Monday, October 22, 2012

தினமலர்கள் தயார்தானா?


பார்ப்பனர்கள் எடுத்து வைக்கும் (வி) வாதம் எப்பொழுதும் அறிவுப் பூர்வமாக இருக்காது; அது திருவாளர் சோ இராமசாமியாக இருந்தாலும் சரி, திரு. குருமூர்த்தியாக இருந்தாலும் சரி ஏடு எழுதும் தினமலர் வகையறாவாக இருந்தாலும் சரி பிரச்சினையை திசை திருப்புவதாக இருக்குமே தவிர, எழுப்புகிற வினாவுக்கு நேரிடையான பதிலாக இருக்காது; பந்தை அடிக்க முடியாதவர்கள் காலை அடிக்க மாட்டார்களா? அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வெறும் ஏட்டுப் படிப்பு - பத்திரிகை தின்னும் இந்து மே(ல்)தாவிகள்.
சிறீரங்கத்தில் நீண்ட காலமாக உணவு விடுதி நடத்திக் கொண்டு வந்த பார்ப்பனர் ஒருவர் திடீரென்று பிராமணாள் என்ற பெயரைத் திணித் துள்ளார்.
இதுகுறித்து இப்பொழுது பிரச்சினை எழுந்துள்ளது. திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. முறைப்படி உணவு விடுதி உரிமையாளரிடம் எடுத்துக் கூறியுள்ளது. தவறான பேர் வழிகளின் தவறான வழிகாட்டு தலால் பிராமணாளை நீக்க முடியாது என்று கூறி விட்டார்.
சிறீரங்கம் என்பது முதல் அமைச்சர் தொகுதி என்பதாலும், முதல் அமைச்சர் தமது இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவரின் பெயரையும் இந்தப் பிரச்சினையில் பயன்படுத்திக் கொண்டு, ஆணவத்துடன் பார்ப்பனர்கள் செயல்படத் தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அறிக்கையின் வாயிலாக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலையில் முதல் அமைச்சருக்கு வேண்டுகோளும் வைத்துள்ளார் (19.10.2012).
இதுபோன்ற பிராமணாள் எதிர்ப்பு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல 1940-களில் இரயில்வே நிலையங்களில் பிராமணாள் - சூத்திராள் என்று பெயர்ப் பலகை பொறிக்கப்பட்டு இருந்த காலந் தொட்டு, இந்த இயக்கம் இந்தப் பிரச்சினையைச் சந்தித்து வெற்றி பெற்றும் வந்திருக்கிறது.
இப்பொழுது, திடீரென்று சிறீரங்கத்தில் மீண்டும் பிராமணாள் முளைத்து - பிரச்சினைப் புயலைக் கிளப்பி விட்டு இருக்கிறது.
இதுகுறித்து நேற்றைய தினமலரில் (21.10.2012) கிண்டல் - கேலி!
கோனார் பெரிய மெஸ் இருக்கு... தமிழகம் முழுக்க தேவர் பெயர்ல, பல வறுகடை நிலையங் களும், செட்டியார் பெயரில் பல துணிக்கடைகளும் இருக்கு.
இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காத நீங்க பிராமணாள் பெயரை மட்டும் எதிர்க்கிறது ஏன்? அரசியல் பண்ண... உங்களுக்கு இப்போதைக்கு வேற காரணம் எதுவும் இல்லையோன்னுதான் எனக்கு டவுட்! என்கிறது தினமலர்.
ஜாதி என்பது வேறு; வருணம் என்பது வேறு; இதே உணவு விடுதியில்  அய்யர் உணவகம் என்று போட்டு இருந்தால்கூட திராவிடர் கழகம் எதிர்ப்பு வந்திருக் காது. பிராமணாள் என்பது ஜாதியல்ல - வருணத்தின் பெயர்  - இந்து மத சாஸ்திரப்படி பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன்; சத்திரியன் பிர்மாவின் தோளில் பிறந்தவன்; வைசியன் பிர்மாவின் இடுப்பில் பிறந்தவன்; சூத்திரன் என்பவன் பிர்மாவின் காலில் பிறந்தவன்.
இப்பொழுது சத்திரிய, வைசிய என்பது சட்டப் படியே இல்லை என்று கூறியாகி விட்டது. இவர்கள் சாஸ்திரப்படி நடந்து கொள்ளாததாலும் பிராமணர் களை வழிபடாததாலும் சூத்திரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டனர் (மனுதர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 43).
பிராமணன், சூத்திரன் என்ற நிலைப்பாடு மட்டும் சாஸ்திரப்படியும், சட்டப்படியும் இருக்கிறது.
பிராமணன் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் மட்டுமல்ல; இந்த உலகத்தையே பிர்மா படைத்தது பிராமணர்களுக்காகதான்! சூத்திரர்கள் பிர்மாவின் காலில் பிறந்தவர்கள் மட்டுமல்லர்; பிராமணர்களுக்கு ஊழியம் செய்யப் பிறந்தவர்கள் என்பதுதான் மனு சாத்திரம் (அத்தியாயம் 1 சுலோகம் 9).
சூத்திரன் யார் என்றால் ஏழு. ஏழு வகைப்படுபவை என்று கூறும் மனுதர்மம் (அத்தியாயம் 8 சுலோ கம் 415) அதில் ஒன்று விபசாரி மகன் என்பதாகும்.
இந்த இடம்தான் முக்கியம் - நீ பிராமணன் என்றால் நான் யார்? என்ற கேள்வி எழுகிறதா - இல்லையா? என்னை சூத்திரன் என்று இழிவுபடுத் துகிறதா - இல்லையா? அதற்காகத்தான் பிராமணன் பெயர் எதிர்ப்பு - அழிப்புப் போராட்டம்.
செட்டியார் மெஸ் என்று வைத்திருந்தால் மற்ற ஜாதியினரை விபச்சாரி மகன் என்று சொல்லுவது ஆகாதே - இது அப்படி அல்லவே!
ஒருத்தி உன் தெருவில் தன் வீட்டில் இது பதிவிரதை வீடு என்ற போர்டு மாட்டிக் கொண்டால் மற்றவர் வீடு என்ன என்று அர்த்தம்?  எளிதிற் புரியும் படி தந்தை பெரியார் அவர்கள் இவ்வாறு சொன்னது இதற்காகத்தான்.
இதற்குமேலும் தினமலர்கள் பிராமணாளுக்கு வக்காலத்து வாங்கி எழுத ஆரம்பித்தால் வெளிப் படையாக வருண யுத்தத்துக்குத் தயாராகி விட்டார்கள் என்றே பொருள்படும்.
தயார்தானா?
குறிப்பு: இன்றைய Dr.நமது எம்.ஜி.ஆர். ஏட்டிலும் (அ.இ.அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ ஏடு) தினமலர் கக்கியதை நகல் எடுத்து எழுதியிருக்கிறது. இதே பதில்தான் அதற்கும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...