Thursday, October 25, 2012

மற்றுமொரு முரளீஸ் கஃபேயா?


1957ஆம் ஆண்டில் சென்னை திருவல்லிக் கேணியில் முரளீஸ் கஃபே என்னும் பெயரில் உணவு விடுதியை நடத்தி வந்த பார்ப்பான் மட்டும் பிராமணாள் பெயரை நீக்க மறுத்தார்.
தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டத்தின்போது பல ஊர்களிலும் பார்ப்பனர்களே முன்வந்து அந்த வருணாசிரமப் பெயரை நீக்கி விட்டனர். நீக்காத ஊர்களில் திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் பெயரை அழித்ததுண்டு.
திருவல்லிக்கேணி பார்ப்பனர் முரண்டு பிடித்த காரணத்தால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பிரச்சார நோக்கில், தொடர் போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார். ஆறு மாதங்களுக்கு மேல் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் 1010 கருஞ்சட்டைத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கடைசியாக ஓட்டல் முதலாளி சரண் அடைந்த காரணத்தால் போராட்டம் கை விடப்பட்டது. பின்னர் அந்த உணவு விடுதிக்கு அய்டியல் கஃபே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சிறீரங்கத்திலும் மீண்டும் ஒரு முரளீஸ் கஃபே போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்று தெரிகிறது.
நீண்ட காலமாக நடைபெற்று வந்த அந்த உணவு விடுதியின் பெயரில் திடீரென்று இப்பொழுது பிராமணாள் திணிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? எந்தப் பின்னணியில் இது நடந்திருக்கிறது?
முதல் அமைச்சர் ஜெயலலிதா சிறீரங்கம் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் - முதல் அமைச்சரே நமது இனத்தைச் சேர்ந்தவர் - பிராமணாள் என்று பெயர் சூட்டினால் யார், என்ன செய்ய முடியும்?  அதிகாரம் நம் கையில்தானே இருக்கிறது என்ற தைரியத்தில் இது நடக்குமானால் யாருக்குக் கெட்ட பெயர் என்பதைச் சம்பந்தப் பட்டவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
ஆளும் கட்சியானபின் கூடுமானவரை பிரச்சினை உருவாகாமல் தொலைநோக்கோடு செயல்படுவது தான் புத்திசாலித்தனமாகும். மாறாக ஆளும் நிலையில் இருந்து கொண்டு பிரச்சினைக் குத் தூபம் போடுவது புத்திசாலித்தனம் ஆகாதே.
இதுகுறித்து வெளிப்படையாக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விட்டும் முதல் அமைச்சர் எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்காதது கெட்ட வாய்ப்பே!
மாறாக ஆளுங்கட்சியின் அதிகார பூர்வமான நாளேட்டில் பிராமணாளுக்கு வக்காலத்து வாங்கி எழுதியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்து கிறது.
திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உரிய முறையில் அதற்குப் பரிகாரம் தேடப்படும் என்றாலும், ஆளும் அ.இ.அ.தி.மு.க.வின் இந்தப் போக்கு - அதன் பிற்போக்குத் தன்மையையும், பெரியார் - அண்ணா என்கிற தலைவர்களின் பெயர்களை உதட்டளவில் மட்டும் உச்சரிக்கக் கூடியவர் முதல் அமைச்சர் என்ற நிலையையும் தான் வெளிச்சத்துக்குக் கொண்டு வரும். முன்பு ஒருமுறை சட்டப் பேரவையிலேயே ஆம் நான் பாப்பாத்திதான்! என்று சொல்லப் போய் அதன் காரணமாகக் கடும் விமர்சனத்துக்கு ஆளானவர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது பெரியார் பிறந்த மண்! - மேலும் இந்தப் பிரச்சினைக்கு எதிராக தந்தை பெரியார் அவர்களே போராட்டம் நடத்தியுள்ளார்  - நடத்தி வெற்றியும் பெற்றுள்ளார் என்று தெரிந்து கொண்ட பிறகும் கண்டும் காணாமல் இருப்பதோ, இந்தப் பிரச்சினை யில் ஒரு பொதுக் கூட்டம் நடத்துவதற்குக்கூட அனுமதி மறுப்பதோ நடைபெறும் தமிழ்நாடு அரசின் சிந்தனைப் போக்கு எத்தகையது என்பதை எடுத்துக்காட்டுவதாகும்.
(அண்ணா) திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்குப் பதிலாக அக்கிரகார முன்னேற்றக் கழகம் என்று சாதாரண பொது மக்கள் மத்தியில் பரவலாகப் பேசும் ஒரு நிலையைத்தான் இது ஏற்படுத்தும். அந்நிலை ஆட்சிக்கு நல்லது தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
திராவிடர் கழகம் ஒன்றும் அரசியல் கட்சியல்ல; பிரச்சாரம், போராட்டம் என்ற இரண்டையும் அணுகு முறையாகக் கொண்ட சமூகப் புரட்சி இயக்கமாகும்.
இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகம் ஒரு பக்கம் பிரச்சாரம் மற்றொரு பக்கம் போராட்டம் என்று தொடங்க ஆரம்பித்தால் அந்த நிலைக்குத் தமிழ்நாட்டு மக்களின் பெருத்த ஆதரவு கிட்டும் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை. வீணாக அரசுக்குக் கெட்ட பெயர் ஈட்ட வேண்டாம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...