Tuesday, October 23, 2012

அந்தோ பாவம்! நமது எம்.ஜி.ஆர்!


(Dr. நமது எம்.ஜி.ஆர். 2.10.2012) இதே படமும், கட்டுரையும் இதற்கு முன்பும் (13.3.2012) வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாவது முறையும் படத்தோடு வெளியிடப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. அதுவும் பூணூலைத் தூக்கிப் பிடித்து இறுமாப்புடன் காட்டுவது போல படம் வெளியிட்டு இருப்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது. இதுதான் இன்றைய அண்ணா திமுகவை, துக்ளக் சோ ராமசாமியும், தினமலரும், தினமணியும் தூக்கிக் கொண்டு ஆடுவதன் சூட்சமம் புரிகிறதா?
கடைசியாக உள்ள பத்தியைக் கவனியுங்கள். சுலபமாக மலஜலம் கழிக்க பூணூலைக் காதுகளில் சுற்றிக் கொள்ள சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் நிலையைப் பார்த்தீர்களா?
ராமனைக் காட்டி சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வது துரோகம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சொல்லி விட்டாராம். அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நாளேடான Dr. நமது எம்.ஜி.ஆர். அத்திரிபாட்சா கொழுக்கட்டை! மாதிரித் தாவிக் குதிக்கிறது (19.10.2012 Dr. நமது எம்.ஜி.ஆர்.)
திராவிடர் கழகத் தலைவர் கூறிய குற்றச்சாட்டுக்குப் பதில் கூறத் துப்பில்லாத நிலையில் கலைஞரிடம் தாவுகிறது.
நீ ஏன் பரிட்சையில் ஃபெயில் என்று கேட்டபோது பக்கத்து வீட்டு பக்கிரிசாமியும் ஃபெயில் எனும் பையன் மாதிரி பதில் சொல்லலாமா? பெரும்பான்மை இந்து மக்களின் இறை நம்பிக்கையோடு தொடர்புடைய ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் மாற்று வழியில் சேது சமுத்திரத் திட்டத்தை மேற்கொள்ளலாம் என்னும் ஏகோபித்த மக்களின் கருத்தையே எங்கள் புரட்சித் தலைவி அம்மா அவர்களும் பிரதிபலிக்கிறார்கள் என்று எழுதுகிறது நமது எம்.ஜி.ஆர்.
ஓ, அப்படியா? திடீர் ஞானோதயமா இது? ராமபிரான் செல்வி ஜெயலலிதாவின் கனவில் தோன்றி என்னைக் காப்பாற்றுத் தாயே! என்று கண்ணீர் விட்டுக் கதறினாரா?
இதற்குமுன் இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தியே தீர வேண்டும் என்று அச்சிட்டுக் கொடுத்த அண்ணா தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்னாயிற்று?
2001 சட்டமன்ற தேர்தல் அறிக் கையில் (பக்கம் 84) மணல்மேடுகள், பாறைகள் என்று சொன்னதோடு நின்று இருந்தாலும் பரவாயில்லை. அந்தப் பகுதிக்கு ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு விட்டு, இப்பொழுது ராமன்பாலம் என்று திடீர் அவதாரம் எடுத்தது எப்படி?
ஆடம் என்ற கிறிஸ்தவர் ராமன் எனும் இந்து மதத்துக்கு மாறி விட்டாரோ!
பெரும்பான்மை மக்களின் இறை நம்பிக்கையாம் - ஏகோபித்த முடிவாம் - அதனைத்தான் அவர்களின் புரட்சித் தலைவி எதிரொலிக்கிறாராம்!
எந்த பெரும்பான்மை மக்கள் கியூவில் நின்று ஏகோபித்தவகையில் தங்கள் நம்பிக்கையைச் சொன்னார் களாம்?
கட்சியின் 41ஆம் ஆண்டு விழாவில் கொடியேற்றி இலட்சிய முழக்கம் செய்தாரே - கட்சியின் பொதுச் செயலாளர் _ அதில் என்ன பேசினார்?
தந்தை பெரியாரைக் குறிப்பிட்டுள்ளாரே, அறிஞர் அண்ணாவைக் குறிப்பிட்டுள்ளாரே - அந்த இரு தலைவர்களின் வழி நடப்பதாகப் பறைபிடித்து முழங்கியுள்ளாரே!
அந்தத் தலைவர்களின் ராமன் பற்றிய கருத்தென்ன? பெரும்பான்மை மக்களின் ஆற்றோடு அடித்துச் சென்றார்களா? அல்லது எதிர் நீச்சல் போட்டு இலட்சியக் கருத்துக்களை எடுத்துச் சொன்னார்களா?
இராமாயணத்தை கொளுத்த வேண்டும் என்று டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளையோடும், நாவலர் சோம சுந்தர பாரதியாரோடு வாதிட்டு வென்றவர் அறிஞர் அண்ணாவின் வரலாறு தெரியுமா?
இராமன் படத்தையும், இராமாய ணத்தையும் கொளுத்தும் போராட் டத்தை நடத்திய போர் தலைவர் பகுத் தறிவுப் பகலவன் பெரியார் என்ற வர லாற்றின் நுனிப் புல்லாவது புரியுமா?
இராமாயணம் என்பது ஆரியர் _ திராவிடர் போராட்டமே என்ற வரலாற்று உண்மையை வெளியில் கொண்டு வந்தது திராவிடர் இயக்கம் என்பது தெரியுமா? ஆரியத் தலைமை புரட்டிப் போடுகிறதா? அண்ணாவின் தீ பரவட்டும் படித்ததுண்டா? தந்தை பெரியார் அவர்களின் இராமாயணப் பாத்தி ரங்கள் என்ற நூலைப்பற்றிக் கேள்விப்பட்டதாவது உண்டா?
அது ஆங்கிலத்திலும் இந்தியிலும் கூட மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்ற தகவலாவது தெரியுமா?
இவற்றின் அரிச்சுவடி கூட தெரியாதவர்கள் பெரியார் பெயரையும், அண்ணா பெயரையும்  திராவிட என்ற இனப் பண்பாட்டுப் பெயரையும் உச்சரிக்க உரிமை உண்டா?
புத்தர் இயக்கத்தில் ஆரியம் ஊடுருவுவதுபோல திராவிடர் இயக்கத் தில் ஆரியம் ஊடுருவி விட்டது என்று சொன்னால், அதனை மறுக்க முடியுமா?
அதற்கு ஆதாரத்தை வெகுதூரம் சென்று தேட வேண்டிய அவசிய மில்லை; அ.இ.அ.தி.மு.கவின் அதிகாரப் பூர்வ நாளேடான Dr. நமது எம்.ஜி.ஆர். ஏட்டிலிருந்தே எடுத்துக் கூற முடியுமே!
கையில் எடுத்துக் கொள்ளுங்கள் அந்த ஏட்டை நாள் 2.10.2012 11ஆம் பக்கத்தைப் புரட்டுங்கள்! தலைப்பு என்ன தெரியுமா?
பூணூல் அணிவதன் தத்துவம்
என்ன சொல்லப்பட்டுள்ளது தெரியுமா? பூணூல் அறுப்புப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு, எல்லோரும் காயத்ரி மந்திரம் உபதேசம் செய்து பூணூல் அணிவிப்பது நல்ல விளைவை ஏற்படுத்தும்
சபாஷ்! பூணூலை அறுக்கக் கூடாதாம்!- எல்லோரும் பூணூலை அணிந்து கொள்ள வேண்டுமாம்; திருவாளர் சோ சொன்ன அதே கருத்தை நமது எம்.ஜி.ஆரும் கூறு கிறதே _ ஒருக்கால் இந்தக் கட்டு ரையை எழுதியதே சோ தானோ! திரை மறைவில் என்னென்னவெல்லாம் நடக்கிறதோ! இனி அண்ணா திமுக வெளியிடும் அண்ணா,  தந்தை பெரியார் படங் களுக்குப்  பூணூல் போட்டாலும் ஆச் சரியம் இல்லை. பார்க்கப் போகிறது நாடு.
காயத்ரி மந்திரத்தையும் படிக்க வேண்டுமாம். பெரியார் இப்படித் தான் எழுதி இருக்கிறார் -_ அறிஞர் அண் ணாவும் இப்படித்தான் பேசி இருக்கிறார் என்று சொன்னாலும் சொல்வார்கள். திருநீற்றின் மகிமை பற்றியும் இன்னொரு நாள் (9.10.2012 பக்கம் 11) எழுதப்பட்டுள்ளது.
இந்தக் காயத்ரிகளையும், பூணூ லையும் பற்றி எத்தனை எத்தனைக் கட்டுரைகளில் சொற்பொழிவுகளில் புரட்டிப் புரட்டி எடுத்திருப்பார்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண் ணாவும்? என்ன தைரியம் இருந்தால் நமது தலைமுறையிலேயே ஆரியமும், அதன் தொங்கு சதைகளும் பெரியார் அண்ணா கொள்கைகளையே திரிபுவாதம் செய்வார்கள்? அவர் களின் பெயர்களை உச்சரித்துக் கொண்டே அவர்களின் கொள்கை களைக் கொச்சைப்படுத்துவார்கள்!
இந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் ராமனைக் காட்டி சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வது துரோகம் என்று கூறி விட்டாராம் _ துள்ளிக் குதிக்கிறது நமது எம்.ஜி.ஆர்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செய லாளருக்குத் தனிப்பட்ட முறையில் பக்தி இருக்கலாம்; மூடநம்பிக்கை வாதியாக இருக்கலாம்; யாகத்தில் அசாத்திய பிடிப்பு! இருக்கலாம். அதனை அண்ணா பெயரில் உள்ள கட்சியின் கொள்கையாக எப்படி திணிக்கலாம்? அந்த உரிமையை அவருக்குக் கொடுத்தது யார்?
வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம்; கட்சியில் அண்ணா என்ற பெயரை எடுத்துவிடலாம்; கொடியில் பொறிக்கப்பட்ட அண்ணாவின் உருவத்தையும் அகற்றி விடலாம்; மேலும், கூடுதலாக கட்சியில் உள்ள திராவிட என்ற இனச் சுட்டுப் பண்பாட்டு அடையாளத்தையும் தூக்கி எறியலாம்; அதற்குப் பதிலாக அக்கிர கார முன்னேற்றக் கழகம் என்றோ, ஆன்மீக முன்னேற்றக் கழகம் என்றோ பெயர் சூட்டிக் கொள்ளலாம்.
இன்னொரு முக்கிய நிபந்தனை; தப்பித் தவறிக்கூட தந்தை பெரியாரையோ, அறிஞர்அண்ணா பெயரையோ பயன்படுத்தக் கூடாது _ உச்சரிக்கவும் கூடாது.
இப்படியெல்லாம் கொள்கையைப் பற்றி எண்ணக் கூடிய, கவலைப்படக் கூடிய ஒரே ஒரு தொண்டர்கூட அக்கட்சியில் இல்லாது போனதற்கு எத்தனை எத்தனைப் பரிதாபம் வேண்டுமானாலும், போடலாம்!
நமது எம்.ஜி.ஆர். ஏட்டுக்குக் கடைசியாக ஒன்று  கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப் பட வேண்டாம்!

- மின்சாரம் -


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...