Thursday, October 4, 2012

கருப்புச் சட்டை - ஏன்? : கலைஞர் விளக்கம்



சென்னை, அக்.4- கருப்புச் சட்டை அணிந் திருப்பது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர்களிடம் அளித்த விளக்கம் வருமாறு:
செய்தியாளர் :- இன்றையதினம் கருப்புச் சட்டை அணிந்து வந்திருக்கிறீர்கள். நாளையதினம் தான் போராட்டம் அறிவித்திருந்தீர்கள். பொதுவாக உங்களை வெள்ளுடை பார்த்துத் தான் எங்களுக்குப் பழக்கம். இன்றைக்கே கருப்பு சட்டை அணிந் திருப்பதற்கு ஏதாவது முக்கிய காரணம் உண்டா?
இழிவை எடுத்துக்காட்ட....
கலைஞர் :- தமிழ்நாட்டிற்கு சில மாதங்களாக ஏற்பட்டிருக்கின்ற இழிவை எடுத்துக்காட்டவும், அந்த இழிவைப் போக்குவதற்கு எடுக்கின்ற முயற்சிகளுக்கு கருப்புச் சட்டங்களைக் கொண்டு இன்றைய ஆட்சியாளர்கள் அதை அடக்க முனைவதைக் கண்டிப்பதற்கு இந்தக் கருப்புச் சட்டையை இன்றைக்கே அணிந்திருக்கிறேன். நாளை தான் கழகத்தின் தொண்டர்கள், தோழர்கள், உடன்பிறப்புகள் அனைவரும் அணிய வேண்டும் என்று தான் முடிவெடுத்தோம். ஆனால் வேண்டு மென்றே காவல் துறையின் மூலமாக பல பகுதிகளில் இதற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது. தடை விதிக்கப்பட்டு விட்ட காரணத்தால், அதை அணிவகுத்துச் சென்று மீறுவதால் எதுவும் அசம்பா விதங்கள், வன்முறைகள், விரும்பத்தகாத காரியங் கள் ஏற்பட்டு, பொது மக்களுக்கு சோதனை உரு வாகக் கூடாது என்ற எண்ணத்தினால், நாளைக்கு அணிவகுப்பாக இருந்து இதை நடத்துவதை விட இன்று முதலே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கருப்புச் சட்டை அணிந் தால் என்ன என்று எனக்குத் தோன்றியது. அதன் அடையாளமாகத் தான்  இன்றைக்கு கருப்புச் சட்டை அணிந்திருக்கிறேன். இதைப் பற்றி முரசொலியில் இன்று கடிதம் எழுதியிருக்கிறேன். அந்தக் கடிதத்தை விளக்கமாக நாளைக்குப் படித்தால், நான் இதை அணிந்திருப்பதற்கான நோக்கத்தையும், அதற்குரிய முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்.
பெரியார் காலத்தில் கருப்புச் சட்டைப் படை!
செய்தியாளர் :- திராவிட இயக்கப் போராட் டங்களில் கருப்புச் சட்டை அணிந்து எதிர்ப்பைத் தெரிவிப்பது என்பது நீண்ட காலமாக தொடர்ந்து வந்த ஒரு மரபு. இதற்கு முன்பு எப்போது கருப்புச் சட்டை போராட்டம் நடைபெற்றது?
கலைஞர் :- கருப்புச் சட்டை அணிவதையே பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தில் நாங்கள் எல்லாம் இருந்த போதே அறிமுகப்படுத்தி, கருப்புச் சட்டை படை என்று ஒன்றை உருவாக்கினார். அந்தக் கருப்புச் சட்டைப் படையில் அப்பொழுதே படைவீரர்களில் ஒருவனாகச் சேர்ந்தவன் நான். அதன் முதல் வரிசையிலே கருப்புச் சட்டை தொண்டனாக நான் இடம் பெற்றிருக்கிறேன். அப்போது அந்தக் கருப்புச் சட்டை படைக்கு  செயலாளர்களாக இருந்தவர்களில் ஒருவர் மறைந்த நண்பர் ஈ.வி.கே. சம்பத் அவர்கள் ஆவார்கள். சம்பத்தும், நானும் குடிஅரசு அலுவலகத்திலே இருந்த போது, அவர் முன்னிலையிலே நான் கையெழுத்திட்டு - இருவரும் கை குலுக்கிக் கொண்டு - இந்தப் படையில் நான் அன்றைக்குச் சேர்ந்திருக்கிறேன்.
செய்தியாளர் :- துண்டறிக்கை விநியோகிக்கும் போராட்டத்தில் நாளைக்கு எந்தெந்த இடங்களில், யார் யார் தலைமை வகிப்பார்கள் என்று முடிவாகியிருக்கிறதா?
துண்டறிக்கை விநியோகம்
கலைஞர் :- ஆயிரம் விளக்குத் தொகுதியிலே நான் துண்டறிக்கை வெளியிடவிருக்கிறேன். வில்லிவாக்கத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியர் துண்டறிக்கைகளை விநியோகிப்பார். கொளத்துரில் பொருளாளர் மு.க. ஸ்டாலின் துண்டறிக்கைகளை விநியோகிப்பார். நாளைய தினம் அவரவர்களும், அவரவர்களுக்குரிய எல்லைகளை வகுத்துக் கொண்டு இந்தப் பிரசுரங்களை விநியோகிப்பார்கள். அந்தப் பிரசுரங்களில் எந்தவிதமான சட்ட விரோதமான  வார்த்தைகளும், அல்லது அநாகரிகமான வார்த்தைகளும் இடம் பெறாது. இடம் பெறக் கூடாது என்பது தலைமைக் கழகத்தின் ஆணை.
செய்தியாளர் :- துண்டறிக்கையின் மாதிரி ஏதாவது சொல்லப்பட்டி ருக்கிறதா?
கலைஞர் :- இன்றைக்கு முரசொலியில் துண்டறிக்கையிலே இடம் பெற வேண்டிய வாசகங்களின் மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.






இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...