Thursday, August 16, 2012

எதிரியைப் பார்!


சென்னையில் டெசோ சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடுபற்றி இன எதிரிகள் இல்லாததும் பொல்லாததுமான விஷமச் செய்திகளைப் பரப்பும் வேலையில் மும்முரமாக இறங்கினர்.
மாநாட்டின் நோக்கம் குறித்து டெசோ தலைவர் கலைஞர் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத் துருவில், தனியீழம் தொடர்பான தீர்மானம் மாநாட் டில் நிறைவேற்றப்படாது என்று சொன்னதுதான் தாமதம் - டெசோ என்று பெயர் வைத்துக் கொண்டு தனியீழம் கேட்கும் தீர்மானம் மாநாட்டில் இடம் பெறாது என்றால் என்ன பொருள் என்று வீராதி வீரர்கள் போலே தோளைக் குலுக்கினார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், டெசோவை இரண்டாவது முறை புதுப்பித்த போது தனியீழம் கேட்கும் அதன் குறிக்கோளை வரவேற்றார்களா என்றால், அதுதான் இல்லை.
அப்பொழுதும் ஏறுமாறான விமர்சனங்களில்தான் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை மய்யப்படுத்தி அவர் எது செய்தாலும் அதனைக் கொச்சைப்படுத்துவது என்ற திசையில் எழுதி வந்தனர்.
மாநாடு நடக்காது; தடை செய்யப்பட்டு விடும் என்றனர். அதற்கான முயற்சிகளில் பலரும் ஈடுபட்டனர் என்பதும் உண்மைதான். டெசோ அமைப்பில் பதற்றப்படாத, பக்குவமான முயற்சி களினால், எதிர்ப்பாளர்களின் முகங்களில் கரி தடவப்பட்டு, டெசோ மாநாடு வெகு சிறப்பாகவே அறிவிக்கப்பட்ட இடத்திலேயே அட்டியின்றி நடைபெற்றது.
சில பல காரணங்களால் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த தலைவர்கள் வரவில்லை என்றாலும் உலகம் தழுவிய அளவில் பேராளர்கள் பங்கு கொண்டனர்.
சிங்களவரான - இடதுசாரி எண்ணம் கொண்ட டாக்டர் விக்ரம பாகுகர்ண ரத்தினே அவர்களே கலந்து கொண்டு ராஜபக்சேயின் பாசிச நடவடிக்கைகளின் முகத்திரையைக் கிழித்துக் காட்டினார். மிக அருமையான தீர்மானம் 14 - ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்மீது குறை சொல்ல முடியாத நிலையில் தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் சம்பிரதாயமான முறையில் மாநாடு நடைபெற்றது என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டுள்ளன.
இந்த மாநாடு வெற்றியா, தோல்வியா என்னும் அளவுகோல் எங்கே இருக்கிறது தெரியுமா? நமது எதிரிகளிடத்தில் தான் இருக்கிறது.
ஈழத்திலிருந்து மாநாட்டுக்குச் செல்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் இலங்கை அரசால் கண்காணிக்கப்படுவார்கள் என்று அச்சுறுத்தும் வகையில் இலங்கை அரசு கருத்துத் தெரிவித் திருந்தது. (அதனைக் கண்டித்துக்கூட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்).
இலங்கை அதிபர் ராஜபக்சே டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றி தெரிவித்துள்ள கருத்தும் டெசோவின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாகும்.
இதன் மூலம் டெசோ நடத்தும் மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானது என்பது வெளிப்படையாகி விட்டதா - இல்லையா?
மாநாடு முடிந்த நிலையில்கூட இலங்கையில் உள்ள சிங்களவர் அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ன கருத்துக் கூறியுள்ளது?
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்திய மத்திய அரசின் கூட்டணிக் கட்சியாக தி.மு.க. இருப்பதால், மகிந்த ராஜபக்சே அரசு இந்த விவகாரத்தை சிறியதாகக் கருதக் கூடாது.
டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள்மீது கூடுதல் கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அரசு செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். தமிழர்கள் தங்களுக்குத் தேவையான வகையில் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அய்.நா.வில் இந்தியா தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறப்படுவது கிட்டத்தட்ட தனியீழத்தை உருவாக்கும் முயற்சியாகவே அதனைப் பார்க்க வேண்டும் என்று அந்த அமைப்புக் கூறியுள்ளதே!
எதிரிகள் நம்மைச் சரியாகப் புரிந்து கொண் டுள்ளனர். ஆனால் இங்குள்ளவர்களோ டெசோ மாநாடு தோல்வி என்கின்றனர். இவர்களை எது கொண்டு சாற்றுவதோ!


.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...