணக்கம். நன்றி!
வாழ்க பெரியார்! வளர்க சுயமரியாதை!! வளர்க பகுத்தறிவு!!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் உரையாற்றினார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...