Monday, September 17, 2012

பெரியாரின் தேவை - இன்று : மனிதநேயத்தில்


நம் இயக்கம் உலக இயக்கம்
ஒரு மனிதன் தனது காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ வலி இருந்தாலும் அவன், எனக்கு வலிக்கிறது என்று சொல்வது போல, உலகில் வேறு எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும் குறைபடுகளையும்
ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்டதுபோல நினைக்கும்படியும் அனுபவிப்பதுபோல் துடிக்கும்படியும், அவ்வளவு கூட்டுவாழ்க்கையும் ஒற்றுமை உணர்ச்சியும் (உள்ள சமுதாயம்) ஏற்படும்.

-இதைச் சொன்னவர் பெரியார். ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன் 1943ஆம் ஆண்டிலேயே, இனி வரும் உலகம் என்ற தலைப்பில் அவர் எழுதிய நூலில், எதிர்கால சமுதாயம் குறித்து இப்படிக் கூறுகிறார். பிறருடைய துன்பத்தைத் தன் துன்பம் போலக் கருதும் மனதுடைய மனித சமுதாயம் ஒன்று தோன்றவேண்டும்- தோன்றும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் பெரியார் வெளியிட்ட கருத்து இது. உலகில் எந்த மூலையில் யாருக்குத் துன்பம் ஏற்பட்டாலும், யாருடைய விடுதலை பறிக்கப்பட்டாலும், யார் அடிமையாக நடத்தப்பட்டாலும் அவர்களின் துயர் துடைக்கும் வகையில் உரிமைக்குரல் எழுப்பவேண்டிய அவசியத்தை இதன்  மூலமாக உணர்த்தியிருக்கும் பெரியாரின் தேவை, நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் இன்னல்படுகின்ற இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது.
ஈழத்தந்தை என்றழைக்கப்படும் தந்தை  செல்வா அவர்கள் ஒரு முறை பெரியாரை சந்தித்து, தங்கள் உரிமைப் பிரச்சினைகள் குறித்து விவரித்துபோது, நாங்களே இந்த நாட்டில் (இந்தியாவில்) அடிமைகளாக இருக்கிறோம். ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படி உதவ முடியும்? என்று உண்மை நிலவரத்தைச் சொன்னார் பெரியார். இன்றும் நாம் இந்திய அரசிடம் நமது மாநில சுயாட்சி உரிமைகளைக் கோரியபடியே இருக்கிறோம். எனினும், ஈழத்தமிழர்களுக்காக இன்றுள்ள சூழலில் உலக அரங்கில் பல நாடுகளிலும், சர்வதேச அமைப்புகளிலும் வலுவானக் குரலை ஒலிக்கச் செய்ய முடியும். பெரியார் இன்றிருந்தால் அந்தப் பணியைத்தான் முன்னெடுத்துச்  செல்வார். ஏனென்றால், உலகத்தின் போக்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அன்றே விளக்கியவர் அவர்.
தோழர்களே.. நாம் உலகம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்கிறோம். நம் இயக்கம் உலக இயக்கம். உலக இயக்கம் என்றதும் மனிதன் மலைப்பான். இவர்கள் இங்கிருந்துகொண்டுதானே பேசுகிறார்கள் என்று! முற்காலத்தில் மனிதனுக்கு 25 மைலுக்கு அப்பால் உள்ளதே மலைப்பாக இருக்கும். அன்றைக்கு உலகத்தினை உணர அவனுக்குச் சாதனங்கள் இல்லை. அது மட்டுமல்ல, தமது நாட்டைப்பற்றிக்கூட உணர  வசதியில்லை. இன்று அப்படியல்லவே! அமெரிக்காவானது 10ஆயிரம் மைல்கள் என்றாலும் ஒன்றரை நாளில் அங்கு போய்விடலாமே! நமக்கு ரஷ்யாவுக்கும் 8மணி நேரப்பயணம்தானே! அங்கு போக 8மணி, காரியம் பார்க்க 8 மணி, திரும்பி வர 8 மணி என்று வைத்துக்கொண்டால் 24 மணி நேரத்தில் ரஷ்யாவுக்குப் போய் வந்துவிடலாமே! இப்படியாக உலகம் விஞ்ஞான வளர்ச்சி காரணமாகப் பக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது (-விடுதலை 14.11.1972)
மாற்றங்களை எதிர்பார்த்து ஏற்றுக்கொண்டு செயலாற்றியவர் பெரியார். அவருடைய ஒரே நோக்கம், மனிதர்களிடையே பேதங்கள் கூடாது என்பதுதான். அவன் எந்த நாட்டுக்காரனாகவும் எந்த இனத்தைச் சேர்ந்தவனாகவும், எந்த மொழியைப் பேசக்கூடியவனாக இருந்தாலும் மனிதர்களுக்குரிய உரிமைகளை பிறப்பினாலோ மதத்தினாலோ சாதியினாலோ வேறு எந்தக் காரணத்தினாலோ மறுக்கக்கூடாது என்று தன் இறுதி மூச்சு வரை பெரியார் போராடினார். இன்று உலகெங்கும் மனித உரிமைகள் குறித்துப் பேசப்படுகிறது. ஐ.நா அவையில் மனித உரிமைக்கென தனி அமைப்பு உள்ளது. சர்வதேச அளவில் தொடங்கி உள்ளூர்கள் வரை பல மனித உரிமை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 1996-2001ல் தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோது முதல்வர் கலைஞரிடம் செய்தியாளர்கள், மனித உரிமைகள் பற்றிய உங்கள் பார்வை என்ன என்று கேட்டார்கள். அதற்கு கலைஞர் சொன்ன பதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் இன்றைக்கு எதனை மனித உரிமை என்று சொல்கிறீர்களோ அதைத்தான் அன்றே பெரியாரும் திராவிட இயக்கத்தினரும் சுயமரியாதை என்று சொன்னார்கள் என்பதுதான் தலைவர்  கலைஞரின் பதில்.
தனக்கான மதிப்பும் மரியாதையும் எவர் ஒருவராலும் பறிக்கப்படக்கூடாது, இழிவுக்குட்படுத்தப்படக்கூடாது என்பதுதான் சுயமரியாதை. இதன் விரிவாக்கமே, இன்று நாம் பேசுகின்ற மனித உரிமை. சக மனிதனை மதித்து நடக்கவும், அவனுக்குரிய உரிமைகளை அளிக்கவும் சமுதாயம் தயங்கக்கூடாது என்பதுதான் மனித உரிமையின் அடிப்படை. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையே இதுதான். அதனால்தான் சக மனிதர்களான- நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைகள் மீட்கப்பட, உலகளாவிய கவனத்தை ஈர்க்கவும், சர்வதேச அமைப்புகளின் வாயிலாகத் தீர்வு காணவும் டெசோ இயக்கத்தை மீண்டும் தொடங்கி, அதன் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் தலைவர் கலைஞர். பன்னாட்டுப் பிரதிநிதிகள்- சர்வதேச மனிதஉரிமைச் செயற்பாட்டாளர்கள் பங்கேற்று அரிய கருத்துகளை வழங்கிய இந்த  மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, ஐ.நா.மன்றத்திடம் அளிப்பதற்காகத் தளபதி அவர்கள் அங்கு நேரில் செல்லவிருக்கிறார். இந்த மாநாட்டிற்கு முன்பாகவே, அமெரிக்காவில் ஐ.நா. நிர்வாகிகளை நேரில் சந்தித்து, ஈழத்தமிழர் பிரச்சினை குறித்தும் டெசோவின் நோக்கம் குறித்தும் விளக்கி உலக அரங்கின் பார்வையை ஈர்த்தவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இத்தகையச் சூழலில்தான் தந்தை பெரியாரின் தேவையை உணரவேண்டியிருக்கிறது. யார் பழித்தாலும்-இகழ்ந்தாலும்-தூற்றினாலும் தன்மானத்தைவிட சமுதாயத்தின் மானமும் முன்னேற்றமுமே உயர்வானது என்ற இலட்சியத்துடன் போராட்ட வாழ்வை மேற்கொண்டவர் பெரியார். அவர் வெறும் மனிதரல்ல. அவர் ஒரு கொள்கை. ஒரு தத்துவம். வாழ்க்கை நெறி. அதனால்  கொள்கை வடிவில் அவருடைய செயல்பாடுகள்  தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஆசிரியர் வீரமணி அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவதுபோல, பெரியார் இன்று உலகமயமாகியிருக்கிறார். அதனால், அவருடைய கொள்கை வழியில் செயல்படும் கலைஞர் அவர்கள் உலகத்தின் பார்வையை ஈழப்பிரச்சினை நோக்கி ஈர்க்கும் வகையில் எவருடைய  விமர்சனம் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றி வருகிறார்.
பெரியார் வழியில் மேற்கொள்ளப்படும் பயணம் தனது இலக்கை நிச்சயம் அடையும். ஈழத்தமிழர்களின் வாழ்வு மலரும். மனிதநேயத்திற்கானப் புதிய விடியல் புலரும்.
- அசன் முகமது ஜின்னா, வழக்குரைஞர்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...