Saturday, October 13, 2012

உஷ்.. கடவுள் தூங்குகிறார்!


கடவுள் சம்பந்தமாக மூன்று செய்திகள் ஏடுகளில் வெளி வந்தவை தான்.
1. குப்புறப்படுத்துக் கொள்! காளை மாடு தாண்டும்
2. சக்கிலி வீரனுக்கு குவார்ட்டர் படையல் -_ 1 கும்மாளம்தான்.
3. கடவுளுக்குத் தேவை தூக்கம்.
கொஞ்சம் அறிவைப் பயன்படுத்திச் சிந்தித்துப் பாருங்கள் - பெரியார் கூறுவது எவ்வளவுப் பெரிய உண்மை என்பது விளங்காமற் போகாது.
பெருமாள் கோவிலில் மாடு தாண்டும் வழிபாடு ராசிபுரம்: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோவி லில் நடந்த, மாடு தாண்டும் வினோத நிகழ்ச்சியில், நாமக்கல், சேலம் மாவட்டத்தை சேர்ந்த, ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக் கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி உற்சவ பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ராசிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை விரதமிருந்து, பொன் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்து, ஸ்வாமியை வழிபட்டுச் செல்வர்.
கீழ் திருப்பதியில் உள்ள மாதிரி கோயிலில் ஏழுமலையான் நள்ளிரவு 1.30 மணிக்கு, அன்னமாச்சாரிய வம்சா வழியினரின் தாலாட்டு பாடலை கேட்டபடி உறங்குகிறார். அதிகாலை 3 மணிக்கு நித்திரையில் இருந்து எழுப்புவதற்காக அர்ச்சகர்கள் சுப்ரபாதம் பாடுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், மூன்றாவது சனிக்கிழமை, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கச்சுப்பள்ளி பெரு மாள் குடி பங்காளிகள், பொன்வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்து, ஸ்வாமிக்கு சிறப்புப் பூஜை செய்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து, ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்நிகழ்ச்சி, முன்னோர்கள் காலத்தில் இருந்து நடந்து வருகிறது. அதேபோல், நேற்று அக்குறிப்பிட்ட சமூகத்தினர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பொன் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்து, ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர். அதை தொடர்ந்து, மாடு தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. மாடு வரும் வழியில், பக்தர்கள் கீழே படுத்துக்கொண்டு வாக்கு கேட்டனர். ஸ்வாமி மாடு, பக்தர்களை தாண்டிச் செல்லும்போது, அதன் கால், பக்தர்கள் மேல் படாமல் சென்றால், வாக்கு பலிக்கும் என்பது ஐதீகம். மாடு தாண்டும் போது, மாட்டின் கால், வாக்கு கேட்பவர் மீது பட்டு விட்டாலோ அல்லது தாண்டாமல் நின்று விட்டாலோ, தங்களது வீட்டில் ஏதாவது கெடுதல் நடக்கும் என, பக்தர்கள் அஞ்சுவர். இந்த மாடு தாண்டும் நிகழ்ச்சியில், ராசிபுரம், பள்ளிப்பட்டி, தெற்குகாடு, காரவள்ளி, சின்னதிருப்பதி, ஜலகண்டா புரம், மூங்கிலேரிப்பட்டி, நாட்டாமங் கலம், டேனீஸ்பேட்டை, புதூர் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். - தினமலர் 7.10.2012
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றால் கண்கள் சிவக்க கடுகடு என்று பேசுபவர்கள், கடவுள் பக்திக்கு வாலைத் துருத்திக் கொண்டு வக்காலத்து வாங்குபவர்கள் இந்தச் செயலுக்கு என்ன சமாதானம் சொல்லுவார்களாம்?
மனிதனுக்கு மாடுதான் நல்வாக்குக் கொடுக்க வேண்டுமா? மாட்டை விட மனிதன் அறிவு கட்டையா? முதுகெலும்பின் மீது மாடு காலை வைத்து மிதித்தால் அதன் விளைவு என்ன? நரம்பியல் மருத்துவர்களைக் கேட்டுப் பாருங்கள். அதன் அபாயம் விளங்கும். இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை, ஆபத்தான காரியத்தை அரசு எப்படி அனுமதிக்கிறது?
செவ்வாய்க்கிரகத்திற்குச் சென்று ஆய்வு செய்து, அங்கே தண்ணீர் இருப்பதற்கு அறிகுறி தெரிகிறது என்று மனித அறிவு புதியன கண்டு பூரிக்கும் கால கட்டத்தில்,. இங்கு காளை மாட்டின் காலடியில் தவம் கிடக்கும் இந்த மனிதனை என் செய்வது!
தந்தை பெரியார் அவர்களின் கருத்தும், சிந்தனையும், திராவிடர் கழகத்தின் பணியின் அருமையும் இப்பொழுது புரிகிறதா இல்லையா?
குடித்துத் தீர ஒரு கொண்டாட்டம்!
குடித்துத் தீர வேண்டும் - _ கும்மாளம் அடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு கோயில் திருவிழா என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். அப்படி ஒரு கோயில் விழா! மதுரை _ மேலூர் அருகே எட்டி மங்கலம் கிராமத்தில் பொன்னு முனியசாமி, வீரணசாமி, மலையாள வீரன், சக்தி வீரன் என்று இந்த ஊர் கோயில் சாமிக்குப் பல நாம கரணங்கள்.
இந்த மாதத்தில் இந்தத் தேதியில்தான் கோயில் விழா என்ற கணக்கெல்லாம் கிடையாதாம். ஊரில் உள்ள ஆண்கள் எல்லாம் சாராய வெள்ளத்தில் குடித்து நீந்த வேண்டும் என்று எப்பொழுதெல்லாம் எண்ணு கிறார்களோ, அன்றெல்லாம் கோயில் விழாதான் _ கும்மாளம்தான்!
சேவல் அறுத்து, ரத்த புள்ளி காட்டி, சாராயம் காய்ச்சி கும்பிடு வார்கள்.  அறுக்கப்பட்ட சேவலை தீயில் சுட்டுப் பொசுக்கி பிச்சி சாப் பிடணுமாம் சமைக்கெல்லாம் கூடாதாம்!
(ஏதாவது அய்தீகத்தைத் திணிக்க வேண்டாமா?) சாமி கும்பிட வரும் எல்லாரும் கண்டிப்பாக தண்ணி  அடிச்சுத்தான் தீரணுமாம். விதி விலக்கெல்லாம் கிடையாதாம். குடித்துப் புரளா விட்டால் அது சாமி குத்தம் ஆகி விடாதா!?
இதுபற்றி ஆனந்தவிகடன் (3.10.2012 பக்கம் 49) என்ன எழுதுகிறது?
சிலைக்கு முன் குவார்ட்டர் பாட்டிலை லேசாகத் திறந்து (படையல்!) சாமி முன் வைக்கிறார். அவர் வெளியே வந்து விபூதி பூசியதும் சிலருக்கு அருள் வருகிறது. இளை ஞர் ஒருவர், சாமி பல வருஷமா நாங்க உனக்கு சூட்டாங்கல் போட்டு கோழியைப் படைக்கிறோம். இந்த வருஷம் மணக்க மணக்க மசாலா போட்டு, குழம்பும் பொரியலுமா படைக்கலாம்னு ஆசைப்படுறோம். நீ என்ன சொல்ற? என்று கேட்க, ஒரு மிடறு எச்சில் விழுங்கிய சாமி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அதெல்லாம் கூடாதுப்பா. ஐதீகம் ஐதீகம்தான் என்றார். உடனே, பெரியார் ஒருவர் முதல்ல ஈரலை மட்டும் சுட்டு சம்பிரதாயப்படி உனக்குப் படைச்சிடுறோம்ப்பா. மிச்சத்த குழம்பு வெச்சிடுவோம் என்று ஃபேவரைட் ஆப்ஷன் கொடுக்க சாமிக்குச் சம்மதம்ப்பா. ஆனால, மறக்காம ஈரலைச் சுட்டு வெச்சிடுங்க என்று க்ரீன் சிக்னல் கொடுத்தது சாமி.
கோயிலில் குவார்ட்டர் பாட்டில்கள் - எச்சில் ஊறும் பக்தர்கள்!
கோயிலில் குவார்ட்டர் பாட்டில்கள் - எச்சில் ஊறும் பக்தர்கள்!
உடனே கோயிலில் இருந்து கோழிகள், ஐந்து அட்டைப் பெட்டி குவார்ட்டர்கள் (பெட்டிக்கு 48 வீதம் மொத்தம் 240 பாட்டில்கள்), வாழைப் பழங்கள், தேங்காய் போன்றவற்றோடு ஊர்வலமாக ஊர் எல்லையில் இருக்கும் கோயிலுக்குப் புறப்பட்டார் கள்.  ஊர்வல முடிவில் கண்மாய்க் கரையோரம் இருந்த சக்தி வீரனுக்குச் சாராயப் படையல் போட்ட பூசாரி 10 கோழிகளையும் பலி கொடுத்தார்.
ஒரு பக்கம் குவார்ட்டர்கள் காலியாக, இன்னொரு பக்கம் சிக்கன் பீஸ்கள் பிளேட்டுகளில்  வலம் வந்தன. வெள்ளிக்கிழமையும் அது வுமா கறி சாப்பிடுறதா? என்று வெளி யூர்க்காரர் ஒருவர் கன்ஃப்யூஸ் ஆக, சரி.. தீர்த்தம் மட்டும் குடிங்க மாமா என்று குவார்ட்டரைக் கொடுத்தார்கள்.
ஒரு மடக் உள்ளே போனதுமே அவரின் கை தானாகவே சிக்கன் பக்கம் நீண்டது. சின்னப் பசங்களுக்கு எல்லாம் ஒரே ஒரு சொட்டு நாக்கில் வைத்துவிட்டார்கள். நாக்கு சுறுசுறுக்க அவர்களும் கோழியை ஒரு கை பார்த்தார்கள். கை கழுவும்போதே, யப்போய், இவ்வளவு நல்ல திரு விழாவை ஏன் அஞ்சு வருஷத்துக்கு ஒருக்கா நடத்திக்கிட்டு இருக்கீங்க. இனிமே மாசா மாசம் நடத்தினா என்ன? என்று ஆர்வமாகக் கேட்டார்கள் இளைஞர்கள்.
அதன் உள்ளர்த்தம் புரியாத பெரியவர், அடுத்த திருவிழாவுல எதுக்கும் சாமிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுருவோம் என்றார். அநேகமாக இனிமேல் அடிக்கடி இந்தத் திருவிழா நடக்கலாம்! என்று வருணிக்கிறது விகடன்.
ஆண்கள் செய்யும் இந்த அட்டகாசத்துக்கு பெண்கள் மத்தியில் மட்டும் ஏக எதிர்ப்பாம் கடு கடுப்பாம்.
குடிப்பதற்காக இப்படி ஒரு பக்தி தேவையா! இது போன்ற நிகழ்ச்சி களில் ஒரே ஒரு பார்ப்பானரைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
பக்திப் போதையை நம் மக்களிடத்தில் திணித்து விட்டு நம்மை உருள விட்டு வேடிக்கை பார்க் கிறானே!
அட வெட்கக்கேடே, உன் பெயர்தான் பக்தியா?
திருப்பதி ஏழுமலையானுக்கு ஒன்றரை மணிநேர ஓய்வு
திருப்பதி ஏழுமலையான் கோயி லில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இரவு 10 மணிக்குள் ஏகாந்த சேவை (பெருமாளுக்கு ஓய்வு தரும் நேரம்) நடப்பது வழக்கமாம்.. சாதாரண நாட்களில் இரவு 10.30 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெறும். ஆனால் தற்போது பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் ஒருசில நாட்களில் அதிகாலை 2.40 மணிக்கு ஏகாந்த சேவை நடந்துள்ளது.
இடைவேளை இல்லாமல் 22 மணி நேரத்துக்கு மேலாக சுவாமிக்கு தூக்கமில்லாத வண்ணம் வைகாசன ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக ஆகம பண்டிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் தொல்லியல் துறை நிபுணர்களும் மூலவர் சன்னதியில் தொடர்ந்து தீபம் எரிந்து கொண்டிருப்பதால், அதன் வெப்பமும் அதிகரிக்க கூடும் என எச்சரித்தனர்.
இதனால் ஏழுமலையானுக்கு சற்று ஓய்வு கொடுக்க தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏகாந்த சேவை நள்ளிரவு 1.30 மணிக்குள் நடத்த வேண்டும். வைகாசன ஆகம விதிகளின்படி குலசேகர படி அருகே உள்ள சைன மண்டபத்தில் சுவாமிக்கு ஏகாந்த சேவைக்காக தங்க ஊஞ் சலில் வெள்ளி கொலுசு போடப்பட்ட பட்டு தலையணையில் வைத்து வெங்கமாம்பா வம்சா வளியினரின் முத்தியால ஆரத்தி எடுத்து 2 விளக்குகள் ஏற்றி வைத்துவிட்டு மூலவரின் அருகே உள்ள அகண்ட தீபத்தை அணைக்க வேண்டும்.
பின்னர் தங்க கதவு மூடப்பட்டு கருட மண்டபம் அருகே செனாய் மேளம் வாசிக்கப்பட்டு, சுவாமிக்கு அர்ச்சகர்கள் பூஜை செய்து பால், பழங்கள் மற்றும் நெய் வேத்தியங்கள், கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படும்.
பின்னர் அர்ச்சகர்கள் சாமி பாதத்துக்கு நமஸ்காரம் செய்து, போக சீனிவாச மூர்த்தியை பட்டு மெத் தையில் வைத்து அன்னமாச்சாரிய வம்சாவளியினர் லாலி பரமானந்தா, லாலி கோவிந்தா என தாலாட்டு பாடலை பக்தியுடன் பாடி தூங்க வைப்பார்கள்.
வெங்கமாம்பா ஆரத்தியை மூலவருக்கு காண்பித்து, தங்க கதவுகள் மூடப்படும். மூலவர் சன்னதியில் அதிகாலை 1.30 மணி முதல் 3 மணிவரை அகண்ட தீபம் அணைக்கப்படும். அதிகாலை 3 மணியளவில் சுப்ரபாத சேவைக்கு பிறகு தீபம் ஏற்றப்பட்டு ஏழுமலை யான் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நேற்று அதிகாலை சுப்ரபாதம் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.
இவ்வாறு தினகரன் (8.10.2012) நாளேடு சாங்கோபாங்கமாக செய்தியை படத்துடன் வெளியிட்டுள்ளது.
(பகுத்தறிவு செய்திகளுக்கு இதில் நான்கில் ஒரு பகுதிகூட இடம் கிடைக்காது என்பது வேறு செய்தி)
நாமக்கல் மாவட்டம் ராசிபரம் பொன் வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம் சனிக்கிழமையை முன்னிட்டு,  நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக விரதம் மேற்கொண்ட பக்தர்கள், சுவாமி மாட்டின் முன் படுத்து அருள்வாக்கு கேட்டனர்.
உருவமற்றவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இப்படி உருவத்தை உருவாக்கி, கடவுள் சாப்பிடுகிறது; தூங்குகிறது; ஓய்வு எடுக்கிறது என்று கதையளக்கிறார்கள் என்றால் மனிதன் இந்த ஆபாச அறிவை - மரமண்டைத்தனத்தை என்னவென்று சொல்லுவது. இதனை நம்புவோரையும், இவற்றை ஊடகங்களில் விளம்பரப்படுத்துபவர் களையும்  எதைக் கொண்டு சாற்றுவது!
அசையாத ஒரு ஜடப் பொருளுக்கு ஓய்வு என்றால் வாயால் சிரிக்க முடியுமோ! பக்தியை ஒரு சிறுபிள்ளை விளையாட்டு என்று வடலூர் இராமலிங்க அடிகளார் சொன்னது தானே நினைவிற்கு வருகிறது. மனிதனுக்குள்ளது போன்ற சாப்பாடு, உறக்கம், குடும்பம், பிள்ளைக் குட்டிகள் என்று கடவுள்மீது ஏற்றி விட்டனர் என்பதுதானே இதன் உண்மை கடவுளைக் கற்பித்தவன் மனிதன் என்றும், அவன் முட்டாள் என்றும் தந்தை பெரியார் கூறியது நூற்றுக்கு நூறு உண்மையல்லவா!

- மின்சாரம்-


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...