Sunday, September 23, 2012

சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு அரசியல் சாசனத்தில் உள்ள சமதர்மம் என்னவாயிற்று?


சிறு வியாபாரிகளைக் கடுமையாகப் பாதிக்கும் முடிவு அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிப்போம் தமிழர் தலைவர் அறிக்கை


சிறு வியாபாரிகளைக் கடுமையாகப் பாதிக்கும் முடிவு அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிப்போம் தமிழர் தலைவர் அறிக்கை
சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அமைச்சரவை யின் முடிவை ஒன்று சேர்ந்து முறியடிப் போம் என்று திரா விடர் கழகத் தலைவர்  கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
என்றைக்கு  நரசிம்மராவ் பிரதமராகி, நிதி அமைச்ச ராக மன்மோகன்சிங் அவர்களது ஆலோசனைப்படி நிதித்துறை - அரசியல் கொள்கை வகுக்கப்பட்டதோ அன்றைய நாளிலேயே,  உலகமயம், தாராளமயம், தனியார் மயம் என்ற ஒட்டகம்  இந்திய நாட்டில் கூடாரத்திற்கு உள்ளே நுழைந்தது.
அதன் மூலம் புறத்தோற்றத்திற்கு நாட்டின் பொருளா தார வளர்ச்சி மேலோங்குவதைப் போல தோன்றினாலும், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி செயல்படுத்திய சமதர்மக் கொள்கை கள் மெல்ல மெல்ல விடை பெறத்துவங்கின.
அந்நியச் சுரண்டலைக் கண்டித்து, விதேசியை வெறுத்து, சுதேசியை முன்னிலைப்படுத்தும் கொள்கை யைக் குழி தோண்டிப் புதைக்க ஆரம்பித்தனர்!
ஏகபோக முதலாளிகளுக்கு கதவு திறப்பு
உலக வளர்ச்சியோடு ஒத்துப் போவதில், போட்டி போடுவதில் தவறில்லை; ஆனால் நம் நாட்டில் உள்ள சிறு விவசாயிகள், சிறுசிறு வணிகர்கள், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்திற்கு உலை வைத்து, திறந்து விடப்பட்ட ஏகபோக முதலாளிகளின் சுரண்டல் களமாக நம் நாடு மாறிவிட்டது.
நாளுக்கு நாள் ஏழைகள் பெருகும் - பணக்காரத் திமிங்கிலங்கள் வாழும் நாடாக மாறி வருகிறது.
சமதர்மம் ஏட்டுச் சுரைக்காய் ஆன கொடுமை!
இந்திய அரசியல் சட்டத்தின் பீடிகையில் (Preamble) 1976 ல் சேர்க்கப்பட்ட   சமதர்மம் (Socialism) என்ற வார்த்தையை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக ஆக்கி விட்டது கொடுமையிலும் கொடுமை!
வீர சுதந்திரம் வேண்டி நின்றோர், விதேசியை எதிர்த்து சுதேசிக் கப்பல் விட்டு, காலமெல்லாம் வெஞ் சிறையிலும், விடுதலையான பின்பும், வறுமைச் சிறையிலிருந்தும் மீளாமல் வாடி வதங்கிய, தியாகம் என்ற சொல்லின் முழுமுதல் இலக்கியம் போல் என்றும் வரலாற்றில் ஒளி வீசித் திகழும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. போன்றோர்தம் போராட்டம் எல்லாம் விழலுக் கிறைத்த நீராக, வீணுக்கு உழைத்த உழைப்பாக ஆகிவிட்டதே இன்று!
அந்நிய நாடுகளின் நிர்ப்பந்தம்
அந்நிய முதலீட்டுக்கு அகலமாகக் கதவு திறக்கப்பட்டுவிட்டது!
அந்நிய நாட்டின் நிர்ப்பந்தங்களுக்கு அடிமையாகி (பொருளாதார களத்தில்) ஆட்டுவிக்கும்  வகையில் ஆடும் அரசாகவல்லவோ நம் நாட்டு மத்திய அரசு - மன்மோகன்சிங் அரசு ஆகிவிட்டது! அந்தோ, சமதர்மமே, உன் கதி இப்படியா?
51 சதவிகிதம் 49 சதவிகிதம் என்ற விகிதக் கணக்கில் அந்நிய முதலீடு உள்ளே - சில்லறை வணிகத்திலும் அக்டோபஸ் என்ற ஆபத்தான எட்டுக் கால் பிராணி போல் நுழைய அனுமதியளித்துவிட்டது!
தந்தை பெரியாரின் தொலை நோக்குப் பார்வை
இதற்குப் பெயர் சுதந்திர நாடா? வெள்ளைக்காரன் போய் கொள்ளைக்காரன் வந்தான் என்பதால் துக்க நாள் என்று தந்தை பெரியார் அவர்கள் தொலை நோக்கோடு, பேரெதிர்ப்பையும் பொருட்படுததாமல் துணிந்து தனித்து நின்று சொன்னது, 100 க்கு 100 விழுக்காடு உண்மையாகி வருகிறதே!
உலக மயத்தின் காரணமாக நம் நாட்டு அரிசி, கத்தரிக்காய், எல்லாம் கூட வெளிநாட்டவர் (பேட்டன்ட்) காப்புரிமைக்குப் பலியாகிவிட்ட நிலையில், எஞ்சியிருந்த நம் சில்லறை வணிகர்களின் வாழ்வாதாரத்தையும் அடியோடு பறிக்கும் இந்த முயற்சியை விட மோசமான நிலை வேறு உண்டா?
மோடி மஸ்தான் வேலை!
வெளிநாட்டவர் வந்தால் போட்டி Competition அதிகம் ஆகும்; அதன் மூலம் மலிவு விலையில் மக்களுக்குக் கிடைக்கும். வேலை வாய்ப்புப் பெருகும்; வளர்ச்சி பெருகும் என்பதெல்லாம் மோடி மஸ்தான் மோசடி வித்தையே!
முதலில் விலையைக் குறைத்து வைத்து நம் நாட்டில் உள்ள பாரம்பரிய விவசாயிகள், சில்லறை வணிகர்கள் போட்டியிட முடியாத அளவுக்கு, கடைகளை அவர்களை மூடிவிடும்படிச் செய்து, பிறகு வெளிநாட்டுச் சில்லறை வர்த்தகக் கொள்ளை லாபக் குபேர ஏகபோக முதலாளிகள் - வைத்த விலைக்குத்தான் மக்கள் வாங்கித் தீரவேண்டும் என்று ஆக்கிவிடும் நிலை, தானே உருவாகும்!
திராவிடர் கழகம் எதிர்க்கும்!
எனவே இதனைத் திராவிடர் கழகம் கடுமையாக எதிர்க்கிறது.
கீரை விற்றுப் பிழைக்கும் கிராமப்புற முனியம்மா ஆயாக்களுக்கு இனி பிழைப்புக்கு வழியே இருக்காது!
இப்போது அத்தனை வெளிநாட்டு உணவுக் கூடங் களும் நம் நாட்டு நகர்ப் புறங்களில் மட்டுமல்ல, வளர்ந்த, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கூட வந்து டேரா போட்டு கொள்ளை லாபம் ஈட்டுகின்றன!
Franchise என்ற பெயரால் நடந்தாலும் இறுதி லாபம் வெளிநாட்டிற்குத்தானே!
கொக்கோகோலா, செவன்அப், மிராண்டா போன்ற குளிர்பானங்கள் நம்மூரில்  ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு வந்த சோடா, கலர்  ஏழைகளின் செரிமான ஜிஞ்சர் பீர், உட்பட நடத்தப்பட்டு வந்த வியாபாரத்தை ஒழித்துக் கட்டின. அவற்றை நம்பி வாழ்ந்தவர்களும் வறுமைக்கு ஆட் பட்டனர்.   ரெடிமேட் சட்டைகள், உடைகள் எல்லாம் கூடிட வெளிநாட்டுக் கம்பெனிகளின் கிளைகளாக இங்கேயே தனது அகலக் கால்களை விரித்து, பல ஆண்டுகள் ஆகிவிட்டனவே!
ஒன்றுபட்டு முறியடிப்போம்
எனவே இதனைக் கட்சி வேறுபாடின்றி எதிர்த்துக் குரல் கொடுத்து 50 லட்சத்துக்கும் அதிகமான மண்ணின் மைந்தர்களின் சில்லறை வாணிகர்களின் வாழ்வாதார உரிமையைக் காக்க நாம் அனைவரும் கைகோர்த்து நிற்போம் வாரீர்! வாரீர்!!  தி.மு.க. தலைவர் கலைஞர்  தமிழக முதல் அமைச்சர் ஆகியோர் எதிர்த்துள்ளனர்; தமிழகத்தில் இதற்கு அனுமதி இல்லை என்ற தமிழ்நாடு முதல்வர் அவர்களது நிலைப்பாட்டையும் வரவேற்கிறோம்.
ஒன்றுபட்டு நின்று முறியடிப்போம்!


சென்னை 
15-9-2012
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...