Thursday, October 4, 2012

ஏற்கெனவே ஆசிரியர் பணிக்குத் தேர்வானவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு - தேவையற்றது


சத்துணவுப் பணியாளர்கள்: நீதிமன்றத்தில் மேல்முறையீடு வேண்டாம்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை
ஏற்கெனவே ஆசிரியர் பணிக்குத் தேர்வானவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு - தேவையற்றது
ஆசிரியர் பயிற்சி பெற்று தேர்வானவர்களுக்கு மற்றொரு தேர்வு - சமூகநீதிக்கு எதிரானது - மறுபரிசீலனை செய்ய வேண்டும்; சத்துணவுப் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக மேல் முறையீடும் தேவையில்லை என்று முதல் அமைச்சருக்குத் திராவிடர் கழகத் தலைவர் விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு:
தமிழ்நாட்டில் பல ஆண்டுகாலம் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தவர்கள் மீண்டும் ஒரு தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பணி புரிய வாய்ப்புள்ளவர்கள் என்பது போன்ற ஒரு நிலைமையை தமிழக அரசு உருவாக்கியது மனிதநேயக் கண்ணோட்டத்தில் தவறான ஒன்றாகும்.
ஆசிரியர்கள், தங்களது அறிவுத் திறனை - நவீனமயப்படுத்திக் கொள்ளுதல் அவசியம் - தற்காலத் தேவைக்கேற்ப Updating their knowledge and Skills என்பது முக்கியம்தான் என்பதை நாம் மறுக்கவில்லை. அதற்கான பயிற்சிகளை ஆசிரியப் பணியில் நீடித்தே அவ்வப்போது கொடுக்கலாமே!
அதை விட்டுவிட்டு அவர்களை மற்றொரு புதுவகை நுழைவுத் தேர்வை எழுதி தேர்வெனும் தடை ஓட்டப் பந்தயத்தில் கலந்து தாண்டி ஜெயித்துக் காட்டுங்கள் என்பது விரும்பத்தக்கதல்ல. பணி அனுபவம் வாய்ந்தவர்களுக்குக் குறிப்பிட்ட கால அவகாசம் தந்து, அதற்குள் அவர்கள் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொண்டு, போட்டியிடலாம் என்று அரசு ஆணையிடலாம்.
அப்படித் தகுதி பெற்றவர்கள் (Department test எழுதி கூடுதல் தகுதி பெற்றவர்களாகி வாருங்கள் என்று ஆணை பிறப்பித்து) அப்படி வருகின்றவர்கள் அதன் அடிப்படையில் பதவி உயர்வு, ஊக்க போனஸ் என்று வைத்தால் சோம்பிப் பின்தங்கும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் கடுமையாக உழைத்து முன்னேறவே முயற்சிப்பார்கள்!
இப்படிப்பட்ட பாதிப்புக்குள்ளாவோர் பெரிதும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, கிராமப்புறங்களிலிருந்து வந்து பணியில் சேர்ந்தவர்கள் என்கிறபோது இப்பிரச்சினை சமூகநீதிக் கண்ணோட்டத்தோடும், மனிதநேயத்துடன் கூடிய ஈர நெஞ்சத்துடனும் அணுக வேண்டிய ஒன்று என்பதை, தமிழக அரசுக்குக் குறிப்பாக முதல் அமைச்சர் அவர்களுக்கு நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் மறுபரிசீலனை தேவை.
சத்துணவுப் பணியாளர்கள் நீக்கம்
சத்துணவுக் கூடங்கள், அங்கன்வாடிகளுக்கு 29 ஆயிரம் ஊழியர்கள் முறைப்படி - இடஒதுக்கீடு - உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களைப் புறந்தள்ளி, நியமனம் செய்யப்பட்டுள்ளதால் சென்னை உயர்நீதிமன்றம் அரசின் நியமன ஆணையை ரத்து செய்துவிட்டது. உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள குறைபாடுகளைச் சரி செய்து உரிய முறையில் புதிதாக நியமனம் செய்வதே சரியானதாகும். மாறாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்று முதல் அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறோம்.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தால் அரசின் நிலை மிகவும் கேலிக்குரியதாக ஆகாதா என்பதையும் தமிழக அரசின் தலைமை சிந்திக்க வேண்டும்.


சென்னை  
4.10.2012
கி.வீரமணி, 
தலைவர்,
திராவிடர் கழகம்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...